உலகில் தோன்றிய உயிரினங்களில் மனித இனம் மட்டுமே சிரிக்கத் தெரிந்தது என்பார்கள். அதற்கு இணையாக மற்றொரு சிறப்பம்சமும் உள்ளது. அது மனித குலத்துக்கு இயற்கை அருட்கொடையாக அளித்த காதலுணர்வு. இது, ஆணும் பெண்ணும் ஒருவரை இன்னொருவர் மனதின் ஆழத்திலிருந்து நேசிப்பதிலும் மதிப்பதிலும் வெளிப்படுவது.
அத்தகைய சிறப்பைப் பெற்ற காதலுணர்வின் புனிதத்தை மிக நேர்த்தியாகப் பேசியிருக்கிறது சென்ற நூற்றாண்டின் இறுதி வரையிலான இந்திய, தமிழ் சினிமா. அழியாப் புகழ்பெற்ற திரைப்படமான ‘தேவதாஸ்’ தொடங்கி தமிழில் ‘சலங்கை ஒலி’ வரை, காதலின் உள்ளார்ந்த மேன்மையை விளம்பிய படங்கள் ஏராளம்.
இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் அகண்ட வணிகப் பேராசையுடன் நம்மைக் கவ்விக் கொண்ட உலகமயமாதலின் பல விளைவுகளில் ஒன்றாக சினிமாவும் திசைமாற்றம் கண்டது. கலை பின் னுக்குச் சென்று வணிகம் முன்னுக்கு வந்தது. நம்பத்தகாத வீரதீரக் கதையாடல்களுக்குள் நாயகி கதா பாத்திரம் முழுக்கவே ஒரு பாலியல் உயிரியாகப் பாவிக்கப்பட்டு, சாவிகொடுத்தால் அசையும் பொம்மை யாக்கப்பட்டது.
திரை வெளியில் பெண்: எடுக்கப்படுகிற பெரும்பான்மைப் படங்களில் காதல் என்பது தனது உயிரியல் ரீதியான சுயமரியாதையை இழந்து உடலின் மேற்பரப்பிலேயே தேங்கிவிட்டது. காதலின் பெயரில் பெண் கதாபாத்திரங்கள் மீது ஏவப் படும் கபளீகரம் அளவிடற்கரியது. ஆண் கூட்டங்கூட்டமாகக் கூடியாடும் குத்தாட்டத்துக்குப் பக்கபலம் சேர்க்கும் ஒரு போதையூக்கியாகவும் இன்ப நுகர்வுக்கான காமப் பண்டமாகவும் இன்றைய திரைப்பரப்பில் நிறம் மங்கிப்போய்விட்டன நாயகிக் கதாபாத்திரங்கள்.
பெண்ணை வெறும் உடலாக மட்டுமே பார்க்கக் கற்றுத்தரும் படங் களைக் கண்ணுறும் பார்வையாளர் மனதில் உருவாகும் நச்சு மிகுந்த வேதிவினை, எத்தகைய சமூகத்தை அறுவடைசெய்யும் என்று படைப் பாளர்கள் சிறிதும் யோசிக்கத் துணிவதில்லை. ஆணாதிக்கப் புதைகுழியில் சிக்கியிருக்கும் சமூக அமைப்பில், ஒரு பார்வையாளன் தன்னைச் சூழ்ந்திருக்கும் பெண்களை என்னவிதமான புரிதலுடன் பார்ப்பான் என்பது குறித்து கரிசனம் கொள்வதில்லை.
சினிமா ஒரு வணிக ஊடகம்தான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அது அறம் சார்ந்த வணிகமாக இருக்கவேண்டும் என்பது முக்கியம். இன்றைய சமூகத் தில் கொழுந்துவிட்டு எரியும் குற்றங்களின் அதிகரிப்புக்குச் செய்தி ஊடகங்களைப் போல், காட்சி ஊடகங்க ளுக்கும் நிறையப் பங்குண்டு என்பதை நாம் மறக்கலாகாது. இப்படி வெகுஜனத் திரை சார்ந்த சீரழிவுப் போக்கை நாம் வெகு வாகக் கண்டாலும், இந்திய இணையோட்ட சினிமாவில் (Parallel Cinema) காதலைத் தகுந்த மரியாதையுடன் அணுகும் படங்கள் அவ்வப்போது வரவே செய்கின்றன.
அதிலும் காதல் என்பது இளவயதில் மட்டுமே தோன்றும் ஓர் இனம்புரியாத உணர்வு என்கிற வழமைப்பட்ட தேய்வுக் கோணத்திலிருந்து முற்றிலுமாக விலகி, காதல் என்னும் அகச்சுடர் வயோதிக வயதிலும் உள்ளத்துள் ஒளிவிடலாம் என்கிற தேர்ச்சிமிக்க கண்ணோட்டத்துடன் அமைந்த படங்களும் அவற்றில் உள்ளடங்கும். அத்தகைய தொனியில் அமைந்த இந்தித் திரைப்படம் 2023இல் வெளி வந்த ‘தாய் ஆஹர்’ (Dhai Aakhar).
ஒரு தாயின் பயணம்: ஹர்ஷிதா வயோதிகப் பருவத்தில் கால் வைத்திருக்கும் ஒரு விதவை. அவளுக்குத் திருமணமான இரண்டு மகன்கள். பேத்தியும் இருக்கிறாள். இரக்க உணர்வே இல்லாமல் பல கொடுமைகளை அவள்மீது ஏவி மகிழும் அவளது கணவன் ஒரு விபத் தில் இறந்துவிட, விதவைக் கோலம் பூணப்பட்டு தனியள் ஆகிறாள்.
தமது தாய்மீது தந்தை இழைத்த இன்னல்களை வேறு ரூபத்தில் மகன்கள் செய்கிறார்கள். மாடியில் இருக்கும் சிற்றறையில் மட்டுமே அவள் வசிக்க வேண்டும். கீழே உள்ள அவளுக்குச் சொந்த மான வீட்டில் மற்ற உறவுகளு டன் வசிக்கக் கூடாது. வெள்ளுடை மட்டும்தான் அணிய வேண்டும். தரையில் தான் உறங்க வேண்டும்.
ஊடக சுக போகம் கூடாது. இப்படி அநீதியான ஏற்பாடுகள். ஹர்ஷிதா திருமணத்துக்கு முன்பிருந்தே நல்ல வாசகி. இலக்கி யங்களை விரும்பி வாசிப்பவள். கணவன் உயிரோடிருந்தபோது விதித்த தடை காரணமாக வாசிப்பி லிருந்து விலகியிருந்தவள், இப்போது தனிமை தரும் வெறுமை காரணமாக மறுபடியும் தனது இலக்கிய வாசிப்பை மீட்டெடுக்கிறாள். அவளது துயர வாழ்வைப் பிரதியெடுத்த விதமாக அமைந்த புதினம் ஒன்றில் ஈர்ப்பு கொள்கிறாள்.
அந்தப் புதினத்தை எழுதியவர் பிரபல எழுத்தாளரான ஸ்ரீதர். அவருக்குத் தன்னுடைய வாசிப்பனுபவம் குறித்து கடிதம் எழுத, அவரும் பதில் கடிதம் எழுதுகிறார். அறிவார்ந்த, பண்பட்ட நேய குணத்தை அவருடைய கடிதங்களில் கண்டடைகிறாள். ஒரு பொழுதில், அவரைச் சந்திக்கும் விருப்பம் மேலிட, உத்தராகண்டில் வசிக்கும் அவரைக் காணும்பொருட்டு, ‘புனித யாத்திரைக்குச் செல்கிறேன்’ என்று மகன்களிடம் பொய் சொல்லிவிட்டு, பேருந்தில் பயணப்படுகிறாள்.
இணையும் இதயங்கள்: ஸ்ரீதரைச் சந்தித்து மலை சார்ந்த அவரது அழகிய இல்லத்தில் தங்கும் நாள்களில் அவரது அன்புமயம் கொண்ட இளகிய குணம் அவளை மேலும் ஈர்க்கிறது. தன்னைப் புரிந்துகொள்ளும் பெண்ணை அந்த வயோதிக வயதுவரை கண்டடையாத ஸ்ரீதரும் ஹர்ஷிதாவின் மென்மையான இருப்பில் காதல்கொள்கிறார்.
இருவரும் திருமணம் செய்துகொண்டு சேர்ந்து வாழ முடிவெடுக்கிறார்கள். இந்த விஷயத்தை அறிந்துகொள்ளும் ஹர்ஷிதாவின் மகன்கள் ஆவேசப்படு கிறார்கள். ஆணாதிக்கக் குடும்ப அமைப்பில் சுகம் கண்ட அவர்கள், அவளைத் தண்டிக்க எண்ணுகி றார்கள். ஆயினும், ஹர்ஷிதாவும் ஸ்ரீதரும் அவர்களது தடையை மீறிக் கைகோக்கிறார்கள்.
படத்தின் வசனங்கள் அனைத்தும் கவிதைத் தன்மை வாய்ந்தவை. ஒரு சிறந்த எழுத்தாளரின் அறிவார்ந்த சிந்தனையோட்டத்தில் அமைந்தவை. எடுத்துக்காட்டாக ஒரு காட்சியில், “திருமணம் என்பது சமூகம் உருவாக் கிய கட்டுமானம். ஆனால் காதல் என்பது இயற்கை உவந்தளித்த பரிசு” என்று ஹர்ஷிதாவிடம் ஸ்ரீதர் கூறுவார். இருவரிடையேயும் காமம் வெளிப்படுவதில்லை. ஒன்றிணைந்த துணைக்கரமே அவர்களது உள்ளார்ந்த தேவையாயிருக்கிறது. சமகால இளம் தலைமுறையினர் இந்தப் படத்தைப் பார்க்கும்போது, காதலின் உண்மையான பரிமாணத்தை உணர்வதற்கான தருணங்கள் நிறையவே எண்ணத்தில் மேலிடும்.
சமூகம் சட்டகமிட்டுத் தந்த திருமண முறையில் விரவியிருக்கும் குடும்ப வன்முறை, காலம் கடந்தாலும் தனக்குப் பிடித்தமான துணையைத் தைரியமாகத் தேர்ந்தெடுப்பதில் கிட்டும் விடுதலையுணர்வு என இருவேறு வாழ்வனுபவங்களை நமது கண்ணெதிரே நிகழ்த்துகிறாள் ஹர்ஷிதா. அகப்புரிதலுடன் எழும் காதல் ஒன்றே சுயமரியாதை, சமத்துவம் அனைத்தையும் கடந்த நேசம் ஆகிய ஒன்றிணைவைத் தரும் என்பது இப்படம் நமக்குக் கற்றுத்தரும் பாடம்.
காதலெனும் ஞானப் பாதை! - பிரபல எழுத்தாளர் அம்ரிக் சிங் தீப் எழுதிய ‘தீர்த்தாதன் கி பாத்’ என்கிற நாவலுக்கு உகந்த திரைக்கதை வடிவத்தைக் கொணர்ந்திருக்கிறார் அஸ்கர் வஜாகத். ஹர்ஷிதாவாக மராத்தி நடிகை மிருணாள் குல்கர்னியும் எழுத்தாளர் ஸ்ரீதராக அரங்க நடிகர் ஹரிஷ் கன்னாவும் தத்தமது கதாபாத்திரங்களில் உயிரோட்டத்துடன் மிளிர்கிறார்கள். உத்தராகண்டின் அழகிய நிலவெளி களைப் பதியமிடும் சந்தீப் யாதவின் மெது நகர்விலான ஒளிப்பதிவு மனதில் நிலைகொள்கிறது. இர்ஷாத் கமிலின் கஜல் கவிதையிலான பாடல் வார்ப்பும், அனுபம் ராயின் இதயத்தைத் தொடும் மெல்லிசையும் படத்தின் அர்த்த வேரை நம்முள் ஆழமாகப் பாய்ச்சு கின்றன.
“நமது நாட்டில் பெண் என்பவள் அடங்கிப்போக வேண்டியவளாக அல்லது கடவுள் தன்மைப் பெற்ற வளாக எதிரும் புதிருமான இடத்தில் வைத்து நாம் பாவிக்கிறோம். நமக்கு இணையான கனவுகளும் விருப்பங்களும் கொண்ட ஒரு மனிதப் பிறவியாக ஏன் அவளைப் பார்க்க மறுக்கிறோம்?” என ஓர் உரையாடலில் கேள்வியெழுப்புகிறார் படத்தின் இயக்குநர் பிரவீன் அரோரா. பெண்ணை வலுக்கட்டாயப் படுத்திச் சம்மதிக்க வைப்பது காதலல்ல. சம்மதிக்காதவளின் முகத்தில் அமிலத்தை வீசுவதும் காதலல்ல.
இயலாமையில் கொலைசெய்து மனந்தணிவதும் காதலல்ல. இவை யெல்லாம் பெண்ணை உடலாக மட்டுமே கணித்து தன்னுடைமை ஆக்க முயல்வதன் விபரீதச் செயல் களாகத்தான் முடிவடையும். அடியாழ மனதில் துளிர்த்து, அன்பு திளைக்க வளரும் காதலுணர்வு பன்னெடுங் காலம் நீடித்து வாழும். இயந்திரத் தனமான குடும்பம், சமூகம் விதிக்கும் தடைகளை உடைத்து, இரு மனங்கள் ஒன்றுடன் மற்றொன்று இணைந்து அன்புமயமான உலகை விதையிடுவதையே நம்மைப் பிறப்பித்த உலகின் இயற்கை எக்காலமும் விரும்பும்.
சாதி, மொழி, மத, இன அடையாளங் களைத் துறந்து உலகமே நல்லிணக்க மயமாக நமது கண்ணெதிரே உள்ள ஒரே ஞானப்பாதை காதலில் மட்டுமே தொடங்குகிறது. ‘ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே, அஃதன்றோ இவ்வுலகத் தலைமையின்பம்’ என்று பாடிய மகாகவி பாரதியின் வாக்கை இந்தத் தருணத்தில் நினைவுகூர்வோம். காதலின் வலிமை மிக்க உள்பொருளை உணர்ந்து புவியில் நம்மிருப்பை மென்மேலும் செழுமையாக்குவோம்.
- viswamithran@gmail.com