கொஞ்சம் கடினமான கேள்விதான் கடந்த வாரம். ஜோதிடத்தில் இரண்டாவது ராசி என்பது ரிஷபம். ரிஷபப்பிரியா ராகம் 61-வது மேளகர்த்தா ராகம். அதாவது மிகப் புகழ்பெற்ற சாருகேசி ராகத்தில் ம1-ஐ மட்டும் ம2-வாக மாற்றினால் வருவது. ஸ ரி2 க2 ம2 ப த1 நி1 ஸ் என வரும்.
இந்த ராகத்தில் அமைந்த திரைப்பட பாடல், ‘மந்திரப்புன்னகை’ (1986) படத்தில் வரும் 'காலிப் பெருங்காய டப்பா'. இசைஞானி எப்படி டப்பாங்குத்துப் பாடல் போல் போட்டிருக்கிறார் பாருங்கள்! அங்குதான் அவரது மேதமை தெரிகிறது. முதலில் சரியாகப் பதில் சொன்ன சென்னை குமார், கோவில்பட்டி மதுவந்தி ஆகியோருக்குப் பாராட்டுக்கள்.
ரிஷபப்பிரியா, சாருகேசிக்கு நெருங்கிய ராகம் என்று பார்த்தோம். சாருகேசி ராகத்தில் ‘மன்மதலீலையை வென்றார் உண்டோ’ , ‘வசந்த முல்லை போலே வந்து’ என ஜி ராமனாதனும் ‘தூங்காத கண்ணென்று ஒன்று’ என கே வி மகாதேவனும் போட்டுக் கொடுத்த பாதையில் இசைஞானி பல பாடல்களைத் தந்திருக்கிறார்.
‘ஸ்ரீராகவேந்திரா’ (1985) படத்தில் வரும் ‘ஆடல் கலையே தேவன் தந்தது’ என யேசுதாஸின் குரலில் ஒலிக்கும் பாடல், மெல்லிசையாக எஸ்.பி.பி.யின் குரலில் ‘காதலின் தீபம் ஒன்று’ (தம்பிக்கு எந்த ஊரு), அற்புதமான ஒரு ஜோடிப் பாடலான ‘மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்’ ( நானே ராஜா நானே மந்திரி), சோகமாக ‘பெத்த மனசு பித்தத்திலும் பித்தமடா’ (என்னப் பெத்த ராசா), இன்னொரு மெல்லிய சோகமாக ‘சின்னஞ்சிறு கிளியே’ (முந்தானை முடிச்சு) எனப் பிரமாதப்படுத்தியிருப்பார். ‘சிங்காரவேலன்’ மாதிரியான முழுநீளக் காமெடிப் படத்தில் சீரியசாக இந்த ராகத்தில் ஒரு பாடல் போட்டிருப்பார், ‘தூது செல்வதாரடி’ என.
ஒரு மினி கச்சேரி
இன்னொரு ப்ரியாவைப் பார்ப்போமா?. ராமப்ரியா என்றொரு ராகம் . 51-வது மேளகர்த்தா ராகம். அதிகம் பிரபலமாகாத அந்த ராகத்தைத் திரையிசையில் பயன்படுத்தி இளையராஜா அற்புதமான இரண்டு பாடல்களைத் தந்திருக்கிறார். இரண்டுமே யேசுதாஸ் பாடியவை. முதலாவது ‘மோகமுள்’ (1994) திரைப்படத்தில் வரும் ‘கமலம் பாத கமலம்’ என்னும் பாடல். ஆலாபனை, பின்னணி இசை என ஒரு மினி கச்சேரியே கேட்ட உணர்வு தரும் பாடல் அது.
அதே ‘மோகமுள்’ திரைப்படத்தில் நாடகப்பிரியா எனும் அரிதாகப் பாடப்படும் 10-வது மேளகர்த்தா ராகத்தில் ‘நெஞ்சே குருநாதர்’ என்றொரு பாடல் போட்டிருப்பார் ராஜா. பாடியவர் அருள்மொழி.
அடுத்த பிரியா ஷண்முகப்பிரியா. மறைந்திருந்தே ‘பார்க்கும் மர்மமென்ன’ எனும் ‘தில்லானா மோகனாம்பாள்’ (கே.வி.மகாதேவன்) திரைப்படப் பாடலை மறக்க முடியுமா? அந்த ஷண்முகப்பிரியாவில் இசைஞானி பல பாடல்களைத் தந்திருக்கிறார். குறிப்பாக ‘தம்தன தம்தன’ என்னும் ‘புதிய வார்ப்புக்கள்’ (1979) படப் பாடல் இந்த ராகத்தில் ஒரு மாஸ்டர் பீஸ் என்று கூடக் கூறிவிடலாம்.
அதேபோல்தான் ‘சலங்கை ஒலி’ படத்தில் (1983) வரும் ‘தகிட ததிமி தந்தானா’ என்ற பாடலும் ஷண்முகப்பிரியாவுடன் மழையின் லயத்தையும் ஆக்ரோஷத்தையும் வெளிப்படுத்தும்பாடல் அது.
இந்தக் கட்டுரையில் மூன்றாவது தடவையாக ‘மோகமுள்’ இன்று. இசைக்கு முக்கியத்துவம்கொடுத்து தி.ஜானகிராமன் எழுதிய நாவல் அது. அதைத் திரைப்படமாக்கும்போது தனது ராகங்களால் அலங்கரித்து மேலும் மெருகூட்டியிருப்பார் இளையராஜா. அப்படத்தில் வரும் ‘சொல்லாயோ வாய்திறந்து’ என வரும் பாடல் ஒரு காவியத்துவம் மிக்க ஷண்முகப்பிரியா.ஜானகி, எம்.ஜி குமார் என இருவரும் தலா ஒருமுறை பாடியுள்ள பாடல் அது.
அதே ஷண்முகப்ரியாவில் ஜாலியாகவும் போட்டிருப்பார். ஆண்பாவத்தில் (1985) வரும் ‘காதல் கசக்குதய்யா'வும் கரகாட்டக்காரனில் (1989) வரும் ‘ஊருவிட்டு ஊரு வந்து’ பாடலும் அப்படிப் போடப்பட்ட பாடல்கள்தான்.
கலாய்க்கப் பயன்பட்ட ராகம்
இந்த க்யூவில் அடுத்தபடியாக வருவது பவப்பிரியா என்னும் 44-வது மேளகர்த்தா ராகம். தோடி போல் இருக்கும் ஆனால் ம மட்டும் ம2. அந்த அரிய ராகத்தில் ஒரு பாடலைப் போட்டிருக்கிறார். ‘குரு சிஷ்யன்’ படத்தில் வரும் ‘கண்டுபிடிச்சேன் கண்டுபிடிச்சேன்’ எனும் பாடல்தான் அது. சோகமான ராகமான சுபபந்துவராளிக்கு நெருங்கிய இந்த ராகத்தில் இப்படிக் கலாய்க்கும் பாட்டு !
கரஹரப்பிரியா இல்லாமல் ப்ரியா பட்டியல் முடியுமா? மிக முக்கியமான இந்த ராகம் 22-வது மேளகர்த்தா ராகம். ‘மாதவிப் பொன்மயிலாள்’ என ‘இருமலர்கள்’ படத்தில் (1967) மெல்லிசை மன்னர் அசத்தியிருப்பார். அந்த ராகத்தில் ஏராளமான பாடல்கள் போட்டிருக்கிறார் இளையராஜா.
மெல்லிசையாக வாசிக்கும் போது ‘இளங்காத்து வீசுதே’ , ‘தூளியிலே ஆடவந்த’, ‘பூங்காற்று திரும்புமா’ என ஏராளமான பாடல்கள் தந்துள்ளார். இந்த ராகத்தில் மாஸ்ட்ரோவின் மாஸ்டர்பீஸ் என்றால் ‘சிறைப்பறவை’ (1987) படத்தில் வரும் ‘ஆனந்தம் பொங்கிடப் பொங்கிட’ என்னும் பாடல்தான். அற்புதமான கரஹரப்ரியா ராகம். பாடியவர்கள் யேசுதாஸ், சுனந்தா.
அதே ராகத்தில் அமைந்த இன்னொரு பாடல் ‘டிக் டிக் டிக்’ (1981) படத்தில் வரும் ‘பூ மலர்ந்திடும்’. யேசுதாஸ் ,ஜென்ஸி குரல்களில் வரும் இப்பாடல் மேற்கத்திய பாணியிலும் நமது செவ்வியல் இசைப்பாணியிலும் அமைந்துள்ளது.
‘நெற்றிக்கண்’ (1981) திரைப்படத்தில் வரும் ‘மாப்பிள்ளைக்கு மாமன் மனசு’ என்ற பாடலும் கரஹரப்ரியாதான். மலேஷியா வாசுதேவனும் பி.சுசீலாவும் பாடிய பாடல் அது. ‘ஊருவிட்டு ஊரு வந்து’ (1990) படத்தில் வரும் ‘தானா வந்த சந்தனமே’ எனும் பாடலும் இதே ராகத்தில் வித்தியாசமாகப் போடப்பட்ட பாடல்.
கரஹரப்ரியாவிலிருந்து பா வை மட்டும் எடுத்துவிட்டால் வருவது ஸ்ரீரஞ்சனி. அதிலும் ராஜா நம்மை நாட்டியமாட வைக்கும் ‘நாதம் எழுந்ததடி’ ( கோபுர வாசலிலே), ‘வந்தது வந்தது நெஞ்சினில் நின்றது’ (கிளிப்பேச்சுக் கேட்கவா). என பிரமாதமான மெட்டுக்கள் போட்டிருப்பார். அதே ஸ்ரீ ரஞ்சனியிடமிருந்து நி யையும் பிடுங்கிவிட்டால் ஆபோகி
என்னும் அருமையான இனிய ராகம் வரும். அதிலும் ‘இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே’ (வைதேகி காத்திருந்தாள்), ‘காலை நேரப் பூங்குயில்’ (அம்மன் கோவில் கிழக்காலே ) என அட்டகாசமான பாடல்களைத் தந்திருக்கிறார்.
இந்த வாரக் கேள்வி : யேசுதாஸின் குரலில் தகதகிட என்னும் ஐந்து எண்ணிக்கையில் வரும் கண்ட நடை யில் அபூர்வமான ஒரு ராகத்தில் இசைஞானி அமைத்திருக்கிறார். கண்டுபிடிக்க அபிராமி உங்களுக்குத் துணைபுரியட்டும்!
தொடர்புக்கு:ramsych2@gmail.com
படங்கள் உதவி:ஞானம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
59 mins ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago