‘குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ஜீவா நடிப்பில் ‘ஜிப்ஸி’ படத்தை இயக்கி முடித்திருக்கிறார் ராஜுமுருகன். சந்தோஷ் நாராயணன் இசையில் ‘காக்கி கலரு.. காக்கி கலரு… எதுக்கு எங்கள அடிக்கிற?’ என்ற யுகபாரதியின் அனல் பறக்கும் வரிகளோடு தொடங்கும் விளம்பரப் பாடலை வெளியிட்டு, சமூக ஊடகங்களில் லைக்ஸ் அள்ளியிருக்கும் மகிழ்ச்சியில் இருந்தவரைச் சந்தித்தோம்…
காவல் துறையை விமர்சிக்கும் விதமாக ஒரு புரமோ பாடல் எதற்காக?
‘ஜிப்ஸி’ படத்துக்கான ஒரு அடையாளமாக இந்தப் பாடலை உருவாக்கியிருக்கிறோம். கதாநாயகன் ஒரு நாடோடிப் பாடகன். அவன் எப்படிப் புரட்சிப் பாடகனாக மாறுகிறான் என்பதை அடையாளப்படுத்தும் விதமாகவே இதை உருவாக்கினோம். உண்மையில் இது காவல்துறையை விமர்சிக்கும் பாடல் மட்டுமே அல்ல. எனது அழைப்பை ஏற்று தோழர் நல்லக்கண்ணு ஐயா உட்படப் பல சமகாலப் போராளிகள் இந்தப் பாடலில் தோன்றியிருப்பதை எனக்கும் குழுவினருக்கும் கிடைத்த பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
இது அரசியல் படமா?
இதுவொரு காதல், இசைப் படம். மொத்தம் 9 பாடல்கள் இருக்கின்றன. எல்லாமே கதையோடு இணைந்து வரக்கூடிய பாடல்கள். காதல், இசை ஆகியவற்றோடு கொஞ்சம் அரசியலும் இருக்கிறது. அது மக்களுக்கான அரசியல். இன்றைய இந்தியாவின் முகத்தை இந்தப் படம் காட்டும். ஜிப்ஸி என்றால் எந்த அடையாளமும் இல்லாதவன் என்று அர்த்தம்.
அடையாளம் இல்லாத ஒருவனை, இன்றைக்குத் தீவிரமடைந்துவரும் ஒரு அடையாள அரசியல் எப்படித் தொந்தரவு செய்கிறது என்பதுதான் படம். காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரிவரை இந்தியாவின் வெவ்வேறு பகுதி களுக்குத் தன் காதலைத் தேடிப் பயணப் படும் கதாநாயகனின் வாழ்க்கையில் அரசியலும் அடையாளச் சிக்கலும் குறுக்கிடுகின்றன. அதைத் தாண்டி அன்பும் மனிதமுமே முதன்மையானவை என்பதைப் பேசும் படமிது.
உங்களுடைய முந்தைய படங்களில் கதைக்கான நடிகர்களைத் தேர்வு செய்திருந்தீர்கள். ஜீவா ஒரு கமர்ஷியல் கதாநாயகன். அவர் இந்தக் கதைக்குப் பொருந்தியிருக்கிறாரா?
நிச்சயமாக. எனது முதலிரண்டு படங் களின் கதைகளுக்கும் புதுமுகங்கள் நடித்தாலே போதும். ஆனால், இந்தக் கதைக்கு ஒரு கதாநாயகன் தேவை. காரணம் இதில் போதுமான கதாநாயகத் தருணங்கள் இருக்கின்றன. ஜீவாவைப் பொறுத்தவரை ‘ராம்’, ‘கற்றது தமிழ்’, ‘ஈ’மாதிரியான கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்திருக்கிறார். கமர்ஷியல் படங்களிலும் நடித்திருக் கிறார். எந்த வகையில் நடித்தாலும் அதைச் சிறப்பாகச் செய்துவிடுவதுதான் அவரது பலம்.
அதேபோல அவரது ரசிகர்களும் அவர் எந்த வகைப் படத்தில் நடித்தாலும் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள் என்பதும் அவரது பலம். ஜீவா, இந்தப் படத்துக்காக கிட்டார் இசைக்கக் கற்றுக்கொண்டிருக்கிறார். குதிரை ஒன்றுடன் பழகி அதனிடம் மிதியும் உதையும் வாங்கியிருக்கிறார். நாடோடியின் தோற்றத்துக்காக முடியை நீளமாக வளர்த்திருக்கிறார். இந்தியா முழுவதும் எங்களுடன் பயணப்பட்டு நடித்துக்கொடுத்த ஜீவாவின் துணிவையும் அர்ப்பணிப் பையும் மறக்க முடியாது. இப்படி நிறையச் சொல்லிக்கொண்டே போகலாம்.
கதாநாயகியைப் பற்றிக் கூறும் முன்பு கதாநாயனுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் குதிரையைப் பற்றிக் கூறுங்கள்?
அது கதாநாயகனின் உயிருக்கு உயிரான நண்பன். அதுவொரு நடனக் குதிரை. படத்தில் அதன் பெயர் சே. பல இடங்களில் தேடி இறுதியில் காரைக்குடி யில் பொருத்தமான குதிரையைக் கண்டுபிடித்து சென்னைக்கு வரவைத் தோம். ஜீவாவின் வீட்டின் அருகிலேயே வாடகைக்கு ஒரு இடம்பிடித்து அங்கே குதிரையைத் தங்க வைத்தோம். தினசரி குதிரையைச் சந்தித்து அதற்குப் பிடித்தமான கடலை மிட்டாயைக் கொடுத்து அதனோடு ஜீவா பழகினார்.
அது நடனமாடும் பல காட்சிகள் படத்தில் உண்டு. படக்குழுவுடன் குதிரையும் பயணம் செய்ததும் அதைப் பராமரித்துப் படமாக்கியதும் தனித்த அனுபவம். நடாஷா சிங் இந்தப் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். அவரை நமது ரசிகர்களுக்கு நிச்சயம் பிடித்துப்போகும். எனது முந்தய படங்களில் கதாநாயகியை வந்துவிட்டுபோகும் ஒருவராகப் பயன் படுத்தவில்லை. அப்படித்தான் இந்தப் படத்திலும் கதாநாயகி ஏற்றிருப்பதும் மிக முக்கியமான கதாபாத்திரம்தான்.
உங்களது படக்குழு பற்றி?
முதலில் தயாரிப்பாளர் அம்பேத்குமார் பற்றிச் சொல்ல வேண்டும். இந்தியா முழுவதும் படமாக்க வேண்டும் என்ற காரணத்துக்காகவே பல தயாரிப்பாளர்கள் இந்தக் கதையை நிராகரித்தனர். நல்ல ரசனையும் கதையின் மீது நம்பிக்கை வைக்கும் ஒரு தயாரிப்பாளராகவும் இவர் அமைந்ததால்தான் இந்தப் படத்தை என்னால் எடுக்க முடிந்தது.
பாடலாசிரியர் யுகபாரதி மூலம்தான் அம்பேத்குமார் எனக்கு அறிமுகமானார். எஸ்.கே. செல்வகுமார் போன்ற ஒரு ஒளிப்பதிவாளர் கிடைத்தது, ‘அருவி’ படத்தின் படத்தொகுப்பாளர் ரேமண்ட் அமைந்தது, தோழர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்தது, எல்லா பாடல்களையும் அண்ணன் யுகபாரதி எழுதியது, இரவுபகலாக எனது உதவி இயக்குநர்கள் உழைத்தது என, எனது கனவை நனவாக்கித் தந்த இவர்கள் அனைவரும் அடையாள அரசியலைக் கடந்து, அன்பை மட்டுமே பேசும் ஜிப்ஸியின் மனநிலையைக் கொண்டவர்கள். அடையாளமற்ற மனிதர்கள் அனைவருக்கும் இந்தப் படத்தை அர்ப்பணிக்க விரும்புகிறேன்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
27 mins ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago