ஒரு படத்துக்கு அறுநூறு கோடி ரூபாய் செலவிடும் அளவுக்குத் தமிழ்த் திரையுலகம் தொழில்நுட்பரீதியாக வளர்ந்திருக்கிறது. ஆனால் ‘இதுதான் எங்கள் படம்’ என உலக அளவில் முன்னிறுத்த நமது நிலம் சார்ந்த, பாரம்பரியம் சார்ந்த, பண்பாடு சார்ந்த கலை நுட்பம் கூடிய ஒரு படமாவது இங்கே உருவாக்கப்படுகிறதா என்றால் பெருத்த மௌனமே பதில். ஆனாலும், அப்படியொரு படம் உருவாகக்கூடும் என்னும் நம்பிக்கை, சூறைக்காற்றிலும் அணையாத சுடர் போல் உயிரைத் தேக்கிவைத்துக் காத்திருக்கிறது.
2018-ம் ஆண்டைப் பொறுத்தவரை முதல் பாதியைவிட இரண்டாம் பாதி பரவாயில்லை. இந்த ஆண்டு வெளியான படங்களில் மாறுபட்டவை என ‘சவரக்கத்தி’ தொடங்கி ‘கனா’ வரை பலவற்றைச் சொல்லலாம். ‘சவரக் கத்தி’யைப் பொறுத்தவரை படத்தின் இயக்குநர் ஜி.ஆர்.ஆதித்யாவைவிட நடித்திருந்த இயக்குநர்கள் ராமும் மிஷ்கினும் அதிகம் பேசப்பட்டார்கள்; அந்த அளவுக்குப் படம் பேசப்படவில்லை.
குப்பைக்கு நடுவில்...
பி.எஸ்.மித்ரன் இயக்கிய ‘இரும்புத்திரை’ பொழுதுபோக்கு நோக்கம் கொண்ட படம் என்றபோதும், டிஜிட்டல் இந்தியா என்ற முழக்கத்தின் உள் நோக்கத்தைக் கேள்வியுடன் அணுகி, துணிச்சலாகவும் புத்திசாலித்தனமாகவும் கதையை நகர்த்திச் சென்ற காரணத்துக்காகத் தனித்துத் தெரிகிறது.
திருமணத்துக்கு வெளியேயான உறவு ஒரு சாதாரணக் குடும்பத்தைப் பாதிக்கும் விதம் பற்றிப் பேசிய படம் காளி ரங்கசாமி இயக்கிய ‘ஒரு குப்பைக் கதை’. ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’, ‘எங்கேயோ கேட்ட குரல்’ போன்ற படங்களில் ஏற்கெனவே விவாதிக்கப்பட்ட விஷயம்தான் படத்தின் கரு.
தகவல் தொழில்நுட்பத்துறையினரின் வாழ்வு பற்றிய மேம்போக்கான பார்வையைக் கொண்டிருந்த படம் என்றபோதும், சென்னை மாநகரில் நம் பார்வையில் தினந்தோறும் தென்படும் குப்பை அள்ளும் எளிய மனிதர்களின் வாழ்வை இயன்றவரை சினிமாத்தனமற்ற காட்சிகளாகக் கொண்டதால் விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்தது. குப்பை பொறுக்குவோரை மையமாக வைத்து இயக்குநர் துரை ‘பசி’ என்னும் படத்தை இயக்கியதையும் இந்தப் படம் நினைவுபடுத்திச் சென்றது.
அடிவாரத்தில் தவழும் குழந்தை
ரஜினி காந்த் போன்ற உச்ச நட்சத்திரத்தை வைத்து ஒடுக்கப்பட்டவர்களின் அரசியலை இரண்டாம் முறையும் பேசவைத்தார் பா.இரஞ்சித் என்னும் பெருமையை அவருக்கு அளித்த ‘காலா’ தமிழ்த் திரைத் துறைக்கு எந்தப் பெருமையையும் பெற்றுத் தரவில்லை. மாய யதார்த்த படம் என்னும் புதிய வகையில் முயன்றதைத் தவிர வேறொன்றும் இல்லாமல் போனதால் புது இயக்குநர் எஸ்.பி.மோகன் இயக்கிய ‘பஞ்சு மிட்டாய்’ கவனிக்கப் படாமலே போயிற்று.
ஆகஸ்டில் வெளியான ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ விமர்சகர்களின் பரவலான பாராட்டைப் பெற்றது. இயக்குநர் லெனின் பாரதியை அழைத்துப் பல விமர்சனக் கூட்டங்களும் நடத்தப்பட்டன. தமிழ் நிலமும் எளிய குடியானவனின் வாழ்வும் உலகமயமாதலின் பிடியில் சிக்கிச் சின்னாபின்னமாவதைப் பெரிய நடிகர்கள், பெரிய பட்ஜெட் இல்லாமல் எளிமையாகச் சொன்ன தன்மைக்காகப் பாராட்டப்பட்ட படமிது. என்றாலும், ஒரு சினிமாவாக ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ அடிவாரத்திலேயே தவழ்ந்துகொண்டிருந்தது.
இயக்குநர் மனோஜ் பீதாவின் இயக்கத்தில் வெளியான ‘வஞ்சகர் உலகம்’ தமிழ்ப் படத்தின் வழக்கமான தன்மையிலிருந்து சற்று மாறுபட்டிருந்தது. நிழலுகத்தில் செயல்படும் சம்பத் எனும் மனிதனின் உளவியல் சிக்கலைப் பேசிய படம் இது. நட்சத்திர நடிகர்கள் இல்லாமல் மாறுபட்ட திரைக்கதை விவரிப்பில் வெளியான படமாகத் திரை ரசிகர்களின் சில பகுதியினரைப் பெரிதும் கவர்ந்தாலும் பரவலான வரவேற்பைப் பெறாத படமாகவே தங்கிவிட்டது.
புதிய நகர்வு
இத்தகைய சூழலில் வெளிவந்தது மாரி செல்வராஜ் இயக்கிய ‘பரியேறும் பெருமாள்’ என்னும் திரைப்படம். இயக்குநராகச் சம்பாதித்த பெயரைவிட அதிகமான பெயர் இந்தப் படத்தின் மூலம் பா.இரஞ்சித்துக்குக் கிடைத்தது. சாதி என்னும் கொடுமை சமூகத்தில் அகல வேண்டியதன் அவசியத்தையும் ஆதிக்கச் சக்திகளை ஒரு உரையாடலுக்கான இடத்தை நோக்கி நகர்த்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சினிமாவுக்குத் தேவையான நெகிழ்வுத்தன்மையுடன் சொன்ன படம் இது.
தலித் அரசியலைப் பேசுவதற்காகவே மாரி செல்வராஜ் படத்தை இயக்கியிருந்தாலும் படத்தின் குரல் பா.இரஞ்சித் படங்களில் ஒலிப்பதைப் போல் இல்லாமல் நட்பார்ந்த தன்மையில் இருந்ததால் பெருவாரியான ரசிகர்களால் படம் கொண்டாடப்பட்டது.
இதே போல் தலித் மக்களின் சிக்கலைப் பேசிய மற்றொரு திரைப்படம் அம்ஷன் குமார் இயக்கிய ‘மனுஷங்கடா’. வணிகத் திரைப்படத்துக்குத் தேவையான எந்த நெகிழ்வுத்தன்மையும் இன்றி மாற்றுப் படத்துக்கான விடாப்பிடியான கொள்கையுடன் வெளியான படம் இது. திரையரங்குகளில் பெரிய வரவேற்புக் கிடைக்காதபோதும் மாற்றுப்பட முயற்சிகளுக்குக் கைகொடுப்போர் தயவில் இந்தப் படமும் கணிசமான பார்வையாளர்களைச் சென்று சேர முயன்றது.
மயக்கம் தந்த காதல்
தமிழ் ரசிகர்கள் காதல் மயக்கத்திலிருந்து ஒருபோதும் வெளியேறிவிட மாட்டார்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்த படம் இயக்குநர் பிரேம்குமார் உருவாக்கிய ‘96’. பருவ காலத்தில் ஒன்றுசேராத பச்சை மண் காதல் காலமெனும் நீரோட்டத்தில் கரைந்த கதைதான் ‘96’.
காதலனும் காதலியும் தொட்டுக் கொள்ள வாய்ப்புக் கிடைத்தபோதும் தொடாமல் எட்டியே நின்றதால் ரசிகர்களின் மனதுக்கு மிகவும் நெருக்கமாகிவிட்டார்கள். ஒரு முழுமையான வணிகப் படத்தின் கதாநாயக அம்சத்தை அப்படியே கைக்கொண்டாலும் ஒரு மாற்றுப்படமோ என்ற மயக்கத்தைத் தந்தே வெற்றிபெற்ற படம் இது.
‘பொல்லாதவ’னில் தொடங்கி தனது இயக்கப் பாதையில் தொடர்ந்து வளர்ந்துவரும் இயக்குநரான வெற்றி மாறனின் ‘வட சென்னை’ வசூல்ரீதியில் பெரிய வெற்றிபெறாத போதும் படைப்புரீதியில் கவனிக்கத்தக்கது. நிழலுக மனிதர்களின் வாழ்க்கைச் சம்பவங்களைக் கொண்ட திரைக்கதை என்றபோதும் இது அத்துடன் மட்டும் சுருங்கிவிடவில்லை.
இந்த மனிதர்களைப் பகடைக் காய்களாக்கி நகர்ந்த அரசியல் வரலாறு ஒன்றும் படத்தில் பேசப்படுகிறது. அதுதான் இந்தப் படத்தைப் பிற படங்களிலிருந்து வேறுபடுத்துகிறது. எளிய மனிதர்களுக்கும் அரசுக்கும் இடையில் பாலம் போல் செயல்படும் அரசியல்வாதிகளின் தந்திரத்தைக் கலையழகுடன் சுட்டுக்காட்டும் ‘வட சென்னை’ முதல் பாகம் மட்டுமே. அடுத்த பாகமான ‘அன்புவின் எழுச்சி ’ பற்றிய அறிவிப்புடன் நிறைவடைந்திருக்கிறது ‘வட சென்னை’.
மணிரத்னத்தின் ‘செக்கச் சிவந்த வானம்’, தாமிராவின் ‘ஆண் தேவதை’, ராம்குமாரின் ‘ராட்சசன்’, பாலாவின் ‘நாச்சியார்’, கார்த்திச் சுப்புராஜின் ‘மெர்குரி’ ஷங்கரின் ‘2.0’ போன்ற படங்களையும் உள்ளடக்கியதே இந்த ஆண்டின் பட வெளியீட்டுப் பட்டியல். இவ்வளவு படங்கள் வெளியான போதும் ஓரிரண்டு படங்களுக்கு மேற்பட்டவற்றை நல்ல படம் எனச் சொல்லத் தயங்கும் சூழலே தமிழில் நிலவுகிறது என்பது உள்ளபடியே வருத்தம் தருகிறது. ரசிகர்தம் வருத்தத்தைப் படைப்பாளிகள் தாம் போக்க வேண்டும்.
தொடர்புக்கு: chelleppan.n@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago