சுதந்திரத்துக்குப் பிறகு தமிழக வரலாற்றில் மிக முக்கியமான திருப்புமுனை நிகழ்வு என்றால் ஆட்சியிலிருந்த காங்கிரஸை வீழ்த்தி, திமுக அரியணையில் அமர்ந்ததுதான். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அச்சம்பவத்தை மறுநாள் முதல் பக்கத் தலைப்புச் செய்தியாக வெளியிட்டது ஒரு நாளிதழ். அதே முதல் பக்கத்தில் இன்னொரு முக்கியச் செய்தியும் படத்தோடு வெளியாகியிருந்தது.
அது, சரோஜா தேவியின் திருமணத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி கலந்துகொண்ட செய்தி. திமுகவின் தேர்தல் வெற்றிக்கு எம்.ஜி.ஆர். எவ்வளவு முக்கியமானவராக இருந்தாரோ, அதுபோல எம்.ஜி.ஆரின் திரைத் துறை வெற்றியில் சரோஜா தேவியின் பங்கும் குறிப்பிடத்தக்க அளவு இருக்கிறது.
சரோஜா தேவியைத் தனது திரைப்படத்தில் நடிக்க வைக்க முடிவெடுத்த தருணத்தைத் தனது சயசரிதையில் எழுதியிருக்கிறார் எம்.ஜி.ஆர். அப்போது ரேவதி ஸ்டுடியோவில் ‘கச்சதேவயானி’ என்ற கன்னடப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தார் சரோஜா தேவி.
அவரை எம்.ஜி.ஆருக்கு அறிமுகம் செய்துவைத்தார் அங்கிருந்த இயக்குநர் கே.சுப்பிரமணியம். “உங்களுக்குத் தமிழ் பேசத் தெரியுமா?” என்று சரோஜா தேவியிடம் கேட்டார் எம்.ஜி.ஆர். “தெரியும்” என்றார் சரோஜா தேவி. அவருக்குத் தமிழ் பேசத் தெரியாது, ஆர்வத்தில்தான் அப்படிச் சொல்கிறார் என்பது எம்.ஜி.ஆருக்கும் தெரியும்.
“தமிழ் பேசத் தெரியாத பெண்ணைப் போட்டால், சங்கடமாக இருக்குமே...” என்றார் உடனிருந்த தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசன். இருந்தாலும், ஸ்கிரீன் டெஸ்ட் எடுக்கப்பட்டது. “டயலாக்கு சரியா இல்ல... நாம கன்னடப் படம் எடுக்கறதானா அவரைப் போடலாம்...” என்றார், ஏ.எல்.சீனிவாசன். ஆனாலும், படத்தைப் போட்டுப் பார்த்த எம்.ஜி.ஆர். ஒரு முடிவுக்கு வந்தார்.
“தமிழ்ப் பேச்சு கொச்சையாகத்தான் இருந்தது. ஆனால், தோற்றத்தில் மிரட்சி இருக்கும் அதேநேரம், அதில் கவர்ச்சியும் இருக்கவே செய்தது.” இப்போதுவரைக்கும் சரோஜா தேவி தமிழை கொச்சையாகத்தான் பேசுகிறார். இருந்தாலும், எம்.ஜி.ஆர். நினைத்தபடியே அதில் ஒரு கவர்ச்சி இருக்கத்தான் செய்கிறது.
காத்திருந்த எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர். இயக்கி நடித்த ‘நாடோடி மன்ன’னில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார் சரோஜா தேவி. கன்னடத்தில் ராஜ்குமார், தெலுங்கில் என்.டி.ராமாராவ் என்று இருமொழிகளிலும் அன்றைய எதிர்கால முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துக்கொண்டிருந்த சரோஜா தேவி, தமிழுக்கும் அந்த வாய்ப்பை வழங்கினார்.
‘நாடோடி மன்னன்’ வெளிவந்ததும் திடுதிப்பென்று புகழின் உச்சிக்குப் போனார். எம்.ஜி.ஆரோ தனது திரைவாழ்க்கையின் ஒரு முக்கியமான சவாலை அப்போது எதிர்கொண்டிருந்தார். அவர் சமூகப் படங்களில் நடித்தால் ஓடாது, ராஜா ராணி கதைகள்தாம் அவருக்குப் பொருத்தம் என்று பேச்சு எழுந்திருந்தது. இன்னொரு பக்கம் அவருக்குக் கால்முறிவு ஏற்பட்டு, ஒத்துக்கொண்ட படங்களை நடித்துக்கொடுக்க முடியாத நிலை.
“பட அதிபர்கள் பலரும் எம்.ஜி.ஆரால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்” என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார் கண்ணதாசன். அப்படியொரு இக்கட்டான நிலையில் எம்.ஜி.ஆரோடு சேர்ந்து நடித்தவர் சரோஜதேவி. நேரம் ஒதுக்கித்தர முடியாத அளவுக்கு சரோஜா தேவி தொடர்ச்சியாக படங்களில் நடித்துக்கொண்டிருந்தபோது, அவரின் வருகைக்காக ஒப்பனையோடு காத்திருந்து நடித்தார் எம்.ஜி.ஆர்.
அவருடன் அதிகத் திரைப்படங்களில் நடித்த இரண்டாவது நடிகை சரோஜா தேவி. மொத்தம் 26 படங்கள். ஜெயலலிதா அவரை முந்திக்கொண்டுவிட்டார். எம்.ஜி.ஆர்.-ஜெ. இணைந்து நடித்தது 28 படங்கள்.
சரோஜா தேவியும் ஜெயலிலதாவைப் போல அரசியலுக்கு வந்திருக்க முடியும். ராஜீவ் காந்தி அவரை அரசியலுக்கு வருமாறு அழைத்தும் மைசூரில் போட்டியிட வாய்ப்பளித்தும், சொன்ன சொல்லை அரசியலில் காப்பாற்ற முடியாது என்பதற்காக அழைப்பை மறுத்த பண்பாளர் அவர். கலை இலக்கியங்களின் மீதும் ஆர்வம் கொண்ட புரவலரும்கூட. கன்னடத்தில் சிறந்த பெண் எழுத்தாளர்களுக்கு ஆண்டுதோறும் அவர் விருது வழங்கிப் போற்றுகிறார்.
காட்சிக்கு ஒரு உணர்ச்சி
ஒரு முறை தூக்கத்திலிருந்து அவர் விழித்தெழுவதற்கு முன்பே வீட்டு வாசலில் காத்திருந்து, பட அதிபர் நாகி ரெட்டி, ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்துக்கு கால்ஷீட் வாங்கினார். அந்தப் படத்தின் டைட்டில் காட்சியில் அவரது பெயர் வழக்கத்துக்கும் கூடுதலாக அதிக நொடிகள் காட்டப்பட்டது.
எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்த அதே காலகட்டத்தில் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என்று தமிழின் மற்ற முன்னணி நடிகர்களோடும் நடித்துக்கொண்டிருந்தார் சரோஜா தேவி.
கொஞ்சிக் கொஞ்சி தமிழ் பேசிய அந்தக் ‘கன்னடத்துப் பைங்கிளி’யைத் தமிழக ரசிகர்கள் கொண்டாடி வரவேற்றார்கள். உரையாடல் காட்சிகளில் சரோஜா தேவியின் உச்சரிப்பு வேடிக்கையானதுதான். ஆனால், பாடல் காட்சிகளில் அவர் காட்டிய முக பாவனைகள் அவரை ‘அபிநய சரஸ்வதி’ ஆக்கியது. கண்ணதாசனின் பாடல் வரிகளும், பி.சுசீலாவின் குரலும் அவரைக் காவிய நாயகியாக்கின.
saroja-2jpg‘காவேரி ஓரம் கவி சொன்ன பாடல்’, ‘ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்’, ‘கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா’, ‘ஜவ்வாது மேடை இட்டு’, ‘மெல்ல நட.. மெல்ல நட.. மேனி என்னாகும்’ என்று எத்தனை பாடல்கள்! ‘உந்தன் சின்ன இடை வளைந்தாடும்’ என்ற பாடல் வரி அவருக்குப் பொருந்தாமல் போகலாம். ஆனால், அவரது நடையழகை வியந்து கேமராக்கள் பின்தொடர்ந்தன என்பதெல்லாம் இரண்டாம்பட்சம்தான்.
‘புதிய பறவை’ படத்தில் இரவு நேரத்தில் கணப்பு அடுப்பின் அருகே சிவாஜி கணேசனும் சரோஜா தேவியும் உரையாடும் ஒரு காட்சி. கேமரா அவரின் பின்னாலும் நிற்கும். ஆனால், அண்மைக் காட்சிகளில் உள்ளத்துக் காதலை முகத்தின் மெல்லசைவுகளிலேயே உணர்த்தியிருப்பார் சரோஜா தேவி. அவர் வாகை சூடியது, மலர்ந்த முகமெனப் புன்னகைக்கும் அண்மைக் காட்சிகளில்தாம்.
‘கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா’ பாடலில் ‘இதழ் சிந்தும் சுவையாகுமா’ என்ற வரிகளுக்கு மெல்லசையும் அவரது இதழ்கள், அதற்கொரு உதாரணம். இதுவரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத்தானா என்று பாடல் தொடங்கும் முன்பே கண்களாலே சம்மதம், இடி மின்னலுக்கு மிரட்சி, நகர்ந்துவரும் நண்டைப் பார்த்து பயம் என்று ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு உணர்ச்சியைக் காட்ட அவரால் முடிந்தது.
பொய்த்த நம்பிக்கைகள்
உற்சாகமாகத் துள்ளித் திரியும் ஒரு இளஞ்சிறுமியின் முக பாவனை அவருக்கு இயல்பாகவே கைவந்தது. சோகமாக நடிப்பதற்கும் அவர் சிரமப்பட வேண்டியிருக்கவில்லை. அவர் சிரிக்காமல் இருந்தாலே, அது சோகம்தான். ‘கல்யாணப் பரிசு’ படத்தில் விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளை வென்று முதல் காட்சியிலேயே உற்சாகம் கொப்பளிக்க வீட்டுக்குத் திரும்பிவரும் அவர், அதே காட்சியில் அக்கா விஜயகுமாரி தையல் இயந்திரத்தில் துணி தைத்துகொண்டிருப்பதைப் பார்த்ததும் முகம் மாறி சோகமாகிவிடுவார்.
விளக்கின் அடியில் இருள் என்பதுபோல, அந்த உற்சாகத்தின் அடியில் ஒரு சோகம் எப்போதும் குடியிருக்கத்தான் செய்தது.
அவர் பத்மினியைப் போல நாட்டிய தாரகையும் அல்ல, தேவிகாவைப் போல் சிற்ப வடிவினரும் அல்ல. ஆனாலும் அவர் காட்டிய முக பாவங்கள் நடன அசைவுகளைத் தோற்கடித்தன. காலம்தோறும் உடலழகு குறித்து நிலவிவந்த நம்பிக்கைகளைப் பொய்யாக்கின.
ஏ.ஆர்.ரஹ்மான் அழைப்பிற்காக வெயிட்டிங்! - 'சூப்பர் சிங்கர்' செந்தில் கணேஷ்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago