தயாரிப்பாளர் கோவை செழியன் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தைப் போலவே இன்னொரு படத்தைத் தயாரிக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் ஸ்ரீதரிடம் வந்தார். ஆனால், ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் நடித்த அத்தனை கலைஞர்களும் நான் தயாரிக்கும் படத்திலும் இடம்பெற வேண்டும் என்று நிபந்தனை வைத்தார். அதுமட்டுமல்ல; ‘காதலிக்க நேரமில்லை’ போன்றே ஊட்டி மலைத்தொடரில் படமாக்கப்பட வேண்டும் என்றும் விரும்பினார்.
நிபந்தனையை ஏற்றுக்கொண்ட ஸ்ரீதரும் கோபுவும் மெரினா கடற்கரையில் காந்தி சிலைக்குப் பின்பாக அமர்ந்து கதை பேசத் தொடங்கினார்கள். குடும்பத்துக்குத் தெரியாமல் பாலைய்யாவுக்கு இன்னொரு மனைவி இருப்பதுபோல கதையைத் தொடங்கி, அந்த இன்னொரு மனைவியின் மகள் அவரைத் தேடி வர, அவளது பெட்டி கதாநாயகியின் கையில் கிடைக்க, அதனால் ஏற்படும் குழப்பங்களைத் திருப்பங்கள் ஆக்கி, நகைச்சுவைக் கதையை உருவாக்கி விட்டார்கள். கோபுவும் நாகேஷ் – சச்சு ஜோடியை வைத்து டாக்டர் திருப்பதி -அலமேலு கதாபாத்திரங்களை உருவாக்கினார். இரண்டே மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட அந்தக் கதைதான் ‘ஊட்டி வரை உறவு’ படமாக உருவானது.
வதந்தியும் உண்மையும்
படப்பிடிப்பு தொடங்கியபோது கோலிவுட் முழுவதும் வதந்தி ஒன்று பரவியது. ‘ஊட்டி வரை உறவு’ படத்தில் ஜெயலலிதாவைக் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்து சிவாஜியுடன் ஒரு பாடல் காட்சியை ஸ்ரீதர் படமாக்கிவிட்டார் என்றும் ஆனால் ‘சிவாஜியுடன் நடிக்கக் கூடாது’ என்று எம். ஜி.ஆர் தடுத்து விட்டதாகவும் பரபரத்தது அந்த வதந்தி. தன்னைக் குடைந்தெடுத்த பத்திரிகையாளர்களிடம் “அப்படியேயெல்லாம் எதுவும் நடக்கவேயில்லை” என்று கோபு தீர்மானமாகக் கூறினார்.
siri-2jpgபடம் முடிவானதும் முதலில் சிவாஜியும் கே.ஆர்.விஜயா கால்ஷீட்டைத்தான் உறுதிசெய்தார் செழியன். முத்துராமன், நாகேஷ், பாலையா, சச்சு, நாகேஷ் என்று ‘காதலிக்க நேரமில்லை’ குழுவினர் அனைவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
பல படங்களில் நடனம் ஆடி தனக்கென்று ஒரு இடத்தைப் பெற்றிருந்த எல். விஜயலட்சுமியை முத்துராமனுக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்தார் ஸ்ரீதர். கோபுவிடம் ரகசியமாக விஜயலட்சுமி “சார். எனக்குத் திருமணம் நிச்சயமாகிவிட்டது. கணவருடன் பிலிபைன்ஸ் நாட்டில் செட்டில் ஆகப் போகிறேன். எம்.ஜி.ஆர் சார் படத்துக்காக ஒரு பாங்க்ரா நடனக் காட்சி மட்டும்தான் பாக்கி.
உங்க படம்தான் எனக்குக் கடைசி படம்” என்று கூறி, “கால்ஷீட் வீணாகாதபடி எனது காட்சிகளை முதலில் எடுத்து விடுங்கள்” என்று கேட்டுக்கொண்டார். (அண்மையில் கோபுவைச் சந்திக்க அவர் வீட்டுக்கு வந்திருந்த விஜயலட்சுமி அவருடன் பழைய கதைகளை வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தார். தற்போது அமெரிக்க நிறுவனம் ஒன்றில் தலைமை நிதி அதிகாரியாகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறார் விஜயலட்சுமி)
விஜயாவுக்குப் புதிய களம்
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் பள்ளியில் பயின்ற கே.ஆர். விஜயா உணர்ச்சிகளை அள்ளிக்கொட்டி நடித்தே பழகியவர். இந்தப் படத்தில் ஒரு நவநாகரிகப் பெண்ணாகத் தோன்றவைத்த ஸ்ரீதர், அவரை மேற்கத்திய நடனங்களையும் ஆட வைத்தார். ‘தேடினேன் வந்தது’ பாடலுக்கு அவர் தந்த அங்க அசைவுகள் அப்போதைய வாலிபர்களைச் சொக்க வைத்தன.
எம்.எஸ்.விஸ்வநாதன், ஸ்ரீதர் படத்துக்கென்று சில மெட்டுக்களை வைத்திருந்தார். ‘பூ மாலையில் ஒரு மல்லிகை’, ‘ஹேப்பி இன்று முதல் ஹேப்பி’, ‘புது நாடகத்தில் ஒரு நாயகி’, ‘அங்கே மாலை மயக்கம் யாருக்காக’ என்று எல்லாப் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆயின. காணாமல் போனவர்களின் விளம்பரங்களை வைத்துக்கொண்டு, டாக்டர் திருப்பதி - அலமேலு தம்பதியாக சச்சு-நாகேஷ் அடித்த நகைச்சுவை லூட்டி ரசிகர்களின் வயிற்றைப் பதம் பார்த்தது.
கூத்தும் கும்மாளமும்
ஊட்டியில் படக்குழுவினர் தங்கியிருந்த நாட்களை இன்று நினைத்தாலும் பரவசம் ஏற்படுகிறது என்கிறார் கோபு.
ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு முடிந்ததும் இரவு வெட்டவெளியில் தீ மூட்டி, படக்குழுவினர் அனைவரும் அமர்ந்து வம்படித்துச் சிரித்து மகிழ்ந்த கூத்தும் கும்மாளமுமான தருணங்கள் திரும்பக் கிடைக்காது. அதில் கோபுவின் மிமிக்ரியும் விகடக் கச்சேரியும் தூள் பறக்கும். ஒரு பக்கம் பாலையா, வி.கே.ஆர்., நாகேஷ், தங்கள் பங்குக்கு அனைவரையும் சிரிக்க வைப்பார்கள். சிவாஜி கணேசனோ தான் ஒரு பெரிய ஸ்டார் என்ற பந்தா இல்லாமல் இவர்களுடன் சேர்ந்து லூட்டி அடித்துக்கொண்டிருப்பார்.
மறுநாள் காட்சியைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீதர், அறையிலிருந்து வந்து, “நாளைக்கு ஷூட்டிங்! ஒழுங்காகத் தூங்கச் செல்லுங்கள். அப்புறம் கேமரா முன்பு தூங்கி வழிவீர்கள்” என்று செல்லமாகக் கூப்பாடு போடுவார். “அந்தக் காலத்துக் கலைஞர்களிடையே இருந்த நட்புறவும் கலகலப்பும் இப்போது இல்லை. ஆனால், தற்போது ‘ஈகோ’ என்பது ஒரு நல்ல ஜாலியான துறையைப் பாழ்படுத்திவிட்டது” என்கிறார் கோபு.
பிடிவாதமாக வெளியான இரு படங்கள்
‘ஊட்டி வரை உறவு’ ரிலீஸ் தேதி நவம்பர் 1, 1967. அன்றுதான் சிவாஜி கணேசன் நடித்து, ஏ.சி. திருலோகச்சந்தர் இயக்கியிருந்த ‘இரு மலர்கள்’ படமும் ரிலீஸ் ஆனது. படம் ரிலீஸ் செய்யும் மும்முரத்தில் இருந்தார் ஸ்ரீதர். அப்போது சிவாஜி கணேசன் ரகசியமாக கோபுவை அழைத்தார்.
“ஆச்சாரி! என்னோட இன்னொரு படமான ‘இரு மலர்கள்’ நவம்பர் ஒண்ணுலதான் ரிலீஸ் ஆகுது. அது உணர்ச்சிபூர்வமான கதை. கறுப்பு வெள்ளை வேற. உங்க ‘ஊட்டி வரை உறவு’ காமெடி. ஜாலியான படம். ரெண்டும் ஒரே நாள் ரிலீஸ் ஆக வேணாம்னு தோணுது. உன் நண்பன் பிடிவாதக்காரன். அவன் கிட்ட சொல்லி கொஞ்சம் தள்ளிவைக்க முடியுமா... செழியன் கிட்ட கேட்டுட்டேன். அவரு ஸ்ரீதர் கிட்ட பேச சொன்னாரு” என்றார் சிவாஜி கணேசன்.
சிவாஜி கூறிய போதே, ஸ்ரீதர் இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார் என்பது கோபுவுக்குத் தெரிந்துவிட்டது. ரிலீஸ் தேதியை நிச்சயித்து விட்ட பின்பு அவர் சொன்ன தேதியில் படத்தை ரிலீஸ் செய்தே தீருவார் என்பது கோபுவுக்குத் தெரியும்.
அப்போதைக்கு “பேசிப் பார்க்கிறேன்” என்று கூறி விட்டு வந்துவிட்டார். ஸ்ரீதர் ‘ஊட்டி வரை உறவு’ ரிலீஸ் செய்வதில் பிடிவாதமாக இருக்க, சிவாஜியின் தம்பியோ, ஏ.சி.திருலோகச்சந்தரிடம் ‘இரு மலர்கள்’ ரிலீஸைத் தள்ளி வைக்கலாம் என்று யோசனை கூறினார். ஆனால், அவரும் பிடிவாதமாக நவம்பர் ஒன்றாம் தேதியில்தான் ரிலீஸ் செய்வேன் என்று கூறிவிட்டார். இரு படங்களும் அன்றுதான் வெளியிடப்பட்டன.
உணர்ச்சிகரமான கதாபாத்திரம் ஒன்றிலும், ஜாலியான கதாநாயகனாக மற்றொன்றிலும் என சிவாஜி கணேசனின் இரு படங்களும் வெளியாயின. இரண்டு படங்களுமே நூறு நாட்களைக் கடந்து ஓட, சிவாஜிவுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.
(சிரிப்பு தொடரும்)
தொடர்புக்கு: tanthehindu@gmail.com
ஏ.ஆர்.ரஹ்மான் அழைப்பிற்காக வெயிட்டிங்! - 'சூப்பர் சிங்கர்' செந்தில் கணேஷ்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago