திரை வெளிச்சம்: இசையைத் திருடவே முடியாது!

By சைபர் சிம்மன்

இணையத்தில் இசையைக் கேட்டு ரசிக்க ஒரு புதிய வழி உருவாகிக் கொண்டிருக்கிறது. இது நேர்மையானதாகவும், நியாயமானதாகவும் இருக்கிறது. இதில் காப்புரிமைச் சிக்கல் இல்லை. அதே நேரம், இந்த வழி சமத்துவம் மிக்கதாக இருக்கிறது. அனைத்துப் பங்கேற்பாளர்களுக்கும் அது சம விகிதத்தில் பயன் தருவதாக இருக்கிறது.

அதாவது இசையை உருவாக்குபவர்களுக்கு மட்டும் அல்லாமல், அதைக் கேட்டு ரசிப்பவர்களுக்கும் பரிசளிக்கும் வகையில் இந்த முறை அமைந்துள்ளது. எதிர்காலத்தில் இசைத்துறையையே மாற்றி அமைக்கக் கூடியது என எதிர்பார்க்கப்படும் அந்த ஆச்சரியகரமான தொழில்நுட்பம் ‘பிளாக்செயின்’!

இதுவொரு டிஜிட்டல் பதிவேடு

பிளாக்செயின் என்ற பெயரைப் பார்த்துப் பயப்படத் தேவையில்லை. இன்று இணைய உலகில் பரபரப்பாகப் பேசப்படும் பிட்காயின் போன்ற எண்ம நாணயங்களுக்கு அடிப்படையாக இருக்கும் தொழில்நுட்பமே இதுதான். பிட்காயின் கண்ணால் பார்க்க முடியாத, கையால் தொட முடியாத டிஜிட்டல் நாணயமாக இருக்கலாம். ஆனால், அதன் ஆதார அம்சமாக இருப்பது பிளாக்செயின் தொழில்நுட்பம்தான். அதன் மையமில்லாத் தன்மைக்கும், தனிநபரோ அமைப்போ கட்டுப்படுத்தாத நாணயமாக அது இருப்பதற்கும் மூலகாரணம் இந்த பிளாக்செயின்தான்.

பிளாக்செயின் என்பதைப் பரவலாக்கப்பட்ட டிஜிட்டல் பதிவேடு எனப் புரிந்து கொள்ளலாம். எந்தப் பரிவர்த்தனையை நிர்வகிக்கவும் நம் ஒவ்வொருவரிடமும் அன்றாடப் பதிவேடு (Ledger book) இருக்கிறது. பிளாக்செயினும் இத்தகைய பதிவேடுதான். இது டிஜிட்டல் வடிவிலானது என்பது மட்டும் அல்ல, மையமில்லாதது என்பதும் முக்கியமானது.

வழக்கமாக, பரிவர்த்தனைத் தகவல்களை ஒரு மையப் பதிவேட்டில் பதிவுசெய்து அதை அனைத்துச் சரிபார்த்தலுக்கும் அடிப்படையாகக் கொள்கிறோம். இதற்கு மாறாக, ஒவ்வொருவர் கையிலும் ஒரு பதிவேடு இருந்து அவை அனைத்திலும் ஒவ்வொரு பரிவர்த்தனையும் பதிவு செய்யப்பட்டுப் புதுப்பிக்கப்படுவதாக வைத்துக்கொள்வோம்.

இதன் காரணமாக, மையப் பதிவேட்டைச் சார்ந்திருக்கும் நிலை ஏற்படாது என்பதோடு, எந்த ஒரு பரிவர்த்தனையும் எல்லோருக்கும் தெரிந்ததாக, எல்லோராலும் அங்கீகரிக்கப்படுவதாக அமையும். முக்கியமாக, இதில் நகலெடுப்பது, ஏமாற்றுவது எல்லாம் சாத்தியம் இல்லை.

பிளாக்செயினில் ஒவ்வொரு புதிய பரிவர்த்தனையும், அதன் அனைத்து உறுப்பினர்களாலும் வெளிப்படையான முறையில் சரி பார்க்கப்பட்டு உறுதி செய்யப்படுகிறது. எனவே, இது டிஜிட்டல் நாணயங்களைப் பாதுகாப்பாக பரிவர்த்தனை செய்ய உதவுகிறது.

டிஜிட்டல் நாணயம் என்றில்லை, பிளாக்செயினின் ஆதாரத் தொழில்நுட்பத்தை எந்தவிதமான டிஜிட்டல் மதிப்பு அல்லது டிஜிட்டல் பொருட்களின் பரிவர்த்தனைக்கும் பயன்படுத்தலாம் என்கின்றனர். இருதரப்பினரிடையிலான ஒப்பந்தங்களுக்கும் இதைப் பயன்படுத்தலாம் என்கின்றனர்.

உதாரணத்துக்கு நில விற்பனை பதிவுகளை பிளாக்செயினில் மேற்கொள்வது பாதுகாப்பாக அமையும் என்கின்றனர். பிளாக்செயினில் பதிவு செய்யும் போது, நிலமோ கட்டிடமோ யார், யாருக்கு விற்றது எனும் விவரம், எத்தனை பேர் கைகளுக்கு மாறினாலும் தெளிவாகத் தெரியும் என்பதால் ‘டபுள் டாக்குமெண்ட்’, போலிப் பத்திரம் உள்ளிட்ட நில மோசடிகளுக்கு அறவே வழியில்லாமல் போகும் என்கின்றனர்.

இசைத்திருட்டு ஒழியும்

நிலப்பதிவு மட்டும் அல்ல, மருத்துவப் பதிவுகள் தொடங்கி, வங்கிப் பரிவர்த்தனைகள் வரை எல்லா விதமான தகவல்களையும் பிளாக்செயினில் பதிவேற்றிப் பாதுகாப்பாகவும், மோசடிக்கு வழியில்லாமலும் பயன்படுத்தலாம் என்கின்றனர்.

இந்த வகையில் தான் இசையை விநியோகிக்கவும் பிளாக்செயின் நுட்பம் அருமையான கட்டமைப்பாக இருக்கும் என இசைத்துறையினர் நம்புகின்றனர்.

இசைத்துறையைப் பொறுத்தவரை, நவீனத் தொழில்நுட்பம் ஏற்கெனவே தலைகீழ் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. எம்.பி-3 வசதியால் இசையை விநியோகிப்பதும், கேட்டு ரசிப்பதும் எளிதாகி இருக்கும் அதே நேரம், அனுமதி இல்லாமல் இசையைப் கேட்டு ரசிப்பதற்கான சாத்தியம், காப்புரிமைச் சிக்கல் மற்றும் இசைத்திருட்டு புகார்களுக்கும் வித்திட்டிருக்கின்றன.

காப்புரிமை என்பது படைப்பாளிகள், தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள், இதர பங்கேற்பாளர்கள் எனப் பலருடன் பல அடுக்குகளில் தொடர்பு கொண்டதாக இருப்பதால் மிகவும் சிக்கலானதாக அமைகிறது. இந்தச் சங்கிலிப் பின்னலில் உள்ளவர்கள் அனைவருக்கும் சம விகிதத்தில் பலன் கிடைப்பதில்லை. பலருக்குக் கிடைப்பதே இல்லை. கிடைப்பவர்களுக்கும் தாமதமாகவும், மிகச் சொற்பமானதாகவும் கிடைக்கிறது.

நீண்டுசெல்லும் உரிமைப்போர்

இசைஞானி பாடல்களை மையமாகக் கொண்டு வெடித்த காப்புரிமைப் பிரச்சினை இதற்குச் சரியான உதாரணம். இசையை உருவாக்கியவர் என்ற முறையில், அவரது அனுமதி இல்லாமல் பலரும் வர்த்தக நோக்கில் அவரது பாடல்களைப் பாடி அல்லது ஒலிபரப்பி ஆதாயம் தேடும்போது பிரச்சினையாகிறது. இதைத் தடுக்க அவரது தரப்பில் இருந்து வழக்கு ஆயுதத்தைக் கையில் எடுக்க வேண்டியிருக்கிறது.

தனது காப்புரிமையை நிலைநாட்ட அவரது சட்டப்போராட்டம் தீர்வின்றி நீண்டு செல்கிறது. அதேநேரம் இசையில் பங்கேற்ற மற்றவர்களின் பங்கு என்னவாகிறது எனும் கேள்வி எழுகிறது. பாடலாசிரியர், தயாரிப்பாளர், பாடகர்கள், இசைக்கலைஞர்கள் போன்றவர்களுக்கான இழப்பீடு என்ன எனும் கேள்வியும் கேட்கப்படுகிறது.

காப்புரிமையில் யார் யாருக்கு என்ன பங்கு என்பதும், அதன் மூலம் கிடைக்கும் பலனில் இவர்களுக்கான பங்கு எப்படி இருக்க வேண்டும், அதை நிர்வகிப்பது யார், கண்காணிப்பது யார் போன்ற கேள்விகள் எல்லாம் எழுகின்றன. இந்த அளவுக்கான தகவல்களைக் கையாள்வதும் இன்னும் பெரிய சிக்கல் அல்லவா?

இந்தப் பிரச்சினைக்கு தான் பிளாக்செயின் சார்ந்த விநியோகம் முழுமையான தீர்வாக அமையும் என்கின்றனர். பிளாக்செயின் பரவலாக்கப்பட்ட பதிவேடாக இருப்பதோடு, அதன் மூலம் ஸ்மார்ட் ஒப்பந்தங்களையும் உருவாக்கிக்கொள்ள முடியும். ஒரு பாடல் தொடர்பான அனைத்துப் பங்கேற்பாளர்களின் உரிமையையும் பிளாக்செயினில் வெளிப்படையான முறையில் பதிவேற்றலாம். இதை அனைவரும் பார்க்க முடியும். ஆனால், யார் ஒருவரும் கைவைத்து மாற்ற முடியாது.

மியூசிக் காயின்

அதேபோல் ஒரு பாடல் தொடர்பான காப்புரிமை யாரிடம் எல்லாம் இருக்கிறது எனக் கண்டறிந்து அவர்கள் அனைவரையும் எளிதாகத் தொடர்பு கொண்டு ஒப்பந்தம் செய்து கொள்ள முடியும். அதற்கேற்ப பலனும் பிரித்தளிக்கப்படும். யாரும் வஞ்சிக்கப்படப் போவதில்லை.எனவேதான் இதை இசைத்துறையின் எதிர்காலம் என்கின்றனர். ஏற்கனவே பல முன்னோடி முயற்சிகள் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மியூசிகாயின் (Musicoin) இதற்கான உதாரணமாக அமைகிறது. மியூசிகாயின் தனக்கான சொந்த விநியோக மேடையைப் பெற்றிருப்பதோடு அதில் பாடல்களைக் கேட்டு ரசிப்பதற்கான பிரத்யேக பரிவர்த்தனை நாணயத்தையும் ($MUSIC) கொண்டிருக்கிறது.

இசைக்கலைஞர்கள் இதில் தங்கள் இசையை விநியோகிக்கலாம். ரசிகர்கள் அதை ஸ்ட்ரீமிங் முறையில் கேட்டு ரசிக்கலாம். பாடல் கேட்கப்படும் அளவுக்கு ஏற்ப கலைஞர்களுக்கான உரிமத்தொகை கிடைக்கும். மற்ற தரப்பினருக்கும் அவர்கள் உரிம விகிதத்துக்கும் ஏற்ப பலன் கிடைக்கும். இதைவிட முக்கியமாக இந்த முறையில் ரசிகர்களுக்கும் பலன் கிடைக்கும் என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்.

ஏன் இலவசமாகிறது?

ரசிகர்கள் இலவசமாகவே பாடல்களைக் கேட்கலாம். ஆனால், அதை நண்பர்களுக்குப் பரிந்துரைப்பதன் மூலம் டிஜிட்டல் நாணயத்தைப் பரிசாகப் பெறலாம். எல்லாம் இலவசமானது என்றால் எப்படி வருவாய் கிடைக்கும் எனக் கேட்கலாம். அடிப்படையில், இசையை அறிமுகம் செய்து அதைப் பிரபலம் ஆக்குவதற்கானது இந்த மேடை.

இப்படி ரசிகர்கள் சேரும்போது, கச்சேரி டிக்கெட் விற்பனை, இதர பொருட்கள் விற்பனை மூலம் வருவாய் குவியும். இந்தப் பொருட்களை டிஜிட்டல் நாணயம் கொண்டு வாங்கலாம். கலைஞர்களுக்கும் டிஜிட்டல் நாணயம் வழங்கப்படும். இதை டாலராக மாற்றிக்கொள்ளலாம்.

ரசிகர்களைப் பொறுத்தவரை புதிய இசையைக் கண்டறிந்து அதைப் பிரபலமாக்குவது பலன் அளிப்பதாக அமையும். மனதுக்குப் பிடித்த இசையைக் கேட்டு ரசிக்கும் வாய்ப்பைத் தவிர இது போனசாக அமையும். இசைக் கலைஞர்களைப் பொறுத்தவரை வர்த்தக நிறுவனம் மற்றும் இடைத்தரகர்கள் சிக்கல் இல்லாமல் நேரடியாக ரசிகர்களைச் சென்றடைந்து தங்கள் இசையின் வீச்சுக்கு ஏற்ப பலன் பெறலாம்.

தற்போது சோதனை முறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த முயற்சிகள் பிரபலமாகும்போது இசைத்துறைக்கான புதிய பாதை திறந்துவிடும். அங்கே திருடர்களுக்கு இடமில்லை!

படம்:  உதவி ஞானம்
கட்டுரையாளர், பத்திரிகையாளர், வலைப்பதிவாளர், கவுரவ விரிவுரையாளர்
தொடர்புக்கு: enarasimhan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 mins ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்