இயக்குநரின் குரல்: அண்ணனும் தம்பியும் உருவாக்கிய கதை!

By கா.இசக்கி முத்து

கதாநாயகர்கள் சாகசம் செய்வதைத்தான் அதிக படங்களில் பார்த்து வருகிறோம். சில படங்களில் மட்டுமே சர்க்கஸில் விலங்குகளின் சாகசத்தைப் பார்த்திருப்போம். தற்போது முழுவதும் சர்க்கஸ் பின்னணியிலே ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் சரவண ராஜேந்திரன். இயக்குநர் ராஜுமுருகனின் அண்ணன் என்பதால் படத்துக்குக் கூடுதல் எதிர்பார்ப்பு. படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் இருந்தவரிடம் பேசியதிலிருந்து...

படத்தின் கதைக்களம் குறித்துச் சொல்ல முடியுமா?

ஒரு எமோஷனான காதல் கதை. 1990 -ளில் கேரளா மற்றும் வட மாநிலங்களிலிருந்து சர்க்கஸ் போடுவதற்குத் தமிழகத்துக்கு வருவாங்க. இப்போது பாக்குற மாதிரி பெரிய சர்க்கஸாக இல்லாமல், சின்னதா இருக்கும். அக்குழுவில் சுமார் 20 முதல் 40 பேர் வரை இருப்பாங்க. திருச்சி, தஞ்சாவூர் என ஒவ்வொரு ஊராகப் போட்டுட்டு இருப்பாங்க.

அப்படி சர்க்கஸ் போட கொடைக்கானல் வர்ற ஒரு குழு. அக்குழுவில் இருக்கிற பெண்ணுக்கும், கொடைக்கானலில் பாட்டு கேசட் பதிவுப் பண்ணிக் கொடுக்குற கடை வைச்சிருக்கும் பையனுக்கும் இடையேயான காதல்தான் முழுப்படமும். 1993-ல் கதை தொடங்கும். கிளைமாக்ஸ் 2010-ல் முடியும்.

படத்தில் சர்க்கஸ் காட்சிகள் உண்டா?

உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றில் நடப்பாங்க, விலங்குகளை வைத்து சர்க்கஸ் பண்ணுவாங்க என சர்க்கஸ் என்றவுடன் நம் மனதுக்குள் சில விஷயங்கள் தோன்றும். அப்படி எதுவுமே இல்லாத நிஜமான, யதார்த்தமான சர்க்கஸைத் தான் படத்தில் காட்டியிருக்கேன்.

சினிமாவுக்குத் தேவையான விஷயத்தையும் சேர்த்திருக்கேன். இரண்டாம் பாதிப் படத்தில் ஒரு பாட்டின் மாண்டேஜில் மட்டும் யானை வந்துட்டுப் போகும். அதைத் தான் ஃபர்ஸ்ட் லுக்காக வெளியிட்டோம். இந்தப் படத்தின் ஜீவனே காதல் தான்.

சர்க்கஸ் குழுவை எப்படித் தேர்வு செய்தீர்கள்?

1990-களில் சர்க்கஸில் பெண்கள் ஒரு நிகழ்ச்சி பண்ணுவாங்க. அதுதான் கதையில் நாயகியின் பின்புலம். அது என்னவென்று சொன்னால் கதையையே ஊகித்துவிடலாம். தமிழ்நாட்டில் சர்க்கஸ் குடும்ப பின்னணியில் உள்ள ஒருவர் மட்டுமே, இப்போது அதைப் பண்ணிட்டு இருக்கார். அவரைத் தேடிப் பிடிச்சோம். அவர் மூலமாக 5 சர்க்கஸ் குழுக்களிடம் பேசினேன். எதுவுமே கதைக்குப் பொருத்தமாக இல்லை.

குஜராத்காரர் ஒருத்தருடைய சர்க்கஸில் பல மாநிலத்துக்காரர்கள் ஒன்றிணைந்து இருந்தார்கள். அதுக்குப் பெயர் ‘கமலா சர்க்கஸ்’. கேரளாவில் எரிமேலி என்ற ஏரியாவில் சர்க்கஸ் போட்டுட்டு இருந்தாங்க. அவங்களை வரச் சொன்னவுடன் 3 லாரி நிறையப் பொருட்களுடன் வந்தாங்க. சுமார் 40 பேர் இருந்தாங்க. கதைக்கும் ரொம்பப் பொருத்தமா இருந்ததால், அவங்களையே படம் முழுக்க உபயோகப்படுத்தியிருக்கிறேன்.

முழுக்கப் புதுமுகங்கள் ஏன்?

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுடைய அப்பா ஈஸ்வரன் மூலமாகத் தான் நாயகன் ரங்கா அறிமுகமானார். கதைக்குப் பொருத்தமாக இருந்ததால் ஒப்பந்தம் பண்ணினேன்.  நாயகி சர்க்கஸ் முகமாக இருக்கணும், கதாபாத்திரமும் வட இந்தியப் பெண் என்பதால் இரண்டுமே கலந்திருக்கணும் என்று முடிவு பண்ணி நிறையப் பேரைப் பார்த்தோம். ‘மாஸான்’ இந்திப் படம் பார்த்தேன். 

அதில் நடிச்ச ஸ்வேதா திரிபாதி என் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமா இருப்பாங்க என்று தோன்றியது. ஏனென்றால், சர்க்கஸில் நிறையப் பெண்கள் கொஞ்சம் குள்ளமாவே இருப்பாங்க. இவங்களும் அப்படியே இருந்தாங்க, முழுக்கதையையும் கேட்டுட்டு உடனே ஓ.கே சொல்லிட்டாங்க. அவங்களுக்கு இந்தி தெரியும், தமிழில் ஒரு வார்த்தை தெரியாது. 15 நாட்கள் பயிற்சி பண்ண சென்னை வந்தாங்க.

அவங்களோட காட்சிகள்,  சர்க்கஸ் ஆகியவற்றைச் சொல்லிக் கொடுத்தோம். 3 நாட்களில் பிரமாதமா கத்துக்கிட்டாங்க. மேடை நாடகத்தில் நடிப்பவர், உதவி இயக்குநர் எனப் பல தளங்கள்ல வேலை செய்தவர். என்ன சொன்னாலும் உடனே பிக்-அப் பண்ணி செஞ்சி முடிஞ்சுடுவாங்க.

சர்க்கஸ் பின்னணியில் படம் இயக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி?

‘ஜோக்கர்’ படம் தொடங்குவதற்கு முன்னும், படம் வெளியான பின்பும் பல கதைகள் பேசிட்டே இருந்தோம். நான் ஒரு கதாபாத்திரம், அதன் பின்னணி உள்ளிட்ட விஷயங்களை வைச்சிருந்தேன். ராஜுமுருகன் சர்க்கஸ் சார்ந்த ஒரு விஷயம் பண்ணலாம் என்று பேசிகிட்டு இருந்தான். அப்போது தான் இந்த இரண்டையும் சேர்ந்து பண்ணினால் என்ன என்று பேசத் தொடங்கினோம். அப்படி உருவான கதைத் தான் ‘மெஹந்தி சர்க்கஸ்’. அண்ணன் - தம்பி இருவரும் சேர்ந்து உருவாக்கின கதை இது.

பாலுமகேந்திராவிடம் பணிபுரிந்திருக்கிறீர்கள். அவரிடம் கற்றுக் கொண்டது என்ன?

ஒரு படைப்பை எப்படி நேர்மையாக அணுகுவது என்பதைக் கற்றுக் கொண்டேன். சிறுகதை, நாவல் போன்றவற்றைத் திரைக்கு எடுத்துவரும்போது, காட்சியாக அணுகும் விதத்தைக் கற்றுக் கொண்டேன். அவரது படைப்பு சார்ந்த நேர்மை ரொம்பப் பிடிக்கும். ஒருவனுடைய தோல்வி அல்லது மரணம் ஆகியவற்றைக் கொண்டாடும் தன்மையில் பண்ணும்போது, நேர்மையாக அணுகுவார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்