முதல் பாடலை நான் பாடியபோது…

By செய்திப்பிரிவு

ஜனவரி 10: கே.ஜே.யேசுதாஸ் 79-வது பிறந்த தினம்

நவம்பர் 14, 1961.

சென்னை, பரணி ஸ்டுடியோவில் அந்த நாளை எண்ணிப் பார்க்கும்போது, வாழ்க்கையில் ஒவ்வொன்றும் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டது என்பதை மீண்டும் சொல்லிக்கொள்கிறேன். என்னால் வேறுமாதிரி நினைத்துப் பார்க்க முடியவில்லை.

கே. எஸ். அந்தோணி இயக்கிய ‘கல்பாடுகள்’ மலையாளப் படத்தில் பாடுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்குமென்று சொல்லப்பட்டதால் நான் சென்னை வந்திருந்தேன். திரைப்படத்தில் பாடுவதற்கான கன்னி வாய்ப்பு எனக்காகக் காத்திருந்தது.

பல்வேறு இசை வகைமைகளில் அசாத்தியமான திறன்கொண்டவரென்று அறியப்பட்ட எம். பி. ஸ்ரீனிவாசன்தான் 'கல்பாடுகள்' படத்துக்கு இசையமைப்பாளர். அவருடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததை நம்ப முடியாமல் என்னையே கிள்ளிப் பார்த்துக்கொண்டேன். நான் பாட வேண்டிய பாடலின் மாதிரி எனக்குத் தரப்பட்டது.

‘காணும்போல் ஞானொரு காரிரும்பு கைய்யு பிச்சிகலோ பூங்கரும்பு’ என்று தொடங்கும் பாடல் அது. என்னுடைய துரதிர்ஷ்டம், டைபாய்டு வந்து என்னைப் படுக்கப் போட்டுவிட்டது. உயிரையே பறிக்கும் தீவிர வகை அல்ல. என்னால் ஸ்டுடியோ செஷனில் பங்கேற்க முடியாமலானது. எனக்கு ஒதுக்கப்பட்ட பாடலையும் பாட முடியாமல் போய்விட்டது.

ஆனால், அந்தப் படத்தின் தயாரிப்பாளர்களும் இசையமைப்பாளரும் நான் ஏமாற்றமடைவதை விரும்பவில்லை. விழி முழுக்கக் கனவுகளோடு கொச்சியிலிருந்து அத்தனை தூரம் பயணித்து சென்னை வந்த ஒரு வாலிபனைச் சங்கடப்படுத்தக் கூடாதென்று அவர்கள் நினைத்தனர். நான்கு வரிப் பாடல் ஒன்றை என்னை பாடச் செய்தனர்.

பாடல் பதிவுக்கூடத்திலுள்ள மைக்ரோபோனில் பாடும் முதல் அனுபவம் அது. என்னை எப்படி நிறுத்திக்கொள்வதென்று தெரியாமலிருந்தது. எனது ஆயாசத்தை எம்பிஎஸ் புரிந்துகொண்டிருக்க வேண்டும். அவர் என்னை ‘ஜேசு’ என்று அழைப்பார். நிறையப் பேர் என்னை அப்படித்தான் அழைப்பார்கள். இசையமைப்பாளர்கள் ஜி. தேவராஜனும் சலீல் சவுத்ரியும்கூட அப்படித்தான் அழைப்பார்கள்.

கடவுள் பெயரால் அழைக்கப்படுவதென்பது மிகப் பெரிய பொறுப்பாகும். அது சுமைதரக் கூடியது. என்னிடம் தேர்வு இருக்குமானால் நான் எனது இரண்டாவது பெயரான தாஸையே தேர்வு செய்வேன். கடவுளின் சேவகனாக இருப்பதற்கே ஆசைப்படுகிறேன். தாஸேட்டன் என்று என்னை மக்கள் அழைக்கும்போதே எனக்கு நெருக்கமாக உணர்கிறேன்.

ஸ்டுடியோவின் மங்கலான உள்புறத்தில் வைத்து, எம்பிஎஸ் என்னிடம், “ஜேசு, நாம் செம்மையாக ஒரு ஒத்திகை பார்த்துக்கொள்வோம்” என்றார்.

நான் அந்த நான்கு வரிகளைப் பாடினேன்.

ஜாதிபேதம் மதத் துவேஷம் ஏதுமில்லாதே சர்வரும்

சோதரத்வேன வாழுன்ன மாத்ருக ஸ்தனமனிது

(சாதி பேதங்கள்

மத விரோதம் இல்லாமல்

இந்த உன்னத நிலத்தில்

எல்லாரும் ஒற்றுமையாக வாழ்வோம்)

கேரளத்தின் தலை மகனான ஸ்ரீநாராயண குரு எழுதிய அந்த இறவா வரிகளுக்கு நான் நியாயம் செய்திருக்கிறேனா என்று தெரியாது. பாடல் பதிவாகும் சின்ன கண்ணாடி அறைக்குள் நின்று முதன்முதலில் பாடும் பாடகர் யாருக்கும் சந்தேகம் இருக்கவே செய்யும்.

நான் அந்த வரிகளைப் பாடிமுதன்முடித்த பிறகு ஒலிப்பதிவுக் கருவிகள் இருக்கும் அறைக்கு எம்பிஎஸ் என்னை அழைத்தார். ஒத்திகை என்று என்னை நம்பச் செய்துவிட்டு நான் பாடியதை அவர் பதிவுசெய்திருந்தார். எனக்கு அதைப் போட்டுக் காட்டினார். ஒலிபெருக்கியில் முதல்முறையாக எனது குரலை நான் கேட்டேன்.

மிகப் பெரிய மேதைகளுடன் பணியாற்றிய அனுபவம் கொண்ட ரெக்கார்டிஸ்ட் கோடீஸ்வர ராவ், வியப்புடன் பார்த்தார்.

எம்பிஎஸ் அவரிடம் திரும்பி, “இந்தப் பையனின் குரல் எப்படி?” என்றார்.

ராவ், சிறிதுநேரம் மௌனம் காத்தார். அப்புறம், “பத்து வருஷம் கழித்து நான் உங்கள் கேள்விக்குப் பதில் சொல்கிறேன்.” என்றார். நான் இத்துறையில் பத்தாண்டுகள் நிலைக்கப் போகிறேன் என்பதைத்தான் அவர் அப்படியாகச் சொன்னார்.

‘ஜாதிபேதம்’ எனத் தொடங்கும் அந்த நான்கு வரிகளில் நாராயண குரு, வாழ்க்கையின் சாரத்தைப் பிடித்துவிட்டார். மனித குலத்தின் ஒருமை, சமத்துவத்தைக் காட்டிய வரிகள் அவை. எனக்குத் தெரிந்து கேரளத்தில் வேறு ஒரு கவிஞரோ ஒரு சமூக சீர்திருத்தவாதியோ இப்படியான வரிகளை எழுதியதில்லை. தான் கனவு கண்டதைப் போலவே சமத்துவம் வாய்ந்த ஒரு பூமியை உருவாக்க அவர் உழைக்கவும் செய்தவர். கேரளத்தின் நோய்களுக்கு அந்த வரிகள் சிறந்த மருந்து.

அந்த வரிகளை முதன்முறையாக நான் பாடியபோது அவற்றின் முக்கியத்துவத்தை என்னால் உணர முடியவில்லை என்பதையும் சொல்ல வேண்டும். பின்வந்த வருடங்களில் அந்த வரிகள் பேசிய சமத்துவக் கனவுதான் என் வாழ்க்கையையே வடிவமைத்தது என்பதை உணர்கிறேன்.

வெவ்வேறு இடங்களில் அந்த வரிகளை நான் பாட நேர்ந்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் ஸ்ரீநாராயண குருவின் தரிசனத்தை எண்ணி ஆச்சரியப்பட்டு, அத்தெய்விகத்துக்கு முன்னர் தலைகுனிந்து, அந்த வரிகளை, எனது முதல் பாடலாக மைக்ரோபோனுக்கு முன்னர் பாடக் கிடைத்த வாய்ப்புக்காக நன்றிகூறுவேன்.

தமிழில்: ஷங்கர்

( ‘தி இந்து’ ஆங்கிலம் குரூப் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ள ‘ஸ்ரீநாராயண குரு தி சேஜ் ஆப் சிவகிரி’ ஆங்கிலச் சிறப்பிதழில் வெளியான யேசுதாஸின் பதிவுகளிலிருந்து:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 mins ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்