காவல்துறைக்கு தொடர் தொல்லை கள் தரும் ரவுடி சைக்கிள் சங்கரை (ரவிசங்கர்) என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லத் திட்டமிடுகிறார் சென்னை காவல் ஆணையர் நரேன். அதில் இருந்து தப்பிக்கிறார் ரவிசங்கர். தலைமறைவாகும் அவர் சிலுக்குவார்பட்டிக்கு வருகிறார். அந்த ஊரின் பயந்தாங்கொள்ளி கான்ஸ்டபிளான விஷ்ணுவிஷால், ரவுடி என்று தெரியாமல் ரவிசங்கரை கைது செய்து லாக்கப்பில் போட்டு லாடம் கட்டி விடுகிறார்.
பிறகு, விஷ்ணுவிஷால் இல்லாத நேரத்தில், ரவுடியை அவனது கூட்டாளிகள் மீட்டுச் செல்கின்றனர். தன்னை லாடம் கட்டிய விஷ்ணுவிஷாலை கொல்லாமல் சிலுக்கு வார்பட்டியைவிட்டு வெளியே வரமாட்டேன் என்று அடம்பிடிக்கிறான் ரவுடி. இதனால் அவனுக்கு பயந்து மாறுவேடங்களில் தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார் விஷ்ணு விஷால். இறுதியில் வென்றது ரவுடியா, பயந்தாங்கொள்ளி போலீஸா என்பதற்கு சிரிப்புச் சிரிப்பாய் பதில் சொல்கிறது திரைக்கதை.
பயந்த சுபாவம் கொண்ட காமெடி போலீஸை நாயகனாக சித்தரித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் செல்லா அய்யாவு. மிக சாதாரணமான இந்தக் கதையில் சம்பவங்களும், திருப்பங்களும் சரியான இடங்களில், கால அளவில் வருவது ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும் திரைக்கதையை தொய்வின்றி எடுத்துச் செல்கிறது. ஆனால், கதாநாயகனுக்கு மாறுவேடங்கள், பாடல்கள் போன்றவை திணிப்புகளாகத் தெரிகின்றன.
தொடைநடுங்கி கான்ஸ்டபிள் கதாபாத்திரத்துக்கு விஷ்ணுவிஷால் பொருத்தமான தேர்வு. போலீஸ் அதிகாரிகளுக்கு டீ, டிபன் வாங்கித் தந்து எடுபிடி வேலை செய்வது, முறைப்பெண்ணை மறந்துவிட்டு பின்னர் சமாளிப்பது, தைரியசாலி என்று உதார்விடுவது, கராத்தே தெரியாமல் பாவ்லா காட்டுவது என்று ஜாலி கேலி இளைஞனாக நடித்திருக்கிறார். ஆனால், ரவுடிக்காக பயந்து ஓடி ஒளியும் காட்சிகளில் கெட்டப் போடுகிறேன் பேர்வழி என்று பல்வேறு தோற்றங்களில் வந்துபோவது பொறுமையை சோதிக்கின்றன.
கிராமத்துப் பள்ளி ஆசிரியை என்றால் இப்படித்தான் இருப்பார் என்ற சித்தரிப்புக்குள் சிக்காமல் பளிச்சென வலம் வரும் ரெஜினா, கொடுத்த வேடத்துக்கு குறைவைக்காமல் நடிக்கிறார்.
கதாநாயகனும், அவரது நண்பர் கருணாகரனும் செய்யும் நகைச்சுவை அமளிகளைவிட, ரவுடியின் கையாளாக வரும் யோகிபாபு, மார்க்கெட்டில் மாமூல் வசூலித்து வாழ்க்கை நடத்தும் ஆனந்தராஜ், ரவுடியுடன் லாக்கப்பில் மாட்டிக்கொள்ளும் சிங்கமுத்து ஆகியோர் உத்தரவாதமாக சிரிக்க வைக்கின்றனர். அதிலும், கவுண்ட மணி பாணியில் ரவுடிக்கு யோகிபாபு தரும் பஞ்ச்களுக்கு அரங்கில் ரகளையான ரெஸ்பான்ஸ். காவல் நிலையக் காட்சிகளில் சிங்கமுத்துவும், ரவுடி போர்ஷனில் யோகிபாபுவும் பிரித்து மேய்கிறார்கள்.
மாரிமுத்து, நரேன், லிவிங்ஸ்டன், மன்சூர் அலிகான் ஆகியோரும் பாத்திரம் அறிந்து நடித்துள்ளனர். ஒரு பாட்டுக்கு ஆட்டம் போட்டு, ஒரே ஒரு காட்சியில் வந்துவிட்டு தன்பாட்டுக்குப் போகிறார் ஓவியா.
வில்லன் ஹீரோவின் புகழ் பாடுவதும், அவனது பலத்தைப் பற்றிப் பேசுவதுமே தமிழ் சினிமாவில் அரதப் பழசாகிவிட்ட நிலையில், மீண்டும் அதை தூசு தட்டிக் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.
லியோன் ஜேம்ஸ் இசையில் ‘டியோ ரியோ தியா’ பாடல் ஈர்க்கிறது. படத்துடன் பின்னணி இசை நன்கு பொருந்திப் போகிறது. எடிட்டர் ரூபன் இரண்டாம் பாதியில் சில இடங்களில் தயக்கமே இல்லாமல் கத்தரி போட்டிருக்கலாம்.
புதுசில்லாத கதைக்குள் செயற்கையான திருப்பங்களையும், பெருங்கூட்டமாக துணைக் கதாபாத்திரங்களையும் நுழைத்த இயக்குநர், நகைச்சுவை தோரணத்தை மட்டுமே நம்பி நேரத்தை நகர்த்தியிருக்கிறார். காட்சிகள், திருப்பங்களில் புதுமை இல்லா மல், இழுவையாக நகரும் திரைக்கதையால் வெறும் காமெடி சிங்கமாக நின்றுவிடுகிறார் சிலுக்குவார்பட்டி சிங்கம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago