விடலைப் பருவத்து பெண்ணின் பட்டாம்பூச்சி காதல், மத்திம வயதுப் பெண்ணின் முதிர்ச்சியான காதல் என ‘நெட்ஃப்ளிக்ஸ் ஒரிஜினல்’ வீடியோக்களில் கிடைக்கும் இருவேறு படங்கள் மூலம் வாழ்வின் தனிப்பெரும் துணையாகும் காதலின் கசிந்துருகலை பார்க்கப் போகிறோம்.
ஆணின் ‘ஆட்டோ கிராஃப் அனுபவங்கள்’ ஏராளமான திரைப் படங்களாக வந்திருக் கின்றன. ஒரு பதின்ம வயதுப் பெண்ணின் ஆட்டோகிராஃப் அலப்பறைகளாகக் கடந்த ஆகஸ்டில் வெளியான படம், ’To All the Boys I’ve Loved Before’. மூன்று சகோதரிகளைக் கொண்ட குடும்பத்தில் பள்ளி முடித்து ஜூனியர் காலேஜில் அடியெடுத்துவைக்கும் 16 வயது இளம்பெண் லானா.
இவரைச் சுற்றி நிகழும் சம்பவங்களை இவரது பார்வையிலேயே சொல்வதாகப் படம் விரிகிறது. விடலைப் பருவத்துக்கே உரிய வகையில் அந்தரங்கமாக அவள் பல ஆண்டுகள் கட்டிக்காத்த ரகசியங்களில் ஒன்று அவளறியாது ஓர் அசந்தர்ப்ப தருணத்தில் உடைபடுகிறது. உடன் படித்த சிறுவன், பக்கத்து வீட்டுப் பையன் என, தன்னை ஈர்த்த ஆண்கள் சிலருக்கு தன்னுடைய உணர்வுகளைக் கடிதமாக எழுதி அவற்றையெல்லாம் தானே பொத்தி வைத்திருக்கிறாள்.
சிறுவயது ‘க்ரஷ்-கெமிஸ்ட்ரி’ களேபரங்களும் அவற்றுக்கு ஆதாரமான உண்மைச் சம்பவங்களுமாக உருக்கமாக நீளும் அந்தக் கடிதங்களை அவ்வப்போது தனிமையில் வாசித்துச் சிலாகிப்பதில் அவளது வாலிபம் திருப்தி கொள்கிறது.
திடீரென ஒரு நாள் அந்தக் கடிதங்கள் காணாமல் போகின்றன. அடுத்த நாளே அவளது கனவுக் காதலர்கள் கையில் மேற்படி கடிதங்களுடன் தேடி வருகிறார்கள். அவர்களில் ஒருவன் அவள் அக்காவின் பாய் ஃபிரண்ட் வேறு.
இந்த விபரம் அக்காவுக்குத் தெரிவதும், பொத்தி வைத்த கடிதங்கள் வெளியானதன் குட்டு உடைபடுவதும், காதல் கடித கசமுசாவால் நட்பு வட்டத்தின் எழும் தடுமாற்றங்களும், இவையனைத்துக்கும் மத்தியில் அந்தப் பெண்ணின் காதல் என்னவாகிறது என்பதுமே மிச்சக் கதை. இதே தலைப்பில் அமெரிக்காவில் வெளியாகி வரவேற்பு பெற்ற புதினத்தைத் தழுவி திரைப்படமாக்கி உள்ளனர். அமெரிக்க கலாச்சாரம் ஆங்காங்கே உதைத்தாலும், இளம்பருவத்தின் மாசற்ற காதலும், சகோதரிகளின் பாசமுமாக ரசிக்கவே வைக்கிறார்கள்.
பேரிளம் பெண்ணின் ‘மறுபடியும்’
திருமணத்துக்கு முன்பாக, பருவ வயதில் மலர்வது மட்டுமல்ல; சரிவு கண்ட திருமண வாழ்க்கையால் அல்லாடும் மத்திம வயதினர் மத்தியில் இயல்பாக முகிழ்வதும் காதல்தானே. அப்படியொரு முதிர்ச்சியான காதல் படலத்தை அந்த வயதினருக்கான நிதானத்தில் தோய்த்து ’ஒன்ஸ் அகெய்ன்’(Once Again) என்ற திரைப்படமாக சொல்லியிருக்கிறார்கள்.
நெட்ஃபிளிக்ஸ் ஒரிஜினல் வீடியோக்கள் வரிசையிலான இந்தி சினிமாவாக கடந்த மாதம் வெளியாகி இருக்கிறது ‘ஒன்ஸ் அகெய்ன்’. கணவரை இழந்தவராய் சொந்த உழைப்பில் உணவகம் ஒன்றை நடத்தியபடி பையனையும், பெண்ணையும் ஆளாக்கும் பாசத் தாய் ஷெஃபாலி ஷா. பிரபலமான நடிகராக வலம் வந்தபோதும் விவாகரத்து வாழ்க்கையால் சதா தனிமையில் உழல்பவர் நீரஜ் கபி. உணவகத்திலிருந்து நடிகருக்கான பிரத்யேக சமையல் செல்கிறது.
அந்த வகையில் இருவருக்கும் இடையே தொலைபேசியில் முளைவிடும் சிநேகம் காலப்போக்கில் செழிப்பாய் வளர்கிறது. மனிதர்கள் சூழ இருந்தாலும் உள்ளுக்குள் நிரம்பி வழியும் தங்கள் தனிமையை இருவரும் பரஸ்பரம் பேசியே தீர்க்க முயற்சிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் ‘நாமிருவரும் சந்தித்தால் என்ன?’ என்ற நாயகனின் பேராவலில் இருவரின் வாழ்க்கையும் தடம்புரள்கிறது.
மெல்லவே நகரும் படத்தின் ஓட்டம் ஒரு வகையில் நிதானமான கதையை ஆழமாக ரசிக்க உதவுகிறது. உள்ளே இழுபட வாய்ப்பில்லாதவர்களுக்கு இந்தப் படம் அலுப்பூட்டலாம். படத்தைத் தாங்கும் அம்சங்களில் நாயகியின் ஆழமான பார்வையை வீசும் பெரிய கண்களுக்குப் பிரதான இடமுண்டு. இர்ஃபான் கான், நிம்ரத் கவுர் நடிப்பில் இந்தியில் வெளியான ’லன்ச் பாக்ஸ்’ திரைப்படத்தைக் கொஞ்சமாய் நினைவூட்டினாலும், ’ஒன்ஸ் அகெய்ன்’ கதையோட்டம் வித்தியாசமாகவே பயணிக்கிறது.
தொடர்புக்கு: leninsuman4k@gmail.com
ஏ.ஆர்.ரஹ்மான் அழைப்பிற்காக வெயிட்டிங்! - 'சூப்பர் சிங்கர்' செந்தில் கணேஷ்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago