பல நடிகர்களுக்குக் குரல் மாற்றிப் பாடியவர் மலேசியா வாசுதேவன். சிவாஜி, ரஜினி முதல் கவுண்டமணி வரை பொருத்தமாகப் பாடக் கூடியவர். ‘மணிப்பூர் மாமியார்’ (1979) என்ற படத்தில் சிதம்பரம்ஜெயராமனின் குரலில் ஒரு பாடல் பாடியிருந்தார். அதில் அவரோடு இணைந்து பாடியவர் எஸ்.பி.சைலஜா. அந்தப் பாடல் ‘ஆனந்தத் தேன் காற்று தாலாட்டுதே’. ஷைலஜாவின் ஹம்மிங், அடுத்து வரும் வயலின் இசையைத் தொடர்ந்து பாடலை அருமையாக எடுப்பார்.
‘மான்கள் தேடும் பூவை அவளோ, தேவி சகுந்தலையோ’ என்றெல்லாம் வரும் வரிகளை எழுதியவர் கவிஞர் முத்துலிங்கம். அந்தப் பாடல் அமைந்துள்ள ராகம் இந்தோளம். ஏகப்பட்ட பேர் சரியான பதில்களை எழுதியுள்ளனர். ஷேர் ஆட்டோ (குலுக்கல்) முறையில் தேர்ந்தெடுக்கப் பட்ட அறந்தாங்கி சுந்தரகிருஷ்ணனுக்கும், மதுரை லட்சுமி நாராயணனுக்கும் பாராட்டுக்கள்.
‘இளமைக் கோலம்’ (1980) என்றொரு படம். அதில் இந்த ராக கிரீடத்தில் பதித்த ரத்தினம்போல் அமைந்த பாடல் ஒன்று. கே.ஜே.யேசுதாஸின் கணீர்க்குரலில் ஒலிக்கும் அப்பாடல் இந்தோள ராகத்தில் அமைந்திருக்கும். ‘ஸ்ரீ தேவி என் வாழ்வில் அருள் செய்ய வா’ என்னும் பாடலே அது. சில இடங்களில் சந்திரகௌன்ஸ் எனப்படும் நெருங்கிய ராகமும் எட்டிப்பார்த்தாலும் பெரும்பாலும் இந்தோளத்திலேயே அமைந்திருக்கும்.
(அதென்ன சந்திரபோஸ் மாதிரி சந்திரகௌன்ஸ் என்பவர்கள் கொஞ்சம் பொறுங்கள். வரும் வாரங்களில் பார்க்கலாம்). பாடலின் இறுதியில் வேகமான துள்ளலோடு அமைந்திருக்கும். படத்தில் பாடுபவர் சுமன்- ரஜினி நடித்த ‘சிவாஜி’ படத்தின் வில்லன்.
போன கட்டுரையில் சொன்ன ‘சாமஜ வர கமனா’ என்னும் பாடலின் ஆரம்ப வரிகளின் மெட்டைப் போன்றே இசைஞானி அமைத்த பாடல் ‘அலைகள் ஓய்வதில்லை’ (1981) படத்தில் வரும் ‘தரிசனம் கிடைக்காதா’ என்ற பாடல்.
பாடல் என்று சொல்ல முடியாது. நான்கே வரிகள்தான். முதலில் ஜானகியின் குரலிலும் பின்னர் இளையராஜாவின் குரலிலும் ஒலிக்கும் பாடல். ‘பொய்யில்லை கண்ணுக்குள் உயிர் வளர்த்தேன்’ என இந்தோள ராகத்தில் ஒரு மினி சுற்றுலா போய்க் காண்பிப்பார் இந்தச் சிறு பாடலில்.
அமைதி தரும் பாடல்
இந்த ராகத்தை வித்தியாசமாக வேறு வேறு களங்களில், தளங்களில் பயன்படுத்தி இருப்பார். ‘உனக்காகவே வாழ்கிறேன்’ (1986) என்ற படம் பாடல்களுக்காக மிகவும் பிரபலம். இறந்து போன காதலன் நினைவாக நதியா சோகத்துடன் பாடும் பாடல் ‘கண்ணா உனைத் தேடுகிறேன் வா’ என்னும் பாடல். எஸ்.ஜானகியும், எஸ்.பி.பியும் பாடும் சோக ரசம் தடவிய பாடல் அது. அதுவும் இந்தோளமே. மெல்லிசையாக அமைந்திருக்கும் பாடல்.
இன்னொரு வித்தியாசமான மெட்டில் இந்தோளத்தைத் தந்திருப்பார் இசைஞானி. ‘தூங்காதே தம்பி தூங்காதே’ (1983) என்னும் ஏ வி எம்மின் சூப்பர் ஹிட் திரைப்படத்தில் வரும் ‘நானாக நானில்லை தாயே’ என்னும் பாடல்தான் அது. மிகவும் ஸ்டைலாக மெல்லிசை பாணியில் கிடார், ஷெனாய், சிதார் என இசைக்கருவிகளுடன் எஸ்.பி.பியின் குரல் என்னும் ஒப்பற்ற இசைக்கருவி மூலம் வெளி வந்த அற்புதமான பாடல். மனதுக்கு மிகவும் அமைதி தரும் பாடல். அம்மாவாக நடித்திருப்பவர் அந்தக்கால நடிகை ஜமுனா.
சுருதி பேதம்
‘தர்ம பத்தினி’ (1986) என்றொரு படம். கார்த்திக் , ஜீவிதா நடித்தது. அந்தப் படத்தில் வரும் ‘நான் தேடும் செவ்வந்திப்பூவிது’ என்ற பாடல் மிகவும் துள்ளலான ஓர் இந்தோளம். இடையில் வரும் இசைக் கோவைகள் விறுவிறுப்பாக அருமையாக அமைந்திருக்கும். திரைப்படத்தில் இளையராஜா நடத்தும் இசைக் கச்சேரியில் அவரே பாடுவது போன்ற பாடல். தொடக்கத்தில் வரும் ஆலாபனை அற்புதமான இந்தோளம்.
உடன் பாடியவர் ஜானகி. ‘மண்வாசனை’ (1983) படத்தில் வரும் ‘பொத்தி வச்ச மல்லிகை மொட்டு’ என்ற பாடல் ஒரு கிளாசிக் பாடல். அதுவும் இந்தோளத்தின் அடிப்படையிலேயே அமைந்தது. அந்த மெட்டை வேறு கோணத்தில் பார்த்தால் ‘சுத்த தன்யாசி’ போல் தோன்றும். அதாவது ஒரு ராகத்தின் ஸ வை இன்னொரு ராகத்தின் ம என எடுத்துக் கொண்டால். திரைப்பாடல்களில் இது சகஜம். அதை சுருதி பேதம் என்று கர்னாடக இசையில் சொல்வார்கள்.
அதெல்லாம் டெக்னிக்கல் சமாச்சாரம். பாடலுக்கு வருவோம். அந்தப் பாடலில் தொடங்கும் வயலின் இசை கொஞ்சம் கொஞ்சமாக பில்டப் ஆகும். அதற்கு ஏற்பப் படத்தில் ரேவதியைக் கயிற்றால் கட்டிப் பாண்டியன் தூக்குவார். இசையின் உச்சக் கட்டத்துக்குப்பின் ஒரு நிசப்தம். அதன்பின் பாடல் தொடங்கும். பாடலின் இடையே வரும் நாதஸ்வர ஓசையும் பிரமாதமாக அமைந்திருக்கும். எஸ்.பி.பி ஜானகியின் குரல்களில் அமைந்த பாடல் .
ஏங்க வைத்த குரல்
அதே போல் இன்னொரு வித்தியாசமான இந்தோள ராகப் பாடல் ‘புதுப்பட்டி பொன்னுத்தாயி’ (1994) என்ற படத்தில் வரும் ‘ஊரடங்கும் சாமத்துலே’ என்ற பாடல். இரவு நேரத்துக்கு ஏற்ற மாதிரி ஒரு மெட்டு. பாடியவர் சொர்ணலதா. அவரது குரலைக் கேட்கும் போதெல்லாம் இன்னும் அவர் இருந்திருக்கக் கூடாதா எனத் தோன்றாமல் இருக்காது.
இளையராஜா பல படங்களுக்கு விழலுக்கு இறைத்த நீர் போல் அருமையாகப் பாடல்கள் போட்டிருப்பார். ஆனால் படச்சுருள் பாம்புபோல் பெட்டிக்குள் சுருண்டுவிடும். அப்படி ராஜாவின் இசை மகுடியால்கூட எழுப்பி விட முடியாத படங்களுள் ஒன்று ‘என்னருகே நீயிருந்தால்’ (1987) . இந்தப் படத்தை நெல்லை செல்வம் தியேட்டரில் பார்க்கும் போது பயமாக இருந்தது. காரணம், அரங்கில் நாங்கள் நான்கைந்து பேர்தான் இருந்தோம்.
அந்தப் படத்தில் ஒரு அட்டகாசமான இந்தோளம் ‘நிலவே நீ வரவேண்டும்’ என்ற பாடல். கேட்காதவர்கள் கொஞ்சம் தேடிக் கேட்டுப் பாருங்கள். இளையராஜாவே பாடிய சோகப் பாடல். ஆரம்பத்தில் வரும் கிடார் இசை , இடையில் வரும் குழலோசை என இந்தோளத்தை நெய்திருப்பார் ராஜா.
இன்னொரு சுத்தமான நெய்யால் செய்யப்பட்ட இந்தோளப் பாடல் ஒன்று. பாடலைப் பாடியவர் ஒரு பாடகி. திரைப்படத்தில் நாட்டியம் ஆடி நடித்தவர் வேறொரு பாடகி. அதென்ன பாடல்? படம்?
தொடர்புக்கு:ramsych2@gmail.com
பாலாஜிக்கு மறுபடியும் வெளிய ஒரு பிக்பாஸ் வெயிட்டிங் - நித்யா @ தேஜு
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago