கல்விக்கூடத்தின் எந்தப் புத்தகத்தைத் திறந்தாலும் அதன் முதல் பக்கம் தீண்டாமை ஒரு பாவச்செயல்; தீண்டாமை ஒரு பெருங்குற்றம்; தீண்டாமை மனிதத்தன்மையற்ற செயல் என்றே சொல்கிறது. ஆனால், சமூகத்தின் எல்லாப் பக்கங்களிலும் தீண்டாமை நச்சுக்காற்றாக நிறைந்திருக்கிறது. சமூகத்தைச் சுற்றி உவர்கடலாய்த் தீண்டாமைத் துயரம் அமிலம்போல் அபாயநிலையில் தளும்பிக்கொண்டிருக்கிறது. இந்தச் சாதிய இழிவைப் பொதுச் சமூகத்தின் முன் ஆக்கபூர்வமாக எடுத்துவைப்பதில் கலை தன்னால் இயன்றவரை முயன்றுகொண்டே இருக்கிறது. ‘பரியேறும் பெருமா’ளும் அப்படியொரு முயற்சியே. இது ஒடுக்கப்பட்டோருக்கான படமல்ல; ஒடுக்குவோருக்கான படம். உங்கள் மனத்தில் சாதி ஒழிந்துவிட்டதா, ஒளிந்துள்ளதா என்பதை உரசிப் பார்ப்பதற்கான உரைகல் இந்தப் படம்.
தமிழ் சினிமாவில் சாதியச் சிக்கல்கள் ‘ஒரே ரத்தம்’, ‘வேதம் புதிது’, ‘காதல்’, ‘மெட்ராஸ்’, ‘மாவீரன் கிட்டு’ போன்ற பல படங்களில் ஏற்கெனவே பேசப்பட்டிருக்கின்றன. அப்படியான தமிழ் சினிமாக்கள் பல ஒடுக்கப்பட்டோரின் துயரங்களை வேதனைகளை ஒடுக்கியோரின் தளத்திலிருந்து காட்சிப் படுத்தியிருந்தன. முதன்முறையாக ஒடுக்குதலுக்கு ஆளானவர்கள் தாங்கள் அனுபவிக்கும் அவமானங்களைத் தங்களை ஒடுக்குவோ ரிடம் எடுத்து வைத்திருப்பது இதுவே முதன்முறை. அதனாலேயே ‘பரியேறும் பெருமாள்’ மனம் ஏறுகிறான்.
பொதுத் தெருக்களில் நடக்க இயலாத, பொதுக் கிணற்றில் நீரெடுக்க இயலாத, கூலி உயர்வு கேட்டதால் எரித்துக்கொல்லப்பட்ட சாதியக் கொடுமைகளை எல்லாம் இந்தப் படம் பேசியிருக்கிறது. பேசிய விஷயங்கள் புதியவையென்று சொல்வதற்கில்லை; ஆனால், படத்தின் காட்சிமொழி புதிது. அந்த மொழி தன்னை அடித்தவரிடமே அன்பு கொஞ்ச, நியாயம் தொனிக்க, கெஞ்சலுடனும் கேவலுடனும் ஒரு குழந்தைபோல் முறையிடுகிறது. எந்த வகையிலும் பொதுச்சமூகத்தால் புறந்தள்ள முடியாத இந்த உரிமைக் குரல், பொதுமனசாட்சியை உலுக்கும்வகையில் அமைந்துள்ளது.
அரூப விலங்கின் உருவம்
திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் உள்ள புளியங்குளம்தான் ‘பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல் மேல ஒரு கோடு’ எனத் தன்னை அறிமுகப் படுத்திக்கொள்ளும் பரியனின் ஊர். வைகுண்டத்துக்காரனா புளியங்குளத்துக்காரனா என்பதே சாதியைக் குறித்துவிடுகிறது. சாதி என்னும் அரூப விலங்கின் குருதித் தாகம் இன்னும் தணியவேயில்லை. இரட்டைக் குவளைமுறை ஒழிக்கப்பட்டுவிட்டதாகச் சொல்லும் மனத்தில் நீங்காக் கறையாக அது ஒதுங்கிக்கொண்டது. வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் சாந்தி நகரைச் சேர்ந்த மேஸ்திரிக் கிழவராக அது வேடம் தரிக்கிறது.
சதிச் செயல்கள் மூலம் குலசாமிக்காகக் கொலைகளைச் செய்யும் மேஸ்திரி தாத்தா, சாதியே உருவெடுத்தது போன்றே தென்படுகிறார். வெளிப்படையான வெகுளித்தனம் கொண்டிருந்தபோதும் உள்ளுறை வெப்பமாகத் தகிக்கிறது நயவஞ்சகம் அவரிடம். சாதி காரணமான கொலையைச் செய்யத் தவறியபோது தன்னையே மாய்த்துக்கொள்கிறார். நவீனத்தின் அம்சமான ரயில் பழமைவாதக் கருத்தியலான சாதியைச் சுமந்துதிரிந்த மேஸ்திரியின் மீதேறித் தடதடத்து ஓடும்போது இப்படிச் சாதியும் அடையாளம் தெரியாதவகையில் சிதறிவிடாதா என்ற எண்ணத்தைப் படம் பார்வையாளரிடத்தில் உருவாக்குகிறது. கறுப்பு மீதேறிய ரயில் மீது கொண்ட கோபம் கிழவர் மீது ரயில் ஏறும்போது தணிந்துவிடுகிறது. சாதியின் அழிவே சமூக விடுதலை என்னும் பெரியாரின் நிலையில்வந்து நிற்கிறது மனம்.
புறக்கணிக்க முடியாத குரல்
தன் தரப்பு நியாயத்தைச் சொல்வதற் காக எதிர் தரப்பைக் குற்றப்படுத்தாத தொனியில் பரியன் தன் தரப்பின் நியாயத்தைக் கேட்கிறான். இவர்கள் தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள் என்னும் இறைஞ்சுதலுடன் கூடிய நீதிகேட்பு என்பதாலும் மனித உரிமை என்பதாலும், புறக்கணிக்கவோ புறந்தள்ளவோ முடியாத நிலையில் ஆதிக்கத்துக்கு எதிரான அழுத்தமான குரலாக இது ஒலிக்கிறது.
சாதிய வன்மம் காரணமாகப் படத்தில் கறுப்பு என்னும் நாய் சாகிறது; இளைஞன் ஒருவன் சாகிறான்; இளம்பெண் ஒருத்தி சாகிறாள்; வளரிளம்பருவத்துச் சிறுவன் ஒருவன் சாகிறான். இவற்றை எல்லாம் வெறும் செய்தியாகவே பொதுச் சமூகம் எதிர்கொள்கிறது. இவர்கள் இயல்பாகச் செய்த செயல்கள், இவர்களது மரணத்துக்கு வழிநடத்தியுள்ளனவே? அப்படி யென்றால் இங்கே என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது. உங்கள் கல்வி என்ன கற்றுக் கொடுத்தது? சக மனிதனின் வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லையே உங்களால்? இன்னும் எவ்வளவு காலத்துக்கு இப்படி அநீதி இழைப்பீர்கள்? இப்படி யான கேள்விகள் பார்வையாளரிடம் தீப்பொறிகளாக வந்து விழுகின்றன. அதுதான் இயக்குநர் மாரி செல்வராஜின் வெற்றி.
கல்வி கற்பிக்கும் ஆசிரியரிடம்கூடச் சாதிசார் மனநிலை காணப்படுகிறது. ‘கோட்டாவில் வந்த கோழிக் குஞ்சு’ என்று சொன்னபோதுதான் பரியனுக்கு ஆத்திரம் பொத்துக்கொண்டு வருகிறது. தன் மீதான பிரியத்தால் ஜோதி அழைத்ததால் திருமண வீட்டுக்கு வரும் பரியன்அவமானப்படுத்தப் படுகிறான். ஆனாலும், இடைநிலையைச் சாதியினரை ஒட்டுமொத்தமாகக் குற்றப்படுத்தவில்லை இயக்குநர். பரியனுக்கு ஆதரவான நண்பன் சமாதானபுரத்தைச் சேர்ந்த கவுன்சிலருடைய மகன் எம். ஆனந்த், பரிவுடன் பரியனைத் தாங்கிப் பிடிக்கும் ஜோதி மகாலட்சுமி இருவருமே ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர்கள். ஜோவின் தந்தை வேடமும் கொடூரமான முறையில் சித்தரிக்கப்படவில்லை. அதன் இயல்பான மனத்தில் சாதிய அழுக்கேறிக் கிடக்கிறது என்பதே சுட்டப்படுகிறது.
தேர்ந்த திரைமொழி
புளியங்குளக் கிராமத்தின் வாழ்வைச் சொல்லும் திரைக்கதை எந்த இடத்திலும் பாதை விலகவில்லை. இலக்கை நோக்கிய லட்சியப் பயணத்தில் சோர்வின்றிச் சுறுசுறுப்பாக நகர்கிறது அது. உழைக்கும் மக்களை எறும்புகள் சாரைசாரையாகச் செல்வதைப் போல் உயர் கோணத்தில் காட்டியிருப்பது; சாதிக்கான கொலையைச் செய்துவிட்டு ஓட்டுவீட்டில் ஒரு பெருச்சாளி வெளியேறுவதைப் போல் மேஸ்திரி வெளியேறுவது, திருமண வீட்டில் முரட்டுத்தனமாகத் தாக்கப்பட்டு இழிவுபடுத்தப்பட்ட பரியன் ஒரு விலங்குபோல் நான்கு கால்களால் நகர்வது போன்ற காட்சிகள் வழியே படம் மெளனமாகப் பல விஷயங்களைக் குறிப்புணர்த்துகிறது. பரியனின் தந்தை அவமானப்படுத்தப்பட்டுத் துரத்தப்படும் காட்சியில் கல்லூரியின் வாசலில் பட்டொளி வீசிப் பறக்கின்றன பல கட்சிக் கொடிகள். பரியனின் மூச்சொலியை பின்னணியில் பயன்படுத்தியிருக்கும் சந்தோஷ் நாராயணனின் இசை இந்த காட்சியால் இறுக்கமான மனத்தைத் தளர்த்துகிறது.
மேஸ்திரி அறிமுகமாகும் காட்சியில்-இளைஞனைத் தந்திரமாகப் பேருந்தில் தள்ளிவிட்டுக் கொல்லும் காட்சியைத் தொடர்ந்து அந்த இளம்பெண் தனியே பேருந்தில் அழும் காட்சியில், அது எதற்காக நடத்தப்பட்ட கொலை என்பதைப் படம் ஒரு சொல்கூடச் சொல்லாமல் உணர்த்திவிடுகிறது. பரியன் சட்டக் கல்லூரியில் சேரும் காட்சியில் முதல்வர் அறையின் மேசையில் காந்தியின் படம் இடம்பெற்றிருக்கிறது. பின்னர் முதல்வராக ‘பூ’ ராம் பொறுப்பேற்றபின் அதே அறையில் அம்பேத்கர் இடம்பெறுகிறார். தலைமைப் பொறுப்புக்கு யார் வருகிறார்கள் என்பதைப் பொறுத்தே சமூகநீதி சாத்தியம் என்னும் அரசியல் கருத்தை மிக இயல்பாகப் போகிறபோக்கில் படம் சொல்லிவிடுகிறது. இப்படியான காட்சிகளாலேயே ‘பரியேறும் பெருமாள்’ அசத்தலான சினிமா என்பதை உணர முடிகிறது.
கச்சிதமான கதாபாத்திரச் சித்தரிப்பு, அவற்றுக்கான நடிகர் தேர்வு, உணர்வுபூர்வ காட்சிப்படுத்தல், நேர்த்தியான படத் தொகுப்பு, உயிரோட்டமான பின்னணி இசை, உயிர்த் துடிப்பான பாடல்கள், சிந்தையில் பதியும்படியான வசனங்கள், தேர்ந்த ஒளிப்பதிவு ஆகிய எல்லா அம்சங்களையும் ஒன்றிணைத்து சமூகத்துக்கான சரியான சினிமாவைத் தந்ததில் மாரி செல்வராஜ் பார்வையாளர்களை மனங்குளிரவைத்திருக்கிறார்.
தொடர்புக்கு:
chellappa.n@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago