சி(ரி)த்ராலயா 48: ஜெயலலிதா சிரித்தது ஏன்?

By டி.ஏ.நரசிம்மன்

கோபு இயக்கத்தில் பிலிம்கோ தயாரித்த படத்துக்காக, ‘இவரைக் கதாநாயகியாக அறிமுகப்படுத்தலாமா?” என்ற வேண்டுகோளுடன் ஒரு பெண்ணை அழைத்து வந்திருந்தார் ஒய்.ஜி.மகேந்திரன். ‘உங்களுக்கு நெருக்கமான நட்பு வட்டத்தைச் சேர்ந்த குடும்பத்தின் பெண்; எங்கே கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்’ என்றும் கோபுவைப் பார்த்து சவால் விட்டார். அந்தப் பெண்ணை கோபு எவ்வளவு உற்றுப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

பிறகு மகேந்திரனே, “இவங்க.. சோவோட அக்கா பெண். பேரு ரம்யா கிருஷ்ணன்” என்றார் ஒய்.ஜி.மகேந்திரன். ரம்யா கிருஷ்ணன் அறிமுகமான அந்தப் படம் ‘வெள்ளை மனசு’. திருமணமான ஒரு வாலிபன் இல்லற வாழ்க்கையின் மர்மங்களைச் சந்திக்க கனவுடன் காத்திருக்க, மனைவி அது பற்றி எதுவும் தெரியாமல் ஜடமாக இருப்பதை நகைச்சுவையாக விளக்கிய அந்தப் படம், பரபரப்பாக ஓடியது.

ஜெயலலிதா கொடுத்த விருது

‘வெள்ளை மனசு’ படத்தைத் தொடர்ந்து பிலிம்கோ நிறுவனத்துக்காக, நம்பியார், காஞ்சனா நடிக்க ‘தங்க மாமா’ என்ற குழந்தைகள் படமொன்றை இயக்கினார் கோபு. இதுவே அவரது கடைசித் திரைப்படமாக அமைந்துபோனது. அது 1992. கோபுவுக்குத் தமிழக அரசு கலைமாமணி விருதை அறிவித்தது.

கலைவாணர் அரங்கத்தில், அன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் கையால் விருதைப் பெற்றார். பொன்னகையென ஒளிரும் புன்னகையுடன் விருதுகளை வழங்கிக்கொண்டிருந்த ஜெயலலிதா, கோபுவின் முறை வந்தபோது, விருதைக் கொடுக்காமல் தன் கையிலேயே வைத்துக்கொண்டவர், முகம் மலரச் சிரித்தார்.

“கோபு சார்! எப்படி இருக்கீங்க? பார்த்து ரொம்ப வருஷம் ஆச்சு! தகுதியான கலைஞருக்கு இந்த விருதைக் கொடுக்கிறதுல எனக்குச் சந்தோஷம்’’ என்று நலம் விசாரித்து, வாழ்த்திவிட்டு விருதை வழங்கினார். கோபுவைக் கண்டதும் அவரது மலர்ச்சியான சிரிப்புக்கு வெறும் நட்பு மட்டுமே காரணமாக இருக்க முடியாது என்று கோபுவின் மனத்தில் பட்டது. விருது வழங்கிய இரண்டு நாட்களுக்குப் பின் கோபுவின் வீட்டுத் தொலைபேசிக்கு அழைத்த முதல்வர், சில நிமிடங்கள் கோபுவிடம் மனம்விட்டுப் பேசினார்.

விருது வழங்கும்போது தனக்கு ‘கலாட்டா கல்யாணம்’ படத்தின் படப்பிடிப்பு நாட்கள் நினைவுக்கு வந்து சிரித்ததையும் அப்போது கோபுவிடம் தெரிவித்தார். அது மட்டுமல்ல; அரசியல்ரீதியாகப் பிரச்சினைகள் வந்த சில தருணங்களில் ‘கலாட்டா கல்யாணம்’, ‘சுமதி என் சுந்தரி’, ‘காசேதான் கடவுளடா’ போன்ற கோபுவின் படங்களைப் பார்த்து மன இறுக்கத்தைப் போக்கிக் கொண்டதாக கோபுவிடம் மனம்விட்டுத் தெரிவித்திருக்கிறார்.

siri-2jpgஆண்டி ஆனந்தா வுடன் கோபு

சின்ன திரையில் பெரிய தடம்!

கோபு பெரிய திரையிலிருந்து ஓய்வு பெற்றுவிட, ஸ்ரீதரோ ராணிப்பேட்டையில் ஒரு தோல் தொழிற்சாலை தொடங்கி அதன் நிர்வாக இயக்குநராக மாறினார். அதற்காகப் பெரும்பாலும் ராணிப்பேட்டையிலேயே தங்கினார். அவரைப் பார்ப்பதே கோபுக்கு அரிதாகிக்கொண்டுவர அவ்வப்போது போனில் பேசியபடி இருந்தார் கோபு. இந்த நேரத்தில் தனக்கு மிகவும் பிரியமான இசையமைப்பாளர்களில் ஒருவரான வி.குமார் கோபுவைத் தேடி வந்தார்.

அவருடன் ஒரு பெண்மணியும் வந்திருந்தார். அவர், சென்னை எஃப்.எம் என்ற பண்பலை வானொலியில் நிகழ்ச்சிகளை நடத்தி வந்தவர். சன் டிவி தொடங்கியிருந்த புதிது. அப்போது பதிமூன்று வாரத் தொடர்களை வெளியிட்டுக் கொண்டிருந்தது. சன் டிவிக்காகத் தாம் பதிமூன்று வாரத் தொடர்களைத் தயாரிக்க இருப்பதாகக் கூறி, கோபுவை ஒப்பந்தம் செய்தார்.

தொடர்ந்து அவருக்காக ஏழு டிவி தொடர்களை எழுதி, இயக்கினார் கோபு தனது மனைவி கமலா எழுதி, கலைமகள் இதழில் வெளியாகியிருந்த ‘சுவர்’ என்ற பரிசுபெற்றக் குறுநாவலும் அந்த ஏழு தொடர்களில் ஒன்று.

கோபுவின் எழுத்து இயக்கத்தில் வெளியான இந்தத் தொடர்களைப் பார்க்கும் வாய்ப்பு பெற்ற அமெரிக்கத் தமிழரான ஆண்டி ஆனந்தா என்பவர், அமெரிக்காவிலிருந்து போன் போட்டார்.

எழுத்தாளர் சாவியோட ‘வாஷிங்கடனில் திருமணம்’ நாடகத்தை தூர்தர்ஷனுக்காக டிவி தொடரா எடுக்கப்போகிறேன். எனக்கு டைம் ஸ்லாட் கிடைச்சுருச்சு. நீங்கதான் திரைக்கதை, இயக்கம், வசனம்னு சாவிகிட்டே பொய் சொன்னதால அவர் கதை உரிமையைக் கொடுத்துட்டார். அந்த இனிமையான பொய்யை இந்த ரசிகனுக்காக நிஜமாக்கிடுங்க கோபு சார்” என்று கூறித் திக்குமுக்காட வைத்தது மட்டுமல்ல; அடுத்த சில தினங்களில் சென்னை வந்து மொத்தத் தொடரையும் கதையில் வரும் அதே லொக்கேஷன்களில் அமெரிக்காவில் எடுக்கணும் என்றார்.

நீலு, சச்சு, ராஜசேகர், பி.என். சுந்தரம், கோபு என ஒரு பெரிய பட்டாளம் அமெரிக்கா கிளம்பியது. ஆனந்தா சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். வெள்ளை மாளிகை, பொட்டாமக் நதி, நாசா, சுதந்திர தேவி சிலை பிட்ஸ்பெர்க் கோவில் என்று முக்கியமான இடங்களில் ‘வாஷிங்டனில் திருமணம்’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்தது.

‘வாஷிங்டனில் திருமணம்’ கதையில் முக்கிய கதாபாத்திரமான அம்மாஞ்சி சாஸ்திரி வேடத்தில் கோபுவே நடித்தார்.

சச்சுவும், நீலுவும் தம்பதிகளாக நடித்து ஒரு கலக்கு கலக்கினார்கள். தனியார் டி.விகள் அடுத்தடுத்து உதயமாகி தூர்தர்ஷனுக்கு மவுசு குறைந்து வந்த நேரத்தில் ‘வாஷிங்டனில் திருமணம்’ தொடர் காற்றில் மிதந்து மீண்டும் ரசிகர்களை தூர்தர்ஷன் பக்கமாக இழுத்து வந்தது என்றால் அது மிகையில்லை.

siri-3jpgவெள்ளை மனசுright

பத்தி எழுத்திலும் ஒரு கை!

விகட கச்சேரி, மேடை நாடகங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் என்று பல்வேறு துறைகளில் தனது நகைச்சுவையை வெளிப்படுத்திய கோபுவுக்குப் பத்திரிகைகளுக்கு எழுத நேரமில்லை. என்றாலும் பத்திரிகைகள் அவரை விடத் தயாரில்லை. ரா.கி ரங்கராஜன் கோபுவின் ரசிகர். கோபுவை வற்புறுத்தி, ‘துரத்துகிறார் துரைகண்ணு’ என்ற நகைச்சுவைத் தொடரை குமுதத்தில் எழுத வைத்தார்.

அந்தக் கற்பனைத் தொடரின் நாயகன் கோபுதான். அவரை சினிமா ஆசை பிடித்த பேட்டை ரவுடி ஒருவர், விரட்டி விரட்டி நடிக்க வாய்ப்பு கேட்பார். ஒரு கட்டத்தில் கோபுவுடன் ஒட்டிக்கொண்டு படப்பிடிப்பு நடைபெறும் ஸ்டுடியோக்களுக்கு உடன் செல்வார். சிவாஜி, ஸ்ரீதர், ஜெமினி, மனோரமா, நாகேஷ், சோ, என்று அந்தத் தொடரில் வாரம் ஒரு கலைஞருடன் ரவுடி துரைக்கண்ணு மோதுவதாக நகைச்சுவை லகானைச் சுதந்திரமாகவிட்டு கற்பனைக் குதிரையை ஓடவிட்டு எழுதிய தொடரைப் படித்துவிட்டு “ என்ன சார்... அடுத்த வாரம் என் தலைக்குத்தான் கத்தியோ?” என்று கேட்டுத் திரையுலகப் பிரபலங்கள் ஒவ்வொரு வாரமும் கோபுவுக்குத் தொலைபேசியில் அழைத்து த்ரில்லாகப் பாராட்டிக்கொண்டே இருப்பார்களாம்.

“அந்த நகைச்சுவைத் தொடரின் அடிநாதம்தான் ‘ஜிகர்தண்டா’ படத்தின் கதை” என்று கூறும் கோபு, தனது பல கதைகள் இப்படி எடுத்தாளப்பட்டது பற்றி யார் மீதும் குறை கூறியதில்லை. குமுதம் தொடரைப் போல் பொம்மை இதழில் ‘யூனிட்டோ யூனிட்’ என்ற நகைச்சுவைத் தொடரையும் எழுதினார்.

‘சித்ராலயா’ பிறந்தது

‘சிவந்த மண்’ படத்தை ‘தர்த்தி’ என்று மறு ஆக்கம் செய்து வெளியிட்டபோது வட இந்தியப் பத்திரிகைகள் அதைக் கண்டுகொள்ளவில்லை. பாலிவுட்டில் புகழ்பெற்ற ‘ஸ்கிரீன்’, ‘பிலிம் வேல்டு’ போன்ற சினிமா பத்திரிகைகளை அணுகியபோது ‘மதராசி படம்’ என்று அலட்சியம் காட்டினார்கள். ‘தில் ஏக மந்திர்’, ‘பியார் கியே ஜா’ போன்ற பெரிய வெற்றிகளைக் கொடுத்திருந்தும் அவர்கள் பாரபட்சம் காட்டினார்கள்.

அந்தக் கோபத்தில் ஸ்ரீதர் தொடங்கியதுதான் ‘சித்ராலயா’ இதழ். ஸ்ரீதரின் மனைவி தேவசேனா, கோபுவின் மனைவி கமலா, ஒளிப்பதிவாளர் வின்சென்ட் மனைவி, ஒளிப்படக் கலைஞர் திருச்சி அருணாசலம் மனைவி ஆகியோரைப் பங்குதாரர்களாகக் கொண்டு தொடங்கப்பட்ட பத்திரிகை. ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி ஆசிரியர் பொறுப்பைக் கவனித்துக்கொண்டார். சித்ராலயா இதழ் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால், தொடர்ந்து நடத்த நேரமும் ஆள்பலமும் இல்லாமல் ஒருகட்டத்தில் அதை நிறுத்த வேண்டி வந்துவிட்டது.

(சிரிப்பு தொடரும்)
தொடர்புக்கு: tanthehindu@gmail.com | படங்கள் உதவி: ஞானம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்