சிவாஜியின் நடிப்புக்கு ஒரு படம்!

By செய்திப்பிரிவு

நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் காலந்தோறும் நம்மைக் கடந்துசெல்கின்றன. ஆனால் சில பல படங்களே கதாபாத்திரங்களுக்காகத் தலைமுறைகள் கடந்து கொண்டாடப்படுகின்றன. அந்த வரிசையில் 50 ஆண்டுகளைக் கடந்து நம் நினைவில் நிற்பவை ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தின் நாயகன் ‘சிக்கல்’ சண்முகசுந்தரமும் நாயகி ‘தில்லானா’ மோகனாம்பாளும். ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசனின் உலகத்தர நடிப்புத் திறனுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் பல கதாபாத்திரங்களில் சண்முகத்துக்குத் தனியிடம் உண்டு.

நாத பிரம்மம் தியாகராஜர் பெருமை பாடும் திருவையாறு அமைந்திருப்பது காவிரிக் கரையில். பரதக் கலையின் இருபெரும் முறைகளாகச் சொல்லப்படும் பந்தநல்லூர், வழுவூர் ஆகிய ஊர்கள் அமைந்திருப்பதும் காவிரிப்படுகையில்தான். அதனால்தானோ என்னவோ, ‘தில்லானா மோகானாம்பாள்’ படத்தின் நாயகி மோகனா திருவாரூரைச் சேர்ந்தவராகச் சித்தரிக்கப்படுகிறார். அதேபோல் நாயகன் சண்முகசுந்தரம் நாகப்பட்டினத்துக்கு அருகில் உள்ள சிக்கல் எனும் ஊரைச் சேர்ந்தவர்.

பொதுவாகவே திறமை வாய்ந்த கலைஞர்கள் சற்று முன் கோபமும் தொழில் கர்வமும் கொண்டவர்கள் என்ற கருத்து உண்டு. அதற்கு வலுச்சேர்க்கும் கதாபாத்திரங்களாக வடிக்கப்பட்டவர்கள்தாம் சண்முகமும் மோகனாவும். அதிலும் சண்முகம் உண்மையிலேயே மனத்தளவில் சிக்கலார்தான்.

தன் தொழிலின்மேல் அபார பக்தி, தன் திறமைமேல் அசாத்திய நம்பிக்கை, தன் தன்மானத்துக்கு ஊறு நேரும்போது யாராக இருந்தாலும் அவர்களுடன் மோதத் தயங்காத குணம், தான் நேசிக்கும் பெண் மீது வைக்கும் அளவுகடந்த அன்பு, அவள் தனக்கு மட்டுமே உரியவள் என்ற உணர்ச்சி, பெரிய கலைஞனாக இருந்தாலும் ஒரு சராசரி மனிதனுக்குரிய பயம், சந்தேகம் இத்யாதிகள். மொத்தத்தில் ரத்தமும் சதையுமான எளிய ஆனால், திறமையான கலைஞனே சிக்கல் சண்முகசுந்தரம்.

பல கம்பீரமான கதாபாத்திரங்களைத் தனது விஸ்தாரமான நடிப்பால் உயிர்பெறச் செய்த சிவாஜி கணேசன், ‘சிக்கல்’ சண்முகசுந்தரம் என்ற கதாபாத்திரத்தின் இந்த நுணுக்கமான உணர்வுகளைத் திரையில் வெளிப்படுத்தியவிதம்தான் இன்றும் இயல்பும் நம்பகமும் மிகை அற்றதுமாக இருக்கிறது.

மீண்டும் பார்க்கத் தூண்டிய காட்சி

முதன்முதலாகக் கோயிலில் கச்சேரி செய்துகொண்டிருக்கும்போது வண்டியில் வந்து இறங்கும் மோகனாவைப் பார்த்தவுடன் நாதஸ்வரம் வாசித்துக்கொண்டே பாலையாவிடம் அதைச் சுட்டிக் காட்டும் கண் அசைவு, தொடர்ந்து வேட்டு சத்தம் கேட்டவுடன் வரும் கோவத்தில் கச்சேரியை நிறுத்திவிட்டு வெளியேறுவது, வெளியில் நிற்கும் முதல் பார்வையிலேயே தன் மனம் கவர்ந்த பெண்ணிடம் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நாத, பரத கலைகளைப் பற்றி வாதம் புரிவது என்று மிகக் குறைந்த நடிப்பால் கதாபாத்திரத்தை நிறுவிவிடுவார் சிவாஜி கணேசன். காதல், கோபம் கர்வம் என உணர்ச்சிகள் தனித்தனியாகவும் கலவையாகவும் முகபாவங்களில் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும்.

கதையின் நாயகன் என்றாலும் சண்முகசுந்தரம் ஒரு அசாதாரணமான நாயகன் அல்ல, சராசரி மனிதன். வெளியே வீம்புக்கு மோகனாவின் நாட்டியத்தைப் பார்க்க வரமாட்டேன் என்று சொல்லி விட்டாலும் தன் வாத்திய குழுவினரைப் போகக் கூடாது எனத் தடுத்துவிட்டாலும் மனத்தின் ஆசையைக் கட்டுப்படுத்த முடியாமல் நிகழ்ச்சிக்குப் போய் மறைந்திருந்து பார்க்கும் காதல் வயப்பட்ட சண்முகம் எனும் ஒரு சக கலைஞனைச் சிவாஜி வெளிக்கொண்டு வரும் விதம் உணர்வுகளின் ஊர்வலமாக இருக்கும்.

அந்தக் காதலின் உணர்ச்சிக் குவியலை ரயில் பயணக் காட்சியில் காணலாம். ஒரே ரயிலில் மோகனாவுடன் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக மோகனா வரும்வரை பல ரயில்களைத் தவறவிடுவதும், அத்தனை பேர் சூழ்ந்து இருந்தும்   பொங்கிப் பெருகும் காதலை வெளிப்படுத்துவதுமான அந்தக் காட்சி ரசிகர்களால் இன்றுவரை கொண்டாடப்படுகிறது.

பாலையா துணையுடன் ரயில்பெட்டியின் விளக்கு அணைக்கப்பட்டு இருவருமே கண்களால் பேசிக்கொள்ளும் அந்தக் காட்சிக்காகவும் ‘நலந்தானா’ பாடலுக்காகவும் இந்தப் படத்தை 20 முறைக்கும் அதிகமாகப் பார்த்தவர்கள் இருக்கிறார்கள்.

பலவீனங்களின் முழுமை!

திருவாரூர் சென்று மோகனாவைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையை மறைக்க சண்முகம் முற்படுவார். ஆனால், அது பாலையாவுக்குப் புரிந்துவிட, அந்தத் தர்மசங்கடத்தைக் கோவப்படுவது போல் சிவாஜி காட்டும் வெட்க உணர்ச்சியை உச்சி முகர்ந்துகொள்ளலாம். சிங்கபுரம் மைனரின் கோச் வண்டியைப் பார்த்ததும் சண்முகத்துக்கு ஆத்திரமும் கோபமும் வருகிறது.

‘ஒரு பெண் கலைஞரைக் கலைஞராக மட்டுமே பார்’ என்ற அசலான கலைஞனின் தார்மீக கோபம் அது. ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தின் கதை நடப்பது சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டம். அன்று நாட்டியப் பெண்மணிகளைப் பற்றிய சமூகத்தின் பிற்போக்கான பார்வை. அந்தச் சூழலில் வளர்ந்த சண்முகத்துக்கு அதேபோன்ற சந்தேகம் வருவதுபோல் காட்சி அமைத்தது ‘சிக்கல்’ சண்முகசுந்தரம் கதாபாத்திரத்துக்கான பலகீனங்களின் முழுமையை வெளிக்காட்டுகிறது.

படம் முழுவதும் வரக்கூடிய காதல் வயப்பட்ட எளிய கலைஞனாகிய சண்முகத்துக்கும், ‘ஜில் ஜில்’ ரமாமணியின் கொட்டகையில் இருக்கும்போது வெளிப்படும் சண்முகத்துக்கும் மெல்லிய வேறுபாட்டைக் காணலாம். ரமா மணியிடம் கோபதாபம் இல்லாத, திறமை குறித்த கர்வம் இல்லாத மனம்விட்டுச் சிரிக்கும் சண்முகத்தைப் பார்க்கலாம். “குறையில்லாத மனுஷன் ஏது ஜில்லூ?” எனக் குழந்தையாய் கேட்கும் சண்முகத்தை இயல்பின் அருகில் சென்று வெளிப்படுத்தியிருப்பார் சிவாஜி.

அமரகாவியம்

ஆடல் முடிந்து, மோகனா மயங்கிச் சரிந்தவுடன் அவருக்கு ‘தில்லானா’ பட்டம் கொடுக்கும் காட்சி. பேச்சு வராமல் தயங்கித் தயங்கி வார்த்தைகளைத் தேடி பேசுவார். சண்முகத்துக்கு மேடை புதியதல்ல, ஆனால், மேடைப் பேச்சு புதிது. அதனால் வந்த தடுமாற்றம். அந்தக் கதாபாத்திரத்தை எத்துனை உள்வாங்கியிருந்தால் சிவாஜியால் இப்படி ஒரு வெளிப்படுத்துதலைச் சாத்தியப்படுத்தியிருக்கமுடியும்.

‘நலந்தானா’ பாடல் காட்சியில் சிவாஜியின் நடிப்புபற்றித் தனிக்கட்டுரையே எழுதலாம். ‘கண்பட்டதால் உந்தன் மேனியிலே புண்பட்டதோ அதை நானறியேன்’ என்ற வரிகளின்போது கண்கள் சிவந்து, நீர் பெருக்கி, ஒரு சின்ன தலையாட்டலில் ‘எனக்கு ஒன்று என்றால் நீ துடித்துப் போவதை நான் உணர்ந்திருக்கிறேன்’ என்று காதலின் ஆழத்தை அவர் வெளிப்படுத்தும் பாங்கு, ஈடு இணை இல்லாத சிவாஜியின் நடிப்புக்கு ஓர் எடுத்துக்காட்டு.

‘தில்லானா’ மோகனாம்பாள்’ ஒரு காதல் கதை. கலையால் இணைந்த இரு உள்ளங்கள் காதலில் இணைய எதிர்கொள்ளும் போராட்டங்கள்தாம் கதை. ஆனால், கதையின் பின்புலமாக இசையும் நடனமும் கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளுக்கு உயிர்கொடுக்கும் ஒரு அங்கமாக மாறிவிடுகின்றன. இருப்பினும் அதையும் மீறி நடிகர்களின் நடிப்புத் திறமையே நடனமும் இசையும் மேலும் துலங்க களமாக அமைந்துவிடுகின்றன. இந்தத் தலைமுறையில் ‘தில்லானா மோகனாம்பாள்’ மறுஆக்கம் செய்யப்பட நடிகர்கள் இல்லாததால் இந்த நிமிடம்வரை அது சாத்தியமற்று இருக்கிறது அமரகாவியமாக.

- முரளி ஸ்ரீநிவாஸ் | தொடர்புக்கு: t.murali.t@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்