இந்தியத் திரையுலகின் கவனம் ஸ்ரீதர் மீது திரும்பியிருந்த நேரம் அது. அவருடைய தாய்மாமன் ஆந்திராவில் ஒரு பெண்ணைப் பார்த்துக் கல்யாணத்துக்குப் பேசிவிட்டார்.
கோபு, கலை இயக்குநர் கங்கா, ஸ்டில்ஸ் அருணாச்சலம் மூவரும் மாப்பிள்ளைத் தோழர்களாக ஸ்ரீதரால் இழுத்துச் செல்லப்பட்டனர். நெல்லூர் அருகே இருந்த ஒரு கிராமத்துக்குப் பெண் பார்க்கச் சென்றார்கள். பெண் நல்ல குடும்பப் பாங்காக இருந்தார். ஆனால், ஸ்ரீதரின் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. இதைக் கண்ட தாய்மாமன் பெண்ணின் தந்தையை அழைத்து நாசூக்காகப் பேசி சிரமத்துக்கு மன்னிக்கும்படி கேட்டுக்கொண்டுவிட்டார்.
அதன் பின்னர் சிலமாதங்கள் கழித்து ஸ்ரீதர் ஒரு நாள் கோபுவிடம் “டேய்... ராணிமேரி கல்லூரியில் கடைசி வருடம் படிக்கிற பெண்ணாம். பெயர் தேவசேனா. வீட்ல பேசி முடிச்சிட்டாங்க. நானும் ஓகே சொல்லிட்டேன். இன்னும் யாருக்கும் சொல்லலை. உனக்குத்தான் முதல்ல சொல்லச் சொன்னாங்க'' என்றார். ஸ்ரீதர் – தேவசேனா திருமணம் மிக விமரிசையாக மவுண்ட் ரோடு ஆபட்ஸ்பரி திருமண மஹாலில் நடந்தது.
கோபுவின் ஓட்டம்!
எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, சாவித்திரி, ராஜ்கபூர் குடும்பத்தினர், கிஷோர்குமார், மனோஜ்குமார், ராஜேந்திரகுமார், மீனாகுமாரி, வைஜெயந்திமாலா என்று மூன்று திரையுலகைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரப் பட்டாளமே ஆபட்ஸ்பரியில் திரண்டிருந்தது. ஸ்ரீதர் மணமேடையில் இருந்ததால், பாலிவுட் பட்டாளத்தைக் கவனிக்கும் பொறுப்பு கோபுவிடம் வந்தது. ராஜ்கபூர் எல்லார் எதிரிலும்.
''கோபுஜி...கோபுஜி...'' என்று அழைத்து அவரது தோளில் கைபோட்டுப் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்த உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் கோபுவை சூழ்ந்துகொண்டார்கள். ராஜ்கபூர் ரசிகைகளாக விளங்கிய பெண்கள் பலரும் ''கோபு... கோபு..!'' என்று கண்ணனைச் சுற்றும் கோபிகைகள் போல அவரைத் துரத்தத் தொடங்கினர். இந்தத் துரத்தல் ‘ராஜ்கபூருடன் ஒரு போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும், அவருடன் ஒருவார்த்தை பேச வேண்டும்’ என்ற கோரிக்கைக்காக. கோபுவின் மனைவி கமலா வேறு பக்கமாக பார்த்துக்கொண்டிருக்க, அவர் அருகில் அமர்ந்திருந்த ‘ஸ்டில்ஸ்’ அருணாச்சலத்தின் மனைவி, கோபுவை போட்டுக் கொடுத்தார்.
கமலாவை அழைத்து கோபுவைப் பெண்கள் சூழ்ந்துகொண்டிருக்கும் காட்சியைக் காட்ட, கோபுவின் மனைவியோ சடாரென்று மகிஷாசுரமர்த்தினியாக முகத்தில் உணர்ச்சியைக் காட்டி பல்லை நறநற என்று கடிக்கும் சப்தம் 200 அடி தூரத்தில் நின்றுகொண்டிருந்த கோபுவின் காதில் விழுந்தது. திரும்பி மனைவியின் முகத்தைப் பார்த்த கோபு, அந்த ரசிகைகளின் அன்புத்தொல்லையில் இருந்து மீளமுடியமால் தவித்தார்.
ராஜ்கபூர் எவ்வளவு பெரிய கதாநாயகனாக இருந்தாலும் மணமகன்தானே இன்றைய கதாநாயகன். இதை மனத்தில் நிறுத்திக்கொண்ட கோபு, அதுபோன்ற எசகுபிசகான போட்டோ செஷனோ, ஆட்டோகிராஃப் செஷனோ நடந்துவிடாதபடி கவனமாகப் பார்த்துக்கொண்டதோடு ரசிகைகளின் ‘இன்று முழுவதும் ராஜ்கபூர் இங்கேதான் இருப்பார். விருந்துக்குப் பிறகு சந்திக்க ஏற்பாடு செய்கிறேன்’ எனச் சமாளித்துக்கொண்டிருந்தார்.
ஆனால், மாலை நடந்த திருமண வரவேற்பிலும் இதே துரத்தல் காரணமாக மண்டபம் முழுக்க ஓடிக்கொண்டே இருந்தார் கோபு.
முக்கோணக் காதல்
ஸ்ரீதர், தேவசேனாவைப் பார்த்த நேரம் நல்ல நேரம்தான். அவருக்கு உற்ற துணைவியாக, ஏற்றங்கள், இறக்கங்கள் எல்லாவற்றையும் ஒரே மாதிரி பாவித்து கணவனுக்கு ஆதரவை நல்கி, ஸ்ரீதரின் பக்க பலமாக நின்றார் தேவசேனா. ஸ்ரீதருக்கு அவர் ஒரு பெரிய அஸெட்.
திருமண வாழ்க்கை ஸ்ரீதருக்கு வண்ண மயமாக இருந்தது போலும். காரணம் திருமணத்துக்குப் பின் கறுப்பு - வெள்ளை படங்களைவிட, கலர் படங்களை எடுக்கும் ஆர்வம் அவருக்கு அதிகரித்தது. அப்போதுதான் ஸ்ரீதருக்கு முக்கோணக் காதல் கதை ஒன்று தோன்றியது. அதுவே சித்ராலயா நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக அமைந்த ‘வெண்ணிற ஆடை’.
பள்ளி மாணவி ஒருவருக்குப் பதின் வயதிலேயே திருமணம் நடந்து விடுகிறது. ஒரு விபத்தில் கணவன் இறந்து விடுகிறான். அதனால் மனநிலை பாதித்த அவள், தனக்குச் சிகிச்சை அளிக்கும் டாக்டரைக் காதலிக்கத் தொடங்குகிறாள். அந்த டாக்டரோ ஏற்கெனவே ஒரு பெண்ணைக் காதலித்துக்கொண்டிருக்கிறார்.
இந்தக் கதைக்குக் கதாநாயகி தேடும்படலம் தொடங்கியது. இவரைப் போடலாம், அவரைப் போடலாம் என்று கோபு ஆலோசனை வழங்கிக்கொண்டிருக்க, ஸ்ரீதர் அவரை யோசனையுடன் பார்த்தார். “கோபு.. இந்தக் கதையில் வரும் இளம் கைம்பெண் கதாபாத்திரத்துக்கு மேல்தட்டில் பிறந்து வளர்ந்த மாடர்ன் லுக் கொண்ட ஒரு டீன் முகம் தேவை, இந்த நிமிடம் முதல் தேடத் தொடங்கு” என்றார். கோபுவுக்குத் தலை சுற்றியது. நாட்கள் ஓடியதே தவிர நாயகி கிடைத்தபாடில்லை.
கிடைத்தார் நாயகி!
சித்ராலயா குழுவினர், எம்.என். நம்பியார் ஆகியோர் சைதாப்பேட்டையில் இருந்த ஜிம்கானா நீச்சல் குளத்துக்குப் போவது வழக்கம். ஒரு நாள் ஸ்ரீதரும் கோபுவும் நீச்சலுக்குச் சென்றிருந்தனர். அப்போது தற்செயலாக ஸ்ரீதரின் பார்வை அங்கே நீந்திக்கொண்டிருந்த பதினைந்து வயதே மதிக்கத்தக்கப் பெண்ணின் மீது விழுந்தது.
“கோபு…அந்தப் பெண்ணைப் பாரேன்..!'' என்று ஸ்ரீதர் காட்ட, திரும்பிப் பார்த்தார் கோபு. கான்வென்ட் மாணவியின் முகமாகவும், நவ நாகரிகமாகவும் தோற்றமளித்தார் அந்தப் பெண். துறு துறு கண்களுடன், நளினமாக நடந்து, இவர்களைக் கடந்து சென்று, ஏணிப்படிகளில் ஏறி, ராக்கெட்டைப் போல் தலைகீழாக நீரில் பாய்ந்து, லாகவமாக மேலே வந்து டால்பீனைப் போல் நீந்திக்கொண்டிருந்தார். “அந்தப் பெண் யாராக இருக்கும், கொஞ்சம் விசாரியேன்” என்று ஸ்ரீதர் சொல்ல, கோபுவுக்கு ஒரு யோசனை.
அந்தப் பெண்ணை பலமுறை அவர் நீச்சல் குளத்தில் பார்த்திருந்தார். ஒருநாள் அந்தப் பெண்ணுடன் அவருடைய தாயார் வந்திருந்தபோது அவருடன் நடிகர் வி.கோபாலகிருஷ்ணன் பேசிக்கொண்டிருந்ததை கோபு கவனித்திருந்தது நினைவுக்கு வந்தது.
கோபாலகிருஷ்ணன் கோபுவுக்கு நண்பர்தான். அவரிடம் போன் செய்து கேட்டபோது, “அந்தப் பெண், நடிகை சந்தியாவின் மகள். என் குடும்ப நண்பர் சந்தியா” என்றார் கோபாலகிருஷ்ணன். அவரிடம் சித்ராலயாவின் புதுப்படத்துக்குக் கதாநாயகி தேடும் படலத்தைச் சொல்லி, ‘அந்தப் பெண்ணை அழைத்தால் நடிக்க வருவாரா’ என்று கேட்டார். '
'நான் பேசி அழைத்து வருகிறேன்.'' என்று உறுதிதந்த வி.கோபாலகிருஷ்ணன், சொன்னபடியே அடுத்த இருநாட்களில் சந்தியாவையும் அவருடைய மகளையும் சித்ராலயா அலுவலகத்துக்கு அழைத்துக்கொண்டு வந்தார். அந்தப் பெண்தான் ஜெயலலிதா.
துணிந்து எடுத்த முடிவு
ஸ்ரீதர் ஜெயலலிதாவிடம் “எதையாவது பேசி நடித்துக் காட்டுங்க” என்றார். அடுத்த நிமிடம் ஷேக்ஸ்பியரின் ஆங்கில நாடகத்திலிருந்து மோனோ ஆக்ட்டிங் ஒன்றை நடித்துக் காட்டினார். அவரது ஆங்கில உச்சரிப்பு மிகச் சிறப்பாக இருந்தது. கதைப்படி கான்வென்டில் படித்த ஒரு பெண்ணின் கதை என்பதால் அந்தக் கதாபாத்திரத்துக்குச் கனகச்சிதமாகப் பொருந்தினார் ஜெயலலிதா.
ஸ்ரீதர் ‘வெண்ணிற ஆடை’ கதையை சந்தியாவிடமும், ஜெயலலிதாவிடமும் சுருக்கமாகச் சொன்னபோது, சந்தியா பதில் ஏதும் கூறவில்லை. “யோசித்துவிட்டுச் சொல்லுகிறோம்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பிச் சென்றுவிட்டார்கள். பின்னர் கோபுவுக்கு போன் செய்துபேசினார் சந்தியா. “டைரக்டர்கிட்டச் சொல்லத் தயக்கமா இருக்கு, அம்மு நடித்த கன்னட படத்துலயும் அவளுக்குக் கைம்பெண் கேரக்டர்.
இப்போ ‘வெண்ணிற ஆடை’யிலும் அதே போன்ற கேரக்டர். மனசுக்குக் கஷ்டமா இருக்கு. வேண்டாம்னு பார்க்கிறேன்'' என்று சொல்ல, சந்தியாவின் முடிவை ஸ்ரீதரிடம் தெரிவிப்பதாகக் கூறினார் கோபு. சந்தியா கூறியதை ஸ்ரீதரிடம் தெரிவிப்பதற்குள், சந்தியா வீட்டிலிருந்து மீண்டும் கோபுவுக்கு போன். இம்முறை ஜெயலலிதாவே பேசினார்.
“சினிமாவில் நடிப்பதுதான் புரஃபெஷன் என்று தேர்ந்தெடுத்து விட்டேன். பிறகு எந்தக் கதாபாத்திரமாக இருந்தால் என்ன? நான் இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் இயக்குநரிடம் கூறிவிடுங்கள்'' என்று தெளிவாக, துணிவான குரலில் தெரிவித்தார் ஜெயலலிதா. நீச்சல் குளத்தில் கிடைத்த முத்துபோல் நாங்கள் கண்டுபிடித்த ஜெயலலிதா, அம்முவாகத் தமிழகத்தில் காலடி வைத்து, திரையில் கனவுக் கன்னியாக வெற்றிபெற்று, அரசியல் கடலில் குதித்து எதிர்நீச்சல் அடித்து, அம்மாவாக மறைந்தவர்.
(நினைவுகள் தொடரும்)
தொடர்புக்கு: tanthehindu@gmail.com
படங்கள் உதவி: ஞானம்
பாலாஜிக்கு மறுபடியும் வெளிய ஒரு பிக்பாஸ் வெயிட்டிங் - நித்யா @ தேஜு
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago