ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த திருநெல்வேலி சுப்ரமண்யம்பிள்ளை பாலையா என்கிற டி.எஸ். பாலையா ஒரு நாள் சர்க்கஸ் பார்க்கப் போனார். அங்கு நடந்த வீர சாகச விளையாட்டுகள் அவரை வெகுவாகக் கவர்ந்துவிட்டன. சர்க்கஸில் சேர்ந்து புகழ்பெற வேண்டும் என்று விரும்பினார். நண்பர்களிடம் ஆலோசனை கேட்டபோது, ‘எனக்குத் தெரிந்தவர் சர்க்கஸ் கம்பெனியில் இருக்கிறார். உன்னை நான் சேர்த்துவிடுகிறேன்’ என்றான் ஒருவன்.
ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாகத் திருடி, அப்பாவின் சட்டைப் பையிலிருந்து ஒரு நல்ல தொகையைச் சேகரித்துவிட்டார். ‘மதுரைக்குப் போக வேண்டும்’ என்றான் நண்பன். போய்ச்சேர்ந்தார்கள். அவனுக்குப் பலகாரம் வாங்கிக்கொடுப்பதே முக்கியமான வேலையாக இருந்தது. பாலையாவை அங்குமிங்கும் அலைக்கழித்த நண்பன், ‘நாம தேடி வந்தவரு இந்த ஊர்ல இல்ல, மானாமதுரைக்குப் போனா பாக்கலாம்’ என்றான். பேருந்தில் ஏறி உட்கார்ந்திருக்கும்போது உள்ளூர்க்காரர் ஒருவர் பையன்களைப் பார்த்து, என்ன, ஏது என்று விசாரித்திருக்கிறார். இரண்டு பேரும் வேறுவேறு காரணம் சொன்னதால், அவருக்குச் சந்தேகம் வந்துவிட்டது. பாலையாவின் டவுசர் பாக்கெட்டில் கைவிட்டுப் பார்த்தபோது, நிறைய பணம் இருப்பது தெரிந்தது. ‘அப்பாவிடம் சொல்லாமல் இருக்கணும்னா எனக்கு கள்ளு குடிக்க காசு கொடு’ என்று வாங்கிக்கொண்டு பையன்களைக் கண்டுகொள்ளாமல் போய்விட்டார்.
மானாமதுரைக்கு வந்த அன்று இரவு ஒரு வீட்டின் திண்ணையில் படுத்துத் தூங்கிய பாலையா, காலையில் எழுந்தபோது நண்பனைக் காணவில்லை. பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிப் போய்விட்டான் என்பது தெரியவந்தது. அறியாத ஊரில் அலைந்து திரிந்தவருக்கு அடைக்கலம் கொடுத்தார் சாப்பாட்டுக் கடை நடத்திவந்த ஒரு பிராமணப் பெண்மணி. தான் ஒரு மலையாள பிராமணன் என்று அவரிடம் பொய் சொல்லும் சாதுர்யம் பாலையாவுக்கு இருந்ததால், சின்னச் சின்ன வேலைகளைச் செய்துகொடுத்துவிட்டு, மூன்று வேளையும் வயிறை நிரப்ப முடிந்தது.
சாப்பாட்டுக் கடைக்குப் பக்கத்திலேயே ஒரு கசாப்புக் கடை. அதன் உரிமையாளர் ஒரு நாடகக் கம்பெனி ஆரம்பிக்க இருக்கிறார் என்பதை மோப்பம் பிடித்த பாலையா, சாப்பாட்டுக் கடையிலிருந்து கசாப்புக் கடைக்கு மாறினார். நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எல்லா வேலைகளையும் கஷ்டப்பட்டு செய்துவந்தார்.
ஒரு மாதம் ஆகிவிட்டது. கறிக்கடை நடக்கிறதே தவிர, கலைக் குழு நடக்கப்போவதில்லை என்ற உண்மை புரிந்தது. கோபமடைந்த பாலையா, கடையை விட்டு வெளியேவந்து, கல்லெடுத்து கடைக்காரரின் மேல் வீசினார். ஆத்திரமடைந்த கடைக்காரர், கத்தியை எடுத்துக்கொண்டு பாலையாவை விரட்ட, சாப்பாட்டுக் கடையில் ஒளிந்து தப்பித்த பாலையா, கடைக்காரப் பெண்மணி தந்த பத்து ரூபாயைக் கொண்டு ஊருக்குப் போய்ச்சேர்ந்தார்.
திருநெல்வேலியில் நாடகங்கள் நடத்திவந்த நாகலிங்கம் செட்டியாரின் பாலமோகன சங்கீத சபாவில் பாலையாவுக்கு இடம் கிடைத்தது. மாதம் ஆறு ரூபாய் சம்பளம். கந்தசாமி முதலியார் வாத்தியாராக இருந்து பாடம் சொல்லிக்கொடுத்தார். ‘மேனகா’, ‘பதிபக்தி’ நாடகங்களில் நடித்த பாலையாவுக்கு ‘சதி லீலாவதி’ படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் கெட்ட எண்ணத்துடன் கதாநாயகியின் கையைப் பிடித்து இழுக்கும் பாலையாவைப் பார்த்துத் தாய்மார்கள் திட்டினார்களாம். பாலையாவுக்குப் பட வாய்ப்பு தொடர்ந்தது.
‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் நாகேஷிடம் கதை கேட்டு மிரள்வது, ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில்’ ரயில் பெட்டியில் சி.கே. சரஸ்வதியிடம் செய்யும் குறும்பு, ‘திருவிளையாடல்’ படத்தில் ஆணவம் பிடித்த ஹேமநாத பாகவதர் பாத்திரம் எல்லாம் பாலையாவை என்றும் நினைவில் நிறுத்தும்.
படங்கள் உதவி: ஞானம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago