திரைப் பள்ளி 27: சிலவரிகளில் ஒருவரிக் கதை!

By ஆர்.சி.ஜெயந்தன்

காட்சிகளால் கட்டப்படுவதே திரைக்கதை. ஒவ்வொரு காட்சிக்கும் ஒவ்வொரு தேவை இருக்கிறது. கதாபாத்திரம் பற்றிய தகவலைத் தருவது, அல்லது கதையை முன்னோக்கி நகர்த்திச் செல்வது, இந்த இரண்டில் ஏதாவது ஒரு நோக்கமாவது ஒவ்வொரு காட்சியிலும் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

அப்போதுதான் காட்சியில் ஏதாவது ஒரு செயல் நடந்துகொண்டிருக்கும். இவை இல்லாத காட்சியை நீங்கள் எழுதியிருந்தால், காகிதமாக இருக்கும்போதே அதை நீக்கிவிடுவது சிறந்த முடிவு. நீங்கள் பிளாஷ்-பேக் காட்சியை எழுதினாலும் அதுவும் கதையை முன்னோக்கித்தான் நகர்த்திச் செல்லும்.

தொடக்கம், நடுப்பகுதி, முடிவு ஆகியவற்றுடன் கதை உங்களிடம் தயாராக இருக்கிறது. ஆனால், திரைக்கதையை எந்தக் காட்சியிலிருந்து எழுதத் தொடங்குவது என்ற குழப்பம் வருகிறதா… கவலை வேண்டாம். உங்கள் கதையின் தன்மையே அதை முடிவுசெய்து உங்களுக்குச் சொல்லும். தயக்கத்தைத் துடைத்தெறிந்துவிட்டு எழுதத் தொடங்குவது மட்டும்தான் நீங்கள் செய்ய வேண்டியது.

கிளைமாக்ஸிலிருந்துகூட நீங்கள் காட்சியை எழுதத் தொடங்கலாம். அல்லது ஒரே நேர்கோட்டில் காட்சிகளை எழுதி முடித்துவிட்டு, எந்தக் காட்சியிலிருந்து படத்தைத் தொடங்கினால் சுவாரசியமாகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையிலும் இருக்கும் என்பதைக் கண்டறிந்து அதையே தொடக்கக் காட்சியாக வைக்கலாம்.

இரண்டுவிதமான காட்சிகள்

காட்சிகளை எழுதத் தொடங்கும்போது மனத்தில் வைத்துக்கொள்ள வேண்டிய அடிப்படையான இரண்டு அம்சங்கள், காட்சி நடைபெறும் இடமும் காலமும். தமிழில் திரைக்கதை எழுதினாலும், திரைக்கதையை வாசிக்கும் உங்கள் ஒளிப்பதிவாளர் காட்சியின் ஒளியமைப்பை முடிவு செய்யவும் படக்குழுவினரின் வசதிக்காகவும், காட்சியில் காலம், இடம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் குறிப்பிட்டு எழுதுவது வழக்கமாகப் பின்பற்றப்படுகிறது.

நீங்களும் அதையே பின்பற்றலாம். தமிழை நேசிப்பவர் என்றால் தமிழிலேயே குறிப்பிடுங்கள். ஒரு காட்சியானது, வீடு, அலுவலகம், அங்காடி, பள்ளி, கல்லூரி, மருத்துவமனை போன்ற பொது இடங்களின் உள்ளே நடக்கலாம். இதுபோன்ற கட்டிடங்களுக்கு வெளியே, சாலை, பூங்கா, ரயில்வே ட்ராக், கடல், ஆறு, மலைப்பகுதி, வான்வெளி ஆகியவற்றில் நடக்கலாம்.

எனவே, காட்சி கட்டிடத்தின் உள்ளே Interior-ல் நடக்கிறது என்றால் அதைச் சுருக்கமாகக் கூற INT எனும் மூன்று எழுத்துகளைக் குறிப்பிடுங்கள். அதுவே வெளியே Exterior-ல் நடக்கிறது என்றால் அதன் சுருக்கமாக EXT என்ற மூன்று எழுத்துகளைக் குறிப்பிடுங்கள். தமிழில் சுருக்கமாக உள் – வெளி எனக் குறிப்பிடலாம்.

காட்சி நிகழும் காலம், பகல், இரவு, அதிகாலை, காலை, மாலை, மதியம், சூரியன் மறையும் தருணம் என எதுவோ அதையும் குறிப்பிட்டுத் தொடங்க வேண்டும். பொதுவாகக் காட்சிகளை, கதாபாத்திரம் பேசாமல் செயலில் மட்டுமே ஈடுபடும் அதாவது ஆக்ஷன் மட்டுமே நடக்கும் காட்சி, ஒரு கதாபாத்திரம் இன்னொரு அல்லது பல கதாபாத்திரங்களுடன் உரையாடுவது என இரண்டு வகையாகப் பிரித்துக்கொள்ளலாம்.

உதாரணத்துக்கு நீங்கள் படமாக்கவிருக்கும் ‘கழுகு’ குறும்படத்தில் அருணுடைய தந்தை பேருந்தில் அலுவலகம் சென்று கொண்டிருக்கிறார். அப்போது அருண் தனது பைக்கின் பின்னிருக்கையில் தன் நண்பனை அமர்த்திக்கொண்டு ‘விர்ர்ர்ரூம்ம்ம்ம்’ என்ற பாய்ச்சலுடன் அவர் செல்லும் பேருந்தைக் கடந்து செல்வதைப் பார்த்து உறைந்துபோவது ஒரு ஆக்ஷன் காட்சி.

அதுவே இரவு தாமதமாக வீட்டுக்குவரும் அருணிடம் “ வீட்டுக்கு வர்ற நேரமாடா இது!” என்று அப்பா கேட்பதும்… அதற்கு அவன் “ ச்சே.. இந்தக் கொசுத்தொல்ல தாங்க முடியல…” என நக்கலாகச் சொல்லிவிட்டுத் தனது அறையின் கதவை மூடிக்கொள்வதும் உரையாடல் காட்சி. ஆக்ஷன் மட்டுமே நடக்கும் காட்சியில் கதாபாத்திரங்கள் ஈடுபடும் செயல்களை விவரித்தும் எழுத வேண்டும்.

ஆக்ஷன் நடக்கும் காட்சிகளில் கேமரா பேசும். உரையாடல் நடக்கும் காட்சிகளிலும் பின்னால் ஏதேனும் ஆக்ஷன் நடந்துகொண்டிருந்தால் காட்சிக்கு ‘லைவ்’ தன்மை கிடைக்கும். உதாரணத்துக்கு அருணின் அப்பா, அவரது மனைவியிடம் அருணைப் பற்றிக் கண்டிப்புடன் கேட்டுக்கொண்டிருக்கிறார். அவர்கள் பேசிக்கொண்டிருப்பதற்குப் பின்னால் அவர்களது 15 வயது மகள் டிவி ஸ்கிரீனைப் பயன்படுத்தி பிளே ஸ்டேஷனின் கார் ரேஸ் விளையாடிக்கொண்டிருப்பது போல் நீங்கள் எழுதலாம்.

காட்சிகளின் ஒருவரி அமைப்பு

குறும்படம் அல்லது முழுநீளத் திரைப்படம் எதுவாயினும் முதலில் காட்சிகளை விவரித்து எழுதிக் கொள்வதன் மூலம் திரைக்கதை ஒரு ஆர்டரில் இருக்கிறதா என்பதைக் கவனத்தில் வைத்து காட்சிகளை எழுத முடியும். இதை ‘ஒன் லைன் ஆர்டர்’ என்று பொதுவாகக் குறிப்பிட்டாலும் ஒவ்வொரு காட்சியையும் பலவரிகளில் தனித்தனி ஷாட்கள் போல எழுதிக் கொள்ளலாம். இனி, 'கழுகு' குறும்படத் திரைக்கதையில் 12 காட்சிகளுக்குள் எழுதிவிடத் திட்டமிட்டு அவற்றின் ஒருவரிக் கதை அமைப்பைப் பார்ப்போம்.

1. நள்ளிரவில் தூக்கத்திலிருந்து அருணின் அப்பா திடுக்கிட்டு எழுவது. சுவர்க் கடிகாரத்தைப் பார்ப்பது. மணி அதிகாலை 12.10 எனக் காட்டுவது. அருண் வீட்டுக்கு வந்துவிட்டானா என்பதை உறுதி செய்துகொள்ள அவன் பைக் நிறுத்தும் இடத்தை ஜன்னல் வழியே பார்ப்பது. அங்கே பைக் இல்லாமல் இடம் காலியாக இருப்பது. பக்கத்தில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கும் மனைவியையும் மகளையும் பார்ப்பது. முழுவதும் தூக்கம் கலைந்து படுக்கையைவிட்டு எழுந்து குளியலறைக்குள் செல்வது…

2. குளியலறைக்குள்ளிருந்து தண்ணீர் கொட்டும் சத்தம் கேட்பது. அது அருண் அம்மாவின் தூக்கத்தைக் கலைப்பது. அவர் படுக்கையிலிருந்து எழுந்து பக்கத்தில் கணவரைக் காணாமல் விழிப்பது. சந்தேகத்துடன் குளியலறைக் கதவைத் தட்டுவது, அருணின் அப்பா கதவைத் திறப்பது. அகால வேளையில் ஷேவ் செய்துகொண்டிருக்கும் கணவரைப் பார்த்துக் கோபமாகப் பேசுவது. தூக்கம் கெட்டுப்போனதற்கு அருண்தான் காரணம் என அவர் கூறுவது. மனைவி பதிலுக்கு வாக்குவாதம் செய்வது.

3. மறுநாள் காலை அலுவலகத்துக்கு அப்பா கிளம்பிக்கொண்டிருப்பது. திறந்துகிடக்கும் அருணின் அறைக்கதவு வரை அவர் செல்வது. மேஜையில் ஆஃப் செய்யப்படாமல் அவனது லேப்-டாப் திரையில் ஸ்க்ரீன் சேவர் ஒளிர்ந்துகொண்டிருப்பது. தூங்கிக்கொண்டிருக்கும் அருண் அணிந்திருப்பது அவனது டீ ஷர்ட் இல்லையே என மனைவியிடம் கேட்பது. மனைவி “காலையிலேயே ஆரம்பிச்சுட்டீங்களா?” என மகனுக்காக வக்காலத்து வாங்கிப் பேசுவது…

4. அதேநாள் மாலை அருணின் அப்பா அலுவலகத்திலிருந்து பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருப்பது… சாலையில் சத்தம் எழுப்பும்விதமாக அருண் வேகமாகத் தனது பைக்கை ஓட்டிக்கொண்டு செல்வதைப் பார்ப்பது… அவர் அருகில் அமர்ந்திருக்கும் முன்பின் தெரியாத பயணி, “ இந்த மாதிரி அராத்துகளாலத்தான் ஆக்ஸிடெண்ட்ஸ் பெருகிப்போச்சு… பைக் வாங்கிக்கொடுத்த ஃபேரண்ட்ஸ சொல்லணும்” எனக் கூறுவது.. அருணின் அப்பா மனம் குமுறியபடி நினைத்துப் பார்ப்பது…

5. பிளாஷ் பேக் - அருண் ப்ளஸ் டூ படித்துக்கொண்டிருந்தபோது பள்ளிச் சீருடையில் யாருடைய பைக்கையோ ஓட்டிச் செல்வதை அவனுடைய அப்பா பார்ப்பது. பள்ளி முடிந்துவரும் மகனுக்காகக் கோபத்துடன் காத்திருப்பது. அருண் வந்ததும் அவனிடம் “உனக்கு ஏதுடா பைக்.. யாரு பைக் ஓட்டக் கத்துக் கொடுத்தது... அது யாரோட பைக்?” எனக் கேட்டு கத்துவது.. அருண் “ பைக் ஓட்டுறது தப்பா?” என்ற ஒரு கேள்வியை மட்டும் பதிலாகக் கேட்டுவிட்டுச் செல்வது…

6. நிகழ்காலம் - அருணின் பைக்கில் அவன் ஒட்டியிருக்கும் ‘ஈசிஆர் ஈகிள்’ என்ற ஸ்டிக்கரைப் பார்ப்பது… அருணின் அம்மா, “அப்பாவுக்கு லேட் ஆகிடுச்சு.. போற வழியில அவரை ஆபீஸ்ல ட்ராப் பண்ணிடு” எனக் கூறுவது. அருண் அப்பாவை அழைப்பது.. “ நீ ஓட்டுறது பைக் இல்ல.. கழுகு.. நான் லேட்டாவே போய்க்கிறேன்… யார் தயவும் எனக்கு வேணாம்” என்பது… உடனே அருண் நல்லதாகப்போய்விட்டது என்பதுபோல போனில் பேசத் தொடங்குவது….

அடுத்த வாரம் எஞ்சிய ஆறு காட்சிகளின் ஒருவரிக் கதை அமைப்புடன் சில காட்சிகளுக்கான திரைக்கதையை எழுதி முடிப்போம்.

தொடர்புக்கு:jesudoss.c@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

11 mins ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்