பத்து வாரங்கள் ஓடினாலே ஜெய்சங்கரின் படங்கள் வசூலை அள்ளிவிடும். இன்று ‘கிங் ஆஃப் ஓபனிங்’ என்று அஜித்தைக் கூறுவதைப் போல அன்று ஜெய்சங்கர். ‘அந்தக் கால சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு அடுத்து பத்தரை மாற்றுத் தங்கம் என்று ஜெய்சங்கரைக் கூறுவேன்.
உள்ளத்தால் கருணை வடிவானவன், உதவி என்று வருகிறவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் உதவும் பேண்ட் சட்டை போட்ட வள்ளல் அவன்” எனும் கோபுவுக்கு ஜெய்சங்கர் மிக நெருங்கிய நண்பர். “டேய்… வா... போ...!” என்று பேசிக்கொள்ளும் அளவுக்கு நெருக்கத்தைக் கொண்டிருந்தார்கள். ‘நில்... கவனி... காதலி’ படத்துக்குப் பிறகு கோபுவுக்கும் ஜெய்சங்கருக்கும் நல்ல நட்பு ஏற்பட்டது. ஜெய்சங்கரும் நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர். ‘வீட்டுக்கு வீடு’ படத்துக்குப் பிறகு அவர்களுடைய நட்பு இன்னும் பலப்பட்டது.
ஜெய்சங்கரின் அறிமுகப் படம்!
‘அத்தையா, மாமியா?’ படப்பிடிப்பில் ஒரு நாள், “டேய் கோபு... என்னோட முதல் படம் எதுன்னு உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார் ஜெய்சங்கர். ''இது என்ன பெரிய விஷயம்! ஜோசப் தளியத் டைரக்ட் செஞ்ச ‘இரவும் பகலும்’ தான் உன்னோட முதல் படம்!'' என்றார் கோபு. “அதுதான் இல்லே... உன்னோட ஸ்ரீதர் படத்துலதான் நான் முதன்முதலா அறிமுகம் ஆனேன்” என்று ஜெய்சங்கர் கூற, கோபு திகைத்துப் போனார். “அட ஆமாப்பா... நம்பு! என்னோட முதல் படம்தான் உன்னோட முதல் படமும்.
‘கல்யாண பரிசு’ படத்துல நான் நடிச்சிருக்கேன். ‘கல்யாண பரிசு’ல ஜெமினி கல்லூரி மாணவனா கிளாஸ் ரூம்ல உட்கார்ந்து இருக்கச்சே, நானும் ஒரு மாணவனா அங்கே உட்கார்ந்திருந்தேன்!'' என்று, தான் தற்போது ஒரு பெரிய ஹீரோ என்பதை மறந்து நகைச்சுவையாகச் சிரித்தபடி கூறினார் ஜெய்சங்கர்.
கோபுவுக்கும், ஜெய்சங்கருக்கும் மிக நெருக்கம் உண்டானதுக்கு இன்னொரு காரணமும் உண்டு.. ஜெய்சங்கரின் மாமனார் கிருஷ்ணமூர்த்தி கோபுவின் பால்ய நண்பர். அவருடைய மாமனார் பெயரைச் சொல்லி மிரட்டியே ஜெய்சங்கரை வேலை வாங்குவார் கோபு.
வலது கை கொடுப்பது…
ஜெய்சங்கரை வைத்து ‘அத்தையா மாமியா?’, ‘தைரிய லட்சுமி’, ‘காலமடி காலம்’, ‘ராசி நல்ல ராசி’, முத்துராமனை வைத்து ‘பெண்ணொன்று கண்டேன்’, ‘ஆசைக்கு வயசில்லை’ எனத் தொடர்ந்து நகைச்சுவைப் படங்களை கோபு இயக்கிக்கொண்டிருந்த நேரம். அன்றாடம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஜெய்சங்கரைக் காண படப்பிடிப்புத் தளத்துக்கு வந்தவண்ணம் இருப்பார்கள். வெளியூர்களில் இருந்தும் வருவார்கள்.
ஜெய்சங்கருடன் போட்டோ எடுத்துக்கொள்ளவும் படப்பிடிப்பைக் காணவும்தான் அவர்கள் வருகிறார்கள் என்று கோபு நினைத்துக்கொண்டிருந்தார். ஆனால் கோபு, ''கட்'' என்று சொன்னதுமே ஜெய்சங்கர் அந்த மாணவர்களை நோக்கி விரைந்து செல்வார். அவர்களது குறைகளைக் கேட்டு மாணவர்களின் தேர்வுக்குப் பணம் கட்ட உதவுவார்.
பெண்களுக்குத் தாலி வாங்குவதற்கு தன்னால் ஆன உதவிகளைச் செய்வார். ஆனால், வலது கை கொடுப்பதை இடது கை அறியாவண்ணம் பார்த்துக்கொள்வார். தன் முன்னால் யாரும் கஷ்டப்படக் கூடாது என்று கடைசிவரை நினைத்தவர்.
மோகன், பாண்டியராஜன் என இன்றைய நடிகர்கள் வரை பலரை கோபு இயக்கியிருந்தாலும் பெரும்பாலான அவரது படங்களின் கதாநாயகன் ஜெய்சங்கர்தான். கோபுவின் படம் என்றால் சம்பளம் பேசாமல் ஒப்புக்கொண்டு விடுவார். ஜெய்சங்கருக்கு அடுத்து கோபுவின் படங்களில் அதிகமாக நடித்தவர் முத்துராமன். ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் இருந்து ஒரேவிதமான அன்பும் பண்பும், கொண்டிருந்தவர்.
கடைசிவரை கிசுகிசுக்களில் சிக்காமல், ஒரு ராமனாகவே வாழ்ந்து வந்தார். கோபுவின் நாடகங்களிலும் அவர்தான் கதாநாயகன். எனவே, கோபு படங்கள் என்றால், உடனே ஒப்புக்கொள்வார். அவரும் சம்பளத்தைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்.
gjPNG100
முத்துராமனைத் தெரியாத பெண்மணி
அது 1981- வருடம். கோபுவின் மனைவி கமலா சடகோபன் எழுதிய ‘படிகள்’ என்ற நாவலைத் தமிழ் வளர்ச்சித் துறை சிறந்த நாவலாக அறிவித்தது. வள்ளுவர் கோட்டத்தில் நடந்த அரசு விழாவில் முதல்வர் எம்.ஜி.ஆர். திருமதி கமலாவுக்குப் பரிசளித்தார். விழா முடிந்த மறுநாள் மாலை, திருவல்லிக்கேணி கோபுவின் வீட்டுக்கு, கையில் ஒரு பூங்கொத்துடனும் ‘படிகள்’ நாவலின் ஒரு பிரதியுடனும் வந்து நின்றார் நடிகர் முத்துராமன்.
காலிங் பெல்லை அழுத்திய முத்துராமனுக்குக் கதவைத் திறந்து ''நீங்க யாரு?'' என்று கேட்டார் கோபு வீட்டின் வயதான சமையல்கார அம்மாள். முத்துராமன், வியப்புடன், ''என்னைத் தெரியலையா?'' என்று திரும்பவும் கேட்க, ''தெரிஞ்சா சொல்ல மாட்டேனா… செங்கல்பட்டுலேர்ந்து வர்றேளா.. சடகோபனுக்கு உறவா?” என அந்தப் பெண்மணி கேட்க..'' நான்தான் முத்துராமன்'' என்று கூறினார்.
அவரோ ''எந்த முத்துராமன்?'' என்றார் விடாமல். இனிப் பேசிப் பயனில்லை என்று தனது காரை நோக்கி முத்துராமன் திரும்பியபோது டாக்ஸியில் வந்து இறங்கினார்கள் கோபுவும் அவருடைய மனைவியும். முத்துராமனைப் பார்த்து “என்ன முத்து… போன் பண்ணியிருந்தா நான் காத்திட்டிருப்பேனே… அதிருக்கட்டும் உள்ளே போய் உட்காராமல் ஏன் திரும்ப வர்றீங்க?” என்றார் கோபு.
“நான் நடிக்கறதை நிறுத்திட வேண்டியதுதான். அந்த அம்மாவுக்கு நான் யாருன்னே தெரியலை கோபு சார்..'' என்று சிரித்தார் முத்துராமன். “அந்தம்மாவுக்கு சிவாஜி கணேசனையே தெரியாது. நீங்க கவலைப்படாதீங்க” என்று உள்ளே அழைத்துப்போனார்.
நண்பனின் அழைப்பு
பூங்கொத்தை கோபுவின் மனைவியிடம் நீட்டிய முத்துராமன் “காலையில பத்து மணிக்கு உங்க ‘படிகள்’ நாவலை வாங்கினேன். மூணு மணிக்குள்ள வாசிச்சு முடிச்சுட்டேன். “உங்க கதையை என் மகன் கார்த்திக்கிட்டே சொன்னேன். அவருக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நானும் கார்த்திக்கும் இந்தக் கதையில அப்பா, மகனா நடிக்கிறதுன்னு முடிவு பண்ணியிருக்கோம்.
திரைக்கதையை கோபு சார் எழுதணும். படப்பிடிப்புக்கு ஊட்டிக்குப் போறேன். வந்த உடனே அட்வான்ஸ் கொடுத்து கதையை வாங்கிக்கிறேன்'' என்று கூறிச் சென்ற முத்துராமன் அடுத்தநாளே ஊட்டியில் நடந்த படப்பிடிப்புக்குப் புறப்பட்டுப்போனார். அங்கே உடற்பயிற்சி செய்யும்போது காலமானார்.
இந்த இருவரைப் போலவே கோபுவுடன் நெருக்கம் கொண்டிருந்த மற்றொருவர் நகைச்சுவை நடிகர் சுருளிராஜன். கோபுவின் வசனங்களுக்கு உயிர் கொடுத்தவர். முகஸ்துதிக்காக அல்லாமல், “கோபு சார்... உங்க படத்துல கவுரவ வேஷம் இருந்தாகூடப் பரவாயில்லை. நாலு வசனம் நறுக்குன்னு பேசி சிரிக்க வச்சுடலாம். வரவர நகைச்சுவை வெறுமையும் வறுமையும் நம்மல வெறுக்க அடிக்குது'' என்று கூறுவார்.
ஜெய்சங்கர், முத்துராமன், சுருளிராஜன் போன்ற மிகவும் நெருக்கமாகப் பழகிய ஆத்ம மனிதர்களின் திடீர் மறைவு கோபுவுக்குள் இருந்த எழுதும் ஆர்வத்தைத் தணிக்கக் தொடங்கியது. போதுமே என்ற எண்ணம் கோபுவுக்குத் தோன்றியது.
அப்போது சற்றும் எதிர்ப்பாராத வண்ணம், ஒரு பிரபலப் பத்திரிகையில் ஸ்ரீதரின் பேட்டி ஒன்று வெளிவந்தது. “என்னுடைய உயிர்த் தோழன் கோபு என்னுடன் இல்லாதது கை உடைந்தது போல இருக்கிறது. அவன் மீண்டும் என்னுடன் இணைந்தால் மகிழ்ச்சி அடைவேன்'' என்று ஸ்ரீதர் மறைமுகமாக கோபுவுக்கு அழைப்பு விடுத்தார்.
(சிரிப்பு தொடரும்)
தொடர்புக்கு: tanthehindu@gmail.com | படங்கள் உதவி: ஞானம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago