சிம்மக் குரலோன் 90 திருவிழாவில் சிறப்பு விருந்தினர்களாகக் கதாசிரியர், இயக்குநர் ‘சித்ராலயா’ கோபு, இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், டாக்டர் ‘ஊர்வசி’ சாரதா, கலைமாமணி ‘வெண்ணிற ஆடை’ நிர்மலா. கலைமாமணி குமாரி சச்சு, ராம்குமார் கணேசன், இளையதிலகம் பிரபு ஆகியோர் கலந்துகொண்டார்கள். சிவாஜியுடனான திரைப்பயணத்தில் தங்களுக்கு ஏற்பட்ட கலை அனுபவங்களை மலரும் நினைவுகளோடு அவர்கள் பகிர்ந்துகொண்டபோது அரங்கம் தொடர்ந்து அதிர்ந்துகொண்டே இருந்தது.
‘கலைமாமணி’ குமாரி சச்சு
என் உடன் பிறந்த சகோதரர்களைக்கூட நான் பெயர் சொல்லித்தான் அழைப்பேன். ஆனால், சிவாஜியை ‘அண்ணா’ என்றுதான் சொல்வேன். ‘எதிர்பாராதது’ என்ற படத்தில்தான் முதன்முதலில் சிவாஜியுடன் நடித்தேன். என்னுடைய காட்சி முடிந்துவிட்டாலும், படப்பிடிப்புத் தளத்தைவிட்டு மேக்-அப் ரூமுக்குச் சென்று ஓய்வு எடுக்கச் செல்ல சிவாஜி அனுமதிக்க மாட்டார். அங்கேயே உட்காரச் சொல்லி, மற்றவர்கள் நடிப்பதைப் பார்க்கச் சொல்வார்.
வசனம் எப்படிப் பேச வேண்டும் என்று கற்றுக்கொடுப்பார். அன்று அவர் எங்களுக்குக் கற்றுக்கொடுத்ததால்தான் இன்று இங்கே நிற்கிறோம். அவரோடு சேர்ந்து நடித்தது நான் செய்த புண்ணியம். அந்தக் காலம்தான் சினிமாவின் பொற்காலம். அந்தக் காலம் இனித் திரும்ப வராது.
தெலுங்கில் நடந்த நாடகம் ஒன்றுக்கு சிவாஜி தலைமை வகித்தார். அந்த நாடகத்தில் நான்தான் கதாநாயகி. எனது நடிப்பை நினைவில் வைத்து ‘குங்குமம்’ படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக என்னை நடிக்க வைக்கத் தயாரிப்பாளரிடம் சிவாஜி பரிந்துரை செய்தார். சிவாஜி என்றாலே எனக்குப் பயம். படப்பிடிப்புத் தளத்துக்கு அவர் வந்தாலே பயப்படுவேன். “பயப்படாதே” என்று எனக்கு அறிவுரை சொல்லி நடிக்க வைத்தவர் சிவாஜி. இதை என்றுமே என்னால் மறக்க முடியாது.
வசனம் முடிந்தவுடனே நான் நடிப்பதை நிறுத்திவிடுவேன். ஆனால், இயக்குநர் ‘கட்’ சொல்லும்வரை நடிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுத்தவர் சிவாஜிதான். அவருடன் 4 படங்கள்தான் நடித்திருப்பேன். என்னைப் போல நிறையப் பேர் அவரிடம் வாய்ப்புப் பெற்று வளர்ந்திருக்கிறார்கள். இதையெல்லாம் என்றும் மறக்க மாட்டேன்.
கலைமாமணி ‘வெண்ணிற ஆடை’ நிர்மலா
இந்த விழாவில் பங்கேற்றது சந்தோஷத்தையும் பெருமையையும் தருகிறது. என்னுடைய மூன்றாவது படமான ‘லட்சுமி கல்யாணம்’ படத்தில் சிவாஜியுடன் நடித்தேன். அந்தப் படத்தின் ஒரு காட்சியில் அரிவாளுடன் திமிறிக்கொண்டு செல்லும் அவரைப் பிடித்து நிறுத்தி நான் வசனம் பேச வேண்டும். அப்போதுதான் நடிப்பு என்றால் என்னவென்று கற்றுக்கொள்ளத் தொடங்கியிருந்தேன்.
அவர் கையைப் பிடித்தால் எனக்கு வசனம் வரவில்லை. வசனம் வந்தால், கையைப் பிடிக்க முடியவில்லை. அதைப் பார்த்து ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு, எப்படி நடிக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று நடித்துக் காட்டி என்னை நடிக்க வைத்தார். அந்தப் படத்தை இப்போது பார்ப்பவர்கள்கூட சிவாஜிக்கு இணையாக நடித்திருப்பதாக என்னைப் பாராட்டுவார்கள்.
அந்தப் பாராட்டு சிவாஜிக்குப் போய்ச் சேர வேண்டும். நடிப்புக்கே அவர்தான் பல்கலைக்கழகம். அவரைப் போன்ற இன்னொரு நடிகரை இதுவரை நான் பார்த்ததில்லை. இனிப் பார்க்கவும் முடியாது.
எழுத்தாளர், இயக்குநர், ‘சித்ராலயா’ கோபு
செங்கல்பட்டில் வெளியான ‘பராசக்தி’ படத்துக்கு டிக்கெட் புக்கிங் கிளர்க்காகப் பணியாற்றினேன். அந்தப் படத்தைத் தினமும் தியேட்டரில் பார்த்துக்கொண்டே இருப்பேன். இயக்குநர் ஸ்ரீதரோடு சேர்ந்து திரையுலகில் முன்னுக்கு வந்த பிறகு ‘விடிவெள்ளி’ படத்தில்தான் சிவாஜியைப் பார்த்தேன். ஸ்ரீதர் எழுதிய வசனத்தைக் கையில் வைத்துக்கொண்டு சிவாஜியிடம் படித்துக் காட்டினேன். சிவாஜி ஏற இறங்கப் பார்த்தார். ‘நீ உணர்ச்சியா படிக்க வேண்டாம்; சும்மா படிச்சுக் காட்டினா போதும்.
மத்ததை நான் பார்த்துக்குறேன்’ என்று சொன்னார். சிவாஜி ஒரு சிறந்த மனிதர். எல்லோரிடமும் தன்மையாகப் பேசுவார் என்பதைப் பிறகுதான் தெரிந்துகொண்டேன். அதன் பிறகு அவரை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அவருடைய குடும்பத்தில் நானும் ஒருவன் என்பதைப் பெருமையாகச் சொல்வேன்.
படங்களில் அவர் நிகழ்த்திய சாதனைகள் எல்லோருக்கும் தெரிந்தவைதான். ஆனால், நாடகத் துறையில் அவருக்கு இருந்த தாகம் மிக அதிகம். பாகிஸ்தான் போர் சமயத்தில் யுத்த நிதி திரட்ட, நட்சத்திரக் கலை நிகழ்ச்சிக்காக ‘கலாட்டா கல்யாணம்’ என்ற நாடகத்தைச் சிவாஜிக்காக எழுதி, இயக்கினேன்.
இந்த நாடகத்துக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்த நாடகத்தைப் படமாக எடுக்கப் போகிறேன் என்று சிவாஜி என்னை அழைத்துச் சொன்னார். என்னைத் திரையுலகில் நிலைநிறுத்திய படம் ‘கலாட்டா கல்யாணம்’தான். பின்னர் என்னை அதிகமாக நாடகம் எழுதத் தூண்டியதும் சிவாஜிதான். அவர் தலைமை வகித்த எனது நாடகம் ஒன்றில் ஒரு கதாபாத்திரத்தில் நான் நடித்தேன்.
நாடகம் முடிந்ததும் என்னை வீட்டுக்கு அன்புடன் இழுத்துவரச் செய்தார் சிவாஜி. நாடகத்தில் பாடிக்கொண்டே நடித்ததற்காக என்னைப் பாராட்டி அன்று இரவு எனக்கு விருந்தளித்தார். எனது நடிப்புக்காகச் சிவாஜி அளித்த பாராட்டு விருந்து ஆஸ்கர் விருதுக்கும் மேல். இதைப் போல எத்தனை விழாக்கள் எடுத்தாலும் சிவாஜிக்குத் தகும்.
இளைய திலகம் பிரபு
இங்கே ரசிகர்கள் எல்லோரும் வந்திருப்பது அப்பா வந்ததுபோல இருக்கிறது. ரசிகர்கள் அனைவரையும் ஓரிடத்தில் வரச் செய்த ‘தி இந்து’ குழுமத்துக்கு இதயம் நிறைந்த நன்றி. அப்பா மீதுள்ள பிரியத்தை இந்துக் குழுமம் காட்டிவிட்டது. அப்பாவைப் பற்றி எல்லாப் பத்திரிகைகளும் எழுதுகின்றன. ஆனால், ‘இந்து’வில் வரக்கூடிய கட்டுரைகளில் தனிச் சுவை இருக்கும், உண்மை இருக்கும்.
அன்பு இருக்கும்போதுதான் உண்மை வரும். ஒருமுறை பெருந்தலைவர் காமராஜரைச் சந்தித்து அப்பா நன்கொடை கொடுத்தார். அப்போது காமராஜர், அப்பா பெயரில் மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்க ஆசைப்படுவதாகச் சொன்னார். அதை வெளிப்படையாகச் சொன்ன ஒரே பத்திரிகை ‘இந்து’ பத்திரிகைதான். நாங்கள் ஆண்டுதோறும் கொண்டாடும் அப்பாவின் பிறந்த நாள் விழாவைவிடப் பலமடங்கு சிறப்பாக ‘இந்து தமிழ்’ கொண்டாடிவிட்டது.
ராம்குமார் கணேசன்
இத்தனை சிறப்பான விழாவை நடத்தியதற்கு சிவாஜி ரசிகர்களின் சார்பில் கோடான கோடி நன்றி. ‘கெளரவம்’ படத்தை இந்தக் குழுமத்திலிருந்துதான் தயாரித்தார்கள். நிறையப் பேச வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால், இங்கே திரையிட்ட காட்சிகளைப் பார்த்து அழுதுவிட்டேன். பேசுவதை மறந்துவிட்டேன். பதினேழு ஆண்டுகளாக நாங்கள் அப்பாவின் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுகிறோம். ஆனால், இது மிகச் சிறப்பானதொரு விழா. மறக்கவே முடியாத விழா.
இயக்குநர் எஸ்பி. முத்துராமன்
சிவாஜியின் 305 படங்களும் ஒரு சமுத்திரம். அதில் மூழ்கி முத்தெடுத்து காணொலிக் காட்சிகளைத் தயாரித்திருப்பதை ஒரு இயக்குநராகப் பாராட்டுகிறேன். நான் சிவாஜியையும் இயக்கியிருக்கிறேன். அவரது மகன் பிரபுவையும் இயக்கியிருக்கிறேன். அது எனக்குக் கிடைத்த பெருமை. அன்று பார்த்த அதே சிவாஜி ரசிகர்களைத்தான் இன்றும் பார்க்கிறேன். அவர்கள் இன்றும் என்றுமே சிவாஜி ரசிகர்களாக இருக்கிறார்கள்.
சிவாஜி நடிக்கும்போது அவருடைய உடலும் சேர்ந்து நடிக்கும். ‘ரிஷிமூலம்’ படத்தில் முக பாவனையை மட்டும் வைத்து எடுத்த காட்சி பெரிதாகப் பேசப்பட்டது. சிவாஜியை வைத்து நான் படம் இயக்கியது என் வாழ்க்கையில் கிடைத்த புண்ணியம். சிவாஜி நடித்த படங்களின் கதாபாத்திரங்களைத் திரும்பவும் உருவாக்க முடியுமா? நிச்சயம் இனி முடியாது. அத்தனை கதாபாத்திரங்களையும் சிவாஜி செய்துவிட்டார். எல்லாப் பாத்திரங்களிலும் சிறப்பாக நடித்து இன்னொரு சிவாஜி இனிப் பிறக்க முடியாது என்று நிரூபித்துச் சென்றுவிட்டார் சிவாஜி.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago