அன்றிரவு மழை பெய்திருக்காவிட்டால் ‘பரியேறும் பெருமாள்’ நமக்குக் கிடைத்திருக்க மாட்டார். திரைப்படத்தில் சாதித்துவிடும் கனவோடு கிராமத்தில் இருந்து புறப்பட்டுவந்த இளைஞனின் கதையல்ல மாரி செல்வராஜுடையது. சமூகம் தந்த அழுத்தத்தால் கூடு தங்க முடியாமல் சென்ற பறவையின் கதைக்குச் சொந்தக்காரர் அவர்.
தனிமையே துணை
மாபெரும் படைப்புகளைவிட மனத்துக்கு நெருக்கமான படைப்புகளே வெற்றியைத் தொடுகின்றன என்பதற்கு மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் ‘பரியேறும் பெருமாள்’ சமீபத்திய உதாரணம். தான் சொல்ல நினைக்கும் கருத்தைப் படத்தில் வலிந்து திணிக்காமல் கதையோட்டத்துடன் சேர்த்திருப்பதாலேயே மாரி செல்வராஜ் தனித்துத் தெரிகிறார்.
படத்தில் வரும் காட்சிகளில் பெரும்பாலானவை தனக்கும் தன்னைச் சுற்றியிருந்தவர்களுக்கும் நடந்தவைதாம் எனக் குறிப்பிடும் மாரி செல்வராஜ், திருநெல்வேலிக்குப் பக்கத்தில் இருக்கும் புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர். பெற்றோர் விவசாயக் கூலிகள். ஒரு காலத்தில் ஆளைத் திண்ணும் அளவுக்குப் பஞ்சம் தலைவிரித்தாடியபோது, அவரது கிராமத்தைச் சேர்ந்த சிலர் வெளியூர்களுக்குச் சென்று வேடமிட்டு ஆடியிருக்கிறார்கள்.
அப்படித்தான் மாரியின் அப்பா செல்வராஜ், அரிதாரம் பூசத் தொடங்கியிருக்கிறார். அம்மா, கூலி வேலைக்காகப் பக்கத்து ஊருக்குச் சென்றால், சில நேரம் திரும்பிவரப் பத்து நாட்களுக்கும் மேல் ஆகும். அப்பா, அம்மா இருவரும் இல்லாத வீட்டில் சிறுவன் மாரிக்குத் தனிமையே துணை. வீட்டில் இரண்டு அண்ணன்கள், ஒரு அக்கா என மூவர் இருந்தும் தன் எண்ணங்களை யாருடனும் பகிர்ந்துகொள்ள முடியாமல் தவித்திருக்கிறார்.
மொழியும் காட்சி மொழியும்
மாரியின் இளமைப் பருவம் கட்டுக்கடங்காத சேட்டையும் அதைத் தொடர்ந்த அடி உதையு மாகவே கழிந்திருக்கிறது. ஆடு மேய்க்க அனுப்பினாலாவது மகன் திருந்துவான் என அனுப்பியிருக்கி றார்கள். ஆடுகளும் மாரியும் மட்டும் தனித்திருந்த அந்த வனாந்திரம் மாரியின் கற்பனைகளுக்குச் சிறகு பூட்டியது.
தந்தை பாடிய பாடல்களைப் பாடி, ஆடியிருக்கிறார். பாட்டுக்கும் ஆட்டத்துக்கும் ஊர் மக்களிடம் கிடைத்த வரவேற்பு, கதாநாயகன் ஆகும் கனவை அவருக்குள் விதைத்தது. எல்லாப் பாடங்களிலும் நல்ல மதிப்பெண் வாங்கினாலும், மாரிக்கு ஆங்கிலம் மட்டுமே வேப்பங்காய். இப்போதும் ஆங்கிலம் குறித்த பயமும் பதற்ற மும் இருப்பதாக மாரி சொல்கிறார். ஆங்கிலத்தைச் சரளமாகக் கற்காதது தனக்கு வேறொரு வகையில் உதவியதாகவும் மாரி செல்வராஜ் குறிப்பிடுகிறார்.
சப் டைட்டில் உதவியில்லாமல் உலகப் படங்களைப் பார்த்ததால் காட்சி மொழியில் கவனம் செலுத்த முடிந்திருக்கிறது.
தாங்கள் நடத்தப்பட்டவிதம் குறித்து மாரி, “எங்களையும் என் அப்பாவையும் பிறர் நடத்துகிறவிதம் என்னைப் பாதித்தது. அதுதான் என் வீட்டுக்கு அடங்காத நடத்தைக்கும் காரணம் என நினைக்கிறேன். என் அப்பா, உயர் சாதியினர் வீடுகளில் ஒரு நாளும் முன்வாசல் வழியாக நுழைந்ததே இல்லை. பின்கட்டில் நின்றுகொண்டுதான் வேலை கேட்பார். வேலை செய்துவிட்டு அவர்கள் தரும் சாப்பாட்டை வாங்கி வருவார். அவர்கள் நல்லவர்கள் எனப் புகழ்வார்.
தன் மகனைவிட இளையவர்கள் தன்னைப் பேர் சொல்லி அழைப்பது குறித்து, அப்பா வருந்தியதில்லை. அப்பாவின் அந்த வெள்ளந்திக் குணம் என்னை வதைக்கும். அதனாலேயே அவரை நாங்கள் யாரும் வெளியே அழைத்துச் செல்ல மாட்டோம்” என்று சொல்லும்போது, ‘எங்கும் புகழ் துவங்க’ என்று ‘புளியங்குளம் செல்வராஜ்’ இடுப்பசைத்து ஆடும் காட்சி மனத்துக்குள் விரிகிறது.
வசீகரித்த சென்னை
சட்டக் கல்லூரி கவுன்சலிங்குக் காக சென்னை வந்தபோது இரண்டடுக்குப் பேருந்துகளும் மனிதர்கள் படுத்திருக்கும் பரந்துவிரிந்த கடற்கரையும் மாரியைக் கவர்ந்தன. கடிதம் எழுதிவைத்துவிட்டு வீட்டைவிட்டுக் கிளம்புவது என முடிவெடுத்ததுமே சென்னைக்குப் பயணமானார். “நுங்கம்பாகத்தில் ஒரு பெட்ரோல் பங்கில் வாட்ச் மேனாகச் சேர்ந்தேன். பிறகு ரங்க நாதன் தெருவில் இருக்கும் துணிக் கடையில் வேலைக்குச் சேர்ந்தேன். வசந்தபாலன் ‘அங்காடித் தெரு’ படத்தை எடுத்திருக்காவிட்டால், என்னுடைய முதல் படம் நான் பணியாற்றிய கடையைப் பற்றியதாகத்தான் இருந்திருக்கும்” எனச் சிரிக்கிறார் மாரி.
ஒரு மழை இரவில் உதவி இயக்குநர்கள் அனைவரும் கிளம்பிவிட, இயக்குநர் ராமும் மாரியும் மட்டும் அந்த அலுவலகத்தில் இருந்தனர். அப்போது மாரியின் படிப்பு, குடும்பம் உள்ளிட்டவை குறித்து ராம் விசாரித்தார். தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ளக் கிடைத்த அரிய வாய்ப்பாகவே மாரி அதை நினைத்தார். தன் கதை முழுவதையும் கொட்டித் தீர்க்க, மாரிக்குள் இருக்கிற கலைஞனை இயக்குநர் ராம் கண்டுகொண்டார்; மறுநாளே மாரியை உதவி இயக்குநராக்கிக்கொண்டார்.
“இயக்குநர் ராம் எனக்கு எல்லாமுமாக இருந்தார். வாசிப்பின் மீதும் உலக சினிமா மீதும் ஈடுபாட்டை ஏற்படுத்தினார்” என்று சொல்லும் மாரி, மலையாள எழுத்தாளர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு எழுதி, தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ‘சிதம்பர நினைவுகள்’தான், தான் வாசித்த முதல் நூல் எனக் குறிப்பிடுகிறார்.
சாதிப் பெருமிதம் அருவருப்பானது
இயக்குநர் ராமிடம் மூன்று படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பிறகு, தனியாகப் படம் இயக்க நினைத்தார். ‘பாண்டிய ராஜாக்கள்’ என்னும் படத்தைத்தான் முதலில் இயக்க நினைத்தார் மாரி. அதற்கு நிறையச் செலவாகும் என்பதால் ‘பரியேறும் பெருமா’ளை இயக்க முடிவெடுத்தார்.
“என் கிராமத்துலதான் இந்தப் படத்தை எடுத்தோம். ஷூட்டிங் ஸ்பாட்ல நான் வேலை செய்ய றதைப் பார்த்தபோது தான், என் பெற்றோருக்கு என் மேல நம்பிக்கை வந்தது” என்று சொல்லும் மாரி, பரியனின் கனவு தனிமனிதக் கனவல்ல எனக் குறிப்பிடுகிறார்.
எதிராளியிடம் பரியன் ஏன் கெஞ்ச வேண்டும், எதிர்த்துப் போராடக் கூடாதா என்றால், “அவன் செய்ததே போராட்டம்தானே. சுயசாதிப் பெருமிதத்தைவிட அருவருப்பானது வேறில்லை. சாதிப் பெருமையை ஒழிக்காதவரை சாதியிலிருந்து விடுதலை இல்லை” என்று சொல்லும் மாரி, “கட்டமைக்கப்பட்ட உலகத்தில் மட்டுமே வாழும் நிலையிலிருந்து பெண்கள் வெளிவர வேண்டும்” என்கிறார். அதைத்தான் ‘பரியேறும் பெருமா’ளின் ‘ஜோ’ கதாபாத்திரமும் உணர்த்தியது.
“சரியான தருணத்தில் தன் மகனிடம் சாதியைக் கைமாற்றிவிடும் தந்தைகள் இங்கு அதிகம். பெண்களுக்கு எதுவும் தெரியாமல் வைத்திருப்பதன் வாயிலாகவும் சாதியை வளர்த்தெடுக்கிறார்கள்” என்று சொல்லும் மாரி, அண்மைக் காலமாக நடந்துவரும் சாதி ஆணவப் படுகொலைகள் தன்னைக் கலக்கமடையச் செய்கின்றன என்கிறார்.
நடிகர் தனுஷை வைத்து இயக்கப்போகும் படத்துக்கான கதை விவாதத்தில் தற்போது ஈடுபட்டுவருகிறார். நிர்பந்திக்கப்படுகிற உலகத்தில் வாழும் பெண்களைப் பற்றிக் குறிப்பிடும்போது தன் மனைவி, மகளைப் பற்றியும் சேர்த்தே பேசுகிறார். மாரியின் மனைவி திவ்யா, ஆங்கில ஆசிரியை. மகளுடன் சேர்த்து வீட்டுக்குள் இரண்டு தேவதைகள் மாரிக்கு!
தொடர்புக்கு: brindha.s@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago