ஒரு காட்சியில் இடமும் காலமும் மாறக் கூடாது. அப்படி மாறினால் அது ஒன்றுக்கு மேற்பட்ட காட்சிகளின் தொகுப்பு. உதாரணமாக, ‘கழுகு’ குறும்படத்துக்கான காட்சி ஒன்றை எடுத்துக்கொள்வோம். அருண் நண்பர்களோடு கொடைக்கானல் நோக்கி நான்குவழி தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருக்கிறான். அவனையும் நண்பர்களையும் பின்தொடரும் கேமராவின் பிரேமுக்குள் மேற்கே சூரியன் மறைந்துகொண்டிருக்கிறது.
விரையும் பைக்குகளில் இருந்து தனது கண்ணை விலக்காத கேமராவுக்குள் சூரியன் மறைந்து இரவு நுழைவதை உணர்த்த இருள் சூழ்வதும் சாலையின் நடுவே உயரமான கம்பங்களில் ஒளிரும் எல்.இ.டி விளக்குகள் எரிய ஒரு பறவைக் கோணத்தில் கேமரா அவர்களிடமிருந்து பின்வாங்கி அவர்கள் வந்த வழியைப் பார்ப்பதுடன் கட் ஆகிறது என்றால் இது இரண்டு காட்சிகளின் தொகுப்பு.
அடுத்த காட்சியில், அதிகாலையில் ஒரு மரத்தின் இலையில் உறங்கிக்கொண்டிருக்கும் பனித்துளிக்குள் உதிக்கும் சூரியன் தெரிகிறது… அருணும் நண்பர்களும் கொடைக்கானலின் அடிவாரத்திலிருந்து பைக்கில் மலை ஏறிக்கொண்டிருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். இப்போது அந்தப் பிரம்மாண்ட மலைத்தொடரின் உயரத்தைக் காட்ட அடிவாரத்திலிருந்து ட்ரோனில் பொருத்தப்பட்ட கேமரா மேலெழுந்து பறந்தவாறு ஆயிரம் அடி உயரத்தில் பாம்புபோல் வளைந்துசெல்லும் சாலையை நோக்கிச் செல்கிறது.
சாலையை அடைந்து யாரையோ எதிர்பார்த்துக் காத்திருக்கிறது… அரவம் ஏதுமற்று, காலையின் அமைதிக்குள் மலைகளின் ஒலியை மட்டும் ஏந்திய அந்தக் காட்சியில் சாலையின் வளைவில் முதல் பைக் பிரேமின் உள்ளே நுழைந்து விர்ர்ம்ம்ம் சந்தத்துடன் செல்ல.. அடுத்துதடுத்து விரையும் நான்கு பைக்குகளில் ஒன்றில் அருண் செல்வதை நமக்கு அடையாளப்படுத்திவிட்டு அங்கே நின்றுவிடும் கேமரா மீண்டும் சாலையில் வெறுமையுடன் கட் ஆகிறது.
மாலை, இரவு, அதிகாலை என மூன்று காலங்களைக் கொண்ட மூன்று காட்சிகளையும் நீங்கள் ஒரே காட்சியாக எடுத்துக்கொள்ளக் கூடாது. ஏனென்றால் காட்சியில் அருணும் நண்பர்களும் கொடைக்கானலுக்குச் சென்று கொண்டிருக்கும் ஒரே ஆக்ஷன்தான் நடக்கிறது. ஒரே ஆக்ஷன் நடந்து, காட்சிகளில் காலமும் இடமும் மாறினால் அதை ‘சீக்குவென்ஸ்’ (sequence) என்கிறது திரைக்கதை இலக்கணம். குறிப்பிட்ட செயல் அல்லது நிகழ்ச்சி நடக்கும் ஷாட்களின் தொகுப்புதான் ஒரு காட்சி. அதில் காலமும் இடமும் மாறலாம் என்பதை மறக்காதீர்கள்.
கடந்த அத்தியாயத்தில் ‘கழுகு’ குறும்படத்தின் 12 காட்சிகளில் 6 காட்சிகளுக்கான ஒருவரிக் கதையை எழுதினோம். எஞ்சிய 6 காட்சிகளை இப்போது பார்க்கலாம்.
7. அருண் இரவு வீட்டுக்கு வரவில்லை என்பதை அப்பா கவனிப்பது. “ மத்தியான சாப்பாட்டுக்கு எழுந்திருக்கிற பய… எங்க ஆளக் காணோம்?” என மனைவியிடம் கேட்பது. “ அவன் பிரெண்ட்ஸோட கொடைக்கானல் போயிருக்கிறான். அஞ்சு நாள் பிளான் போட்டு போயிருக்கானுங்க.” என அம்மா சொல்வது.
“ ஏன் எங்கிட்ட சொல்லிட்டுப் போகல.. அப்பான்னு எதுக்கு நான் இந்த வீட்ல இருக்கேன்” என அப்பா கேட்பது.. பதில் பேசாமல் அம்மா இருப்பது… “ கடைசி வருஷம்.. மொத செமஸ்டர்ல ஒரு பேப்பர் எழுதினதோட காலேஜ் பக்கம் தலைவெச்சுப் படுக்கல… நாலு வருஷப் படிப்பு.. அஞ்சு வருஷம் ஓடிப்போச்சு.. ஆனா, ஐயாவுக்கு ஊர் சுத்துறதுக்கு மட்டும் நேரம் இருக்கு”அப்பாவின் கோபம் சற்று அதிகமாவதைப் பள்ளிக்குக் கிளம்பிக்கொண்டிருக்கும் மகள் கவனிப்பது..
“அதிகப்பிரசங்கி.. ஹில் ஸ்டேஷன்ல பைக் ஓட்டி இவனுக்குப் பழக்கம் இருக்கா?” எனக் கோபமாகக் கேட்பது. “ வளர்ந்த புள்ளைக்கு அது பெரிய கம்ப சூத்திரம் பாருங்க… நான் டிபன் பண்ற வேலையைப் பாக்கிறேன்” எனக் கூறிவிட்டு கிச்சனுக்குள் நுழைவது… அப்பா கோபத்துடன் ஹால் நாற்காலியில் அமர, பள்ளிக்குக் கிளம்பும் மகள் அப்பாவுக்கு முத்தமிட்டு, “ அண்ணன் பத்தரமா வந்துடுவான் டாடி… கவலைப்படாத” என்று கூறிவிட்டுச் செல்வது…
8. சூரியன் மறைந்துகொண்டிருக்கும் வேளையில் அருணும் நண்பர்களும் நான்குவழி தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருப்பது. மாலை முடிந்து இரவு வந்துவிட பைக் பயணம் தொடர்வது... அடுத்த நாள் அதிகாலையில் கொடைக்கானல் கொண்டை ஊசி வளைவுகளில் அருணும் நண்பர்களும் பைக்கில் மலையேறிக்கொண்டிருப்பது...
ஒரு கொண்டை ஊசி வளைவில் எதிரே வரும் காரில் அருண் மோதி கீழே விழுவது... தூக்கத்திலிருந்து அருணின் அப்பா திடுக்கிட்டு எழுவது. உடனடியாகத் தனது மொபைல் போனில் அருணின் நம்பருக்குப் போன் போடுவது அருண் அடுத்து “ சொல்லுப்பா…” என்பது.. “ எங்கடா இருக்கே?” எனக்கேட்பது, “ அவன் “கொடைக்கானல்ல” என்பது... அப்பா போனை கட் செய்துவிட்டு பெருமூச்சு விடுவது…
9. நள்ளிரவில் வீட்டுக்கு வந்துசேரும் அருணிடம், “ டேய் காலையில் பத்து மணிக்குக் கிளம்பி… வீடு வந்து சேர இவ்வளவு நேரமாடா? என்பது.. “ என்னம்மா.. நீயும் அப்பா மாதிரி ஆயிட்ட…! 525 கிலோ மீட்டர்மா! என அருண் சொல்வது. “ சரிடா.. ட்ரிப்பைப் பத்தி அப்பறம் பேசுவோம்… தாத்தா ஊருலேர்ந்து டிரைன் ஏறியிருக்கிறார்.
ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ். காலையில 4.45-க்கு மாம்பலம் ஸ்டேஷன் வந்துடும்.. போய் அவரைப் பிக்-அப் பண்ணிட்டு வந்துடு.” என்பது. “ஓகே மம்மி” என்று சொல்லிவிட்டுக் குளியலறைக்குள் அருண் குளிக்கச் செல்வது... அமைதியாகச் சென்று கணவனின் அருகில் அருணின் அம்மா படுப்பது... “ பய வந்துட்டானா!” எனக் கண்களை மூடிக்கொண்டே கேட்பது.. “இப்பதான் வந்தான்.. இன்னைக்காச்சும் நிம்மதியா தூங்குங்க” என்று கணவனை அர்த்தபூர்வமாகப் பார்ப்பது..
10. அதிகாலைத் தெருவில் ஆவின் பால் போடுபவர் சைக்கிளில் வருவது. அருணின் வீட்டின் கிரில் கேட்டில் கட்டப்பட்டிருக்கும் பால் பையில் இரண்டு ஆவின் பால் பாக்கெட்டுகளை அவர் போடுவது... அருண் பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்புவது... அருண் ஸ்டேஷன் வாசலில் தாத்தாவைப் பார்த்துக் கட்டிக்கொள்வது…
வீட்டுக்கு வரும் வழியில் தாத்தா அருணிடம் பேசுவது.. “ என்னடா கண்ணு.. வேலை வெட்டி தேடிக்கிட்டு இருக்கியா…” எனக் கேட்பது.. அருண், “இல்ல தாத்தா.. இன்னும் கொஞ்சம் பேப்பர்ஸ் இருக்கு தாத்தா”என்பது. “ உங்க தாத்தன் மண்ண நம்பி பொளைக்கிறவன். உங்க அப்பன் ஆபீஸ்ல உளையுறான்..
எட்டுவருஷம் கழிச்சு எடுக்க வேண்டிய பி.எஃப் பணத்தை இப்பவே எடுத்து உன்னைப் படிக்க வெச்சிருக்கான்… எல்லா அப்பனும் இப்படிச் செய்வானுங்கன்னு நினைக்காத.. உனக்கு எஜுகேஷன் லோன்னு ஒண்ணு இல்லைய்ல..” என்பது..
“ ஆமா தாத்தா” என அருண் ஆமோதித்து மெதுவாக பைக் ஓட்டிக்கொண்டு வருவது.. தாத்தாவை வீட்டு வாசலில் இறக்கிவிட்டுவிட்டு “ பிரெண்ட் வீடுவரைக்கும் போயிட்டு வந்துடுறேன் தாத்தா” எனக் கூறிவிட்டுச் செல்வது
11. வீட்டுக்கு வரும் மாமனாரை அருணின் அம்மா வரவேற்பது.. “ வாங்க மாமா, ஊருல அத்தை நல்லா இருக்காங்களா?” என்பது.
“ சௌக்கியம்மா…” என்பது.. அருணின் அப்பா.. “ அருணோட பைக்லயா ஏறி வந்தீங்க?” எனத் தன் அப்பாவைப் பார்த்துக் கேட்பது.. “ ஆமாப்பா.. மெதுவாத்தான் உருட்டிக்கிட்டு வந்தான்.. பொறுப்பான புள்ள” என்பது..
“ உங்க பேரனை நீங்கதான் மெச்சிக்கனும்” என்பது.. “ 24 வயசுல நீ எப்படி இருந்தியோ அப்படித்தான்பா அவனும் இருக்கான்... நீ சைக்கிள்ல சுத்தினே… அவன் பைக்ல சுத்துறான்... இதெல்லாம் மாறிடும்பா” என அருணின் தாத்தா சொல்வது.
12. மூன்று மாதங்களுக்குப் பின் எனத் திரையில் எழுத்துகள் ஒளிர்வது.. அருணின் பைக் சேறும் சகதியுமாக இருப்பதை அப்பா பார்ப்பது. நம்பர் பிளேட்டில் ‘ஈ.சி.ஆர். ஈகிள் என்று இருந்த ஸ்டிக்கர் இப்போது ‘அங்கிள்ஸ் கிப்ட்’ என மாறி இருப்பது. அதைக் கண்டு அருணின் அப்பா கொஞ்சமாக ஆச்சரியப்படுவது.. பைக்கைக் கழுவும் நோக்கத்துடன் ஹோஸ் பைப்பை எடுத்துக்கொண்டு பைக் அருகில் செல்வது…
அதன் பெட்ரோல் டேங்க் மீதிருக்கும் பைக் கவரில் ஏதும் இருக்கிறதா எனப் பார்ப்பது… அதற்குள் ஒரு ‘குமுலேட்டிவ் மார்க் ஷீட்’ இருப்பது. ஹரியர்ஸ் இருந்த பாடங்களிலும் அருண் பாஸ் செய்துவிட்டதைத் தெரிந்துகொள்வது… அவர் முகம் எதையோ உணர்வது… அவர் முகத்தில் ஒரு தெளிவு பிறப்பது… தண்ணீரை அடித்து பைக்கில் இருக்கும் சேற்றைக் கழுவுவது… அருணின் அம்மா அதை மர்மப் புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருப்பது…
அடுத்த பகுதியில் ஒரு காட்சிக்கான முழுத் திரைக்கதையுடன் காட்சியில் இருக்க வேண்டிய ‘கான்டெக்ஸ்ட்’ பற்றித் தெரிந்துகொள்வோம்..
தொடர்புக்கு:jesudoss.c@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago