நூற்றுக்கணக்கான கலைஞர்களின் கூட்டு உழைப்புதான் சினிமா. என்றாலும்,ரசிகர்களின் கண்ணுக்கு நேரடியாகத் தெரிவது நடிப்புதான். தொழில்நுட்பரீதியில் பல்வேறு வளர்ச்சிகளை அடைந்துவிட்ட, திரைரசனை மேம்பட்டுவிட்ட இந்தக் காலத்திலும் நடிகர்களுக்காகப் படம் பார்க்குtம் ரசிகர் கூட்டம் அதிகரக்கிறதே தவிர குறைவதில்லை. கடந்து செல்லும் 2018-லும் பல நடிகர்கள் தங்கள் திறமையைத் திறம்பட வெளிப்படுத்தியிருந்தார்கள்.
கதாநாயகன்
ரஜினிகாந்த்: கடந்த ஆண்டின் கடைசி நாளில் தன் அரசியல் பிரவேசத்தை அறிவித்த ரஜினிகாந்தின் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாயின. ‘‘காலா’வில் தாராவியின் அறிவிக்கப்படா தலைவனாக அடித்தட்டு மக்களின் அரசியலைப் பேசிக்கொண்டே மனைவியுடன் கொஞ்சுவது, பழைய காதலியைப் பார்த்து உருகுவது, எதிரிகளை ஏளனமாகக் கையாள்வது என்று பன்முக விருந்து படைத்தார் ரஜினி. ‘2.0’-வில் சிட்டியின் சுட்டித்தனம் கலந்த வில்லத்தனம் மீண்டும் ரசிகர்களைக் கவர்ந்தது.
விஜய்: விஜய் நடிப்பில் ‘சர்கார்’ மட்டுமே வெளியானது. தேர்தல் அரசியல் கட்சிகளை, ஆட்சியாளர்களை எதிர்த்துக் களமிறங்கும் என்.ஆர்.ஐ இளைஞராக நடித்தார். கோட்-சூட் உடை. கொஞ்சம் நரைத்த தலைமுடி என இவரது புதிய தோற்றம் ரசிகர்களை ஈர்த்தது. அரசியலில் டிஜிட்டல் யுக இளைஞர்கள் விரும்பும் மாற்றங்களைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் விஜய்யை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.
தனுஷ்: ‘வட சென்னை’யில் குடிசைப் பகுதியைச் சேர்ந்த கேரம் போர்ட் பிளேயராக, சூழ்நிலை அழுத்தத்தால் அந்தப் பகுதியின் ரவுடிகள் சாம்ராஜ்யத்தின் ஒரு அங்கமாக நேரும் இளைஞனாக அசத்தியிருந்தார் தனுஷ். தோற்றம், உடல் மொழி, வசன உச்சரிப்பு என அனைத்திலும் 90-களின் வட சென்னை இளைஞனைக் கச்சிதமாக வெளிப்படுத்தினார். ஆண்டு இறுதியில் வெளியான ’மாரி 2’-ல் மாஸ் ரசிகர்களைத் தக்கவைக்கும் முனைப்பை வெளிப்படுத்தினார்.
விஜய் சேதுபதி: இந்த ஆண்டும் விஜய் சேதுபதி அதிக படங்களில் நடித்த நாயக நடிகர். இந்த ஆண்டும் அவர் ஏற்ற கதாபாத்திரங்களை ஒரே வகைமையில் அடக்கிவிட முடியாது. ‘செக்கச் சிவந்த வானம்’- படத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரியாக விஜய் சேதுபதியின் கதாபாத்திர வடிவமைப்பும் அதில் அவரது நடிப்பும் மணி ரத்னம் படங்களில் இதுவரை கண்டிராத வகையில் இருந்தன
‘96’ படத்தில் பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னரும் அவளுக்குரிய மரியாதையுடன் நடத்தும் ‘கண்ணிய’மான காதலனை நினைவுபடுத்தினார். ‘சீதக்காதி’யில் பிராஸ்தடிக் மேக்கப்பைத் தாண்டி, முக பாவம், உடல்மொழி, வசன உச்சரிப்பு என அனைத்திலும் ஒரு முதிய நாடகக் கலைஞனைக் கண் முன் நிறுத்தினார்.
கதிர்: ஏற்கெனவே ஒரு சில படங்களில் கவனம் ஈர்த்திருந்தாலும் ‘பரியேறும் பெருமாள்’ கதிரை ஒரு கதாநாயகனாக நிலைநிறுத்தியது. திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த தலித் சமூகத்தைச் சேர்ந்தவராக, எல்லா வகைகளிலும் ஒடுக்கப்பட்டும், அவமதிக்கப்பட்டும் வன்முறையைக் கையில் எடுக்காமல் கல்வியைப் பற்றிக்கொண்டு அதன் மூலம் சாதியின் கோரப்பிடியிலிருந்து மீள நினைக்கும் இளைஞனாக வெகு சிறப்பாக நடித்திருந்தார். அதன் மூலம் அந்தக் கதாபாத்திரத்துக்குத் தான் தேர்ந்தெடுக்கப்பட்டது 100% சரி என்று நிரூபித்தார் கதிர். .
கதாநாயகி
நயன்தாரா: நயன்தாரா நடித்த ‘கோலமாவு கோகிலா’வில் அம்மாவின் புற்றுநோய் சிகிச்சைக்குத் தேவைப்படும் பணத்துக்காக, அசட்டுத் துணிச்சலுடன் டிபான்பாக்ஸில் போதைப்பொருள் கடத்தும் பெண்ணாக, ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் கணவனைக் கொன்றவர்களைப் பழிவாங்கும் மிடுக்கான சிபிஐ அதிகாரியாக என ஏற்கும் கதாபாத்திரத்துக்கு ஏற்ப ஜொலித்து தன்னை வசூல் நட்சத்திரமாகவும் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.
திரிஷா: திரையுலகில் நாயகி நடிகையாக 16 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் திரிஷா, இரண்டு படங்களில் நடித்தார். ‘மோகினி’ என்ற பேய்ப் படம் திரிஷாவின் திரையுலக அஸ்தமனம் தொடங்கிவிடதோ என்ற திகிலைத்தான் ஏற்படுத்தியது. ஆனால், 35 வயதைக் கடந்த திருமணமான பெண்ணாக ‘96’ படத்தின் பெரும்பகுதியில் மஞ்சள் சுடிதாரில் ஜானுவாக வந்த திரிஷா அழகால் மட்டுமல்லாமல் நடிப்பாலும் தன் ரசிகர்களின் எண்ணிக்கையைக் கூட்டினார்.
சமந்தா: 2017 அக்டோபரில் நாக சைதன்யாவைத் திருமணம் செய்துகொண்ட சமந்தா, திறமையான நடிகைகளுக்கு மணவாழ்க்கை தடையில்லை என்பதை நிரூபித்தார். ‘நடிகையர் திலகம்’ படத்தில் 1980-களின் பத்திரிகையாளராக அவர் ஏற்ற துணைக் கதாபாத்திரத்தில் கவனம் ஈர்த்தார். ‘இரும்புத் திரை’யில் மனநல மருத்துவராகக் கவனிக்க வைத்தவர், ‘யு-டர்ன்’ படத்தில் தொடர்ச்சியான சாலை விபத்து மரணங்களின் பின்னால் உள்ள மர்மத்தைக் களைய முயலும் பத்திரிகையாளராகச் சிறப்பாக நடித்திருந்தார். ‘சீமராஜா’ படத்தில் முதல்முறையாக கிராமத்துப் பெண்ணாகத் தோன்றியதுடன் சிலம்பம் சுழற்றி அசத்தினார்.
ஐஸ்வர்யா ராஜேஷ்: ‘வட சென்னை’ படத்தில் சென்னையைச் சேர்ந்த துணிச்சலான இளம் பெண்ணாகவும் ‘லக்ஷ்மி’ படத்தில் ஒரு சிறுமியின் தாயாகவும் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்டின் இறுதியில் வெளியான ‘கனா’ படத்தில் கிரிக்கெட்டில் சாதிக்கும் கிராமத்துப் பெண்ணாக அடுத்தகட்டப் பாய்ச்சலை நிகழ்த்தினார். சுழற்பந்துவீச்சாளராகவும், இடதுகை மட்டையாளராகவும் நிஜமான கிரிக்கெட் வீராங்கனைகளைப் பிரதிபலிக்க அவர் செலுத்திய உழைப்பு படத்தின் காட்சிகளில் பளிச்சிட்டது.
கீர்த்தி சுரேஷ்: ‘நடிகையர் திலகம்’ படத்தில் வாழ்நாள் முழுவதும் பெருமைப்பட்டுக் கொள்ளும்படியான நடிப்பைத் தந்திருந்தார் கீர்த்தி சுரேஷ். சாவித்திரியே மறு அவதாரம் எடுத்துவிட்டாரோ என்று வியக்கும் அளவுக்கு கீர்த்தி சுரேஷின் தோற்றப் பொருத்தமும் நடிப்பும் அமைந்திருந்தன. அடுத்ததாக ‘சண்டக்கோழி 2’ படத்தில் சுட்டித்தனம் மிக்க பெண்ணாக மனதைக் கவர்ந்தவர் ‘சாமி 2’, ‘சர்கார்’ படங்களில் நட்சத்திர நாயகர்களைக் காதலித்துவிட்டுப் போகும் கமர்ஷியல் கதாநாயகி வேலையைச் செய்தாலும் அதில் துடிப்பும் ஈடுபாடு கூடிய நடிப்பும் இருக்கவே செய்தது.
குணச்சித்திரம் மற்றும் வில்லன்
வரலட்சுமி சரத்குமார்: ‘சண்டக் கோழி 2’-வில் பழிவெறிகொண்ட கிராமத்துப் பெண்ணாகவும், ‘சர்கார்’ படத்தில் திரைமறைவிலிருந்து அரசை இயக்கும் முதல்வரின் மகளாகவும் மிரட்டியிருந்தார்.
யோகி பாபு: ‘கோலமாவு கோகிலா’, ‘செம்ம’, ‘கலகலப்பு 2’ உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவையில் வெளுத்து வாங்கினார். ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் பரியனின் நண்பனாக சாதிகளைக் கடந்த மனிதனாக நடித்து தன்னை நகைச்சுவைக்குள் மட்டும் சுருக்கிவிட முடியாது என்று நிரூபித்தார்.
ஈஸ்வரி ராவ்: ‘காலா’ படத்தில் ‘வள வள’ வென்று பேசிக்கொண்டே ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் தன் கண்டிப்பாலும் அன்பாலும் கட்டிப்போடும் குடும்பத் தலைவியாக கரிகாலனின் அன்பு மனைவியாக நடித்ததன் மூலம் மறக்க முடியாத மறுவருகை தந்தார்..
சத்யராஜ்: கிராமத்துப் பெருங்குடும்பத் தலைவர் (‘கடைக்குட்டி சிங்கம்’), ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி (‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’), இளம் முதல்வரை வழி நடத்தும் மூத்த பத்திரிகையாளர் (‘நோட்டா’), மகளின் கனவை நிறைவேற்ற உழைக்கும் கிராமத்து விவசாயி (‘கனா’) என இந்த ஆண்டும் தன் பன்முக நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார்.
ரேவதி: ‘குலேபகாவலி’ படத்தில் ஒரு மோசடிப் பேர்வழியாக நகைச்சுவை கலந்த மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துப் புத்துணர்வளித்தார்.
அறிமுகங்கள்
துப்புரவுத் தொழிலாளியாக தினேஷ் (‘ஒரு குப்பைக் கதை’),
முன்னாள் காவல்துறை அதிகாரி - இந்நாள் சைக்கோ கொலைகாரனாக அனுராக் கஷ்யப் (இமைக்கா நொடிகள்),
லிவிங் டுகெதர் வாழ்க்கையை விரும்பும் நவீன சிந்தனைகொண்ட பெண்ணாக ரைஸா வில்சன் (பியார் பிரேமா காதல்),
பெண் வேஷம் போடும் நிகழ்த்துக் கலைஞராக வண்ணார்பேட்டை தங்கராஜ் (பரியேறும் பெருமாள்),
விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்ட சைக்கோ கொலைகாரனாக சரவணன் (ராட்சஸன்),
90-களின் பள்ளிப் பருவக் காதலர்களாக ஆதித்யா பாஸ்கர் & கெளரி ஜி கிஷன் (96),
மற்றும் கதாநாயகனாக மாறும் தயாரிப்பாளராக சுனில் ரெட்டி (’சீதக்காதி) ஆகியோரைப் பெருமைமிகு அறிமுகங்களாகக் கொள்ளலாம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago