கா
தலர்கள் அதர்வா - மிஷ்டி இருவரும் தவறான புரிதலால் பிரிகிறார்கள். காதலியைப் பிரிந்த சோகத் தில் போதையின் உச்சத்துக்கு செல்கிறார் அதர்வா. ‘ஒன்றை மறக்க இன்னொன்று’ என்று அவரை வழிநடத்தும் நண்பர் கருணாகரன், தனிமையில் இருக்கும் அதர்வாவின் வீட்டுக்கு பாலியல் தொழிலாளியை (அனைகா சோதி) அனுப்பி வைக்கிறார். அங்கு அனைகா மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். கொலையாளியைத் தேடி அதர்வா, பாலக்காடு செல்கிறார். எதற்காக இந்தக் கொலை நடந்தது? செய்தது யார்? கொலைப் பழியில் இருந்து அதர்வா மீண்டாரா? பிரிந்துசென்ற காதலி மிஷ்டி அதன் பிறகு என்ன செய்கிறார்? இதற்கெல்லாம் விடை சொல்கிறது மீதிப் படம்.
‘போதையில் எடுக்கும் முடிவு முற்றிலும் தவறாக முடியும்’ என்ற நல்ல கருத்தை சொல்ல நினைத்திருக்கிறார் இயக்குர் பத்ரி வெங்கடேஷ். காதல், காமெடி என நீளும் படத்துக்கு இடையே பிரதான விஷயமாக, தவறான சகவாசத்தால் ஏற்படும் சங்கடங்களையும் கதை தொடுகிறது. ஒவ்வொரு பத்து நிமிடத்துக்கும் ஒரு புதிய கதாபாத்திரத்தை, புதிய கதைப் பின்னணியோடு திரைக்கதைக்குள் கொண்டு வருகிறார் இயக்குநர். ஆனால் அந்த திருப்பம் போதுமான திரில்லர் சம்பவங்களைப் பதிவு செய்யாமல் விலகிப் போய்விடுகிறது. இதனால், பல இடங்களில் லாஜிக் இல்லாமல் ஏனோதானோ என்று பயணிக்கிறது படம்.
அதர்வா சொல்படி ஒவ்வொரு விஷயத்தையும் கருணாகரன் செய்து முடிப்பது, மனோபாலா வீட்டுக்குள் வந்து போகும் ரகளைகள் இப்படி பல இடங்கள் ரசிக்கும்படி உள்ளன. ஆனாலும், பெண் சடலத்தை அறைக்குள் வைத்துக்கொண்டு படம் முழுக்க அவர் அரங்கேற்றும் காமெடித்தனம் ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்துகிறது.
வெளியே தெரிந்தால் என்ன நடக்குமோ என, ஒரு பெண்ணை தன் அறைக்கு அழைத்து வரவே பயப்படும் ஹீரோ, எதிர்பாராதவிதமாக கொலைப் பழியில் சிக்குகிறார். அந்த சூழலில் பெரும் அதிர்ச்சிகரமாக இருக்கவேண்டிய அவரைச் சுற்றி காமெடி விஷயங்களும், பதற்றம் இல்லாத சப்பைக் காட்சிகளும் இடம்பெறுவது கதையோடு ஒட்டவிடாமல் செய்கிறது.
அதர்வா பாலக்காடு செல்லும்போது, பிளாஷ்பேக்கில் அவரது காதல் காட்சிகள் படர்கின்றன. ஆனால், இருவருக்குமான காதல் விஷயங்கள் பெரிதாக ஈர்க்கவில்லை.
அலுப்புத் தட்டவைக்கும் காட்சிகளுக்கு நடுவே கருணாகரனின் காமெடி சுவாரசியம். கருணாகரன், மனோபாலா, சேத்தன் கூட்டணி தொடக்கத்தில் ரசிக்க வைக்கிறது. 2-ம் பாதியில் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ஆடுகளம் நரேன், யோகிபாபு என நடிப்பு பட்டாளங்கள் இணைகின்றன. காமெடி கலந்த துறுதுறுப்புடன் ஜான் விஜய் வில்லத்தனம் செய்தாலும், கதை ஓட்டத்துக்கு பெரிதாக துணைபுரிய வில்லை.
யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும், கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவும் ஆறுதல்.
காதல், அதனால் முளைத்த சண்டை, காமெடி, கொலை, கொலையாளியை தேடும் படலம் என முதல் பாதி சுவாரசியம் குறையாமலே நகர்கிறது. இதற்கெல்லாம் விடை காண்பதாக, மிரட்டலாக இருக்கவேண்டிய 2-ம் பகுதி பெரிய திருப்பங்கள் இல்லாமல் போனது தான் படத்துக்கு பெரிய பலவீனம். குறிப்பாக, பணத்துக்காக மாறி மாறி நடக்கும் சண்டைகள், தேடல்கள் சரியாக கையாளப்படவில்லை. தற்போதைய காலகட்டத்துக்கு அவசியமான ஒரு நல்ல மெசேஜை திரில்லரும், காமெடியும் கலந்து சொல்ல நினைத்த இயக்குநரின் முயற்சியைப் பாராட்டலாம். காமெடியில் செலுத்திய கவனத்தை கொஞ்சம் திரைக்கதையின் திருப்பங்களிலும், திரில்லர் சம்பவங்களிலும் காட்டி இருந்தால், ரசனையான படமாகி யிருக்கும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago