செ
ன்ற வாரம் கேட்ட கேள்விக்கான பதில் ‘கடவுள் அமைத்த மேடை’ (1979) படத்தில் வரும் ‘மயிலே மயிலே உன் தோகை எங்கே’ என்ற பாடல். எஸ்.பி.பியும் ஜென்ஸியும் பாடிய பாடல். ஹம்சத்வனி என்ற ஓர் அற்புதமான ராகத்தில் அமைத்திருப்பார் இசைஞானி. அதையே இந்த வாரம் பார்க்கப் போகிறோம். அதற்குமுன் சரியான பதிலளித்த முதல்வர்கள் சிதம்பரம் கலாதரன், மதுரை நடராஜன் ஆகியோருக்குப் பாராட்டுகள்.
கர்னாடக இசைக் கச்சேரிகளில் தொடக்கத்தில் பாடப்படும் பிள்ளையார் பாடல்களில் முதன்மையானது முத்துஸ்வாமி தீட்சிதர் இயற்றிய ‘வாதாபி கணபதிம்’ என்ற பாடல். அது அமைந்தது ஹம்சத்வனி ராகத்தில்தான். அந்த ராகமே முத்துஸ்வாமி தீட்சிதரின் தந்தையார் ராமசாமி தீட்சிதர் உருவாக்கியது என்றும் சொல்வார்கள். மத்யமாவதி போல் இதிலும் ஐந்து ஸ்வரங்கள்தாம். ஸ் ரி2 க2 ப நி2 ஸ் ஸ் நி2 ப க2 ரி2 ஸ். (பா 1 ஆ 2 ஆ எனக் கேட்பவர்கள் பா வும் ஸா வும் ஒன்றுதான் உண்டு என்ற பழைய பாடத்தைப் பத்து முறை எழுதிப் பார்க்கலாம்). ஹம்ஸ என்றால் அன்னம். அன்னத்தின் குரல் போல் இனிமையாகவும் கம்பீரமாகவும் இருக்கும் ராகம்.
இளையராஜாவுக்கு முன்
கர்னாடக இசையில் பிரபலமான இந்த ராகம் திரையிசையில் இ.மு காலத்தில் அவ்வளவாகப் பிரபலமாகவில்லை. (இ.மு – இளையராஜாவுக்கு முன்). ‘அடுத்த வீட்டுப் பெண்’ (1960) என்றொரு திரைப்படம். டி.ஆர்.ராமச்சந்திரன், அஞ்சலிதேவி நடித்தது. அஞ்சலிதேவியின் கணவர் ஆதிநாராயண ராவ்தான் இசை. பாடல்களெல்லாம் மிகவும் பிரபலம். அந்தக் காலத்திலேயே தங்கவேலுவின் பாட்டுக்கு டி.ஆர்.ராமச்சந்திரன் டப்ஸ்மாஷ் செய்திருப்பார். அந்தப் படத்தில் அமைந்த ஓர் அருமையான பாடல் ‘வனிதா மணியே’ என்பது. பி.பி.ஸ்ரீநிவாஸ் குரலில் அமைந்த இனிமையான பாடல். ஸ்வரங்களெல்லாம் அருமையாக அமைந்திருக்கும். பாட்டு வாத்தியார் அஞ்சலிதேவியின்மீது பாடுவார். திடீரென ஆட்கள் உள்ள வந்துவிட ‘வாதாபி கணபதிம்’ என மாற்றி விடுவார். அற்புதமான ஹம்சத்வனி ராகப் பாடல்.
மறக்க முடியாத ஹம்சத்வனி
ஹம்சத்வனியை அதிகம் பயன்படுத்தியவர் இளையராஜா எனலாம். ‘நல்லதொரு குடும்பம்’ (1979) என்ற திரைப்படத்தில் வரும் ‘செவ்வானமே பொன்மேகமே’ என்ற பாடல் இந்த ராகம்தான். ஜெயச்சந்திரன், சசிரேகா, கல்யாணி மேனன், டி.எல்.மகாராஜன் என ஒரு பட்டாளமே பாடியிருக்கும் பாடல். மெல்லிசையாக லேசாக அமைந்த பாடல்.
‘என் புருஷந்தான் எனக்கு மட்டும் தான்’ (1989) திரைப்படமும் பாடல்களுக்காக மிகப் பிரபலம். இயக்குநர் - மனோபாலா! இந்நாள் காமெடியன்! அதில் ஒரு அருமையான ஹம்சத்வனி. ஆரம்பத்தில் ஹம்சத்வனியின் ஸ்வரங்களில் கரிகரிகரிஸ்நிபநிஸரி எனக் குழலில் ஊஞ்சலாட்டம். தொடரும் ஜெயச்சந்திரன் குரலில் ‘பூ முடித்து பொட்டு வைத்து’ என ஆரம்பிக்க, சுனந்தா பெண்குரலில் தொடர்வார். குழலில் இந்த ராகத்தின் பல சங்கதிகளை வெளிப்படுத்தியிருப்பார் ராஜா.
இன்னொரு பாடலில் ஹம்சத்வனியில் பிரமாதப்படுத்தியிருப்பார் ‘கிழக்கே போகும் ரயி’லில் (1978). நாதஸ்வரத்தில் தொடங்கும் ஹம்மிங்கும் இடையிடையே வரும் இசைத் துணுக்குகளெல்லாம் ‘பூ முடித்து பொட்டு வைத்த’ பாடலை நினைவூட்டும். ஆனால் அந்தப் பாடலுக்கு முன்னோடி இந்தப் பாடல்தான். அது மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி குரலில் ஒலிக்கும் ‘மலர்களே நாதஸ்வரங்கள்’ என்னும் பாடல்தான்.
ஒரு கை இல்லாவிட்டாலும் வாழ்க்கை வாழலாம் எனச் சொன்ன படம் ‘வாழ்க்கை’ (1984). அதில் இடம்பெற்ற அட்டகாசமான டூயட் ஹம்சத்வனியில். ‘காலம் மாறலாம் நம் காதல் மாறுமோ’. மெல்லிசையாக ஒரு நல்லிசையை எஸ்.பி.பி, வாணி ஜெயராம் குரல்களில் தந்திருப்பார் இசைஞானி’
‘மகாநதி’ (1983) திரைப்படத்தில் ஒரு மறக்க முடியாத ஹம்சத்வனி. ‘கன்னடம் தாய்வீடு என்றிருந்தாலும் கன்னி உன் மறுவீடு தென்னகம் ஆகும்’ என்று இப்போதெல்லாம் பிறந்த வீட்டிலேயே பெரும்பாலும் தங்கிவிடும் காவிரிப் பெண்ணைப் பற்றிய பாடல். ஷோபனாவின் தொடக்க ஹம்மிங்குடன் ஒரு வழிபாட்டு மனநிலையில் தொடங்கி, இயற்கை எழில் கொஞ்சும் சூழலை வர்ணிப்பார் எஸ்.பி.பி. பாடல் – ‘ஸ்ரீ ரங்க ரங்க நாதனின் பாதம்’. அவரை வணங்கிச் சென்று விட்டு அவருக்கே அபிஷேகத்துக்கு நீரில்லாமல் ஆக்குவோர் காலத்திலும் மறக்காத பாடல்.
ராஜராகமாய் ஒலித்தவை
இரண்டு துள்ளலான, ஸ்டைலான பாடல்கள் ஹம்சத்வனியில் . இரண்டுமே ‘ஸ்டைல் மன்னன்’ ரஜினிகாந்தின் பாடல்கள். இரண்டுமே மெல்லிசை, தொல்லிசை இரண்டு ஜாடைகளிலும் கலக்கியிருக்கும். முதல் பாடல் ‘வேலைக்காரன்’ (1987). அதில் வரும் ‘வா வா வா கண்ணா வா’ என்ற பாடல். என்ன ஒரு பிரமாதமான இசையமைப்பு? மேற்கத்திய சங்கீதத்துடன் நமது செவ்வியல் இசையைக் கலந்து கொடுத்த ஓர் அற்புதப் பாடல். மனோ சித்ரா குரல்களில். இன்னொரு மறக்க முடியாத பாடல், ‘சிவா’ (1989) என்ற தோல்விப் படத்தில் வந்த ‘இரு விழியின் வழியே’ என்ற பாடல்தான். அதே சித்ரா, எஸ்.பி.பியுடன் பாடிய பாடல். மிகத் துள்ளலான மெட்டில் வலம் வரும் பாடல். இடையில் வரும் இசை விறுவிறுப்பான ஹம்சத்வனி.
ராஜாவின் ராஜராகமாக இந்த ராகம் வெளிப்படும் பாடல் ‘எனக்குள் ஒருவன்’ (1984) படத்தில் வரும் ‘தேர் கொண்டு சென்றவன் யாரென்று சொல்லடி’ என்னும் பாடல்தான். ராஜா - சுசீலா காம்போவின் பல அற்புதப் பாடல்களில் இதுவும் ஒன்று. திரைப்படத்தில் நேபாளியாக வருவார் கமல். முதன்மைக் கதாபாத்திரத்தின் முன்ஜென்ம நினைவுகளால் கதைக்களத்தில் உருவான இந்தப் படம், தனது ஜென்மத்தை விரைவிலேயே முடித்துக் கொண்டது. ஆனாலும் இந்தப் பாடல் பல தலைமுறைகளுக்கும் தொடரும். ஜதி அமைப்புகள், வீணையிசை, குரல் எனக் கலந்து ஒரு அக்மார்க் (இப்போது ஐ.எஸ்.ஓ தானே?) ஹம்ஸத்வனி கேட்ட அனுபவத்தை அளித்திருப்பார் ராஜா!
‘தேனிசைத் தென்றல்’ தேவா இந்த ராகத்தில் ஒரு பிரமாதமான பாடல் போட்டிருப்பார். ‘கல்லூரி வாசல்’ (1996) என்ற படத்தில் ஹரிஹரன் குரலில் ‘என் மனதைக் கொள்ளையடித்தவளே’ என்ற பாடல்தான் அது. ஹம்ஸத்வனியில் பின்னியிருப்பார் அந்தப் பாடலில்.
இன்று சொன்ன படங்களிலேயே ஒரு பிரபலமான போட்டிப் பாடல் ஹிந்தோள ராகத்தில் அமைந்திருக்கும். அந்தப் பாடல்?
தொடர்புக்கு:ramsych2@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago