பதினைந்து ஆண்டுகளைக் கடந்தும் ரன் அவுட் ஆகாத கதாநாயகிகளின் பட்டியலில் ஸ்ரேயா சரணுக்கும் இடமுண்டு. அவர் அதிகம் புழங்குவது டோலிவுட்தான் என்றாலும் சிம்பு, தனுஷ், ரஜினி என எந்த வயது நாயகனுக்கும் ஜோடியாகத் தன்னை பொருத்திக்கொள்வதில் கோலிவுட் அவருக்கு எப்போதுமே ஜாலிவுட். கடந்த மார்ச் மாதம் ரஷ்ய டென்னிஸ் விளையாட்டு வீரர் ஆன்ட்ரியை காதல் திருமணம் செய்துகொண்டார் ஸ்ரேயா.
திருமணத்தால் தன் திரைப் பயணத்தை நிறுத்தவிரும்பாத இவர், விரைவில் வெளியாக இருக்கும் ‘நரகாசூரன்’ படத்தில் அரவிந்தசாமியின் ஜோடியாக அசரடிக்க வருகிறார். அவருடன் ஒரு சந்திப்பு.
‘நரகாசூரன்’ என்ன வகையான படம், அதில் உங்கள் கதாபாத்திரம் எப்படிப்பட்டது?
இதுவொரு இயக்குநரின் படம். எனக்குப் படத்தை போட்டுக்காட்டினார்கள். வியந்துபோனேன். பஸில் (Puzzle) ஒன்றைக் கலைத்துபோட்டுவிட்டால், அது தனித்தனி துண்டுகளாகிவிடும். அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து சரியாகப் பொருத்தும் புதிர் விளையாட்டு போன்றதுதான் இந்தப் படமும். பஸிலை சரியாகப் பொருத்தாவிட்டால் முழுமையான படம் கிடைக்காது. அப்படித்தான் இந்தப் படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும்.
‘நரகாசூரன்’ என்ற பஸில் விளையாட்டில் எனது கதாபாத்திரத்தை மட்டுமல்ல, எந்தக் கதாபாத்திரத்தையும் தனியே பிரித்து எடுக்க முடியாது. அவ்வளவு சிறந்த திரைக்கதை. நடுவிலிருந்து கதை தொடங்கினாலும் படத்தின் முதல் ஐந்து நிமிடங்களை நீங்கள் தவறவிட்டால் படத்தைத் தொடர முடியாது. அந்த அளவுக்கு திரைக்கதை, கதாபாத்திரங்களை எழுதியிருக்கிறார் கார்த்திக் நரேன்.
எனது கதாபாத்திரத்தால்தான் கதையில் முக்கிய திருப்பம் நடக்கிறது. அரவிந்தசாமி துருவா என்ற கேரக்டரில் வருகிறார். நான் அவரது மனைவியாக, கீதா என்ற கேரக்டரில் வருகிறேன். மிகவும் வெகுளியானப் பெண். எதையும் சீரியஸாக எடுத்துக்கொள்ளாத நகைச்சுவை உணர்வுமிக்க பெண்ணாக நடித்திருக்கிறேன்.
‘அண்டர்பிளே’ செய்து நடிக்கும் வாய்ப்பு இந்தப் படத்தில் எனக்கு அமைந்துவிட்டது. நான் நடித்த ‘மனம்’ தெலுங்குப் படத்துக்குப் பிறகு நான் மிகவும் காதலிக்கும் இன்னொரு படம் என்றால், அது இதுதான். இந்தமுறை தமிழில் அமைந்துவிட்டது. அடுத்தமுறை எந்த மொழியில் இப்படி அமையும் என்று கூற முடியாது.
என்ன கதை என்று கூறமுடியுமா?
அது இயலாது. ஆனால், ‘கான்செப்ட்’ என்ன என்று கூறமுடியும். நாரகாசூரன் என்பது ஒரு கதாபாத்திரம் கிடையாது. ஓர் ஊரில் பல பொதுவான இடங்கள் உண்டு. அதில் ஒரு இடத்தைப் பற்றி மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை. அதை மத ரீதியாகப் பார்ப்பவர்கள் இருக்கலாம், மர்மம் நிறைந்த இடமாகவும் சிலர் பார்க்கலாம். இன்னும் சிலருக்கு அந்த இடம்பற்றிய நம்பிக்கை ஒரு கற்பிதமாகத் தோன்றலாம். இந்த எல்லா பார்வைகளையும் சரியான விகிதத்தில் படத்தில் பேலன்ஸ் செய்திருக்கிறார் இயக்குநர்.
அரவிந்தசாமியுடன் நடித்த அனுபவம் எப்படியிருந்தது?
மிகவும் எளிதாக இருந்தது. அவரது பல படங்களை நான் பார்த்திருக்கிறேன். சினிமாவின் அனைத்துத் துறைகளைப் பற்றியும் அவருக்கு நன்றாகத் தெரியும் என்பதைத் தெரிந்துகொண்டேன்.
இந்தக் கதாபாத்திரத்துக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று பரிந்துரைத்தது அவர்தான். அவர் என் மீது வைத்த நம்பிக்கையை உண்மையாக்க இந்தப் படத்தில் உழைத்திருக்கிறேன். அவருடன் இணைந்து வரும் காட்சிகளில் நான் இன்னும் அழகாகத் தோன்றுகிறேன் என்று படம் பார்க்கும்போது உணர்வீர்கள்.
தமிழைக் கற்றுக்கொண்டு நடிக்க வேண்டும் என்று நினைத்ததில்லையா?
ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டுமானால் அதில் தொடர்ந்து உரையாடவேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள் அமையாதது ஒரு காரணம். தமிழில் பிறர் பேசுவதை ஓரளவுக்குப் புரிந்துகொள்வேன். படப்பிடிப்பில் வசனங்களின் அர்த்தம் தெரிந்துகொண்டு ஒத்திகை செய்து, பேசி நடிப்பேன். இந்தப் படத்தில் எனக்கு மான்சி என்ற பாடகி குரல் கொடுத்திருக்கிறார்.
shreya 2jpgஆனால் எனது உதட்டசைவுகளைக் கொண்டு நானே குரல் கொடுத்திருப்பதுபோல் நீங்கள் உணர்வீர்கள். அதிக எண்ணிக்கையில் தெலுங்குப் படங்களில் நடித்ததால் ஓரளவு தெலுங்கில் பேச முடியும். என்னைப் பொறுத்தவரை திரைக்கதையை எழுதுபவர்களுக்கும் படத்தை இயக்குபவர்களுக்கும் கட்டாயம் மொழி தெரிந்திருக்க வேண்டும். என்னைப்போன்ற ஒரு நடிகருக்கு மொழி தடையாக இருக்கப்போவதில்லை. நடிகருக்கு கதாபாத்திரம் பொருந்துகிறதா என்பதுதான் முக்கியம்.
ஒரேமாதிரியான தோற்றம், அதே இளமை, ஸ்ரேயாவுக்கு மட்டும் இது எப்படிச் சாத்தியமாகிறது?
எப்போதும் என்னை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்பவள் நான். தினசரி உடற்பயிற்சி செய்தாலும் நடனம் மீது எனக்கிருக்கும் காதல், என் இளமைக்கு ஒரு முக்கிய காரணம் என்று நினைக்கிறேன். ஒரு நல்ல கதக் டான்ஸர் என்று என்னை நான் மதிப்பிடுவேன். தினசரி தியானம் செய்வதும் புத்துணர்ச்சி தருகிறது.
இவை அனைத்துக்கும் அப்பால் நிறைய பயணம் செய்கிறேன். பயணத்தில் புதிய புதிய மனிதர்களைச் சந்திக்கிறேன். அவர்களுடன் உரையாடுகிறேன். இது மனதையும் சிந்தனையையும் இளமையுடன் வைத்திருக்க உதவுகிறது.
கிழிந்தது போன்ற ஆடையை அணிந்திருக்கிறீர்களே, உங்களுக்குப் பிடித்த ஆடைதான் என்ன?
பட்டுப்புடவைகள். நவீன ஆடைகள் எவ்வளவு அணிகிறேனோ அதே அளவுக்குப் புடவைகளும் அணிவேன். சென்னை வரும்போது காஞ்சிபுரம் பட்டுப்புடவைகள் வாங்குவேன். ஒரு புடவையில் நெசவாளர்களின் பலநாள் உழைப்பு ஒளிந்திருக்கிறது. அதற்காகவே பட்டுப்புடவைகள் வாங்கும் பழக்கம் எனக்குண்டு.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago