தமிழர்களின் பாரம்பரிய உடைகளில் ஓன்றான வேட்டியை அணிந்து செல்லத் தடை விதித்தது ஒரு தனியார் கிளப். அதற்குக் கடும் கண்டனம் தெரிவித்தார் தமிழக முதல்வர். மீண்டும் அப்படி நடந்துகொண்டால் கிளப்பின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அதிரடியாக அறிவித்தார். இந்த விவகாரத்தின் சூடு அடங்குவதற்குள் தமிழ் சார்ந்து மற்றொரு சர்ச்சை நடந்துகொண்டிருக்கிறது. இது நடப்பது தயாரிப்பாளர்கள் கில்ட் என்னும் அமைப்பில்.
சங்கத்தின் பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களில் தொடர்ந்து தமிழில் பேசியதற்காகவும், சங்கத்தின் பத்திரிகையைத் தமிழ் மொழியில் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்திவந்ததற்காகவும் கில்ட் சங்கத்தின் துணைத் தலைவர், செயலாளர், ஒரு செயற்குழு உறுப்பினர் ஆகிய மூன்று நிர்வாகிகள் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த இரண்டு காரணங்களையும் நீக்குதல் கடிதத்தில் அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டு நீங்கியிருக்கிறார்கள்.
நீக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக பெப்சி சங்கம், இயக்குநர்கள் சங்கம், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் போன்ற திரையுலக அமைப்புகளும், நாம் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளும் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றன. கில்ட் இப்படி நடந்துகொள்ள என்ன காரணம்? தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டு, தமிழ்நாட்டில் செயல்படும் ஒரு திரைப்பட அமைப்பு தமிழைப் புறமொதுக்க எண்ண காரணம்?
கில்லாடி கில்ட்
கில்ட் என்று சுருக்கமாக அழைக்கப்படும் தென்னிந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கம் தனது பொன்விழா ஆண்டில் நுழைந்திருக்கிறது. பாரம்பரியச் சிறப்பு மிக்க இந்தச் சங்கம், திரைப்படத் தலைப்புகளைப் பதிவு செய்து தருவது, தணிக்கைச் சான்றிதழ் பெற்று ரிலீஸுக்குத் தயாராக இருக்கும் படங்களின் பட்டியலை வெளியிடுவது என்று சில வேலைகளை உறுப்பினர்களுக்காகச் செய்துவருகிறது. மறைமுகமாகத் தலைப்பு வியாபாரம் செய்வதாக அவ்வப்போது கில்டின் மீது குற்றச்சாட்டு சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் சங்கக் கூட்டத்தில் தமிழில் பேசியதற்காக பொறுப்பிலிருந்தே நீக்கப்படுதல் என்பது கில்டின் புதிய முகமாக வெளிப்பட்டிருக்கிறது. இதுபற்றி கில்டுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்நாடு இயக்குநர் சங்கத்தின் பொருளாளர், இயக்குநர் வி. சேகரிடம் பேசினோம்.
“45 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு தென்னிந்தியத் திரைப்படத் துறையின் தாய்வீடாக இருந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிப் படங்களும் சென்னையில்தான் தயாரிக்கப்பட்டன. இதனால் மற்ற மொழித் தயாரிப்பாளர்களும், கலைஞர்களும் இங்குதான் இருந்தனர். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு காலப்போக்கில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், மொழிக் கலைஞர்கள் தங்கள் மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து, தங்கள் மொழித் திரைப்படத் துறையை வலுவாக்கிக்கொண்டனர்.
தங்களுக்கென்று தனியே தொழிற்சங்கங்களை உருவாக்கிக்கொண்டார்கள். அதன் பிறகு தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட பிலிம் சேம்பர், பெப்சி, கில்ட் போன்றவை தமிழ்நாட்டின் அமைப்புகளாக மாறியிருக்க வேண்டும். அதேபோல சங்கங்களின் பெயரில் தமிழ்நாடு என்ற பெயர் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். தமிழர்கள் பெருந்தன்மை கொண்டவர்கள் என்பதால் அதைப் பற்றி அப்போது அவர்கள் யோசிக்காமல் விட்டுவிட்டார்கள்.
தற்போது தமிழ்நாட்டில் இயங்கும் திரைப்படச் சங்கங்களில் மற்ற தென்னிந்திய மொழிக்காரர்களின் பங்கு 2 முதல் 5 சதவீதம்கூடக் கிடையாது. ஆனால் இங்கேயே செட்டிலாகிவிட்ட சிலர், கில்ட், பிலிம்சேம்பர் ஆகிய சங்கப் பதவிகளை விட்டு விலகாமல் குறுக்கு வழியில் மீண்டும் மீண்டும் பதவிக்கு வந்துகொண்டே இருக்கிறார்கள்.
இவர்கள் திரைமறைவில் கடைபிடித்து வந்த தமிழ் விரோதப் போக்கைத் தற்போது வெளிப்படையாக காட்ட ஆரம்பித்துவிட்டார்கள். தமிழ்நாட்டு உறுப்பினர்கள் கொடுக்கும் பணத்தில் சங்கம் நடத்திக்கொண்டு, தமிழ் உறுப்பினர்கள் கேள்வி கேட்டால் அவர்களைச் சங்கத்திலிருந்து நீக்கும் அளவுக்கு தைரியம் இருக்கிறது என்றால், அதற்குத் தமிழ் உறுப்பினர்களிடையே ஒற்றுமை குறைவாக இருப்பதுதான் காரணம்.
அதேபோல தமிழ் விரோதப் போக்கை கடைபிடிப்பவர்களுக்குத் துணைபோகும் சிலரும் தமிழர்களாகவே இருப்பதும் இந்தச் சிக்கலுக்குக் காரணம். இது விரைவில் மாறும்” என்கிறார்.
தட்டிக் கழிக்கப்படும் தீர்மானம்
கில்ட் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டதாக கூறப்படும் செயற்குழு உறுப்பினர் ஆதிராம் கில்டில் உள்ள பிரச்சினைகளை விரிவாகப் பேசுகிறார். “கில்டில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழ்நாட்டு தயாரிப்பாளர்களின் எண்ணிக்கையே அதிகம். மூவாயிரம் உறுப்பினர்களில் 90 சதவீதம் பேர் தமிழ்ப் படம் எடுப்பதற்காகத் தங்களைப் பதிவு செய்துகொண்டிருப்பவர்கள்.
சங்க உறுப்பினர்கள் பயனடையும் வகையில் 19 வருடங்களாக ஆங்கிலத்தில் ஒரு மாதப் பத்திரிகையை மாதம் ரூபாய் 45 ஆயிரம் செலவழித்து வெளியிட்டுவருகிறார்கள். ஆங்கிலப் பத்திரிகையின் எண்ணிக்கையைத் தேவைப்படும் அளவிற்கு குறைத்துக்கொண்டு, தமிழ்ப் படத் தயாரிப்பாளர்கள் பயனடையும் வகையில், ஒரு தமிழ் பத்திரிகையைச் சங்கத்திலிருந்து வெளியிட வேண்டும் என்று பல வருடங்களாக வலியுறுத்திவருகிறோம்.
தமிழில் சங்கத்தின் செய்திப் பத்திரிகை கொண்டுவர வேண்டும் என்று சங்கத்தின் துணைத் தலைவர் கலைக்கோட்டுதயம் பொதுக்குழு, செயற்குழுவில் கூட்டங்களில் பல ஆண்டுகளாக வலியுறுத்திவந்தார். இதை 2012-ம் ஆண்டு ஜுலை மாதம் நடைபெற்ற 47-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் விவாதித்து ஏகமனதாகத் தீர்மானமும் நிறைவேற்றினோம்.
ஆனால், இன்று வரை அதை நடைமுறைப் படுத்தவில்லை. இதற்குக் முக்கியக் காரணம் சங்கத் தலைவராக இருக்கும் கிரிதாரிலால் எல். நாக்பால் வடமாநிலத்தைச் சேர்ந்தவர். அவருடன் இணைந்துகொண்டு தமிழ் விரோதப் போக்கை தேவராஜ் குணசேகரன், சிம்மம் ரகு போன்ற நிர்வாகிகளும் கடைபிடிக்கிறார்கள்.” என்கிறார் ஆதிராஜன்.
ஊழலும் உண்டு
கில்டின் இணைச் செயலாளராக இருந்து தற்போது நீக்கப்பட்டதாக கூறுப்படும் மூத்த சண்டைப் பயிற்சி இயக்குநரான ஜாக்குவார் தங்கம், தலைவர் மீது சில குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார். “சங்கத்தின் தலைவர் பயணச் செலவு என்று கூறியே பல லட்சங்கள் ஊழல் செய்திருக்கிறார். ஃபிலிம் பெடரேஷன் ஆஃப் இந்தியா அமைப்பில், கில்ட் சங்கம் உறுப்பினராக இருக்கிறது. பெடரேஷன் நடத்தும் கூட்டங்களில் கலந்துகொள்ள மாதம்தோறும் மும்பையும் டெல்லியும் சென்றதாகக் கணக்குக்காட்டிப் பணத்தை எடுத்திருக்கிறார் தலைவர்.
கடந்த ஆண்டு மார்ச்சில் தொடங்கி இந்த ஆண்டு ஜூன்வரை மொத்தம் ஏழு கூட்டங்கள்தான் நடந்திருக்கின்றன. அதை பெடரேஷன் செயலாளர் எனக்கு அதிகாரபூர்வ கடிதமாகக் கொடுத்திருக்கிறார். கில்ட் சங்கத்துக்காக ஒரு கோடி ரூபாய்கூட மார்க்கெட் மதிப்பு இல்லாத பட்டா இல்லாத நிலத்தில் கட்டப்பட்ட அபார்ட்மெண்ட் ஒன்றை, ஒரு கோடியே நாற்பது லட்சம் கொடுத்து வாங்கியிருக்கிறார்கள். திருட்டி விசிடி பிரச்சினைக்காகப் போராடிவரும் தயாரிப்பாளர் கே. ராஜன், கில்ட்டில் உறுப்பினராகச் சேர விண்ணப்பம் கொடுத்தபோது அவரது விண்ணப்பத்தை தனது ஆதரவாளர்களுடன் இணைந்துகொண்டு நிராகரித்தவர்தான் இந்த நாக்பால்” என்கிறார் ஜாக்குவார் தங்கம்.
தலைவரின் பதில்
கில்டின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை கில்டின் தலைவர் கிரிதரிலால் நாக்பால் மறுக்கிறார். “தமிழில் பத்திரிகை கொண்டுவர மாட்டோம் என்று சொல்லவில்லை. ஒரு பத்திரிகை தொடங்க நிறைய சட்டதிட்டங்கள் இருக்கிறது. அதன் வழிமுறைகள்படிதான் போக முடியும். இது ஒரு தென்னிந்திய அமைப்பு. இதில் தமிழுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க முடியாது.
என் மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன். அதை மறுக்கிறேன். முடிந்தால் ஜாக்குவார் தங்கம் அதை நிரூபிக்கட்டும். பட்டா இல்லாத நிலத்தில் கட்டப்பட்ட இடத்தை சங்கத்துக்கு வாங்கக் கூடாது என்றெல்லாம் எதுவுமில்லை. நாங்கள் முறையாக பட்டாவுக்கு விண்ணப்பித்திருக்கிறோம். சங்கத்தில் தற்போது நடந்துவரும் விவகாரங்களை விளக்கி தமிழக முதல்வருக்கு ஒரு புகார் மனுவாக அளித்திருக்கிறோம்” என்றார்.
கில்டின் மீதான முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் அதற்குரிய அமைப்புகளால் முடிவுசெய்யப்பட வேண்டியவை. ஆனால் கில்ட் தென்னிந்திய அமைப்பு என்றுசொல்லப்பட்டாலும் 90 சதவீதம் உறுப்பினர்கள் தமிழ்ப் படம் எடுப்பவர்கள் என்பதால் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் சங்கத்தை நடத்துவதுதான் முறையானது என்பதே பெரும்பாலான உறுப்பினர்களின் உணர்வும் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. தமிழ் மண்ணில், தமிழ் உறுப்பினர்களைப் பிரதானமாகக் கொண்டு இயங்கும் ஓர் அமைப்பு, தமிழர்களின் மொழியையும் உணர்வையும் மதித்து நடந்துகொள்வதே நியாயமான செயல்பாடாக இருக்க முடியும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago