விஜய் ஒரு வெற்றி நாயகனாக வேகமாக வளர்ந்துகொண்டிருந்த தொடக்க நேரம். அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் அல்லாமல், தொடக்கத்தில் விஜய் நடித்த வெளிப் படங்களில் ஒன்று ‘கோயமுத்தூர் மாப்ளே’. அதை இயக்கி, இயக்குநராக அறிமுக மானவர் எஸ்.ஏ.சந்திரசேகரனின் உதவியாளரான சி.ரங்கநாதன். அந்தப் படம் உருவான நாள்களை இந்த வாரமும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்:
“சினிமாவில் ஹீரோவாகும் கனவைச் சிறு வயதிலேயே வரித்துக்கொண்டிருந்த விஜய்க்கு அவருடைய அம்மா பெரிய சப்போர்ட். ‘அப்பா ஒரு டைரக்டரா இருந்தா.. மகனை ஹீரோவாக ஆக்கியே தீரணும்னு நினைக்கிறது சரியில்ல’ என்று எஸ்.ஏ.சி. மறுத்து வந்தார். ‘ஹீரோவாக ஆவது பெரிய விஷயமில்லை; சக்சஸ்ஃபுல் ஹீரோவாக நிலைப்பதுதான் சவால்’ என்பது அவருடைய தயக்கத்துக் கான காரணம். தவிர, ‘விஜய் 18 வயதில் ஹீரோ ஆக வேண்டுமா, முகத்தில் இன்னும் கொஞ்சம் மெச்சூரிட்டி வரட்டும்’ என்று கோரிக்கையை ஏற்கவில்லை. இச்சமயத் தில், விஜய் காணாமல் போய் ஒரு நாள் முழுவதும் கொடுத்த ட்ரீட் மெண்ட் வீட்டில் நன்றாகவே வேலை செய்தது. மகனை இதற்குமேல் அலட்சியப்படுத்த முடியாது என்கிற நிலை வந்தபிறகு எஸ்.ஏ.சி.சார் விஜய்க்கு எழுதிய கதைதான் ‘நாளைய தீர்ப்பு’. அந்தப் படத்தில் விஜயுடன் நடித்த சீனியர் நடிகர்களில் ராதாரவி தொடங்கி அத்தனைப் பேரும் ‘என்ன சார்! உங்கப் பையன் இந்த வயசுல நீங்க எப்படி பால் போட்டாலும் அடிக்கிறான். அவன் நடிப்பு ரொம்ப கிளாஸ்; இவர் ஒருத்தர் போதும் உங்க குடும்பத்தைப் பார்த்துக்க’ என்று பாராட்டினார்கள்.
சட்டத்தின் ஆட்சி மதிக்கப்பட வேண்டும், சமூக நீதியும் சமுத்து வமும் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை மட்டுமே தான் இயக்கும் படங்களில் உள்ளடக்க மாக வைக்கும் எங்கள் இயக்குநர் எஸ்.ஏ.சி, தான் எழுதிய புரட்சிகரமான கதைகளுக்காக எந்த அரசியல்வாதிக்கும் பயந்து படம் எடுத்ததில்லை. எம்.ஜி.ஆர். முதல்வ ராக இருந்தபோது கலைஞரைக் கதை, வசனம் எழுத வைத்து ‘நீதிக்குத் தண்டனை’ படத்தை இயக்கியவர். அப்படிப்பட்டவர், மகனை அறிமுகப்படுத்தும்போது தனது பாணியிலி ருந்து விலக விரும்பவில்லை. சமூகப் பிரச்சினையையே கதையாக்கினார். ஆனால், ‘நாளைய தீர்ப்பு’ சரியாகப் போகவில்லை. ‘அய்யோ! மகனை இப்படி விட்டுவிட முடியாதே.., இரண்டாவது அடியைக் கவனமாக வைக்க வேண்டுமே என்றுதான் புரட்சிக் கலைஞர் விஜயகாந்தை அணுகினார். கடைக்கோடி ரசிகனையும் சென்றடைந்த ‘பி’, ‘சி’ சென்டர்களின் வசூல் ராஜாவாக விளங்கிவந்த விஜயகாந்துடன் இணைந்து விஜய் ஒரு படத்தில் நடித்துவிட்டால் போதும், ரசிகர்களை போய் அடைந்துவிடலாம்’ என்று நினைத்தார்.
விஜயகாந்தை பார்க்க இயக்குநர் நேரம் கேட்க, அவரோ ‘ஏய்.. என்னப்பா இது! அவர் வந்து என்னைப் பார்க்கி றதா? நான் தானே அவரைப் பார்க்க வரணும்’ என்று புகழின் உச்சத்தில் இருந்த அவர், இயக்குநரைத் தேடி அவரது வீட்டுக்கே வந்துவிட்டார். எங்கள் இயக்குநர் பதறிப்போய் ‘என்ன விஜி உனக்கு இருக்கிற ஷெட்யூல்ல நீ எதுக்குப்பா வந்தே.. நான் வந்திருப் பனே..’ என்றார். அதைக் கேட்டு அவர் சொன்ன வார்த்தை, ‘நீங்க சொன்னா நான் மறுக்கவா போறேன்.. ஒரு போன் கால் பத்தாதா? விஜய்க்கு என்னோட வாழ்த்துகள் சார்’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார். விஜய்காந்த் அண்ணனாகவும் விஜய் தம்பியாகவும் நடித்து, பாக்ஸ் ஆபீஸில் ‘மாஸ்’ காட்டிய அந்தப் படம்தான் ‘செந்தூரப் பாண்டி’. இயக்குநர் என்ன எதிர்பார்த்தாரோ அது நடந்தது. விஜயை அவருடைய இரண்டாவது படமே சாமானிய மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தது! ‘யார் இந்தத் துடிப்பான பையன்?’ என்று கேட்கவும் வைத்தது.
உழைக்கும் மக்களிடம் ‘செந்தூரப் பாண்டி’ படம் வழியாக விஜய்க்கு கிடைத்த இந்த வீச்சை அப்படியே தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்றுதான் எஸ்.ஏ.சி.சார், ‘தேவா’, ‘விஷ்ணு’, ‘ரசிகன்’ மாதிரியான ‘அவுட் அண்ட் அவுட்’ கமர்ஷியல் படங்களில் விஜயை நடிக்க வைத்து அவரை நிலைநிறுத்தினார். இதற் காகப் பலர் அவரை கடுமையாக விமர்சிக்கவும் செய்தார்கள். மகனை வெளிப் படங்களில் நடிக்க அனு மதிக்கும் முன், ‘இவரை வைத்துப் படமெடுத்தால் நஷ்டம் வராது, இவர் நடிக்கும் படத்தைப் பார்த்தால், பொழுதுபோக்கு அம்சங்களுக்குக் குறைவிருக்காது’ என்று தயாரிப்பாளர்களும் மக்களும் சொல்லும் விதமாக விஜயை உருவாக்கிவிட வேண்டும் என்பதே அவரது இலக்காக இருந்தது. அதைச் செய்து முடித்ததும் வெளிப் படங்களில் விஜய் நடிக்க அனுமதித்தார். அப்படி அவர் நடித்த ஒரு சில படங்கள் அவ்வளவாகக் கவனம் பெறவில்லை. அந்த வகையில் விஜய் நடித்து சூப்பர் ஹிட் ஆன ஒரு வெளிப்படம் என்றால், அது என்னுடைய இயக்கத்தில் வெளி யான ‘கோயமுத்தூர் மாப்ளே’ தான்.
அப்பாவின் இயக்கத்தில் விஜய் தொடர்ந்து நடித்து வந்த காலகட்டத்தில், எஸ்.ஏ.சி.சார் கதைத் தயாரானதும் என்னைத் தான் விஜயிடம் போய் கதையைச் சொல்லிவிட்டு வரச் சொல்லுவார். என்னைப் போன்ற கொங்குக் காரர்களை இந்த உலகில் எந்த மூலையில் போய் நீங்கள் விட்டாலும் எத்தனை வருடம் சொந்த ஊரைப் பிரிந்து வாழ்ந்தாலும் எங்கள் கொங்கு வட்டார வழக்கில் பேசுவதை மட்டும் நாங்கள் விடமாட்டோம். அது எங்கள் ரத்தத்தில் ஊறிப்போன மரியாதை வழக்கு.
நான் விஜய்க்கு கதை சொல்லும்போதெல் லாம் கொங்கு வட்டார வழக்கில் அவருக்குச் சொல்லி வந்தது அவரிடம் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும். ‘கோயமுத்தூர் மாப்ளே’ படப்பிடிப்பில் ஓர் அசல் கொங்கு மைந்தனைப் போல் பேசத் தொடங்கினார். இன்று வரை அவரிடம் கொங்கு வட்டார வழக்கின் தாக்கம் ஓட்டிக்கொண்டிருப்பதற்கு நானும் ஒரு காரணம் என்பதில் மகிழ்ச்சி.
‘கோயமுத்தூர் மாப்ளே’ படம் உருவான பின்னணியில் எஸ்.ஏ.சி.சாருக்கு ஒரு பெரிய பங்குண்டு. அவர் சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தபோது அவரை தனது அலுவலகத்தில் தங்க வைத்து ஆதரித்தவர், ‘கலைப்பூங்கா’ சினிமா பத்திரிகையின் ஆசிரியர், மறைந்த ராவணன். அதற்கு நன்றிக் கடனாக, ராவணன் தயாரிப்பில் விஜய் நடிக்கும் ஒரு படத்தை இயக்குவதாக இருந்தார் இயக்குநர். அது தள்ளிப்போய்க்கொண்டே இருந்ததில் அதை நிறைவேற்றும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். நானும் 1000 ரூபாய் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு, அலுவலகம் போட்டு வேலைகளைத் தொடங்கினேன். ஆனால், அது நடக்கவில்லை. அதன்பின்னர்தான் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வியின் மகன் முரளி ‘கோயமுத்தூர் மாப்ளே’ படத்தை தயாரித்தார்.
இந்தப் படத்தில் கவுண்டமணி, செந்தில், வினுச்சக்கரவர்த்தி, நிர்மலாம்மா, சில்க் ஸ்மிதா என்று
பெரிய ஜாம்பவான்கள் நடித்தார் கள். சில்க் ஸ்மிதா இந்தப் படத்தில் இடம்பெற்று விஜய் - கவுண்டமணி யுடன் இணைந்து ‘அண்ணாமலை தீபம்' என்கிற பாடலில் நடனமாடியது ஓர் அரிய நிகழ்வு. அப்போது அவர் படங்களை ஒப்புக்கொள்வதை வெகுவாகக் குறைத்துவிட்டிருந்தார். நாங்கள் சென்று வேண்டுகோள் வைத்தபோது, ‘யார் கோ-ஸ்டார்ஸ்?’ என்று கேட்டார். ‘விஜய் - கவுண்டமணி’ என்றதும் ‘டபுள் ஓகே..’ என்றார். அந்தப் பாடல் காட்சி படப்பிடிப்பில் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு சில்க் ஸ்மிதாவால் ஆட முடியவில்லை. 3 நாள் நடந்த படப்பிடிப்பின் இறுதியில் விஜயை அருகில் அழைத்து, ‘சூப்பரா ஆடுறீங்க விஜய்.. மை பெஸ்ட் விஷ்சஸ்’ என்று கைகுலுக்கிப் பாராட்டினார். அதுதான் சில்க் ஸ்மிதா. விஜய் பற்றிய இன்னும் பல அரிய விஷயங்களை அடுத்த வாரமும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.க்ஷ
(ப்ரியம் பெருகும்)
- சி.ரங்கநாதன்
படங்கள் உதவி: ஞானம்