தெலுங்குப் படங்களைத் தமிழில் மறு ஆக்கம் செய்யும்போது தொடந்து ஒரு ஃபார்முலாவைக் கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள். நாகேஸ்வர ராவ் நடித்த படங்களை சிவாஜி கணேசனை வைத்தும், என்.டி.ராமராவ் நடித்த படங்களை எம்.ஜி.ஆரை வைத்தும் எடுப்பதே அந்த ஃபார்முலா. இந்த நான்கு நடிகர்களின் கதைத் தேர்வு, ஸ்டார் இமேஜ், நடிப்பு பாணி ஆகியவற்றை மனத்தில் கொண்டு இந்த ஃபார்முலா தொடர்ந்து பின்பற்றப்பட்டு வந்தது.
அதனால்தான் ‘தசரா புல்லுடு’ தெலுங்குப் படத்தைத் தமிழில் தயாரித்து இயக்கப்போவதாக ஸ்ரீதர் கூறியதும், “சிவாஜி கணேசனைப் போட்டு இந்தப் படம் எடுத்தால் நன்றாக ஓடும்!” என்று கூறி உற்சாகப்படுத்தினார் கோபு. ஆனால், “இந்தக் கதையைச் சற்றே மாற்றி எம்.ஜி.ஆரை வைத்து எடுக்கப்போகிறேன்” ஸ்ரீதர் கூற, கோபு அதிர்ந்து போனார்.
“சிவாஜியை வைத்துத் தொடங்கிய ‘ஹீரோ 72’ படம் அப்படியே இருக்கும்போது, திடீரென்று எம்.ஜி.ஆரை வைத்துப் படம் பண்ணப்போறேன்னு சொல்றியே. சிவாஜி இதை எப்படி எடுத்துப்பார்னு யோசிச்சுப் பார்த்தியா ஸ்ரீ?” என்றார் கோபு.
“எனக்கு நிறையப் பிரச்சினைகள் கோபு. எம்.ஜி.ஆரை வைத்து எனது தனிப்பட்ட சிக்கல்களைத் தீர்த்துக்கொள்ளும் நிலையில் இருக்கிறேன்!” என்று ஸ்ரீதர் கூற, அதன் பிறகு கோபுவால் ஒன்றும் கூற முடியவில்லை. மேலும் அந்த நேரத்தில் ‘காசேதான் கடவுளடா’ பெரிய வெற்றியைப் பெற்று கோபுவுக்குத் தொடர்ந்து படங்களை இயக்கும் வாய்ப்புகள் வந்துகொண்டிருந்தன.
சித்ராலயாவில் பணிபுரிந்துகொண்டே அந்தப் படங்களை இயக்கினால் வேலையில் முழுமையான கவனத்தைச் செலுத்த முடியாது என்பதைப் புரிந்துகொண்டிருந்தார். அதே நேரம், பால்ய நண்பனை விட்டு விலகவும் கோபுவுக்கு மனமில்லை. என்ன செய்யலாம் என்று எண்ணிக்கொண்டிருந்தபோது, எம்.ஜி.ஆரை வைத்துப் படம் பண்ணப்போவதாக ஸ்ரீதர் கூறியதும், கோபுவுக்கு ஒரு யோசனை தோன்றியது.
இரும்புத் திரை
‘தசரா புல்லுடு’ ப்ரிவியூ முடிந்ததும் கோபு – கமலா தம்பதியை திருவல்லிக்கேணி வீட்டு வாசலில் இறக்கிவிடும்போது சட்டென்று ஸ்ரீதரின் கைகளைப் பற்றி, தனது மனத்தில் இருந்ததைப் பேசத் தொடங்கினார் கோபு.
“ஸ்ரீ. எம்.ஜி.ஆர். படம் இயக்கினாத்தான், ஒரு இயக்குநருக்குப் பூரணத்துவம் கிடைக்கும். எவ்வளவோ சாதனைகளைச் செஞ்சுட்டே! அந்தச் சாதனையையும் செஞ்சிடு. உனக்கு வாழ்த்துகள்! அதே நேரம், எனக்கு இப்ப ரெண்டு மூணு படம் ஒப்பந்தம் ஆகி இருக்கு. நானும் அந்தப் படங்களை முடிச்சுட்டு வரேன். நீ எம்.ஜி.ஆர் படத்துல கவனத்தைச் செலுத்து. நான் என்னோட படங்களை முடிச்சுட்டு வரேன்!” என்றபடி தான் அவரை விட்டு விலகும் முடிவை நாசுக்காகச் சொன்னார் கோபு.
சற்று நேரம் அவரை வெறித்துப் பார்த்த ஸ்ரீதர், “சரி! நீ உன் படங்களைக் கவனி” என்று கூறிவிட்டு, காரைக் கிளப்பிக்கொண்டு போனார். தான் பணிபுரிந்த அலுவலகத்துக்கே வந்து, தன்னைத் திரைப்படத் துறைக்கு அழைத்துச் சென்ற நண்பன், தன்னைத் தனது வீட்டு வாசலில் இறக்கிவிட்டுப் போனதும் தங்கள் நட்பே முறிந்தது போன்ற உணர்ச்சியுடன் வீட்டினுள் நுழைந்தார் கோபு.
அதற்குப் பின் ஸ்ரீதரும் கோபுவுக்கு போன் செய்யவில்லை. கோபுவும் ஸ்ரீதருடன் தொடர்பு கொள்ளவில்லை. அவர்களிடையே தொழில் ரீதியாக இரும்புத்திரை ஒன்று விழுந்தது. ஆனால், நட்புக்குப் பாதிப்பில்லை.
எம்.ஜி.ஆர் நடிக்கும் ஸ்ரீதரின் ‘உரிமைக் குரல்’ என்ற அறிவிப்பைத் தாங்கிய விளம்பரங்கள் செய்தித்தாள்களில் வெளிவந்தன. விளம்பரங்கள் வந்த வெள்ளிக்கிழமை இரவு, எம்.எஸ்.வி. கோபுவுக்கு போன் போட்டார். “கோபண்ணே.. உங்க நண்பர் இப்படிப் பண்ணிட்டாரே?'' என்று விஸ்வநாதன் கேட்க, கோபு சற்று நேரம் அமைதி காத்துவிட்டு,, “அது அவரோட முடிவு விசு. நான் அந்தப் படத்துல இல்லே. இப்ப நான் தனியா படங்களைப் பண்ணிக்கிட்டு இருக்கேன்” என்று சொன்னார். மறுநாள், சிவாஜி அழைப்பதாக கோபுவுக்குச் செய்தி வர, திருச்சி அருணாச்சலத்துடன் சிவாஜியைக் காணச் சென்றார் கோபு.
சிவாஜி சற்றே வருத்தத்துடன்தான் பேசினார். “என்ன ஆச்சாரி..! நம்ம ஆளு இப்படிச் செஞ்சுட்டாரேன்னு வருத்தமா இருக்கு. சரி.. ‘ஹீரோ 72’ படத்தை என்ன செய்யப் போறார் உன் நண்பன்? பிரச்சினைன்னு என்கிட்டே சொல்லியிருந்தா நான் கூட பைசா வாங்காம நடிச்சுக் கொடுத்திருப்பேனே!” என்றார்.
எம்.ஜி.ஆர். ‘உரிமைக் குரல்’ படத்தில் நடிப்பதற்காகச் சம்பளம் எதுவும் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என்று அறிவித்திருந்ததை மறைமுகமாகச் சுட்டிக் காட்டினார் சிவாஜி.
“அண்ணே.. ‘அன்று சிந்திய ரத்தம்’னு ‘சிவந்த மண்’ படத்துக்கு முன்பாகவே எம்.ஜி.ஆர் கால்ஷீட்டை வாங்கி பூஜை போட்டார். ஆனா, அதுக்கப்புறம் அதைக் கைவிட்டு ‘சிவந்த மண்’ படத்தை எடுத்தார். எம்.ஜி.ஆர் கொடுத்த கால்ஷீட் அப்படியே இருந்ததால அவரை வச்சு இப்ப ‘உரிமைக் குரல்’ படத்தை எடுக்கிறார். விஷயம் அவ்வளவுதான். மத்தபடி அவருக்கு நீங்களும் ஒண்ணுதான், எம்.ஜி.ஆரும் ஒண்ணுதான். நானும் இப்ப ஸ்ரீதர் கூட இல்லே. தனியே படங்கள் பண்ணிக்கிட்டு இருக்கேன்” என்றவுடன், சிவாஜிக்கு என்ன தோன்றியதோ, “நீ நம்ம ஆளாச்சே ஆச்சாரி!” என்று கோபுவை இறுகக் கட்டிக்கொண்டு விட்டார்.
எப்படியிருப்பினும் எம்.ஜி.ஆர். - சிவாஜி நட்சத்திர யுத்தத்தில் ஸ்ரீதர் சிக்கிவிட்டார். நாமாவது ஒதுங்கி நிற்போம் என்ற தீர்மானத்துடன், ஜெய்சங்கர் மற்றும் முத்துராமன் படங்கள் சிலவற்றைத் தனியாக இயக்கத் தொடங்கினார் கோபு. ஆனால், பல பத்திரிகைகளுக்குக் கொண்டாட்டமாகிவிட்டது. ஸ்ரீதரும் கோபுவும் பிரிந்துவிட்டதாக எழுதின. ஸ்ரீதருக்குப் புரையேறும் அளவுக்குப் பொல்லாங்கு செய்திகள் வெளிவந்தன. ஆனால் ஸ்ரீதர், கோபு இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்கவில்லை. இதை எம்.ஜி.ஆர். நன்கு அறிந்து வைத்திருந்தார்.
உண்மையின் தோற்றம்
1981-ல் கோபுவின் மனைவி கமலா சடகோபன், தனது ‘படிகள்’ என்ற நாவலுக்காகத் தமிழ் வளர்ச்சித் துறை விருதை முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் கையால் வாங்கினார். அப்போது அருகில் இருந்த அமைச்சர், “இவர் ‘சித்ராலயா’ கோபுவின் மனைவி கமலா” என்று எம்.ஜி.ஆருக்கு அறிமுகம் செய்ய, விருது கொடுக்கும் அந்த நேரத்திலும் “உங்கள் கணவரின் நகைச்சுவைக்கு நான் ரசிகன்” என்று சொன்னார் எம்.ஜி.ஆர்.
1974 நவம்பர் 7-ம் தேதி வெளியான ‘உரிமைக் குரல்’ பெரிய வெற்றியைப் பெற்றது. எம்.ஜி.ஆருக்கு மிகவும் மகிழ்ச்சி. தொடர்ந்து ஸ்ரீதருடன் படங்களைச் செய்வதில் ஆர்வம் காட்டினார். ஸ்ரீதருக்கு இந்தப் படத்தின் வெற்றி பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் விழா ஒன்றில் சந்தித்துக்கொண்ட ஸ்ரீதரும் கோபுவும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். அந்தக் காட்சி, அதுவரை அந்த நண்பர்கள் பற்றி வந்த எல்லா ஊகங்களையும் பொய்யாக்கியது. அந்தச் சந்திப்பில் ஒரு அடுத்த கட்ட அதிசயமும் நடந்தது...
(சிரிப்பு தொடரும்)
தொடர்புக்கு: tanthehindu@gmail.com | படங்கள் உதவி: ஞானம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago