சி(ரி)த்ராலயா 50: மெரினாவில் ஒரு நினைவிடம்!

By டி.ஏ.நரசிம்மன்

எப்போதும்போல் ஸ்ரீதரின் வீட்டுக்குக் கிளம்பிய கோபுவிடம் “நாங்களும் வருகிறோம்” என்று மகனும் மகளும் கூறியபோது சிலநொடிகள் புரியாமல் விழித்தார். பின்னர் அருகில் வந்து அவரது கைகளை ஆதரவுடன் பற்றிக்கொண்ட ஸ்பரிசத்தில் அந்தப் பெருந்துயரத்தை நொடியில் உணர்ந்து கொண்டார் கோபு. எதையும் கேட்காமல் மௌனமாகக் கிளம்பி விட்டார். சிரித்துக்கொண்டே இருப்பவர்களுக்கு அழத்தெரியாது என்பது அவரைப் பொறுத்தவரை உண்மையாகிப் போனது.

பால்ய நண்பனுடன் இனி உறவாட முடியாது என்று நினைத்தபோதே பெரும்பாரம் மனதை அழுத்தியது. நீலாங்கரையில் இருந்த ஸ்ரீதரின் வீட்டுக்குச் சென்றபோது அங்கே கூடியிருந்த பெருங்கூட்டம் அவரது கண்களை உடைத்தது. நண்பனை உடலாகக் காண உள்ளே செல்லும் முன்பாகத் தன் முன்னால் நீட்டப்பட்ட தொலைக்காட்சி மைக்குகளில் என்ன பேசினோம் என்பது கூட நினைவில் இல்லை.

எத்தனை பெரிய புகழுடையவர்களையும் எத்தனை அமைதியாக உறங்க வைத்துவிடுகிறது காலம்! ஸ்ரீதர் இறந்த தினத்திலிருந்து ஒரு வார காலம் மௌனமாகவே இருந்தார் கோபு. ஸ்ரீதரின் மரணத்தை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை.

ஐந்தாம் வகுப்பில் ஒன்றாகப் படித்தது, மாந்தோப்பில் மாங்காய் திருடியது, கோபுவின் வீட்டில் இருந்து வினாத்தாளைத் திருடியது, நாடகங்கள் எழுதியது, ஸ்ரீதருடன் ‘கல்யாணப் பரிசு’ படத்தில் இணைந்து நகைச்சுவை வசனம் எழுதி, ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் மூலம் புகழ் அடைந்ததது. பாலிவுட், டோலிவுட் என இந்தி, தெலுங்கிலும் பல வெற்றிகளைத் தந்தது, அகில இந்திய அளவில் புகழ்பெற்ற பல நட்சத்திரங்கள், இசையமைப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் திரைத்தொழிலைக் கடந்து நண்பர்கள் ஆனது, ஐரோப்பா, காஷ்மீர் எனப் பயணம் செய்தது என எல்லாவற்றையும் நினைத்துப் பார்த்துக்கொண்டே இருந்தார்.

‘சித்ராலயா’ கோபு என்ற அடையாளத்தை உருவாக்கியது ஸ்ரீதரின் நட்புதானே… இப்படியொரு நட்பு கிடைக்க என்ன தவம் செய்திருக்க வேண்டும். எண்ணிப் பார்த்து நன்றிப்பெருக்கில் அவ்வப்போது கண்கள் கலங்கிக்கொண்டிருந்தார்.

இறப்பிலும் சிரிப்பு

2011-ம் வருடத்தில் கோபுவின் சதாபிஷேகம் மிக விமரிசையாக நடந்தபோது திரையுலகம் திரண்டு வந்து வாழ்த்துக் கூறியது. முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துச் செய்தி அனுப்பி ஆசிகளையும் கோரியிருந்தார். திரையுலகுக்கு வெளியேயிருந்து அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள் எனப் பலர் அந்த விழாவில் கலந்துகொண்டது பல தளங்களிலும் கோபுவுக்கு அபிமானிகளும் நண்பர்களும் இருந்ததை உணர்த்தியது.

அதே வருடத்தில் சிவாஜி கணேசனின் வாரிசுகள் ராம்குமார், பிரபு இருவரும் கோபுவைத் தொடர்பு கொண்டார்கள். “அப்பாவின் பிறந்தநாள் விழாவில், இந்த ஆண்டுக்கான சிவாஜி நினைவு விருதினை நீங்கள் பெற்று எங்களைக் கவுரவிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டனர். மனங்கொள்ளா மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக்கொண்டார். அடுத்து வந்த வருடத்தில் மனைவி கமலா காலமானார்.

எழுத்தாளரான கமலா போகும்போது, சும்மா போகவில்லை. “ இன்னும் ஆறு மாதத்தில் நீங்கள் என் பின்னாடியே வந்து விடுவீர்கள்” என்று கோபுவிடம் ஒரு குண்டை போட்டு விட்டுத்தான் கிளம்பினார். அவருக்கு ஜோசியமும் தெரியும் என்பதால், கோபு அதிர்ந்து போனார். அந்த ஆறு மாதம் கோபு எங்கேயும் போகவில்லை. தனது அறையிலேயே அடைந்து கிடந்தார். விழாக்களுக்கு வந்த அழைப்புகள், சேனல் பேட்டிகள் எல்லாவற்றையும் நிராகரித்தார்.

தந்தை சோபை இழந்து இருக்கிறாரே என்று அவரது இரண்டாவது மகன் காரணத்தைக் கேட்க, ஒளிக்காமல் காரணத்தை மகனிடம் கூறிய கோபு, “அம்மா இறந்து எட்டு மாசம் ஆகியாச்சு.. ஒண்ணுமே நடக்கலியே!’’ என்று தனக்கேயுரிய நகைச்சுவையுடன் கூறினார். ஆனால், நகைச்சுவையை மீறிய ஒரு சின்ன பீதி ஒளிந்திருந்ததைக் கண்டுகொண்ட மகன், “ஒரு ஆறு மாத காலம் உன்னை அரண்டு போக வைக்க வேண்டும் என்பதற்காக அப்படிச் சொல்லி இருக்கிறாள்.

இருந்தபோது, தீர்க்க முடியாத கோபத்தைப் போகும்போது கூறி உன்னைக் கதிகலங்கச் செய்திருக்கிறாள். அவ்வளவுதான். உனக்கு ஒன்றும் ஆகாது. நீ நன்றாக இருப்பாய்.!’’ என்ற பிறகுதான் “ அப்பாடா…!” என்று பெருமூச்சு விட்டார் கோபு.

சித்ராலாயா உருவாக்கிய தடம்

ஸ்ரீதரின் மறைவுக்குப் பிறகு நெருங்கியவர்களின் மரணத்தை ஏற்கப் பழகிக் கொண்டுவிட்டார் கோபு. ஒளிப்பதிவாளர் வின்சென்ட், திருச்சி அருணாசலம், சி.வி.ராஜேந்திரன் என்று தோளோடு தோள் நின்றவர்கள் அனைவரும் மறைந்து விட, சித்ராலயாவின் ஒரே தூணாக பழைய நினைவுகளுடன் வாழ்ந்து வருகிறார் கோபு.

தமிழகத்திலும் கடல்கடந்தும் தமிழர்களால் நடத்தப்பட்டுவரும் அத்தனை ஹியூமர் கிளப்களும் கோபுவைக் கௌரவித்து விட்டன.

லதா ரஜினிகாந்த், தான் தாளாளராக இருந்து நடத்திவரும் ஆஸ்ரம் அறக்கட்டளை சார்பாக இந்தி நடிகர் தேவ் ஆனந்தையும் கோபுவையும் கௌரவித்து பீஷ்மா விருதை வழங்கினார். இந்த கௌரவங்கள் அத்தனைக்கும் அடித்தளமாக அமைந்தது சித்ராலாயா எனும் கலைவீடு. அங்கே திறமைக்கே முதலிடம். தனி நபர் புகழ்ச்சி கிடையாது. அனைத்தும் ‘டீம் ஒர்க்’ எனும் தாரக மந்திரத்தால் சித்ராலயா சாதித்தது. எத்தனை பெரிய நடிகராக இருந்தாலும் சித்ராலயாவிடம் பந்தா காட்ட முடியாது.

ஈஸ்ட்மன் கலரில் முதலில் படமாக்கியது, வெளிநாட்டில் அதிக நாட்கள் படமாக்கியது, 22 நாட்களில் ஒரு படத்தைப் படமாக்கியது, கதாபாத்திரத்துக்காக மேக்கப் இல்லாமல் நடிகர்களை நடிக்க வைத்தது, தனக்கென ஒரு பத்திரிகையை நடத்தியது என சித்ராலயா திரையுலகில் உருவாக்கிய தடம் சினிமா தொழிலில் ‘புரபொஸனலிசம்’ மேலும் சிறக்க வழிவகுத்தது.

அப்படிப்பட்ட சித்ராலயாவின் பெயரை பறைசாற்றியபடி மகன்கள், மருமகள்களுடன் கூட்டுக் குடித்தனமாய் திருவான்மியூரில் வசித்து வருகிறார் கோபு. இவரது மகன்கள் பெரிய நிறுவனங்களில் பணிபுரிந்துகொண்டே எழுத்தாளர்களாகவும் திகழ்கின்றனர். பேரன்கள், பேத்திகள் அனைவரும் திரையுலகிலும் ஊடகங்களிலும் மென்பொருள் துறையிலும் பணியாற்றிவருகிறார்கள். ஸ்ரீதர் – கோபு குடும்பங்களுக்கு இடையிலான நட்பும் நெருக்கமும் தலைமுறை தாண்டி தொடர்கிறது.

வெற்றிக்கான திறவுகோல்

தற்போது திரையுலகில் வெற்றிக்காகப் போராடுபவர்களுக்கும் திரையுலகில் நுழைய விரும்புகிறவர்களுக்கும் கோபு தரும் செய்தி இதுதான். “திறமைகளை முன்னிறுத்துங்கள். தனிநபர் வழிபாடு செய்பவர்களை அருகே வைத்துக் கொள்ளாதீர்கள். நகைச்சுவை என்பது அனைவரது உள்ளேயும் பொதிந்து கிடக்கிறது. நெருப்பை, உமி மூடுவது போன்று, அன்றாடம் வாழ்வில் நடக்கும் சின்னச் சின்ன சச்சரவுகள், ஈடுகட்ட முடியாத சோகங்கள் அந்த நகைச்சுவை உணர்வை மூடிவிடுகின்றன.

உமியை ஊதி, தீச்சுடரைக் கனன்று எரிய வைப்பது போன்று, துயரம் எனும் உமியை ஊதித் தள்ளி, இதயத்தில் மறைந்து கிடக்கும் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்துங்கள். உங்கள் திறமைகளை பற்றி மற்றவர் பேச வேண்டுமே தவிர, உங்களைப் பற்றி நீங்களே பேசிக்கொள்வதில் என்ன த்ரில் இருக்கிறது. மிகவும் திறமையானவர்களோடு நான் பணிபுரிந்து விட்டேன்.

திறமையானவர்களைத் தேடி கண்டுபிடித்து, உங்கள் திறமைகளை அவரோடு சேர்த்து வெற்றி பெறுங்கள். எவ்வளவு திறமை உங்களிடம் இருந்தாலும் அதன் மதிப்பு அறியாதவர்களின் அருகில் வெற்றிக்காகக் காத்திருப்பது வீண்” என்கிறார் கோபு.

சமீபத்தில் பேரன், பேத்திகளோடு மெரினா கடற்கரையின் காந்தி சிலை பின்புறம் தானும் ஸ்ரீதரும் அமர்ந்து கதை விவாதிக்கும் இடத்துக்குச் சென்றார். “இங்கேதான், காதலிக்க நேரமில்லை உருவானது. ‘என்ன பார்வை.. உந்தன் பார்வை பாட்டு அதோ அங்கேதான் படமாக்கப்பட்டது’’ என்று அவர்களிடம் காண்பித்துக்கொண்டிருந்த கோபுவுக்குப் பெருமை பிடிபடவில்லை..

ஐம்பது ஆண்டுகளைக் கடந்து அரசியலை ஆட்டி வைக்கும் திரைப்படத் துறையிலிருந்து வந்த அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய நால்வருக்கும் மெரினாவின் வடகோடியில் நினைவிடம் அமைந்தது அவர்களது அரசியல் ஆளுமைக்காக. ஆனால், சித்ராலயாவின் ‘காதலிக்க நேரமில்லை’ தனக்குத்தானே. மெரினாவில் ஒரு நினைவிடத்தை ஏற்படுத்திக்கொண்டு விட்டது.

மெரினாவின் காந்தி பீச்சுக்குச் செல்லும் பலரும் ‘ஸ்ரீதர்-கோபு இங்கே அமர்ந்துதானே ‘காதலிக்க நேரமில்லை’ உட்படப் பல வெற்றிப் படங்களின் கதைகளை உருவாக்கினார்கள் என நினைவு கூர்வார்கள். இதைவிட அவர்களது நட்புக்கு வேறு பெரிய அங்கீகாரம் என்ன கிடைத்து விடப்போகிறது?

(நிறைவடைந்தது)
தொடர்புக்கு: tanthehindu@gmail.com | படங்கள் உதவி: ஞானம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்