16 வயதினிலே’, ‘கிழக்கே போகும் ரயில்’ என முதலில் இரண்டு கிராமத்துப் படங்களாக இயக்கிய பாரதிராஜா, மூன்றாவதாக சைக்கோ த்ரில்லர் படைப்பான ‘சிகப்பு ரோஜாக்கள்’ கதையைக் கையில் எடுத்தபோது, அவரது மாறுபட்ட ரசனையை ஆராதித்தது தமிழ்த் திரையுலகம். நாற்பது ஆண்டுகள் கழித்து இப்போது இயக்குநர் ராம்குமாருக்கும் அதேபோல அமைந்திருக்கிறது.
சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற சைக்கோ த்ரில்லர் ‘ராட்சசன்’. மூட நம்பிக்கையையும் அதற்குள் ஒரு காதலையும் கலந்து கிராமத்துப் பின்னணியோடு ரசனையாகச் சொன்ன ‘முண்டாசுப்பட்டி’ தந்த இயக்குநரின் படம்தான், ‘ராட்சசன்’. இந்தப் படங்கள் மூலம் இயக்குநர்களுக்கு மாறுபட்ட ரசனைகளும் சிந்தனைகளும் அவசியம் என்பதை அழுத்தமாக நிரூபித்திருக்கிறார் ராம்குமார்.
புதிய ரசனை
திருப்பூரைச் சேர்ந்த ராம்குமார், வழக்கமான சினிமா நடைமுறைகளைத் தகர்த்தெறிந்து இயக்குநரானவர். எந்த இயக்குநரிடமும் பணியாற்றாமல் நேரடியாக சினிமா களத்துக்கு வந்தவர். ‘நாளைய இயக்குநர்’ தொலைக்காட்சி நிகழ்ச்சிதான் சினிமாவுக்குள் அவர் நுழைவதற்கான முகவரி. அந்த நிகழ்ச்சியில் அவருடைய ‘முண்டாசுப்பட்டி’ குறும்படம், கவனம்பெற்றது. அதுதான் ‘முண்டாசுப் பட்டி’யை சினிமாவாக எடுப்பதற்கான துணிச்சலை அவருக்குத் தந்தது.
எண்பதுகளில் திரைப்படக் கல்லூரி மாணவர்களை நம்பி விஜயகாந்த் வாய்ப்பு தந்ததைப் போல, குறும்பட இயக்குநராக இருந்தாலும் நம்பிக்கையோடு இவருக்கு வாய்ப்பு தந்தார் தயாரிப்பாளர் சி.வி. குமார். ‘முண்டாசுப்பட்டி’க்குத் திரைக்கதை அமைக்கவே ஓராண்டு தேவைப்பட்டது என்கிறார் ராம்குமார். ‘முண்டாசுப்பட்டி’யை சினிமாவாக எடுக்க அவர் முயன்றபோது ஏராளமான கிளைக்கதைகள் தேவைப்பட்டன.
மூடநம்பிக்கைக்குரிய அம்சங்களும் கிராமத்து மக்களின் வெகுளித்தனமும் இழையோடிய நகைச்சுவை கலந்த அந்தப் படத்தில், காதலையும் எண்பதுகளின் காலச் சக்கரத்தையும் ரசனை மாறாமல் படம் பிடித்துக்காட்டியதால் பட்டிதொட்டி தாண்டி, நகரங்களின் ‘ஏ’ கிளாஸிலும் ‘முண்டாசுப்பட்டி’ வெற்றிபெற்றது.
‘முண்டாசுப்பட்டி’ படத்துக்குப் பிறகு நான்கு ஆண்டுகளுக்குப் பின் ராம்குமார் ‘ராட்சச’ அவதாரத்துடன் களத்துக்கு வந்தார். அண்மைக் காலத்தில் வெளிவந்த சிறந்த த்ரில்லர் படம் என்ற புகழையும் ‘ராட்சசன்’ பெற்றது. ரஷ்யாவில் நடந்த உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டுதான் இந்தக் கதையை ராம்குமார் எழுதத் தொடங்கி யிருக்கிறார். இதைத் தனது கனவுப் படமாக நினைத்த ராம்குமார், இதன் திரைக்கதையை உருவாக்குவதற்கு நான்கு ஆண்டுகளைச் செலவழித்திருக்கிறார்.
வாய்ப்புத் தேடி..
தொடர்ச்சியாகக் கொலைகளைச் செய்யும் சைக்கோ பற்றிய கதைக்கான கருவுடன் ஒரு புதுமுக இயக்குநரைப் போல வாய்ப்புத் தேடி அலைந்தார். ‘ராட்சசன்’ படத்தில் நாயகன் விஷ்ணு விஷால் இயக்குநராக வாய்ப்புத் தேடி அலையும் காட்சிகள் எல்லாமே ராம்குமாரின் அனுபவங்கள்தாம்.
“முண்டாசுப்பட்டி’யின் பிம்பம் என் மீது விழுந்ததால், ‘ராட்சசன்’ படத்தைத் தயாரிக்க எந்தத் தயாரிப்பாளரும் முன்வரவில்லை. ‘ராட்சசன்’ கதையை 15-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்களிடம் சொல்லியிருப்பேன். பலருக்கும் நம்பிக்கையே வரவில்லை. மற்றவர்கள் நிராகரிக்கும் போதுதான் நம் படைப்பின் மீது தீவிரமான காதல் உண்டாகும். எனக்கும் ‘ராட்சசன்’ படத்தின் மீதான காதல் தீவிரமானது அப்படித்தான். அதனால்தான் அந்தப் படம் எனது கனவுப் படமானது” என்கிறார் ராம்குமார். இந்தப் படத்தை முடித்த பிறகுதான் வேறு படத்தை இயக்க வேண்டும் எனும் அளவுக்கு ‘ராட்சசன்’ படம் ராம்குமாரின் லட்சியப் படமானது.
இரண்டே முக்கால் மணி நேரம் நீளம் கொண்ட ‘ராட்சசன்’ படத்தைத் தொடக்கம் முதல் கடைசிவரை விறுவிறுப்பு குறையாமல் பார்த்துக்கொண்டதில் இயக்குநரின் பங்கு முதன்மையானது. உளவியல் கலந்த த்ரில்லர் என்பதால், வேகத்தடை இல்லாத திரைக்கதையை அமைத்ததும் படம் வெற்றியடைய காரணமானது. சிதைக்கப்படும் பொம்மை, காது கேட்கும் கருவி, பியானோ இசை, மேஜிக் என விடை தெரியாமல் கிடைக்கும் தடயங்களை வைத்துக்கொண்டு கொலையாளியை நாயகன் அடையாளம் காணும் காட்சிகள் ‘ராட்சசன்’ படத்தை வேறொரு தளத்துக்கு உயர்த்தின.
மாறுபட்ட ரசனைகள்
எப்போதுமே முதல் பட பாணியிலேயே தங்களது அடுத்தடுத்த படங்களை இயக்குவதே இயக்குநர்களின் பொதுவான வழக்கம். சில இயக்குநர்கள்தாம் இரண்டாம் படத்திலேயே தங்களது நம்பகமான கோட்டையைவிட்டு வேறொரு ரசனைக்கு ஏற்பப் படமெடுப்பார்கள்.
தமிழ் சினிமாவில் இப்படிக் காலங்காலமாகத் தொடரும் அழுத்தங்களுக்குப் படியாமல், மாறிச் சென்றதால்தான் மாறுபட்ட ரசனைகளைக் கொண்ட இரு படங்களை ராம்குமாரால் கொடுக்க முடிந்தது. எப்போதும் சினிமா என்பதை மறந்து, அந்தக் கதைக்குள் பார்வையாளர்களை இழுத்துச் செல்லும்போதுதான் படைப்பாளிக்கு வெற்றி கிடைக்கிறது.
இந்த உத்தி ராம்குமாருக்கு நன்றாகவே பயன்பட்டிருக்கிறது. ‘முண்டாசுப்பட்டி’, ‘ராட்சசன்’ ஆகிய படங்களுக்குள் பார்வையாளர்களை இழுத்துச் சென்றுவிட்டதில் அவரது வேகமான, விறுவிறுப்பான திரைக்கதைக்கு முக்கியப் பங்குண்டு. ஒரு நல்ல திரைக்கதை, பார்வையாளர்களை சினிமாவில் லயிக்க வைக்கிறது. வெவ்வேறு கதை அம்சங்கள் கொண்ட படங்களைத்தாம் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இப்போது வரும் புதிய இயக்குநர்கள் பலரும் அதை நன்றாக உணர்ந்திருக் கிறார்கள். “தன்னுடைய காசை செலவு செய்யுறதோட, இரண்டரை மணி நேரத்தையும் சினிமாவுக்காக ரசிகர்கள் தருகிறார்கள். அப்படி வரும் ரசிகர்களை ஏமாற்றாமல், பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். குறைந்தபட்சம் நல்ல பொழுதுபோக்கைக் கொடுத்தால்தான், ரசிகர்கள் திருப்தி அடைவார்கள்” என்கிறார் ராம்குமார்.
pongal-malarjpg ‘இந்து தமிழ்' பொங்கல் மலர் 2019-ல் இன்னும் பல சுவாரசியமான கட்டுரைகளை விரிவாக வாசிக்கலாம். விலை: ரூ.120மாற்றுச் சிந்தனை
இன்றைய இயக்குநர்கள் பலரும் சமூகக் கருத்துடன் கூடிய சினிமாவை எடுப்பதில் அக்கறை காட்டுகிறார்கள். இந்த விஷயத்தில் ராம்குமார் சற்று மாற்றுச் சிந்தனை கொண்டவராக இருக்கிறார். சினிமாவில் பொழுதுபோக்குக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்கிறார். கேமராவில் படம் பிடித்தால் இறந்துவிடுவார்கள் என்ற மூடநம்பிக்கையை ‘முண்டாசுப்பட்டி’ படத்தில் ராம்குமார் சொல்லியிருந்தார்.
காலங்காலமாக எளிய கிராமத்து மக்களிடம் பரவியிருக்கும் மூட நம்பிக்கை அது. அதை மிகைப்படுத்தாமல் கதையோட்டத்தோடுதான் ராம்குமார் சொல்லியிருந்தார். “சமூகக் கருத்துகளை அளவாகச் சொன்னால் போதும்” என்பதே ராம்குமாரின் எண்ணம்.
புதிய தலைமுறை இயக்குநர்களை இரண்டு விதமாகப் பிரித்துவிடலாம். வெளிநாட்டுப் படங்களில் இருந்து பெற்ற கதையை நம் மண்ணுக்குத் தகுந்தாற்போல் மாற்றிப் படத்தை இயக்குபவர்கள் ஒரு ரகம். அயல்நாட்டுக் கதைகளின் தாக்கம் இல்லாமல் மண் சார்ந்த கதைகளை ரசனையுடன் சொல்வோர் இரண்டாவது ரகம். புதிய தலைமுறை இயக்குநரான ராம்குமாரோ மண் மனம் வீசும் கதையையும் சொல்கிறார். வெளிநாட்டு த்ரில்லர் பாணிக் கதையையும் சொல்கிறார்.
ஒரு இயக்குநராக அடுத்தடுத்து சவாலான படங்களை எடுக்கவும் அதற்காகக் காத்திருக்கவும் ராம்குமார் தயாராக இருப்பதாலேயே அவருடைய படங்கள் தனித்துவமாக அமைகின்றன.
தொடர்புக்கு: karthikeyan.di@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago