புதிய தலைமுறை இயக்குநர்கள்: மதயானைக் கூட்டத்தில் ஒரு மனிதர்

By செல்லப்பா

தமிழ்த் திரையுலகில் பாரதிராஜா, பாலசந்தர், பாலுமகேந்திரா போன்ற இயக்குநர்கள்  ஆலமரம் போன்றவர்கள். அவர்களது விழுதுகள் இன்றுவரை பரவிவருகின்றன. நுண்ணுணர்வை நீதிபோதனை என்னும் சாயத்தில் தோய்க்காமல் இயற்கையான வண்ணத்தை, உள்ளது உள்ளபடியே காட்சியாக்குவதில் பிரியம் கொண்டவர் பாலுமகேந்திரா.

அவரது படம் ரசிகர்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, அவரது காட்சிக் கோணங்களும் அவர் ஃபிரேம் வைக்கும் அழகும் சினிமா ரசிகர்களின் இதயத்தை வருடுபவை. அதனாலேயே அவர் ‘கேமராக் கவிஞர்' எனப் பிரியத்துடன் அழைக்கப்படுகிறார். அவருடைய சிஷ்யர் எனப் பெருமையுடன் சொல்லிக்கொள்ளத்தக்கவர் வெற்றிமாறன். இந்த இருவரின் வழியே சினிமா கற்றுவந்த இயக்குநர் விக்ரம் சுகுமாரன்.

தமிழ்தான் ஆதர்சம்

சினிமாவுக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தை உங்களிடம் ஏற்படுத்தியது எது என்று கேள்வி எழுப்பும்போது, ஒரு உலகப்படத்தைக் கூறி அதுதான் என்று கூசாமல் கூறுபவர்கள் மத்தியில் 'தேவர் மகன்', 'கிழக்குச் சீமையிலே' போன்ற தமிழ்ப் படங்கள்தாம் தான் சினிமாவுக்கு வரக் காரணம் என்று கூறும் விக்ரம் சுகுமாரன், தமிழகத்தின் வறட்சியான மாவட்டம் என்று அறியப்பட்ட ராமநாதபுரத்தின் பரமக்குடியைச் சேர்ந்தவர்.

கமல்ஹாசன், விக்ரம் போன்றவர்களைத் தந்த அதே மண்ணின் மைந்தர் . வன்முறை குடிகொண்ட மனிதர்களிடையே வளர்ந்தவர் என்றபோதும், இவரது குடும்பம் இசைக் குடும்பம். ஆர்கெஸ்ட்ரா வைத்து நடத்தியிருக்கிறது. மின் வாரியத்தில் பணியாற்றிய அவருடைய தந்தை விக்ரம் சுகுமாரனையும் பாடகராக்க வேண்டும் என்றே விரும்பியிருக்கிறார்.

ஆனால் விக்ரம் சுகுமாரனுக்கோ நடிகராக வேண்டும் என்பதே விருப்பமாக இருந்திருக்கிறது. கல்லூரி ஒன்றில் நடிப்புப் பயிற்சியைக் கற்றுமிருக்கிறார். நடிகராகும் விருப்பத்தாலேயே பாலுமகேந்திராவைச் சந்தித்திருக்கிறார். அவரோ விக்ரம் சுகுமாரனை இயக்குநர் பாதையில் வழிநடத்தியிருக்கிறார். நண்பர், இயக்குநர் முத்தையாவுக்காக ‘கொடி வீர’னில் நடித்துமிருக்கிறார்.

தானறிந்த வாழ்க்கை

தமிழ்த் திரைப்படங்களைப் பொறுத்தவரை அதன் பெரிய சிக்கலாகச் சொல்லப்படுவது, நீதிபோதனைக் கருத்துகளால் படத்தை நிறைத்துவிடுவது. ஏனென்றால், சினிமா என்பது ஒரு கலை வடிவம். அதன் நோக்கம் நீதி போதனை அல்ல. அது நமது வாழ்க்கையில் நாம் கவனிக்கத் தவறிய தருணங்களைக் காட்சிகளாகக் கொண்டது. அதன் மூலமாக நமது வாழ்வு குறித்த பார்வையைத் துலக்கப்படுத்துவது. சினிமாவைப் புரிந்துகொண்ட இயக்குநர்கள் அதைத்தான் செய்வார்கள்.

தானறிந்த வாழ்க்கையிலிருந்தே தனது படத்துக்கான கருவைத் தேர்ந்தெடுப்பதே புத்திசாலித்தனமான இயக்குநர் செய்யும் வேலையாக இருக்கும். ஏனென்றால், நமது பார்வையைத் துலக்கப்படுத்த விரும்பும் இயக்குநருக்கு நமது வாழ்க்கை தெரிய வேண்டும்; நமது பண்பாடு தெரிய வேண்டும்; நமது பாஷை தெரிய வேண்டும். இவற்றைப் பாலபாடங்களாகக் கற்றிருக்கிறார் விக்ரம் சுகுமாரன்.

என்ன செய்யப் போகிறீர்கள்?

நம் சமுதாயம், நம் பண்பாடு தொடர்பான எந்தப் புரிதலும் இல்லாமல் வெறும் டி.வி.டி. மூலமாகவே படமெடுத்துப் பெயர் வாங்கிவிட முடியும் என்னும் தமிழ்ச் சூழலில், விடாப்பிடியாகத் தான் அறிந்த வாழ்க்கையைத்தான் படமாக்குவேன்; அதுவும் தான் அறிந்துவைத்திருக்கும் திரை மொழியில்தான் தருவேன் என்ற துணிச்சலுடன் படமெடுத்திருப்பவர் விக்ரம் சுகு மாரன். ‘மதயானைக் கூட்ட’த்தின் முதன்மையான ஜெயக்கொடித் தேவர் கதாபாத்திரமே, தன் தாத்தாவின் தாக்கத்தால் உருவானதாகக் கூறுகிறார்.

தனது பால்யத்தில் நிகழ்ந்த தாத்தாவின் மரணம், தன்னை ஆழமாகப் பாதித்ததாகவும் அப்படத்தில் இடம்பெற்ற பல சம்பவங்களைத் தான் எதிர்கொண்டதாகவும் கூறும்போது, பழைய நினைவுகளில் ஆழப் புதைந்துகொள்கிறார். வணிகக் கூறுகளை மட்டுமே முன்னிறுத்தும் மதயானைகள் நிரம்பிய தமிழ்த் திரையுலகில், மனித நேயம் ததும்பும் கதைகளை யதார்த்தத்தின் கலை அழகுடன் சித்தரிக்க விரும்பும் அதே நேரத்தில் மனிதர்களிடம் காணப்படும் எந்த வன்முறையையும் மறைத்து அவர்களைப் புனிதப்படுத்துவதிலும் விருப்பமற்றவராக இருக்கிறார் விக்ரம் சுகுமாரன்.

சாதிப் பெருமைகளைத் தூக்கிப்பிடிக்கும் படங்களைப் பார்த்துப் படமெடுக்க வந்தவரான அவர், தான் இயக்கிய முதல் படத்தில் சாதியின் பெருமையைத் தூக்கிப் பிடிக்காமல், அதன் அபத்தத்தையே கருவாக்கினார். அவர் ‘மதயானைக் கூட்ட’த்தில் எழுப்பிய கேள்வி ,சாதியின் இருப்பை அசைத்துப் பார்த்தது. சாதிப் பெருமையால் எல்லாரையும், எல்லாவற்றையும் இழந்துவிட்டுத் தனியே என்ன செய்யப்போகிறீர்கள் என்ற ஒற்றைக் கேள்வியை வலுவாக எழுப்பியிருப்பார்.

சொல்ல விரும்புவதை வசனங்களால் ஆன உரையாக்காமல், அதைக் காட்சி வடிவில் உணர்த்தும்போதே ஒரு நல்ல படத்தை உருவாக்க முடியும். அதை முழுதாக உணர்ந்தபிறகே ‘மதயானைக்கூட்டம்’ படத்தை விக்ரம் சுகுமாரன் இயக்கியிருக்கிறார் என்பதைத் தேர்ந்த ரசிகரால் எளிதில் உணர்ந்துகொள்ள முடியும்.

ஏனென்றால், பண்பாட்டுக் கூறுகள் விரவிக் கிடக்கும் ‘மதயானைக்கூட்டம்’ படத்தின் இறுதிக் காட்சியில் செவனம்மாள் தரையில் பரவிக் கிடக்கும் குருதியைத் தடவியபடியே ஓலமிடும்போது சாதி குறித்த ஓலமே ஒலிக்கிறது. ஆயிரம் வசனங்களால் தர முடியாத உணர்வை, அந்த ஒற்றைக் காட்சி தந்துவிடும். இதுதான் சினிமாவின் வீரிய மொழி. பாசங்கொண்ட மனிதர்களின் வாழ்க்கையில் முட்களைப் போன்று சிதறிக் கிடக்கும் வன்முறைகளைச் சுட்டிக்காட்டுவதன் மூலம், அந்த வன்முறைகளைக் களைய வேண்டியதன் அவசியத்தை நுட்பமான திரைமொழியில் உணர்த்திவிடும் வித்தைக்காரராக இருக்கிறார் விக்ரம் சுகுமாரன்.

ஒரு நாள் புரிந்துகொள்வார்கள்

கோடிகள் செலவழித்துக் குப்பையை உருவாக்கும் தொழில்நுட்ப இயக்குநர்கள் தந்திரமாகப் பெயரைத் தட்டிச் செல்லும் தமிழ்த் திரையுலகில், தனது அடுத்த படத்துக்காக அமைதியான ஓர் அறையில் திரைக்கதை உருவாக்கும் பணியில் இருந்தவரைச் சந்தித்தபோது, தனது முதல் படம் சரியாகப் புரிந்துகொள்ளப்படவில்லை என்ற ஆதங்கத்தைப் பகிர்ந்துகொண்டவர், அதற்காக ரசிகர்கள்மீது வருத்தமெல்லாம் படவில்லை.

pongal-malarjpg ‘இந்து தமிழ்' பொங்கல் மலர் 2019-ல் இன்னும் பல சுவாரசியமான கட்டுரைகளை விரிவாக வாசிக்கலாம். விலை: ரூ.120

சினிமா பயணத்தில் இதெல்லாம் சாதாரணம் என்ற புரிதலையே அவரிடம் காண முடிந்தது. திரையுலகுக்கு வந்த பிறகு பல உலகப் படங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தபோதும், திரைத்துறையில் தனது பாதையும் பார்வையும் செம்மையானதற்குக் காரணகர்த்தாவாக பாலுமகேந்திராவையே அவர் சொல்கிறார். ‘காட் பாதர்’ படத்தின் மூன்று பாகங்களையும் ஐம்பது, அறுபது முறை பார்த்திருப்பதாகக் கூறும் விக்ரம் சுகுமாரன்.

தான் பார்த்துவந்த ஒரு வாழ்க்கை முறையோடு ஓரளவுக்கு ஒத்துப்போகும் வாழ்க்கை முறையை, அந்தப் படங்களில் அனுபவிக்க முடிந்ததாகக் கூறுகிறார். திரைக்கதையைத் தனியொருவராக எழுதுவதையே விரும்பும் சுகுமாரன், எழுதி முடித்த பிறகு தனது உதவியாளர்களுடன் விவாதிக்கிறார். முதல் படத்தைத் தேனி பகுதிகளில் படம் பிடித்த அவர், அடுத்த படத்தை ராமநாதபுரம் பகுதிகளில் படம் பிடிக்க உள்ளதாகத் தெரிவித்தார். வறட்சியான வாழ்க்கையை அனுபவித்த மனிதர்களின் கதையை இந்த முறை படமாக்க இருக்கிறார் இந்தப் பாசக்கார மனிதர்.  

தொடர்புக்கு: chellappan.n@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்