சி(ரி)த்ராலயா 38: கோபுவிடம் கதை கேட்ட வாசன் !

By டி.ஏ.நரசிம்மன்

கோபுவின் திருவல்லிக்கேணி வீட்டுக்கு வந்த அந்த மனிதர் எளிய தோற்றத்தில் இருந்தார். வந்தவர் கோபுவின் கையைப் பற்றிக் குலுக்கினார். அமைதியான குரலில் அவர் கூறிய விஷயத்தைக் கேட்டதும் கோபுவின் இதயம் கொஞ்சம் கூடுதலாகப் படடபத்தது. ''என் பெயர் ஜி.எஸ். மணி. நான் ஜெமினி அதிபர் வாசனின் மாப்பிள்ளை. மாமனார், என்னைத் திரைப்பட இயக்குநராகப் பார்க்க விரும்புகிறார்.

‘சவுண்ட் ஆஃப் மியூசிக்’ ஆங்கிலப் படத்தைத் தழுவி தமிழுக்கு ஏற்றாற்போல் நீங்கள்தான் திரைக்கதை, வசனம் எழுத வேண்டும். இது எனது விருப்பம். ஆனால், மாமனாருக்கு நீங்கள் கதை சொல்லி அவரை அசத்திவிட வேண்டும்” என்று அவர் கூறியதும் ‘சந்திரலேகா’ படத்தின் முரசு நடனக் காட்சியில் ஒலிக்கும் டம்...டம்...டம்... என்ற ஓசைபோல கோபுவின் இதய ஒலி அவருக்கே காதுவரை கேட்டது.

‘ஜெமினிக்கு எழுதுகிறோமோ இல்லையோ, வாசன் முன்பாக அமர்வதே பெரும் பாக்கியம்’ என்று நினைத்தார் கோபு. திரைக்கதை எழுதி முடித்து, கதையைச் சொல்ல வாசன் முன்பாகப் போய் நின்றதும் கோபுவுக்கு வியர்த்துக் கொட்டத் தொடங்கிவிட்டது. தருடன் நண்பனாகவே பழகிவிட்டதால், முதன்முறையாக ஒரு பெரிய திரைப்பட ஜாம்பவானின் முன்பாக நின்றதும் வெலவெலத்துப் போனது.

“இவருதான் ‘சித்ராலயா’ கோபு!

‘காதலிக்க நேரமில்லை’ படத்தை எழுதியவர்!''. மருமகன் மணி சொல்ல, வாசன் அவரை ஏற இறங்கப் பார்த்தார். “ஐ சி!” என்றவர், ''உட்காருங்க மிஸ்டர் கோபு. ஸ்கிரிப்டை நீங்க படிக்கத் தொடங்கலாம்'' என்று கூறி விட்டார். காபி, டீ கூடத் தரவில்லை.

“எடுத்தவுடனே ஒரு டீ எஸ்டேட்!" என்று கோபு ‘டீ’ யைச் சற்று அழுத்திச் சொல்லியும் கூட அவருக்கு டீ தரப்படவில்லை. தனது கன்னத்தில் கை வைத்தபடி வாசன் கதையைக் கேட்கத் தயாராகிவிட்டார். “ ஒரு டீ எஸ்டேட். ஹீரோ ஜெமினி கணேசன் குதிரையில வர்றார்” கோபு. சொல்லத் தொடங்கினார்.

“நிறுத்துங்க… நிறுத்துங்க…ஏன்.. அவர் குதிரையில வரனும்?'' வாசன் புருவங்களை நெரித்தபடி கேட்டார். கோபு திணறினார். “தொடக்கத்திலேயே பிரேக் போடுகிறாரே!” என்று நினைத்த கோபு.

“இல்ல சார்.. ஹீரோ ஒரு பணக்கார எஸ்டேட் உரிமையாளர்! எங்கும் பச்சைப் பசேல்னு ஊட்டியோட பசுமை.. மார்கஸ் பாட்லே ஒளிப்பதிவாளர்! ஆங்கிலப் படம் போல் எடுக்க, ஹீரோ குதிரையில வந்தா கெத்தா இருக்கும் இல்லியா!'' என்று கோபு இழுத்தார். ''ஹீரோ குதிரையில வந்தா நல்லா இருக்கும்ன்னு எழுத்தாளர் விரும்புறார்... ஓகே புரஸீட் '' என்று ஆங்கிலத்தில் கூறிவிட்டு தொடர்ந்து கதையைக் கேட்டார் வாசன்.

கோபுவுக்கோ, ‘காதலிக்க நேரமில்லை’யில் பாலையாவுக்கு நாகேஷ் கதை சொன்ன காட்சி நினைவுக்கு வந்துவந்து போனது. அந்தக் காட்சியில் கதை கேட்ட பாலையா திணறினார். இங்கே கதை சொன்ன கோபு திணறினார். ஒரு பதினைந்து நிமிடம் ஓடியிருக்கும். கதை சுவாரசியம் பிடிப்பதை உணர்ந்து சற்று நேரத்தில் குடும்ப உறுப்பினர்களையும் அழைத்து அருகில் அமரவைத்துக்கொண்டு கதைகேட்டார் வாசன்.

“ரேடியோல மாலி ப்ளூட் கேட்டிங்களா?” என்று ஒரு கேரக்டர் நாகேஷிடம் கேட்க, அதற்கு நாகேஷ், ''கேட்டேன்.. தரமாட்டேன்னு சொல்லிட்டார் !'' என்ற வசனத்தை கோபு கூறியபோது, சங்கீத ரசிகரான வாசன் விழுந்து விழுந்து சிரித்தார். குடும்பத்தாரின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைக் கண்ட வாசன் முகம் முழுமையாக மலர்ந்துவிட்டது.

கிளம்பும் முன்பு கோபுவைப் பார்த்த வாசன், ''நான் நாலணா பெஞ்ச் டிக்கெட்காரன். எனக்கு இந்தப் படத்துல ஒண்ணுமே இல்லை. இது ஹை கிளாஸ் படம். ‘ஜேன் அயர்’ மாதிரி எடுக்கலாம். ஏ சென்டர் ல பிரமாதமா ஓடும். கிராமப்புறங்கள்ல ஓடாது” என்றார். என்ன ஆச்சரியம்! அவர் கூறியது போல் நகரப் பகுதிகளில் ‘சாந்தி நிலையம்’ அமோக வெற்றி பெற்றது. மற்ற இடங்களிலும் நல்ல வரவேற்பு.

கமலாவிடம் ஏமாந்த மஞ்சுளா!

அந்த நாட்களில் காஞ்சனாவை ‘கலர் காஞ்சனா’ என்றே அழைப்பார்கள். கலர் படங்களுக்கு ஏற்ற அழகான முகவெட்டும் நிறமும் அற்புதமாகக் கைகொடுக்க பல நேரத்தில் அவருக்கு ஒப்பனைக்கான தேவையே இருக்காது. ஒரு நாள் ‘சாந்தி நிலையம்’ படப்பிடிப்பின் இடைவேளையின்போது, ஜெமினி, கோபு, பண்டரிபாய், காஞ்சனா, ரமாப்ரபா, நாகேஷ், மஞ்சுளா என நடிகர்கள் அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

அந்தக் கூட்டத்தில் மஞ்சுளா, பதினான்கு வயதே நிரம்பிய பெண். படப்பிடிப்புத் தளத்தில் அங்கும் இங்கும் ஓடி அனைவரையும் கலாட்டா செய்து கொண்டிருப்பார். காஞ்சனா, கோபுவின் மனைவியைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது, “கோபு அண்ணாவின் சம்சாரம் கமலா ரொம்ம சாமர்த்தியசாலி. அவரை ஏமாற்றவே முடியாது '' என்று கூறினார். உடனே மஞ்சுளா, “அதையும்தான் பார்த்துவிடுவோம், நான் திருமதி கோபுவை ஏமாற்றிக் காட்டுகிறேன்”என்று சவால் விட்டார்.

படப்பிடிப்புத் தளத்தில் இருந்த தொலைபேசியில் கோபுவின் வீட்டுக்கு டயல் செய்த மஞ்சுளா, “மிஸஸ் கோபு இருக்காங்களா?” என்றார். “நான்தான் பேசுகிறேன்!'' என்று கமலா கூற, உடனே மஞ்சுளா,'' மேடம்.. நான் மஞ்சுளா பேசறேன். கோபு அங்கிளை விரும்பறேன். ஐ வாண்ட் டு மாரி ஹிம்!'' என்றார். உடனே கமலா,'' நோ பிராப்ளம்! விட்டது தொல்லை! கேரி ஆன்!'' என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார்.

பேயறைந்தவரைப் போல் ரிஸீவரை வைத்துவிட்டு வந்த மஞ்சுளாவின் முகத்தையே எல்லோரும் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.'' என்ன அங்கிள்... ஆண்டி… இப்படிச் சொல்லிட்டங்க” என்று அழாத குறையாகத் தோல்வியைக் ஒப்புக்கொள்ள, அங்கிருந்த அனைவரும் கொல்லென்று சிரித்தார்கள்.

ஆச்சரியமூட்டிய அட்வான்ஸ்!

‘சாந்தி நிலையம்’ பட அனுபவம் முற்றிலும் புதிதாக இருந்தது. அப்படி உணரக் காரணம், ஜெமினி நிறுவனத்தை வாசனும் அவர் மருமகனும் மிகவும் ‘புரொஃபெஷனல்’ ஆக நடத்தி வந்ததுதான். எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு, சிறந்ததை நாடி அதற்கான விலையைக் கொடுக்கத் தயங்காத முனைப்பு எனச் சொல்லிக்கொண்டே போகலாம். ‘சாந்தி நிலையம்’ படத்துக்கான பாடல் ஒளிப்பதிவு முடிந்து எம்.எஸ்.விஸ்வநாதனும் கோபுவும் ஒரே காரில் வீட்டுக்குக் கிளம்ப, ஜெமினி அலுவலகத்திலிருந்து ஓடிவந்த ஒருவர், ஆளுக்கு ஒரு கவரை நீட்டினார்.

கவரைப் பிரித்த கோபு திகைத்தார்.

“விசு.. அட்வான்ஸ் ஆயிரம்தான் தருவாங்க. இவங்க ஐந்தாயிரம் தந்திருக்காங்ளே'' என்று வியந்தார். உடனே எம்.எஸ் வி. தனது கவரைப் பிரித்து.''அட ஆமாப்பா! எனக்கு மேலே ஒரு சைபரைப் போட்டுப் பத்தாயிரம் தந்திருக்காங்களே ”என்று கூக்குரலிட்டார்.

மார்க்ஸ் பார்ட்லேவுக்கு இந்தப் படத்துக்காகத் தேசிய விருது கிடைத்தது. எம்.எஸ்.விஸ்வநாதன் அருமையான மெட்டுக்களை அமைத்திருந்தார். ‘இயற்கை என்னும் இளைய கன்னி’ பாடலை முதன்முறையாக எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரலில் ஒலிக்க வைத்திட்டார். இப்போதும், ‘சாந்தி நிலையம்’ படத்தை டிவியில் ஒளிபரப்பினால், அனைவரும் போன் செய்து பாராட்டுவதாகக் கூறுகிறார் கோபு. ‘சாந்தி நிலையம்’ பட வேலைகள் முடியும் தருவாயில், திடீரென்று sriதரிடம் இருந்து கோபுவுக்கு ஒரு போன்.

“கோபு... கோவை செழியன் ‘காதலிக்க நேரமில்லை’ மாதிரியே ஒரு படம் கேட்கறாரு. உடனே ஒரு கதை பண்ணனும். காந்தி பீச்சுக்கு வந்துடு... டிஸ்கஷன் முடிஞ்சு கிளம்பரச்சே உன் வீட்டுலதான் எனக்கு டின்னர். கமலாகிட்டே சொல்லிட்டு வந்துடு” என்றார்.

(சிரிப்பு தொடரும்)
தொடர்புக்கு: tanthehindu@gmail.com
படங்கள் உதவி: ஞானம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்