யூ.ஆர்.அனந்தமூர்த்தி நினைவுகள்: கன்னட சினிமாவின் இலக்கியக் கொடை

By இரா.வினோத்

ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் என்ற அடையாளத்தைத் தாண்டி ஆங்கிலப் பேராசிரியர், சீர்திருத்தச் சிந்தனையாளர், சமூகச் செயற்பாட்டாளர், அரசியல் விமர்சகர், நாடகவியலாளர், தீவிர சினிமாவின் பார்வையாளர் எனப் பல தளங்களில், சம காலத்தில் மிளிர்ந்தவர் அநேகமாக யூ.ஆர். அனந்தமூர்த்தி ஒருவராகத்தான் இருக்க முடியும்.

தீவிர இலக்கியத்திலும், மைய நீரோட்ட அரசியலிலும் பங்கேற்கும் சமூக அறிவுஜீவிகள் சினிமாவில் இருந்து சற்றுத் தள்ளி நிற்பார்கள். ஆனால் அனந்தமூர்த்தி மாற்று சினிமாவின் காதலர். நல்ல திரைப்படங்கள் எந்த மொழியில் வெளியானாலும் தேடிப் போய் ரசிப்பார். மரணத்தின் முற்றத்தில் நின்ற வேளையிலும் சமீபத்தில் வெளியான சிறந்த 20 படங்களைத் தேர்ந்தெடுத்துப் பார்த்து ரசித்திருக்கிறார்.

அவரது எழுத்தின் ஆழமும் வீச்சும் ஞானபீட விருது, பத்மபூஷன் போன்ற தேசிய விருதுகள் முதல் சர்வதேச விருதுகள் வரை அவ‌ரைத் தேடி வரக் காரணமாயின.

புதிய அலையாக எழுந்த அன‌ந்தமூர்த்தியின் புனைவுகள் (ஆறு நாவல்கள், ஒன்பது சிறுகதைத் தொகுப்புகள்) அதுவரை வெளியானவற்றிலிருந்து வேறு நிறத்தில் இருந்தன. அவருடைய முதல் படைப்பான‌ 'சம்ஸ்காரா'வில் தொடங்கிக் கடைசியாக வெளியான 'சுரகி' வரை இலக்கிய வானில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இதனால் இயக்குநர்கள், அனந்தமூர்த்தியின் எழுத்துகளைத் தேடத் தொடங்கினர்.

கன்னட இலக்கியத்தில் புதிய யுகத்தை ஆரம்பித்து வைத்த 'சம்ஸ்காரா' நாவல் சினிமாவாகி,கன்னட சினிமாவின் ஆகச் சிறந்த படைப்புகளில் ஒன்றாகத் திரை விமர்சகர்களால் உச்சி முகரப்படுகிறது. இலக்கிய வானிலும் வெள்ளித் திரையிலும் காத்திரமாக இயங்கிய யூ.ஆரின் செல்லுலாய்ட் சித்திரங்கள் இங்கே..!

சரித்திர நாயகன் 'சம்ஸ்காரா'

ஞானபீட விருதுபெற்ற எழுத்தாளரும் புகழ்பெற்ற நாடக ஆளுமையுமான கிரீஷ் கர்னாட் திரையுலகிற்கு அறிமுகமான படம் 'சம்ஸ்காரா'. 1970-ல் வெளியான இப்படம் யூ.ஆர். அனந்தமூர்த்தியின் முதல் நாவலான சம்ஸ்காராவை அடிப்படையாகக் கொண்டு உருவானது. திரைக்கதையை கிரீஷ் கர்னாட் எழுத, பட்டாபிராம ரெட்டி இயக்கினார்.

கர்நாடகத்தில் பரவலாக வாழும் மாதவா பிராமண சமூகத்தில் புரையோடி இருக்கும் சாதிய பேதங்களை அணு அணுவாக அனந்தமூர்த்தி எழுத்தில் பதிவுசெய்ததை,கிரீஷ் கர்னாட் காட்சிகளில் வடித்தார். சென்சார் போர்டில் ஆரம்பித்த எதிர்ப்பு, மாதவா பிராமண சமூகத்தில் பற்றி எரிந்து, அனந்தமூர்த்தியின் வீட்டிலும் கொழுந்துவிட்டது. ஏனென்றால் யூ.ஆர். அனந்தமூர்த்தி பிறப்பால் மாதவா பிராமணர்.

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெளியான சம்ஸ்காரா பெரும் வரவேற்பைப் பெற்றது. கன்னடத்தில் புராண, இதிகாசத் திரைப்படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட முதல் சமூகத் திரைச் சித்திரமாக இது கருதப்படுகிறது. மாநில,தேசிய, சர்வதேச‌ அளவில் விருதுகளைப் பெற்ற 'சம்ஸ்காரா' இன்றளவும் க‌ன்னட சினிமா சரித்திரத்தில் மைல் கல்லாகக் கருதப்படுகிறது.

ஒரே இந்திய சினிமா 'கட்டாஷ்ரத்தா'

இந்திய அளவில் மிகச் சிறந்த இயக்குநராகக் கருதப்படும் கிரீஷ் காசரவள்ளியின் முதல் திரைப்படம் 'கட்டாஷ்ரத்தா'.

1977-ல் வெளியான இப்படம் அனந்தமூர்த்தியின் ஊரைச் சேர்ந்த காசரவள்ளியால் இயக்கப்பட்டது. அனந்தமூர்த்தியின் எழுத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்ட காசரவள்ளி, பூனே திரைப்படக் கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு, முதல் படைப்பாக அனந்தமூர்த்தியின் 'கட்டாஷ்ரத்தா' நாவலைப் படமாக்க முயன்றார். 3 ஆண்டுகள் தொடர் முயற்சிக்கு பிறகு கிரீஷ் காசரவள்ளிக்கு அந்த வாய்ப்பை வழங்கினார் அனந்தமூர்த்தி.

இந்து மதத்தையும்,அதன் சம்பிரதாயங்களையும் உயிருக்கும் மேலாக நேசிக்கும் இளம் விதவைக்கும், அவளுடைய பதின்மபருவ மகளுக்கும் இடையே ஒரு பள்ளி ஆசிரியர் குறுக்கே வருகிறார். அவருடைய வரவால் தாய்-மகள் உறவில் ஏற்படும் விரிசல்,கருக்கலைப்பின் கொடூரம், மறுமணம் ஆகியவை குறித்து விரிவாகவும், உளவியல் ரீதியாகவும் பேசிய படம் இது.யூ.ஆர். அனந்தமூர்த்தியின் மாணவி மீனா குட்டப்பா நடிகையாக அறிமுகமான இந்தப் படம் மூன்று தேசிய விருதுகளை அள்ளியது. இந்திய சினிமா நூற்றாண்டைக் கொண்டாடும் வேளையில் பாரீஸ் திரைப்பட விழாவில் இந்தியாவில் இருந்து தேர்வான ஒரே படம் 'கட்டாஷ்ரத்தா'

பெண்களின் 'பாரா'

1980-ல் எம்.எஸ். சத்யூ இயக்கத்தில் அனந்த்நாக், மது ஆகியோர் நடிப்பில் வெளியான 'பாரா' திரைப்படம் யூ.ஆர். அனந்தமூர்த்தியின் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. வீட்டிலும் வெளியிலும் ஒடுக்கப்படும் பெண்கள் அரசியலில் நுழைந்து அங்கு அனுபவிக்கும் இன்னல்கள் படமாக்கப்பட்டிருந்தன.

ஒரு பெண்ணின் மன பாரத்தைச் சமூக, அரசியல் கண்ணோட்டத்துடன் எழுதிய அனந்தமூர்த்தியின் எழுத்தை செல்லுலாய்டில் சித்திரமாக வடித்திருந்தார்கள். சிறந்த கன்னடத் திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்ற இந்தத் திரைப்படம் 1983-ல் 'சூகா' என்ற பெயரிலும் வெளியாகி, பல்வேறு திரைப்பட விழாக்களில் விருதுகளைப் பெற்றது.

அரசியலின் 'அவஸ்தே'

தனது கல்லூரித் தோழரும், கர்நாடக அரசியலில் மிக முக்கிய சோஷலிஸ்டாக அறியப்படுபவருமான கோபாலகிருஷ்ண கவுடாவின் வாழ்க்கையையும் போராட்டத்தையும் மையமாக வைத்து அனந்தமூர்த்தி 'அவஸ்தே' என்ற நாவல் எழுதினார். காந்தியமும்,மதச் சார்பின்மையும் இந்திய அரசியலுக்கு எவ்வளவு முக்கியம் என்பதைக் கதாபாத்திரங்களின் வாயிலாக அனந்தமூர்த்தி சொற்போர் நிகழ்த்தியிருப்பார்.

’அவஸ்தே’ நாவலை அதே பெயரில் 1987-ல் இயக்குநர் கிருஷ்ண மசடி திரைப்படமாக எடுத்தார். இதில் முன்னாள் கர்நாடக முதல்வர் ஜே.எச்.பட்டேல் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களான டி.பி.சந்திர கவுடா,எம்.பி. பிரகாஷ் ஆகியோர் நடித்தனர். இந்தப் படம் கன்னட சினிமாவின் முதல் அரசியல் படமாகக் கருதப்படுகிறது.

உறவின் ‘தீக்ஷா'

யூ.ஆர். அனந்தமூர்த்தியின் நெடுங் கதையான 'தீக்ஷா' அதே பெயரில், 1991-ல் இந்தியில் சினிமாக வெளியானது.தென் கர்நாடகத்தில் வாழும் ஒரு ஏழை பிராமணத்தகப்பனின் மகள் இளம் விதவை. தவறான உறவின் மூலம் உருவாகும் சிசுவிற்கும், அவளுக்கும் தகப்பன் தகப்பன் தரும் தண்டனையே 'தீக்ஷா'. கதையாக வெளியானபோதே பெரும் எதிர்ப்புகளுக்கு உள்ளான தீக்ஷா, திரைப்படமாக வெளியானபோது போராட்டங்கள் வெடித்தன.

அருண் கவுல் இயக்கத்தில் உருவான இப்படத்தில் மனோகர் சிங், நானே படேகர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். சிறந்த இந்தி மொழிப் படத்திற்கான விருதைப் பெற்ற இத்திரைப்படம் உள்ளூரில் மட்டுமில்லாமல், உலக அளவில் ஏராளமான திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளை தீட்சையாக பெற்ற‌து.

மதத்தைச் சாடும் 'மௌனி'

யூ.ஆர்.அனந்தமூர்த்தியின் மற்றொரு நெடுங்கதை 'மௌனி'. இந்து மதத்தின் புராணங்களையும், சடங்கு, சம்பிரதாயங்களையும் கடுமையாகச் சாடியது. மனிதத்தைத் தேடும் இந்தக் கதை, அதே பெயரில் திரைப்படமாகவும் வெளியானது.2006-ல் வெளியான இப்படத்தில் அனந்த்நாக் முக்கிய வேடத்தில் நடித்தார்.

இக்கதைக்கு அனந்தமூர்த்தியிடம் திரைக்கதை அமைத்துக் கொடுத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முறையான அனுமதிபெற்று இயக்குநர் பி.எஸ். லிங்கதேவரு 'மௌனி'யைப் படமாக்கினார். இந்தப் படத்தில் நடித்ததற்காக அனந்த்நாக்கிற்குச் சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.

குறுந்திரையில் அனந்தமூர்த்தி

இது மட்டுமில்லாமல் கன்னடத் திரையுலகின் முக்கிய இயக்குநர்களான அபி சிம்ஹா, கிருஷ்ணா மசடி, ஹரிஹரன் உள்ளிட்டவர்கள் அனந்தமூர்த்தியைப் பற்றி ஆவணப்படம் எடுத்துள்ளனர். 2012-ல் கிரீஷ் காசரவள்ளி அனந்தமூர்த்தி பற்றி எடுத்த ஆவணப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது.

வெள்ளித்திரையில் அனந்தமூர்த்தியின் கதைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதைப் போலக் கன்னட‌ம், மலையாளம், துளு, மராட்டி, இந்தி ஆகிய‌ மொழிகளில் வெளியான குறும்படங்களின் மூலமாகவும் வெளியாகியிருக்கின்றன. அவருடைய பெரும்பாலான புனைவுகள் நாடக வடிவிலும் உருவெடுத்து அவரது துணிச்சலான அரசியலையும்,சமூக நீதிக்கான நேரிய பயணத்தையும் தொடர்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்