கோபுவுக்கு ஒரு ராசி! சித்ராலயாவுக்காக பணிபுரியும் இசையமைப்பாளர்கள் அனைவருமே, அவரிடம் அதிக நெருக்கத்தைக் காட்டினார்கள். கோபுவின் இசைஞானமும் நகைச்சுவை உணர்வும் அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். ஏ.எம். ராஜா, விஸ்வநாதன்-ராமமூர்த்தி
போன்ற நமது இசையமைப்பாளர்கள் ஒருபுறம் என்றால், ரவி, ஷங்கர் ஜெய்கிஷன், லக்ஷ்மிகாந்த் - பியாரிலால் போன்ற வடநாட்டு இசையமைப்பாளர்களும் அந்த நெருக்கமான பட்டியலில் அடங்குவர்.
‘காதலிக்க நேரமில்லை’யின், இந்தி மறு ஆக்கமான ‘பியார் கியே ஜா' படத்துக்கு லக்ஷ்மிகாந்த் - பியாரிலால் இசை. இந்தி கதை வசனகர்த்தா ராஜேந்திர கிஷண் பாடல் வரிகளை எழுதினார். அந்தப் படத்தின் பாடல் பதிவு வேலைகளுக்காக கோபுவை அடிக்கடி மும்பைக்கு அனுப்பி வைத்தார் ஸ்ரீதர். அவரோ குருதத் நடிக்கும் படத்தை சென்னையில் இயக்கிக் கொண்டிருந்தார்.
விமானம் ஏறுவதற்கு முன்பாக ஸ்ரீதர், கோபுவிடம் '' காதலிக்க நேரமில்லை ‘நாளாம் நாளாம் திருநாளாம்’ பாட்டு எப்படி சூப்பர் ஹிட் ஆனதோ அதேபோல அந்தப் பாட்டு இந்தியிலும் ஹிட் ஆக வேண்டும்” என்று அழுத்தமாகச் சொல்லி அனுப்பி வைத்தார்.
கண்ணதாசன் எழுதிய அந்தப் பாட்டின் பல்லவியை, அப்படியே ஆங்கிலத்தில் இந்திப் பாடலாசிரியர் ராஜேந்திரகிஷனிடம் விளக்கினார். லக்ஷ்மிகாந்த் - பியாரிலால் அப்போது உச்சத்தில் இருந்த நேரம். ‘தோஸ்தி’ என்ற படத்தில் அவர்களது இசையமைப்பில் உருவான பாடல்கள் இந்தி பேசும் மாநிலங்களைத் தாண்டி கலக்கிக் கொண்டிருந்தன. தயாரிப்பாளர்கள் அவர்களை ஒப்பந்தம் செய்ய வரிசையில் நின்றுகொண்டிருந்தனர்.
கோபுவைக் கிள்ளிய ஸ்ரீதர்
அப்படிப்பட்ட அந்த இசை இரட்டையரில் ஒருவரான லக்ஷ்மிகாந்த்துக்கு என்ன காரணத்தினாலோ கோபுவைப் பிடித்து விட்டது. கம்போஸிங் நேரம் போக மாலை வேளைகளிலும் கோபு தங்கியிருந்த ஏர்லைன்ஸ் ஹோட்டலுக்கே அவரைத் தேடிக்கொண்டு வந்துவிடுவார். தான் காதலில் விழுந்து விட்டதாகக் கூறி, ஒருநாள் தன் காதலியை அழைத்து வந்து கோபுவுக்கு அறிமுகப்படுத்தினார். ஜெயா லக்ஷ்மிகாந்த்தை அவரது காதலியாகவே சந்தித்திருக்கிறார் கோபு.
பியாரிலால் ஒரு நல்ல வயலின் கலைஞர். கிளாசிகல் மற்றும் மேற்கத்திய இசையில் புகுந்து விளையாடுவார். ஸ்ரீதர் குறிப்பிட்டுச்சொன்ன பாடல் தயார் ஆன தகவலை ட்ரங்கால் புக் செய்து கோபு கூற, அடுத்த விமானத்தில் ஸ்ரீதர் மும்பை கிளம்பி வந்தார். ஸ்ரீதருக்கு ‘நாளாம் நாளாம் திருநாளாம்’ இந்திப் பாடலின் மெட்டினை லஷ்மிகாந்த் பாடிக்காட்டினார்.
தமிழ்ப்பட உலகத்தில் இசையமைக்கும்போது, எம். எஸ்.வியே கம்போஸ் செய்த பாடலைப் பாடி காட்டிக் கவர்ந்து விடுவார். எம்.எஸ். வி பாடிய அளவுகூடப் பாடகர்கள் பாடுவதில்லை என்று வேடிக்கையாக ஸ்ரீதர் கூறுவார். அப்படி எம்.எஸ்.வி பாடிக்காட்டுவதைக் கேட்டு பழகிவிட்ட ஸ்ரீதருக்கு, லஷ்மிகாந்த் பாடிய ‘நாளாம் நாளாம்’ பாட்டின் மெட்டு கவரவில்லை. தனது இருக்கையில் நெளிந்த ஸ்ரீதர், அதைத் தெரிவிக்கும் விதமாக கோபுவின் கையை ரகசியமாகக் கிள்ளினார்.
''என்னடா இவர் மெட்டையே வசன நடையிலே பாடறாரே'' என்று கோபுவின் காதுக்குள் கடுகடுப்புடன் முணுமுணுத்தார்.
''எல்லாரும் எம் எஸ் வி ஆகிட முடியாது ஸ்ரீ! இவர்கள் தோஸ்தி படத்தில் போட்ட அத்தனைப் பாட்டுகளும் சூப்பர் ஹிட். இவங்க ஸ்வரத்தை எழுதி கொடுத்துடுவாங்க. இதை லதா மங்கேஸ்கர் பாடும்போது பிரமாதமாக இருக்கும். இது யமன் கல்யாண் ராகம்!'' என்றார் கோபு.
“ஆமா! நீ செம்மங்குடி சீனிவாச அய்யரோட சிஷ்யன் பாரு! எனக்கென்னமோ பயமாயிருக்கு. நான் ஊருக்குப் போய் ஷூட்டிங் வேலைகளைச் செய்யறேன். நீ ரெகார்டிங்கை முடிச்சுட்டு வா.'' என்று சொல்லிவிட்டு அரை மனதுடன் சென்னை திரும்பிவிட்டார் ஸ்ரீதர். ஆனால் கோபு கூறியது போல், லதா மங்கேஸ்கர் பாடிய அந்தப் பாடல் சூப்பர் ஹிட் ஆனது. சென்னையில் அந்தப் பாட்டை கேட்ட ஸ்ரீதருக்கு பரம திருப்தி.
இசை அமைப்பாளரின் திறமை பாடிக்காட்டுவதில் மட்டுமே இல்லை, ஃபைனல் அவுட்புட்டிலும் தெரிந்துவிடும் என்பதை ஸ்ரீதர் உணர்ந்து கொண்டார்.
சந்தேகம் தீர்த்த மும்தாஜ்!
‘காதலிக்க நேரமில்லை’யில் பாலையா ஏற்றிருந்த கதாபாத்திரத்தை ‘பியார் கியே ஜா’வில் நடிகர் ஓம்பிரகாஷ் செய்தார். நாகேஷின் செல்லப்பா கதாபாத்திரத்தை மெஹ்மூதும், சச்சு பாத்திரத்தை நடிகை மும்தாஜும் செய்தனர். சசிகபூர் (ரவிச்சந்திரன்) கிஷோர் குமார் (முத்துராமன்) கல்பனா (காஞ்சனா) என கதாபாத்திரங்கள் ஒதுக்கப்பட்ட பின் நடிகர்கள் அனைவருக்கும் ‘காதலிக்க நேரமில்லை’ படம் திரையிடப்பட்டு காட்சிகள் விளக்கிக் கூறப்பட்டன. தமிழில் ராஜஸ்ரீ நடித்த கதாபாத்திரத்தை இந்தியிலும் அவரே செய்தார்.
நகைச்சுவை பகுதி காட்சிகளை விளக்குவதற்காக, ஓம்பிரகாஷ், மெஹ்மூத் மற்றும் மும்தாஜை அழைத்திருந்தது சித்ராலயா. மும்தாஜை பார்த்ததும் கோபுவுக்கு பெருத்த சந்தேகம். ஒரு கதாநாயகியின் முகவெட்டு அவருக்கு இருந்தது. மிக அழகாக இருந்தார். தமிழ்சினிமாவா இருந்தால் அவரைக் கதாநாயகியாக நடிக்க வைத்திருப்பார்கள். முகத்தில் இம்மியளவு கூட நகைச்சுவை பாவம் இல்லை. எதற்காக இவரைப் போய் சச்சுவின் வேடத்துக்கு ஒப்பந்தம் செய்தார் ஸ்ரீதர் என்று கோபுவுக்கு சந்தேகம் வந்தது.
மும்தாஜிடமே தனது சந்தேகத்தை கேட்டுவிட்டார். ''ஏம்மா. நீங்க செய்ய போறது நகைச்சுவை கேரக்டர். அது தெரியுமா? ''
''ஓ தெரியுமே! மீன பிரியதர்சினி இஸ் மை கேரக்டர்'' - என்று மும்தாஜ் சொன்னார். பாவம்! மும்தாஜ் அப்போது திரைப்பட உலகில் நுழைந்தால் போதும் என்று கிடைத்த வாய்ப்புகளை ஏற்றுக்கொண்டிருந்தார். எனவே, சச்சு நடித்த மீனலோசனி கதாபாத்திரத்தில் மீன பிரியதர்ஷினி என்ற பெயரில் நடிக்க சம்மதித்துவிட்டார். வேடிக்கை என்னவென்றால், தமிழில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த சச்சு காதலிக்க நேரமில்லை படத்தில் அசட்டு மீனலோசனியாக நடித்து முழுநேர நகைச்சுவை நடிகையாக மாறினார். மும்தாஜோ ‘பியார் கியே ஜா’ படத்தில் நகைச்சுவை நடிகையாக நடித்து, பின்னர் முன்னணி கதாநாயகியாக மாறினார்.
மும்தாஜுக்கு நடந்தது நல்லதுதான் என்றாலும் தமிழில் நகைச்சுவைக்கு இருக்கும் முக்கியத்துவம் வேறு எந்த மொழியிலும் இல்லை என்பதற்கு சச்சுவின் திரைப் பயணம் சடாரென்று ஒரே படத்தில் மாறிப்போனது ஒரு உதாரணம். தமிழில் டி.பி.முத்துலட்சுமி, சி.டி.ராஜகாந்தம், டி. ஏ. மதுரம், ரமாபிரபா, ஆச்சி மனோரமா, சச்சு, கோவை சரளா வரை நகைச்சுவை நடிகைகளுக்குத் தனித்துவமும் ரசிகர்களிடம் மிகுந்த மரியாதையும் உண்டு.
மிரண்ட மெஹ்மூத்!
பாலையாவுக்கு நாகேஷ் சினிமா கதை சொல்லும் காட்சியை, ஓம்பிரகாஷும் மெஹ்மூதும் மிரண்டு, ரசித்துப் பார்த்தனர். மனம் விட்டுச் சிரித்த அவர்கள், ‘தங்களால் அவர்கள் அளவுக்கு இந்திப் படத்தின் காட்சியைத் தரமுடியுமா’ என்று கவலை கொண்டனர். நாகேஷ் கதைக்கு பாலையா கொடுத்த முகபாவங்கள் ஓம்பிரகாஷை மிகவும் கவர்ந்தன. ‘பியார் கியே ஜா’ படமும் பெரும் வெற்றியைப் பெற்றது. இந்தி வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கில் ‘பிரேமிஞ்சி சூடு’ என்கிற பெயரில் மறுஆக்கம் ஆனது. ஸ்ரீதருக்கு அகில இந்திய புகழ் கூடிக்கொண்டே போன இந்த நேரத்தில்தான், ஆந்திராவில் ஒரு பெண்ணை பார்த்து ஸ்ரீதருக்கு கல்யாணம் பேசிவிட்டார் அவருடைய தாய்மாமா. தனது படங்களில் வருவதுபோலவே தனது யூனிட் நண்பர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு ஸ்ரீதர் பெண் பார்க்கக் கிளம்பினார்.
(சிரிப்பு தொடரும்)
'காஷ்மோரா' படத்தில் நடிக்க விரும்பினேன்: விஜய் சேதுபதி
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago