நாடகமும் திரைப்படமும் பின்னிப் பிணைந் திருக்கும் இருபதாம் நூற்றாண்டின் தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் தாக்கம் செலுத்திய திரைப்படங்கள் பல. அவற்றில் ‘ரத்தக் கண்ணீர்’ தனியிடம் பிடித்தது. அதை முதலில் நாடகமாகவும் பின்னர் திரைக்காகவும் எழுதியவர் திருவாரூர் கே.தங்கராசு. ‘ரத்தக் கண்ணீர்’ படத்தின் வெற்றியால் திரையுலகம் அவரைத் திரும்பத் திரும்ப விரும்பி அழைத்த போதும் அதைப் புறக்கணித்து, பெரியாரின் பெருந்தொண்டராக, பகுத்தறிவுச் சுடராக, இதழாளராக 88 வயது வரையிலும் களமாடியவர்.
பேச்சாளர், எழுத்தாளர், இதழாளர், திராவிடர் கழகத்தின் முன் வரிசைத் தலைவர் எனப் பல தளங்களில் தன் தீவிரப் பங்களிப்பை நல்கிச் சென்றிருக்கும் இவரின் நூற்றாண்டு 06.04.25 இல் தொடங்குகிறது. அதையொட்டி அவரின் நிழலாக 40 ஆண்டுகள் உடன் பயணித்தவர் அவருடைய மருமகன் ஆர்.பிரசாத். அவரும் அவரின் மனைவியும் தங்கராசுவின் மகளுமான மண்டோதரி பிரசாத்தும் இணைந்து இந்து தமிழ் திசைக்கு அளித்த பிரத்யேக நேர்காணலின் ஒரு பகுதி:
உங்களுக்கும் தங்கராசுவுக்குமான முதல் சந்திப்பு, அவருடனான பயணம் பற்றிக் கூறுங்கள்...
பிரசாத்: என்னுடைய தாய் மாமன் ஜெயபால் தீவிர பெரியாரிஸ்ட். தங்கராசு அய்யா ஆசிரியராகவும் பதிப்பாளராகவும் இருந்து வெளியிட்டுவந்த ‘பகுத்தறிவு’ என்கிற பத்திரிகை வீட்டுக்கு வந்துவிடும். அவருடைய எழுத்துகளை மாணவப் பருவம் முதல் வாசித்து அவரால் ஈர்க்கப்பட்டேன். பின்னர் கல்லூரி முடித்து நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் விரிவாக்க அதிகாரியாகப் பணியில் சேர்ந்தேன். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.
1982 பிப்ரவரி 2இல் தங்கராசுவின் இரண்டாம் மகளான இவரை (மனைவி மண்டோதரியைக் காட்டி) பெண் பார்க்கச் சென்றிருந்தேன். அப்போது அவரிடம் ‘அய்யா நான் திருமணத்துக்குப் பின் அரசு வேலையை விட்டுவிடுவேன். சொந்தமாகத் தொழில் தொடக்க வேண்டும் என்பது என் விருப்பம்’ என்றேன்.
அவர் சிறிதுகூட அதிர்ச்சியடையவில்லை. ‘யாரிடமும் கைகட்டி ஊதியம் பெறக்கூடாது என்பதுதான் எனது கொள்கையும்’ என்று கூறிப் பெண் கொடுத்தார். எங்கள் திருமணத்தை எம்.ஜி.ஆர். தலைமை வகித்து நடத்தி வைத்தார். தொழில் தொடங்க எண்ணியிருந்த நான், திருமணத்துக்காக எடுத்திருந்த விடுப்பில் மாமனாருடன் சில பொதுக்கூட்டங்களுக்கு அவரது உரையைக் கேட்க விரும்பிச் சென்று வந்தபோது, மாப்பிள்ளையாக இருந்த நான் அவருடைய மாணவனாக மாறிப்போனேன்.
அவர் அழைக்கப்படும் கூட்டங்களுக்கெல்லாம் உடன் சென்று புத்தக விற்பனையில் ஈடுபட் டேன். அதில் நல்ல அனுபவம் ஏற்பட்டது. பிறகு வேலையை விட்டுவிட்டு பதிப்பாளர் ஆனேன். நானும் மனைவியும் பணம் போட்டு, அதுவரை அய்யா பதிப்பிக்காமலிருந்த ‘ரத்தக் கண்ணீர்’ நாடகத்தை முதல் முறையாகப் பதிப்பித்தோம். இப்படிப் பல நூல்கள். அவருடன் 40 ஆண்டு களில் 4 லட்சம் கிலோ மீட்டர்கள் பயணித்திருக்கிறேன். ஐம்பதாயிரம் திராவிடர் கழகப் பொதுக்கூட்டங்களில் பேசியிருக்கிறார்.
அவற்றில் 10 ஆயிரம் நிகழ்வுகள் மூன்று தலைமுறைகளுக்கு அவர் செய்துவைத்த சுயமரியாதை, சாதி மறுப்புத் திருமணங்கள். மேடையில் சாதி மறுப்பு பற்றிப் பேசிய துடன் நிற்காமல், தன்னுடைய மூன்று பிள்ளைகளுக்குமே சாதி மறுப்புத் திருமணம் தான் செய்து வைத்தார். வீட்டில் ஒன்று வெளியில் ஒன்று என்கிற பொய்மையோ சமரசமோ அவரிடம் எப்போதும் இருந்த தில்லை.
பகுத்தறிவுப் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களுக்கு அச்சடிக்கும் சுவரொட்டிகள், விளம்பரப் பிரசுரங்களில் ‘ரத்தக் கண்ணீர் புகழ் என்று போடாதே; சினிமா புகழ் எனக்குத் தேவையில்லை. திருவாரூர் தங்கராசு என்றே அறியப்பட விரும்புகிறேன்’ என்று கண்டிப்பாகச் சொல்லி அதையே அனைவரும் பின்பற்ற வைத்த வாழ்நாள் போராளி.
உங்கள் தந்தையாரின் அரசியல் வாழ்க்கையில் கலைஞர் மு.கருணாநிதியும் இருக்கிறார் எம்.ஜி.ஆரும் இருக்கிறார் என்பது வியப்பாக இருக்கிறது. அது பற்றி நீங்கள் அறிந்தவரை கூறுங்கள்…
மண்டோதரி: நான் அவருடைய இரண்டாவது மகள். மூத்த மகள், அக்காள் மலர்க்கொடி சுகுமாறன். நாங்கள் இருவரும் அகில இந்திய வானொலியில் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களாகப் பணிபுரிந்தோம். நான் பிறகு பொதிகைத் தொலைக்காட்சியிலும் பணிபுரிந்து பணி நிறைவு பெற்றேன். தம்பி புகழேந்தி தமிழக அரசின் செய்தித் துறையில் இணை இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். எங்கள் மூவருக்கும் மட்டுமல்ல, எங்கள் பிள்ளைகளுக்கும் பெரியார்தான் பெயர் சூட்டினார்.
அப்பாவின் பொது வாழ்க்கையை ஆவணப்படுத்தும் நோக்கத்துடன் அவரின் 85ஆம் அகவையில் அவரது நினைவுகளை நூலாகத் தொகுத்தோம். அப்போது ‘என் சுயபுராணம் எதுவும் வேண்டாம்; இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் வகையில், இந்நாள் வரையில் என் பொது வாழ்க்கையுடன் தமிழக அரசியல் வரலாற்றின் போக்கையும் பகுத்தறிவுப் பிரச்சாரத்தின் தேவை தமிழ் சூழலில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது என்பதைக் கூறுவதாகவும் அமைய வேண்டும் என்று பகிர்ந்தார்.
அது தற்போது ‘திருவாரூர் கே.தங்கராசு நினைவலைகள்’ என்கிற தலைப்பில் 48 அத்தியாயங்களைக் கொண்ட நூலாக, தந்தை பெரியார் திராவிடர் கழகம் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறது. அதை வாசிக்கும் ஒவ்வொருவரும் அப்பாவின் தீவிரமான பகுத்தறிவு பிரச்சார அரசியல் பயணத்தை அறிந்துகொள்ள முடியும். அத்துடன் பெரியார், அண்ணா, கலைஞர்.மு.கருணாநிதி, நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார், எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆர்., நெடுஞ்செழியன், கி.வீரமணி, கோவை கு.ராமகிருஷ்ணன் தொடங்கி, பல தலைவர்கள், கலையுலக ஆளுமைகளுடன் அவருக்கிருந்த நட்பையும் உறவையும் அறிந்து கொள்ளலாம்.
பதவிகளை மறுத்து போராளியாக மட்டுமே வாழ்ந்தவர். ‘விடுதலை’ இதழுக்கு ஆசிரியர் பொறுப்பேற்கப் பெரியார் அழைத்தபோது, பெரியாரிடம் மாத ஊதியம் பெற்றால் தனது அறிவை விற்பதாகும் என எண்ணி, அதை விரும்பாமல், அதேநேரம் அவரிடம் மறுக்காமல், கி. வீரமணியை அழைத்துச் சென்று 6 மாதம் அவருக்குப் பயிற்சியளித்து பணியில் அமர்த்தி, பெரியாரை ஒப்புக்கொள்ளச் செய்தார்.
அதேபோல், கலைஞர் இரண்டு முறை ராஜ்ய சபா எம்.பி. பதவியை ஏற்க அழைத்தபோதும் ‘நான் மக்களுடன் தொடர்பில் இருப்பவன் எனக்குப் பதவி ஒத்து வராது’ என்று மறுத்துவிட்டார். 1974இல் அப்பாவுக்குக் கலைமாமணி விருது வழங்கிய கலைஞர், பின்னர் 1996இல் பெரியார் விருதை ஏற்படுத்தி, ‘அதை முதலில் பெறும் தகுதி தங்கராசுவுக்கே இருக்கிறது’ என்று கூறி அதைச் சட்டசபையில் அறிவிக்கும் முன் எனது அப்பாவிடம் ‘நீங்கள் விருதை மறுத்துவிடக் கூடாது’ என்று முன் அனுமதி பெற்று அறிவித்தார்.
பெரியார் விருது விழா மேடையில், ‘என் இளமைக்காலம் தொடங்கி எனக்கு உடல்நலம் குன்றினால் ஓடோடி வந்து நலம் விசாரிப்பவர் என் அன்பு நண்பர் தங்கராசுதான். ஆனால், எந்தச் சலுகையை வேண்டியும் அவர் எப்போதும் என்னிடம் வந்தவர் அல்ல’ என்று பேசினார். 17 வயதில் 1947இல் அப்பா திராவிடர் கழகத்தில் இணைந்த காலத்தில் அவரையும் கலைஞர் மு.கருணாநிதியையும் சுயமரியாதை இயக்கத்தின் பால் ஈர்த்த இரண்டு பேர், திருவாரூர் சிங்கராயரும் ‘அஞ்சா நெஞ்சன்’ பட்டுக்கோட்டை அழகிரியும்
பிரசாத்: எம்.ஜி.ஆர் உடனான அய்யாவின் நட்பு குறித்து நான் தொடர்ந்து சொல்கிறேன். அய்யாவின் ‘திராவிட ஏடு’, ‘பகுத்தறிவு’ ஆகிய பத்திரிகைகளைத் திரையில் உச்சம் பெற்று விளங்கிய காலத்தில் சந்தா செலுத்தி வாங்கி வாசித்தவர் எம்.ஜி.ஆர். அப்படித் தொடங்கியதுதான் அவர்களின் நட்பு. அவர் திமுகவிலிருந்து விலகி அதிமுக கண்டபோது, எம்.ஜி.ஆரை பொதுக் கூட்டங்களில் விமர்சித்துப் பேச வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டபோது முடியாது என்று அடியோடு மறுத்துவிட்டார் தங்கராசு.
பின்னர், 77 இல் அவர் எம்.ஜி.ஆர். முதல்வரானபோது, ‘ரத்தக் கண்ணீர்’ படத்தை தயாரித்த நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியாருக்கு ஒரு படம் நடித்துக் கொடுக்க ஒப்புக்கொண்டு தங்கராசுவை அழைத்தார். அப்படம் எடுக்கப்படாமல் போய்விட்டது.
பின்னர், பெரியார் நூற்றாண்டு வந்தபோது விழாக் குழுவுக்குத் தங்கராசுவை வழிகாட்டியாக நியமித்தார். அச்சமயத்தில் பெரியார் உருவாக்கிய தமிழ்ச் சீர்திருத்த எழுத்துகளை அரசுக் கோப்புகளிலும் பாடநூல்களிலும் நடைமுறைப்படுத்த வற்புறுத்தி, அதற்கான அரசாணையை வெளியிடச் செய்தார். இது வெளியே தெரியாத செயற்கரிய செயல்.
வரும் ஏப்ரல் 6 இல் நூற்றாண்டு தொடக்க விழா நடக்கிறதா?
பிரசாத்: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ‘அன்பகம்’ அரங்கத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் நடத்துகிறது. இதில் நூற்றாண்டு மலர் வெளியிடுகிறோம். நிறைவு விழா பிரம்மாண்டமாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும்.
- jesudoss.c@hindutamil.co.in