சி(ரி)த்ராலயா 31: ‘நெஞ்சிருக்கும் வரை’ மறக்க முடியாது!

By டி.ஏ.நரசிம்மன்

கோபு எழுதி அரங்கேற்றிய ‘திக்கு தெரியாத வீட்டில்’ நாடகத்துக்குத் தமிழகத்தின் பல நகரங்களில் வரவேற்பு கிடைத்தது. அந்த நாடகம் சென்னையில் நடந்தபோது அதற்குத் தலைமையேற்றுப் பேசிய ஜெயலலிதா, “இந்த நாடகம் படமானால் அதில்வரும் துணிச்சலான கதாநாயகி வேடத்தில் நான் நடிக்கத் தயார்” என்று மேடையில் அறிவித்தார். நாடகத்தைப் பார்த்த பாபு மூவீஸ் சுந்தரம் அதை ‘வீட்டுக்கு வீடு’ என்ற தலைப்பில் தயாரித்தார். ஆனால் அறிவித்தபடி ஜெயலலிதாவால் நடிக்க முடியவில்லை.

அப்போது எம்.ஜி.ஆர் படங்களில் அவர் படு பிஸியாகிவிட்டார். அதனால் லட்சுமி நடித்தார். முத்துராமன் நடித்த கதாபாத்திரத்தை ஜெய்சங்கரும், கோபி செய்த முரட்டு கதாபாத்திரத்தை முத்துராமனும், மணிமாலா கதாபாத்திரத்தை ‘வெண்ணிற ஆடை’ நிர்மலாவும் செய்தனர். அந்தப் படத்தில்  வி.கே. ராமசாமி - நாகேஷ் இருவரும் அப்பா மகனாக வந்து செய்யும் அமர்க்களம் பெரும் வரவேற்பினை பெற்றது.

பம்பாய் பயணம்

பம்பாயின் புகழ்பெற்ற  ஷண்முகானந்தா ஹாலில் மூன்று தினங்களுக்கு உங்கள் நாடகங்களை நடத்த வாருங்கள் என்று கோபுவுக்கு பம்பாய்  தமிழ்ச் சங்கம் அழைப்பு விடுத்தது. அதனால்  பம்பாய் மெயிலில் நட்சத்திர பட்டாளம் கிளம்பியது. முத்துராமன், மனோரமா, மூர்த்தி, மணிமாலா, கோபாலகிருஷ்ணன், ரேணுகா, ஆகியோர் தங்கள் குடும்பத்தோடு வந்தனர். கோபுவும் தனது குடும்பத்தினரோடு சென்றார். ஒரு ரயில் பெட்டி முழுவதும் யூனிட்டி கிளப் அங்கத்தினர்கள்தான்.

நடிகை நடிகையரைப் பார்க்க அந்த ரயில் பெட்டியைச் சுற்றி கூட்டம். ரயில் கிளம்ப ஒரு மணிநேரம்வரை இருந்ததால் கூட்டம் கூடிக்கொண்டே இருந்தது. கொஞ்ச நேரத்தில் ரயில்வே போலீஸார் ஓடிவந்து அங்கே கூட்டத்தை கலைக்க வேண்டி வந்துவிட்டது. மும்பை ஷண்முகானந்தா ஹாலில்தான் அனைவரும் தங்கினார்கள். முதல் நாள் ‘மாயா பஜார்’, இரண்டாம் நாள் ‘ஸ்ரீமதி’, மூன்றாம் ‘நாள் திக்கு தெரியாத வீட்டில்’ என்று மூன்று நாடகங்களும் அங்கே அமோக வரவேற்பைப் பெற்றன.

இப்படி கோபு நாடகங்களில் மும்முரமாக இருந்த நேரத்தில் ஒருநாள்  கோபுவைத் தேடி அவரது திருவல்லிக்கேணி வீட்டிற்கு வந்தார் ஸ்ரீதர். “என்னடா கோபு! ஆபிஸுக்கு வரவே மாட்டேங்கிறே! சிவாஜியை வச்சு புதுசா படம் பண்ணப் போறேன். உன் ட்ராமாவை மூட்டைக் கட்டி வச்சுட்டு என்னோட பெங்களூரு வா'' என்று கையோடு கோபுவை அழைத்துக்கொண்டு காரில் பறந்தார்.

காரில் திரைக்கதை

அந்தப் படம்தான் ‘நெஞ்சிருக்கும் வரை’. வேலை கிடைக்காமல் திண்டாடும் மூன்று படித்த இளைஞர்களின் உணர்ச்சிப் போராட்டம்தான் கதை. “ பெங்களூர் போய்ச் சேர்வதற்குள் காரிலேயே திரைக்கதையை விவாதித்து முடித்துவிடுவோம். நீ திரைக்கதையை எழுதிக்கொண்டே வா” என்றார் ஸ்ரீதர்.

 “ரூமில் அமர்ந்து எழுதினாலே, என் கையெழுத்து அலங்கோலமாக இருக்கும். ஓடும் காரில் எழுதச் சொல்லுகிறாய். பிறகு என்னுடைய கையெழுத்தை குறை சொல்ல கூடாது'' என்று கூறிப்பார்த்தார் கோபு. ஆனால் அதற்கெல்லாம் அசைந்துகொடுக்கவில்லை ஸ்ரீதர்.

ஸ்ரீதருக்கு மெதுவாகக் கார் ஓட்டி பழக்கமில்லாததால் கதையை விவாதிக்கும் சுவாரசியத்தில் ஸ்ரீதர் அடிக்கடி ஆக்ஸிலேட்டரை சடார், சடாரென்று மிதிக்க, அப்போதெல்லாம் ''பாத்து லாரி வருது !'' என்று கோபு சொல்வார். ஸ்ரீதரோ “ இந்த சீன்ல முத்துராமன்ல வரணும். எதுக்கு  லாரி வரனும்? '' என்பார் கூலாக. “ கதையில இல்லேப்பா.. எதிரே வருது. கதை சொல்லுற  சுவாரசியத்துல கவனத்தை ரோட்டுல வைக்க மறந்துடுரே! கதைக்கு வேகம் கொடுக்க நினைச்சு அதைக் காருக்கும் கொடுத்துடுறே.

பெங்களூரு போய் சேர்துக்குள்ளே திரைக்கதை முடியுதோ இல்லையோ நம்ம ரெண்டு பேர் கதையும் முடிஞ்சுடப்போறது. ‘நெஞ்சிருக்கும் வரை’னு தலைப்பு வெச்சுட்டே.. படம் ரிலீஸ் ஆகும்வரை நமக்கு உயிரு இருக்கணும் இல்லே'' என்று கோபு அலற, “ இதுதாண்டா… உன்னோட இந்த நகைச்சுவை உணர்வுதாண்டா எனக்கு ஹார்லிக்ஸ். நீ பக்கத்துல இருக்கற வரைக்கும் எனக்கு எதுவும் ஆகாதுடா” என்று கூறிய ஸ்ரீதர் கூறியதுபோவே முழுக்கதையும் காரிலேயே விவாதித்து முடித்துவிட்டார். அதிவேகத்தில் பறந்த காரில் கோபு ஒன்லைனை எழுதிவந்ததால் அது ஒரு கோழி கிறுக்கலாக இருந்தது. 

ஸ்ரீதரின் புதுமை

பிறகு ஹோட்டல் போய் சேர்ந்ததும் கோபு தெளிவாக எழுதிக்கொடுத்தார். சிவாஜி, முத்துராமன், கோபாலகிருஷ்ணன், கே. ஆர். விஜயா, கீதாஞ்சலி என்று நட்சத்திரங்களையும் தேர்ந்தெடுத்தது சித்ராலயா. பெங்களூரு உட்லண்ட்ஸ் ஹோட்டலில் அமர்ந்து கதைக்கான உரையாடலை ஸ்ரீதரும் கோபுவும் உருவாக்கினார்கள்.

 ‘ஏழைப் பட்டதாரிகள்’ பற்றிய படம் என்பதால் வறுமையைக் காட்ட கறுப்பு வெள்ளைதான் சிறப்பாக இருக்கும் என்கிற காரணத்துக்காக ஸ்ரீதர் இப்படத்தைக் கறுப்பு வெள்ளையில் எடுத்தார். மேலும் யாரும் செய்ய துணியாத ஒரு புரட்சியை இந்தப் படத்தில் செய்தார். இந்தப் படத்தின் கதாபாத்திரங்கள் யாருக்குமே மேக்கப் கிடையாது.

விசு எனும் விஸ்வநாதன்

ஜெமினி நிறுவனத்தில் துணை ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி அனுபவம்பெற்ற பாலகிருஷ்ணன்தான்  இந்த படத்தின் ஒளிப்பதிவாளர். இசையமைப்பாளர் சித்ராலயாவின் ஸ்பெஷலான எம்.எஸ்.வி. அவரை ஒப்பந்தம் செய்வதற்காக கோபு சென்றபோது, எம்.எஸ்.வி. கொடைக்கானல் சென்றிருப்பதாக அவரது அம்மா கூறினார். கோபு வந்துவிட்டுப் போன விவரத்தை அம்மா சொன்னதும், ஹார்மோனியப் பெட்டியுடன் சித்ராலயா அலுவலகத்துக்கு வந்து விட்டார் எம்.எஸ்.வி.

“ என்ன விசு… குளுகுளுன்னு இருந்தாத்தான் இந்த ஹார்மோனியப் பெட்டியில ட்யூன் வருமா என்ன?” என்று உரிமையுடன் கிண்டல் செய்தார் கோபு. “ என்ன சடகோபா அண்ணா இப்படி சொல்லிட்டே… கொடைகானல்ல சிவாஜி படம் ஷூட்டிங்! அங்கேயே சிவாஜிக்கு டியூன் போட்டு காட்ட சொன்னாங்க. நாலு டியூன் போட்டேன். ஆனா ஷூட்டிங் நடக்கல. எதோ ‘மான்சூன்’னு ஒரு மிருகமாம். அது ரொம்ப தொல்லை கொடுக்குதாம் சிவாஜி அண்ணே சொன்னாரு'' என்றார் எம்.எஸ்.வி. அப்போது உள்ளே நுழைந்த ஸ்ரீதர் ''மான்சூன்னா மிருகம் இல்லே விசு, மழைக்காலம் வந்துடுச்சுன்னு அர்த்தம்.'' என்றார்.

''ஓ.. அப்படியா.! ஷூட்டிங் நடத்தறது கஷ்டம். மான்சூன் செட் ஆயிதுச்சுன்னு பேசிக்கிட்டாங்க. நான் ஏதோ மிருகம்னு நினைச்சுக்கிட்டேன்'' என அப்பாவியாகச் சொன்னார் எம்.எஸ்.வி. அந்தக் குழந்தைமைதான் எம்.எஸ்.வி.

சித்ராலயா நிறுவனம்

எம்.எஸ்.வி.க்கு பிறந்த வீடு போன்றது. கம்போஸிங், பின்னணி இசை வேலை எதுவும் இல்லை என்றால் நேரே சித்ராலயா அலுவலகம் வந்து ஸ்ரீதர் கோபுவிடம் வம்படித்து கொண்டிருப்பார். எம்.எஸ்.வியின் அம்மா கண்டிப்பானவர். அவருக்கும் அம்மாவிடம் பக்தியும் பயமும் அதிகம். அப்படிப்பட்ட எம்.எஸ்.வி ஒருமுறை தனது அம்மாவிடம் வசமாக மாட்டிக்கொண்டார். 

(சிரிப்பு தொடரும்)
தொடர்புக்கு: tanthehindu@gmail.com
படங்கள் உதவி: ஞானம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்