சமீபத்தில் நடந்த இசை வெளியீட்டு விழா ஒன்றில் “இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோரின் கலவை இமான்” என்று கேயார் பாராட்டியிருக்கிறார். 2002 முதல் இசையமைத்துவரும் இமான், தற்போது தமிழ் சினிமாவுக்கு மண்வாசனையுடன் பாடல்களை அளிப்பதற்காக ரசிகர்களால் கொண்டாடப்பட்டுவருகிறார். தி. இந்துவுக்காக அவரைச் சந்தித்தபோது...
ரீமிக்ஸ் பாடல்கள் கேட்டு இப்போது யாராவது உங்களிடம் வருவதுண்டா? ரீமிக்ஸ் பாடல்களைக் கற்பனை வறட்சியின் வெளிப்பாடு என்று சொல்லலாமா?
ரீமிக்ஸ் தொல்லைகள் இல்லாமல் தற்போது நிம்மதியாக இருக்கிறேன். அந்த டிரெண்ட் ஒழிந்துவிட்டது. ரீமிக்ஸ் பாடல்கள் என்பதே இன்னொருத்தரின் உழைப்பில் நாம் சவாரி செய்வது போன்றதுதான். ஒரு பாடல் உயிர் வாழ்கிறது என்றால் அதற்குக் காரணம் அதன் மெட்டு. மெட்டுக்குப் பல்லவி முகமென்றால் உடல் சரணம். இவை இரண்டையும் நமது கற்பனைத் திறனில் உருவாக்க வேண்டும். ஆனால் ஏற்கனவே வேறொரு கலைஞர் உருவாக்கிய பாடலுக்குப் பின்னணி இசையை மட்டும் அலங்காரமாக அமைப்பதால் அதில் என்ன கிரியேட்டிவிட்டி இருக்கிறது? ரீமிக்ஸ் பாடல் வெற்றி அடையும்போது, மறு அலங்காரம் செய்தவர் அந்த வெற்றியைக் கொண்டாட முடியாது. தவிர ஒரு ரீமிக்ஸ் பாடலை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள் என்று வைத்துக் கொண்டால் யாருக்காக என்ற கேள்வி வருகிறது. ஏற்கனவே புகழ்பெற்ற அந்தப் பாடலின் ஒரிஜினல் ட்யூனுக்காகவா அல்லது ரீமிக்ஸ் செய்தவரின் இசை அலங்காரத்துக்காகவா என்பது கடைசிவரை குழப்பமாகவே இருக்கும்.
எல்லாக் கலைகளிலும் ரீக்ரியேஷன் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. உங்களைப் பொறுத்தவரை திரையிசையில் ரீக்ரியேஷன் என்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
ஒவ்வொரு பாடலுக்குமே ரெஃபரென்ஸ் என்பது கண்டிப்பாக இருக்கும். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒரு பாடலுக்கான சூழ்நிலையை இயக்குநர் விளக்கிச் சொல்லும்போது அவரே சில ரெப்ஃபரென்ஸ்களைச் சொல்லுவார். அப்படிச் சொல்லும்போதே அவரது மூட் என்ன என்பது தெரிந்துவிடும். இதனால் இயக்குநர் குறிப்பிடும் பாடலை ஆராய்ச்சி செய்வதைவிட, ‘இயக்குநரின் மூடை’ மட்டும் நான் கேப்சர் செய்துகொள்வேன். இன்னும் சில இயக்குநர்கள், நான் ரெஃபரென்ஸ் கொடுக்க விரும்பவில்லை. அப்படிக் கொடுத்தால் அதிலேயே உங்கள் மைண்ட் ஃபிக்ஸ் ஆகிவிடலாம்; எனவே சூழ்நிலைக்கு மெட்டமையுங்கள் என்பார்கள். என்னைக் கேட்டால், இரண்டுமே தவறில்லை என்பேன். என்றாலும், இரண்டாவது வகையில் பணியாற்றுவது எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
இன்று கோடம்பாக்கம் காப்பியடிப்பவர்களின் சத்திரமோ என எண்ணத் தோன்றுகிறது. திரையிசையும் இதற்கு விதிவிலக்கல்ல என்று ஆகிவிட்டதே?
இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கொள்ளும்வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் பாடலின் ஒரு பல்லவியையோ அல்லது ஒரு பிஜிஎம்மையோ அப்படியே எடுத்துப் பயன்படுத்தும்போதுதான் குட்டு உடைந்துபோகிறது. இண்டர்நெட் யுடியூப் யுகத்தில் கிராமத்தில் இருக்கும் ரசிகர்களைக்கூட நீங்கள் ஏமாற்ற முடியாது. ஆனால் இசையை உண்மையாக நேசிக்கிற, அதனோடு உறவாடுகிற ஓர் இசைக்கலைஞனோ, இயக்குநரோ இந்த வேலையில் இறங்குவது கிடையாது. ஆனால் சில நேரங்களில் எத்தனை மெட்டுகள் போட்டுக்கொடுத்தாலும் அதில் திருப்தியடையாமல், ‘எனக்கு இதுதான் வேண்டும், இதைப் போட்டுக்கொடுங்கள்’ என்று சிலர் ஒரு சிடியை நீட்டும்போது, அதை நிறைவேற்ற வேண்டிய ‘டெட்லைன்’ பிரச்சினையில் சில இசையமைப்பாளர்கள் சிக்கிக்கொள்கிறார்கள். இறுதியில் இசையமைப்பாளருக்குத்தான் கெட்ட பெயரே தவிர, சிடியைக் கொடுத்த இயக்குநருக்கு அல்ல. ரீமிக்ஸ், காப்பி இரண்டுமே அடுத்தவர் குழந்தைக்கு உரிமை கொண்டாடுவது போன்றதுதான்.
மிகச் சில நாட்களில் பின்னணி இசையை முடிக்க வேண்டிய நெருக்கடி இங்கே இசையமைப்பாளர்களுக்கு இருப்பதுபோல் தெரிகிறதே?
உண்மைதான். நான்கு நிமிடம் வரும் ஒரு பாடலை கம்போஸ் செய்ய எடுத்துக்கொள்ளும் கால அளவைக்கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் படத்தின் கதையைச் சுமக்கிற இரண்டரை மணிநேரப் பின்னணி இசைக்கு இங்கே போதிய கால அவகாசம் கொடுப்பதில்லை. படப்பிடிப்பு முடித்து, எடிட் செய்து, டப்பிங் பேசி முடித்துவிட்டால் படமே முடிந்தது என்று நினைத்துவிடுகிறார்கள். பின்னணி இசைக்கு எவ்வளவு காலம் பிடிக்கும் என்று இசையமைப்பாளரிடம் படத்தைக் காட்டி, ஒரு வார்த்தை கேட்காமல் படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்துவிடும் மனப்பான்மைதான் இங்கு பலரிடமும் இருக்கிறது. இது முதலில் மாற வேண்டும். ஆனால் பின்னணி இசையின் சக்தியை உணர்ந்த இயக்குநர்கள் ‘நீங்க டீடெயிலாக வேலை செய்யுங்க’ என்று போதிய சுதந்திரம் கொடுக்கிறார்கள்.
இடையில் உங்களுக்கு ஏற்பட்ட தேக்கத்துக்குப் பிறகு தொடர்ச்சியாக இசையமைக்கிறீர்கள். இப்போது மட்டும் என்ன மாயம் செய்கிறீர்கள்? ஒரு படத்தின் மொத்த ஆல்பத்தையும் வெற்றிபெறச் செய்யும் சூட்சுமம் என்ன?
வெற்றிகரமான இசையைக் கொடுக்க எந்த மேஜிக்கும் நான் செய்வதில்லை. ஸ்கிரிப்ட் சரியாக அமைந்துவிட்டாலே எல்லாமே சரியாக வந்துவிடும் என்பது என் நம்பிக்கை. சரியான கதையில் பாடல்களுக்குச் சலிப்பை ஏற்படுத்தாத சூழ்நிலைகள் அமைந்துவிடும். சரியான இயக்குநர், நட்சத்திரங்களிடமிருந்து தேவையான நடிப்பை வாங்கிவிடுவார். நம்மிடமிருந்து நல்ல ட்யூன்களையும் வாங்கிவிடுவார். இதுதான் தொடர்ச்சியான வெற்றியின் ரகசியம். ஒரு படத்தில் குறைந்தது நான்கு பாடல்கள் இடம்பெறுகிறது என்றால் அதில் மூன்று கதையை நகர்த்திச் செல்லும் பாடல்களாக இருக்கலாம். அப்படிப்பட்ட பாடல்கள் கதாபாத்திரத்துக்கும், கதைச் சம்பவங்களுக்கும் இணையான உணர்ச்சிகளோடு இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதனால் திரைக்கதையில் திணிக்கப்பட்ட பொழுதுபோக்கு அம்சமாகப் பாடல்கள் இல்லாமல், கதையின் ஒரு அங்கமாக மாறிவிடுகின்றன. அப்படிப்பட்ட படங்களில் மொத்த ஆல்பமும் ஹிட்டாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதில் இயக்குநரின் இசை ரசனைக்கும் முக்கிய பங்கு இருக்கிறது.
தொடக்கத்தில் நிறைய கமர்ஷியல் பாடல்களுக்கு இசையமைத்தீர்கள். தற்போது இமானின் இசையில் மண் வாசனை தூக்கலாக இருக்கிறதே?
தமிழ் சினிமா யதார்த்தமான கதைப் போக்கிற்கும், இயல்பான கதாபாத்திரங்களுக்கும் மாறியதுதான் இதற்குக் காரணம். நான் அறிமுகமானபோது கமர்ஷியல் படங்களின் உச்சக்கட்டமாக இருந்தது. அடுத்து வந்த ஐந்தாண்டுகளில் நிலைமை தலைகீழாகிவிட்டது. ஆட்டோகிராப், காதல், சுப்ரமணியபுரம், வெயில் போன்ற படங்கள் வந்து கதையையும் இசையையும் ஒன்றோடு ஒன்று பிணைத்துவிட்டது. டிரெண்ட் மாறியதே தவிர எனக்கு அதுபோன்ற படங்கள் அமையவில்லை. இதனால் நான் கமர்ஷியல் படங்களுக்கு மட்டுமே இசையமைப்பவன் என்று ஒதுக்க ஆரம்பித்தார்கள். ஆனால் ‘மைனா’ எனக்குக் கிடைத்தபிறகு என் மீதான மித் உடைந்துவிட்டது. பிரபு சாலமனுக்கு நான் என்றுமே நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். மைனா தொடங்கி வைத்த பயணம் என்னை மண்வாசனைக் கலைஞனாக அடையாளம் காட்டியிருக்கிறது. ரீஜினல் ஐடெண்டிட்டி உள்ள கதைகள்தான் என்னை மண்வாசனைக் கலைஞனாக இயங்க வைக்கிறது. இதுவே எனது நிரந்தரமான அடையாளமாக அமைந்துவிட்டால் மிகவும் சந்தோஷப்படுவேன்.
நீங்கள், பிரபு சாலமன், யுகபாரதி - உங்கள் மூவருக்குள்ளும் அப்படியென்ன கெமிஸ்ட்ரி?
பிரபு சாலமன் கம்போஸிங்குக்கு வருகிறார் என்றால் ஒரு டைரக்டர் வர்றார் என்ற ஃபீலிங் எனக்கு இருக்கவே இருக்காது. அவர் வந்த பிறகும் கம்போஸிங் மூடில்கூட இருக்க மாட்டோம். நிறைய அரட்டையடிக்க ஆரம்பிப்போம். சாப்பிட பொங்கல் ஆர்டர் செய்வோம். இப்படித்தான் எங்கள் கம்போஸிங் ஆரம்பிக்கும். யுகபாரதியும் அப்படித்தான். இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் மூன்று பேரும் ஒரே இடத்தில் அமர்ந்து உருவாக்கும் ஸ்பாட் கம்போஸிங் இப்படிப்பட்ட தோழமை இருந்தால் மட்டுமே சாத்தியம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago