இன்றுவரை அந்தப் படத்தை வெளியிடவில்லை! - கலைஞரின் புகைப்படக்காரர் யோகா பேட்டி

By திரை பாரதி

தமிழ்ப் பத்திரிகையுலகில் தடம்பதித்த மூத்த ஒளிப்படக் கலைஞர் ‘கலைமாமணி’ யோகா. கலைஞர் மு.கருணாநிதியின் ‘பிரத்தியேக போட்டோகிராபர்’ என்பது அவரின் தனித்த  அடையாளங்களில் ஒன்று. கலைஞரை இவர் தன் கேமராவில் பதிகிறாரா இல்லை; இதயம் வழியே பதிந்திருக்கிறாரா என்பதை அடையாளம் காண முடியாத வகையில் அரசியலுக்கு வெளியே நின்று அவரது ஆத்ம நண்பராகவும் பழகி வந்திருக்கிறார். அவரிடம் உரையாடியதிலிருந்து...

கலைஞரோடு எப்போது அறிமுகமானீர்கள்?

அப்போது நான் ‘குமுதம்’ இதழுக்காகப் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் ‘குங்குமம்’ பத்திரிகையின் ஆசிரியராக சாவி பணியாற்றி வந்தார். ஏதோ ஒரு மனஸ்தாபத்தில் அவர் பணியிலிருந்து விலகியபோது, அங்கே இணையாசிரியராக இருந்த பாவை சந்திரன் ஆசிரியர் பொறுப்புக்கு வந்தார். அவர் குமுதம் ஆசிரியர் குழுவில் இருந்த பத்திரிகையாளர் பால்யூவிடம், ‘உங்க ளுக்குப் படமெடுக்கும் யோகா எங்கள் குழுமப் பத்திரிகைகளுக்குப் பணிபுரிய வருவாரா?” என்று கேட்டிருக்கிறார்.

என்னை அழைத்த பால்யூ “இதைவிடப் பெரிய சந்தர்ப்பம் அமையாது, உடனடியாக‘குங்குமம்’ ஆசிரியரைப் போய்ப் பார்” என்று வாழ்த்தி அனுப்பினார். பாவை என்னை முரசொலி மாறனிடம் அழைத்துச் சென்று “ இவர்தான் யோகா” என்று அறிமுகப்படுத்தினார். அப்போது தொடங்கியதுதான் ‘முரசொலி’, ‘குங்குமம்’ உள்ளிட்ட  அக்குழுமப் பத்திரிகைகளுக்கும் எனக்குமான தொடர்பு.

’குங்குமம்’ குழுமத்துக்குப் பணியாற்றத் தொடங்கி ஓராண்டு காலம் முடிந்திருக்கும். அப்போது கலைஞர் முதல்வராக இருந்தார். அவரது பிறந்த தினத்தை ஒட்டி ’குங்குமம்’ அட்டையில் கலைஞரின் படத்தைப் போட்டு அவரது புதிய செயல்திட்டங்கள் குறித்துக் கட்டுரை எழுத இருந்தார் பாவை. கலைஞரைப் படமெடுக்க அப்பாயிண்மெண்ட் வாங்கிவிட்டார்.

ஆனால், அவர் கொடுத்திருந்த நேரத்துக்குப் போக முடியவில்லை. கலைஞர் கோட்டைக்குக் கிளம்பிவிட்டார். நேரம் தவறாமையில் சிவாஜிக்கே மூத்தவர் கலைஞர். அன்று கலைஞரின் நேர்முக உதவியாளர் சண்முகநாதனிடம் கெஞ்சியதும் “அவர்களை நாளைக்கு வரச்சொல்லுங்கள்” என்று கோபத்தை உடனே மறந்து மறுநாளே நேரம் கொடுத்தார். சரியான நேரத்துக்குச் சற்றுமுன்பாகவே போய்த் தயாராக இருந்தேன்.

முதல்நாள் அப்பாயிண்மெண்ட்டைத் தவறவிட்டது பற்றிக் கோபப்பட்டுத் திட்டுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால், ஒரு கலைஞனை மூட் அவுட் செய்யக் கூடாது என்ற இங்கிதம் அவரிடம் இருந்ததால் “வாய்யா… யோகா.. உன் கலை வண்ணத்தைக் காட்டு” என்று அமர்ந்தார். அதன்பிறகு சுமார் ஒன்றரை மணி நேரம் நான் கேட்டபடியெல்லாம் போஸ் கொடுத்து எனக்கு ஒத்துழைத்தார். அவர் பார்க்காத ஒளிப்படக் கலைஞர்களா?

எனக்கு நீண்ட நேரம் கொடுத்தது போல் அவர் யாருக்குமே கொடுக்கவில்லை. அப்போது இன்றைய திமுக செயல் தலைவர் இருபது வயதைக்கூட எட்டாத இளைஞர். அன்று நான் கலைஞரை எடுத்த படங்கள், ’முரசொலி’, ’குங்குமம்’, மற்ற இதழ்கள், கட்சி போஸ்டர்கள், கட்-அவுட்டுகள் என்று பிரபலமாயின. அந்தப் படங்கள் கலைஞரை உயிருக்கு உயிராக நேசிக்கும் அவரது தொண்டர்களோடு பேசின.

கலைஞர் மு.கருணாநிதிக்கு ‘கேமரா கான்சியஸ்’ உண்டா?

துளிகூடக் கிடையாது. நான் கண்ட முகங்களில் கலைஞரின் முகம் மிக வித்தியாசமான ஒன்று. அவரிடம் இருக்கும் ‘எக்ஸ்பிரசிவ்’ தன்மையை நடிகர்களிடம்கூட  எதிர்பார்க்க முடியாது. ஒளிப்படமெடுக்க இவரிடம் ‘அப்பாயிண்மெண்ட்’ பெறுவது மட்டும்தான் கடினமே தவிர, பெற்றுவிட்டால், நம்மிடம் அவரை முழுவதுமாக ஒப்படைத்துவிடுவார். நாம் கேட்பதை மட்டுமல்ல; நாம் மனத்தில் நினைத்துக் கேட்கத் தயங்குவதையும் கற்பூரம்போல் புரிந்துகொண்டு “இதுதானே கேட்கிறீங்க” என்று இறங்கிவந்து ஒத்துழைப்புக் கொடுப்பார்.

சிவாஜி தொடங்கி இன்றைய முன்னணி நட்சத்திரங்கள் பலரையும் என் கேமராவில் பதிவு செய்திருக்கிறேன். ஸ்டில் கேமராவை எடுத்ததுமே நடிகர்களிடம் கேமரா ‘கான்சியஸ்’ வந்துவிடும். ‘கான்சியஸ்’ வந்துவிட்டால் உடம்மை விரைத்துக்கொள்வார்கள். உடல்மொழியிலும் முகத்திலும் இயல்புத்தன்மை விடைபெற்றுவிடும்.

ஆனால், கலைஞர் இதில் ஆச்சரியகரமான ஆளுமை. ‘ஹி இஸ் டோண்ட் பாதர் இன்ஃபிரண்ட் ஆஃப் கேமராஸ்’. நம்மைப் படமெடுக்கிறார்கள் என்ற உணர்வை ஒருமுறைகூட நான் கண்டதில்லை. நான் மிகவும் ரசித்துப் படமெடுக்கும் ஆண் ஆளுமை கலைஞர் மட்டும்தான்.

கலைஞர் முதல்வராக இருந்தபோது, ஒரு சாமானியத் தோற்றத்தில் இடுப்பில் லுங்கி கட்டிக்கொண்டு கண்களில் கண்ணாடி அணியாமல் அவர் இருந்ததை ஒளிப்படங்களாக எடுத்தீர்கள். அது எப்படிச் சாத்தியமானது?

அவர் முகம் கழுவி, பல்துலக்கி, நீராகாரம் சாப்பிடுவது, யோகா செய்வது, தனக்காகக் காத்திருக்கும் செல்லப் பிராணிகளைக் கொஞ்சுவது, நடைப்பயிற்சி செய்வது, ஷட்டில் விளையாடுவது என கலைஞரை ஒரு எளிய மனிதராகப் படம்பிடிக்கும் வாய்ப்பு எனக்கு மட்டுமே அமைந்தது. கலைஞரின் 74-வது பிறந்த தினத்துக்காக ’முரசொலி’ பதிப்பித்த பிறந்ததின மலருக்காக ‘கலைஞருடன் ஒருநாள்’ என்ற தலைப்பில் எடுத்தேன். காலையில் படுக்கையில் அவர் கண்விழித்தபோது பட்பட்டென்று படங்களை எடுக்கத் தொடங்கினேன். இதைக் கலைஞரே எதிர்பார்க்கவில்லை.

நம்ம யோகாதானே கண்டிப்பாக ’முரசொலி’க்காகத்தான் இருக்கும் என்று புரிந்துகொண்டு, முகம் கழுவிவிட்டுவந்து என் முகத்தைப் பார்த்தார். “நான் கலைஞருடன் ஒருநாள்” என்றேன். குழந்தையைப் போல் சிரித்தார். நான் எதிர்பார்த்த எதிர்க்கும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இப்படி போஸ் கொடுக்கலாமா என்று அவர் யோசிக்கவும் இல்லை. உடம்பில் லுங்கி மட்டுமே கட்டிக்கொண்டு திறந்த மார்புடன் இருந்த படத்தை இன்றுவரை நான் வெளியிடவில்லை. அதைப் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறேன். என்றைக்கும் அதை வெளியிட மாட்டேன்.

கலைஞர் குடும்பத்துக்கும் உங்களுக்குமான உறவு எப்படிப்பட்டதாக இருக்கிறது?

அதைச் சொற்களால் விவரிக்க முடியாது. 50 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. அரசியலுக்கு அப்பாற்பட்டு கலைஞர் எனும் தனிமனிதர் உன்னதங்களின் உன்னதம் என்பேன். அவரது கூர்மையான அன்பு கலந்த அறிவைக் கண்டு வியந்திருக்கிறேன். கலைஞரின் அரச சுற்றுப் பயணங்கள், வெளிநாட்டுப் பயணங்கள் என ஒரு ஒளிப்படக் கலைஞனாக என்னை மட்டுமே உடன்வர அனுமதித்திருக்கிறார்.

எனது கேமரா கண்கள் அவரைப் பின் தொடர வேண்டும் என்று விரும்புவார். பொது நிகழ்ச்சிகளில் நான் எங்கிருந்து படமெடுத்துக்கொண்டிருக்கிறேன் என்பதைக் கடைக்கண்ணால் நொடியில் இனங்கண்டு ஒரு தோழமையான புன்னகையை எனக்கு மட்டும் உதிர்ப்பார் பாருங்கள்...! அதற்கு விலையே கிடையாது.

அதேபோல் கலைஞரின் வாழ்க்கைத் துணைவியரில் தயாளு அம்மாள் குடும்பத்தினர் என்றாலும் ராசாத்தி அம்மாள் குடும்பத்தினர் என்றாலும் இரண்டு குடும்பங் களுக்குமே இன்றுவரை நான்தான் ஒளிப்படக் கலைஞன். என்னைக் கலைஞரும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் அவர்களில் ஒருவராகத்தான் இதுநாள் வரை மதித்துக் கொண்டாடி வருகிறார்கள்.

என் மகளின் திருமணத்தில்  தயாளு அம்மாளுடன் கலைஞர் கலந்துகொண்டார்.  ஸ்டாலின், அழகிரி,  கனிமொழி என ஒவ்வொருவரும் குடும்பத்துடன் கலந்துகொண்டார்கள். கழக நிர்வாகிகளும் உடன்பிறப்புகளும் திரண்டுவிட்டார்கள். அந்த அன்பில் திக்கித் திணறிப்போனேன்.

நான் கற்பனைகூடப் பண்ணிப் பார்க்காத விருது கலைஞர் விருது. டத்தோ சாமிவேலு, கவிப்பேரரசு வைரமுத்து, வீரமணி, எஸ்.பி.முத்துராமன் என்று பெரும் சாதனையாளர்களுக்குக் கொடுத்த அந்த விருதை எனக்குக் கொடுத்து அங்கீகரித்தார். இது ஒன்றுபோதும் கலைஞரின் பரந்த மனத்தை எடுத்துக்காட்ட!

k6jpgயோகா

கலைஞர் மு.கருணாநிதியின் பிரத்தியேக ஒளிப்படக் கலைஞர் என்ற முறையில் அவரது வாழ்க்கையை எப்படி மதிப்பிடுவீர்கள்?

கலைஞரைப் போல பிராப்தமும் கொடுப்பினையும் உள்ள நிறைவான வாழ்க்கையை வாழ்ந்திருப்பவர், வேறு யாரும் கிடையாது என்று சொல்வேன். கொடுத்து வைத்தவர்.

அவரது குடும்பத்தினர் அவர் வாழ்ந்த வாழ்வுக்குக் களங்கம் வந்துவிடாதபடி அவரைக் கண்போல் கடைசி நொடிவரை எப்படிப் போற்றிப் பாதுகாத்திருக்கிறார்கள். அவர் பேச முடியாமல் இருந்த நாட்களில் அவரை எப்படிக் கொண்டாடியிருக்கிறார்கள்!

தலைவர் இப்படி இருக்கிறாரே என்று அவரது கட்சியும் நிர்வாகிகளும் தொண்டர்களும் கவலைப்பட்டாலும் எத்தனை கட்டுக்கோப்பாக, ஒழுக்கமாக இருந்தார்கள். இது எப்படிச் சாத்தியப்பட்டது? கலைஞரின் ஆளுமைதான் இதைச் சாத்தியப்படுத்தியது. அவரது அன்புதான் அனைத்துக்கும் காரணமாக இருக்கிறது.

ஒளிப்படங்கள்: யோகா

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்