பார்வையாளர்களை மதிப்பது, அவர்களைக் கதையுடன் ஒன்ற வைத்துப் பயணிக்க வைப்பது ஆகிய இரண்டு அணுகுமுறைகளை வெகு சில படைப்பாளிகளே திரைக்கதையில் கடைப்பிடிக்கிறார்கள். அவர்களில் ஒருவர் என ஸ்ரீராம் ராகவனைக் குறிப்பிடலாம். புனே நகரவாசி, பள்ளியில் சுமாரான மாணவன், திரைப்படக் கல்லூரியில் ராஜ்குமார் ஹிரானியின் சகா, அதிகம் கொண்டாடப்படாத சிறந்த க்ரைம் கதை சொல்லி, கதாசிரியர் மற்றும் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன்.
இது அவரின் ஐந்தாவது திரைப்படம். “படம் பார்க்கும் பார்வையாளர்களுக்கு, என் கதாபாத்திரங்களைக் காட்டிலும் கூடுதல் விஷயங்கள் தெரியும்; இதுவே அவர்களை எல்லா வகையிலும் ஒன்றி, கதையோடு பயணிக்க வைக்க உதவுகிறது” எனும் ஸ்ரீராம், வெறும் 12 நிமிடங்கள் ஓடும் ‘லெக்கார்டியர்’ எனும் பிரெஞ்சுக் குறும்படத்தின் மையக் கதாபாத்திரத்தை வைத்துக்கொண்டு, நான்கு நண்பர்களுடன் இணைந்து எழுதியிருக்கும் கதைதான் ‘அந்தாதுன்’ (கண்மூடித்தனமான என்ற ஒரு அர்த்தமும் வருகிறது).
இப்படத்தின் கதையை ஒரு வரியில் சொன்னாலும் அதன் மர்மம் உடைந்துவிடக் கூடும். எனவே, எச்சரிக்கையுடன் அதை விவரிப்பதென்றால், ஒரு பார்வையில்லாத பியானோ கலைஞன், அவனது காதலி, வளர்ப்புப் பூனை ராணி, ஒரு முன்னாள் மூத்த நடிகர், அவரின் இளம் மனைவி, அதிகம் யோசிக்காத துணைக் காவல் ஆணையர் என சில மனிதர்களின் வாழ்வை இணைக்கும் விருப்பமில்லாத திருப்பங்கள் நிறைந்த இந்தக் கதையில் தப்பியோடும் ஒற்றைக்கண் முயல் ஒன்றும் உண்டு.
எழுபது மற்றும் எண்பதுகளில் அதிகம் கேட்கப்பட்ட வானொலியின் ‘சய்யா கீத்’ ஒலிக்க, ஊருக்கு வெளியே ஒரு வயல் வெளியில் முயல் துரத்தும் வேட்டையில் தொடங்கும் திரைக்கதையின் வெட்டாட்டம், வெகு சீக்கிரமே பார்வையாளர்களையும் பங்கேற்பாளர்களாக ஆக்கிவிடுகிறது. கதை மாந்தர்களின் சிறிய அறிமுகக் காட்சிகளுக்குப் பின்னர், ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் கதையின் போக்கில் மர்மம் உருவாக்கும் சிரிப்பும் பயமும் பதற்றமும் ஊகிக்கவே முடியாத முடிச்சுகளோடு பயணிக்கிறது.
பல ஆச்சரியங்கள்!
பழைய இந்தித் திரைப்படங்கள், பொருத்தமான வசனங்கள், பாடல்கள், பத்து நிமிடங்களுக்கு வசனமே இல்லாமல் அரங்கேறும் ஒரு கொலை, ஆட்டோவின் பின்னால் ஒரு நடிகையின் படம், கறுப்பு வெள்ளை பூனை, உண்மை அறிந்தும் சொல்ல முடியாமல் ஏமாற்றும் சிறுவன், பயப்படும் துணை ஆணையர், அவரின் மனைவி, பேராசைக்கார டாக்டர், இரத்த மாதிரிகள், அபாரமான பியானோ இசை, துள்ளலான மதுபான விடுதியின் பாடல்கள் என ஒவ்வொரு சிறு விஷயமும் கதை நகர உதவிக்கொண்டே இருக்கிறது.
நடிகரின் மனைவி எழுத்தாளர் சுஜாதா எழுதிய ‘அனிதா -இளம் மனைவி’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படிப்பதாகப் போகிற போக்கில் அவளின் குணாதிசயத்தைச் சொல்வது என நுட்பமாகவும் இந்தப்படத்தை ரசித்துப் பார்க்கலாம். ‘தி லஞ்ச் பாக்ஸ்’, ‘லைஃப் ஆஃப் பை’ போல இதன் முடிவும் நம் ஊகங்களுக்கே விடப்படுகிறது.
முன்னாள் நடிகராக அனில் தவான் நடித்திருக்கிறார். நடிப்பில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளாக தபு, முதன்மைக் கதாபாத்திரமான ஆயுஷ்மான் குரானா, ஒரு சின்னக் கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தே, மோசடி டாக்டர் சுவாமியாக சாகிர் உசேன் ஆகியோரைக் குறிப்பிடலாம். தொழில்நுட்பப் பங்கேற்பில், அமித் திரிவேதியின் அட்டகாசமான பாடல்கள், பின்னணி இசை, கே.யு.மோகனனின் ஒளிப்பதிவு, படத்தொகுப்பும் கதை எழுதிய குழுவில் ஒருவருமான பூஜா லதாவோடு மிகப் பிரமாதமான இயக்கத்தைக் கையாண்ட ஸ்ரீராமையும் மனதாரப் பாராட்டலாம்.
ஹிட்ச்காக் சொன்னதாக ஒரு வரி நினைவுக்கு வருகிறது ‘ஒரு சிறந்த திரைப்படத்துக்கு முக்கியமான மூன்று விஷயங்கள் தேவை - நல்ல திரைக்கதை, நல்ல திரைக்கதை, மற்றும் நல்ல திரைக்கதை!’. திரைக்கதையில் மட்டுமல்ல; அதைக் காட்சிப்படுத்தியதிலும் ஆச்சரியத் திரை அனுபவமாகிவிடுகிறது அந்தாதுன்.
தொடர்புக்கு: tottokv@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago