‘அண்ணாதுரை’ படத்தில் இடம்பெற்று, பட்டி தொட்டியெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கும் பாடல், ‘தங்கமா வைரமா என்ன சொல்ல…?’. அதை எழுதியவர் வளர்ந்துவரும் இளம் பாடலாசிரியர் அருண்பாரதி.
‘சண்டக்கோழி 2’, ‘காளி’, ‘திமிரு புடிச்சவன்’ என நீளும் இவரது பாட்டுப் பயணத்தில் அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகும் ‘விஸ்வாசம்’ படமும் அடக்கம். அவருடன் ஒரு சிறு உரையாடல்…
நீங்கள் பாடலாசிரியரானது எப்படி?
தேனி மாவட்டம், உத்தமபாளையம்தான் சொந்த ஊர். பள்ளி நாட்களில் கவிதைகள் மீது அதிக ஆர்வம் கொண்டவனாக இருந்தேன். அந்த ஆர்வத்துக்குப் பயிற்சிக் கூடமாக இயக்குநர் கே.பாக்யராஜின் ‘பாக்யா’ அலுவலகம் இருந்தது. அவர்தான் எனது ஆசான். பாட்டெழுத என்னைப் பட்டை தீட்டினார். அடுத்தடுத்து இயக்குநர் பாரதிராஜா, அண்ணன்கள் அறிவுமதி, லிங்குசாமி, விஜய் ஆண்டனி, சிவா, சற்குணம், யுவன் சங்கர் ராஜா, டி.இமான், இயக்குநர் கிருத்திகா உதயநிதி போன்றவர்கள் என் மீது காட்டிவரும் பேரன்பால் நான் அடையாளப்பட்டு வருகிறேன்.
‘விஸ்வாசம்’ படத்தில் வாய்ப்பு எப்படி அமைந்தது?
இயக்குநர் சிவாவைச் சந்திக்கும் சூழல் அமைந்தபோது நான் எழுதிய ‘புதிய பனையில் பழைய சோறு’ கவிதைப் புத்தகத்தைக் கொடுத்து ‘தங்கமா வைரமா’ பாட்டு எழுதின விஷயத்தைச் சொன்னேன். ‘எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டாச்சே!’னு சொன்னவர், அடுத்து என்னைப் பற்றி எதுவுமே கேட்கவில்லை.
இரண்டு, மூன்று நாட்களில் ஒரு சூழலைச் சொல்லி வரிகள் எழுதச் சொன்னார். அடுத்த சில வாரங்களில் என்னை அழைத்து, அந்த வரிகள் பாடலாக மாறியதைக் காட்டினார். அப்போதுதான் அந்த வரிகளுக்கு டி.இமான் இசையமைத்த விஷயமும் அதில் அஜித் நடிப்பதும் தெரியும். பாடலைக் கேட்டு வார்த்தையே வரவில்லை, திக்குமுக்காடிப்போனேன்.
முன்னணி ஹீரோவுக்குப் பாடல் எழுதிய அனுபவம்?
மாஸ் ஹீரோக்களுக்குப் பாடல் எழுத வாய்ப்பு அமையும்போது தொடக்கப் பாடல் அல்லது காதல் பாடல் எழுவதற்குத்தான் எல்லோரும் விரும்புவார்கள். எனக்கும் அந்த மாதிரியான விருப்பம் உண்டு.
ஆனால், ‘தல்லேதில்லாலே’, ‘டங்கா டங்கா’ மாதிரி நாட்டுப்புறப் பாடல்களாக எழுத வாய்ப்பு அமைந்ததுதான். அஜித் மாதிரியான மிகப் பெரிய நாயகன் வழியே எம் மக்களின் மொழியை உச்சரிக்க வைத்ததை நான் பாடல் எழுத வந்ததன் பெரும் தொடக்க வெற்றியாக நினைக்கிறேன்.
தற்காலத் திரைப்பாடல்கள் சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை என்ற விமர்சனம் இருக்கிறதே...
எல்லாக் கால கட்டத்திலும் இந்த விமர்சனம் இருக்கவே செய்கிறது. பட்டுக்கோட்டையாரின் மறைவுக்குப் பிறகு அவர் மாதிரி இல்லையே என்றார்கள். கண்ணதாசனுக்குப் பிறகும் அப்படித்தான் சொன்னார்கள். இப்போது நா.முத்துக்குமார் மாதிரி இல்லையே என்கிறார்கள். நல்ல படைப்புகளைத் தரமாகக் கொடுக்கும்போது அவற்றை எல்லாக் காலகட்டத்திலும் மக்கள் ஏற்றுக்கொள்ளவே செய்கிறார்கள்.
உங்களுக்கென்று பாணியை உருவாக்க விருப்பமா?
அறிவு சார்ந்த பாடல்கள், உணர்வுசார்ந்த வரிகள் என இரண்டு விதமாக பாடல்களைப் பார்க்கிறேன். அதில் இரண்டாவதான உணர்வு சார்ந்த விஷயத்திலேயே என் கவனம் இருக்கும். அதன் வழியேதான் வாழ்க்கையைப் பதிவுசெய்ய முடியும். அதுதான் காலம் கடந்தும் வாழும் என நம்புகிறேன்.
பல பாடலாசிரியர்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் பாரதியையும் இணைத்துக் கொண்டுவிடுகிறார்களே, ஏன்?
இந்த நூற்றாண்டில் கவிதைகள் படைக்கும் அனைவரும் பாரதியையும் பாரதிதாசனையும் கடக்காமல் வர முடியாது. நானும் அப்படித்தான்.
ஒரு இசையமைப்பாளரும் பாடலாசிரியரும் தொடர்ந்து இணையும்போது பாடல்கள் வெற்றிபெற்றால் அதை ‘காம்போ ஹிட்’ எனக் குறிப்பிடுவதுண்டு. அதில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?
பரஸ்பரப் புரிதல், நட்பு உள்ளிட்ட காரணங்களுக்காக ஒரு இசையமைப்பாளரின் படத்தில் எல்லாப் பாடல்களையும் ஒருவரே எழுதுவார். தற்போது நானும் விஜய் ஆன்டனியின் படங்களில் அப்படித் தொடர்ந்து எழுதி வருகிறேன். இது நல்லதுதான். அதே நேரம், ஒரு படத்தில் நான்கு, ஐந்து பாடலாசிரியர்கள் எழுதுவதும் ஆரோக்கியமான ஒன்றுதான். வெவ்வேறு படைப்பாளிகள் இணையும்போது புதிய ரசனை கிடைக்கும். பாடல்களுக்குள்ளும் கவிதை பிறக்கும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
8 days ago