குடும்ப உறவுகள், விவசாயம் ஆகியவற்றைப் பின்னணியாகக் கொண்டு ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். இறுதிக் கட்டப் பணிகளில் மும்முரமாக இருந்தவரிடம் பேசியதிலிருந்து...
‘கடைக்குட்டி சிங்கம்’ விவசாயிகளைப் பற்றிய படமா, உறவுகளைப் பற்றிய படமா?
உறவுகளைப் பற்றிய படம்தான். விவசாயமும் அதற்குள் இருக்கிறது. விவசாயிகளுடைய இன்றைய பிரச்சினைகளையோ அதற்கான தீர்வுகளையோ சொல்ல வரவில்லை. அவர்களுடைய கஷ்டத்தைப் பற்றியும் பேசவில்லை. ஜெயிச்ச விவசாயியைப் பற்றிப் பேசியிருக்கிறோம். கதாநாயகன் மாதம் 1.5 லட்ச ரூபாய் சம்பாதிக்கிற வெற்றிகரமான விவசாயி.
விவசாயத்தில் இப்படியும் சம்பாதிக்கலாம் என்று சொல்லியிருக்கிறோம். ஐ.டி. துறையில் வேலைப்பளு அதிகமாகி வேலையை உதறிவிட்டுப் பலரும் விவசாயத்தை நோக்கிப் போகிறார்கள். ‘இந்து தமிழ்’ நாளிதழில்கூட ‘இந்த விவசாயி மாதம் இவ்வளவு சம்பாதிக்கிறார்’ என்ற ஆச்சரியமான செய்திகளைப் பார்த்திருக்கிறேன்.
ஒரே படத்தில் 29 நடிகர்களை இயக்கி இருக்கிறீர்கள். மிகவும் கடினமாக இருந்திருக்குமே?
பல காட்சிகளில் அனைத்து நடிகர்களும் இருக்கிறார்கள். ஒரு இடத்தில் 29 நடிகர்களை வைத்து, எங்கே கேமராவை வைத்துப் படம் பிடிப்பது என்ற கேள்வி எழும். அதெல்லாம் நிறைய சவாலாகவே இருந்துச்சு. படமாக்கும்போது கொஞ்சம் விட்டிருந்தேன் என்றால் சீரியலாகக்கூட ஆகியிருக்கும். குடும்பப் படம் என்பதைத் தாண்டி குடும்பமாக வாழ்ந்து எடுத்த படம் இது. சத்யராஜ் சாரெல்லாம் மாலை 6 மணிக்கு மேல் நடிக்க மாட்டார். ஆனால், இதில் இரவு 10 மணி வரைக்கும் நடித்துக் கொடுத்திருக்கிறார்.
நடிகர் கார்த்தியை எப்படி ஒப்புக்கொள்ள வைத்தீர்கள்?
இதற்குமுன்பு நான் இயக்கிய ‘பசங்க 2’ படம் கார்த்தியின் மகளுக்கு ரொம்பவே பிடிக்கும். “என் குடும்பத்துக்குப் பிடிக்கிற மாதிரி ஒரு படம் பண்ண வேண்டும்” என்றார் கார்த்தி. இக்கதையைச் சொன்னவுடன் அவருக்குப் பிடித்துவிட்டது. சென்னைக்கு வெளியே கார்த்தியின் பூர்வீகமான கோயம்புத்தூரில் அவருக்கு உறவினர்கள், நண்பர்கள் எனப் பெரிய குடும்பம்போல் இருக்கிறார்கள்.
அவருடைய கோயம்புத்தூர் குடும்ப வாழ்க்கையை ஞாபகப்படுத்தியிருக்கிறது இக்கதை. அவருக்குள்ளும் விவசாயம் சார்ந்த படமொன்று பண்ண ஆர்வமிருந்தது. பழைய விஷயங்களை வாட்ஸ்அப்பிலும், மீம்ஸ்களிலும் பார்க்கும்போது இதெல்லாம் மறந்துதான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் வரும். அந்த மாதிரி பழைய விஷயங்களை ஞாபகப்படுத்துகிற படமாக இது இருக்கும்.
விவசாயிகளின் கஷ்டங்களையும் இதில் சொல்லியிருக்கலாமே..
உண்மையைச் சொல்லியிருந்தால், விவசாயத்தின் மீது இருக்கும் பயம் அதிகமாயிருக்கும். ஆனால், இப்படத்தைப் பார்த்துவிட்டு விவசாயம் பண்ண பலர் முன்வர வேண்டும் என்பதுதான் என் எண்ணம். எல்லாருமே விட்டுவிட்டுப் போய்விட்டால் யார்தான் விவசாயம் செய்வது? என்ன தொழில் வேண்டுமானாலும் செய்யுங்கள். கூடவே விவசாயமும் செய்யுங்கள் என்பதைப் பெருமையாகவும் மகிழ்ச்சியுடனும் சொல்லியிருக்கிறேன். இதைப் பெருமையாகத்தான் சொல்ல வேண்டும். கஷ்டத்தைச் சொல்லிவிட்டால் பயந்துவிடுவார்கள்.
உங்களது படங்களில் இடம்பெற்ற பாடல்கள் எதையும் வெளிநாட்டில் படமாக்கியதில்லையே என்ன காரணம்?
என் கதைகள் கேட்கவில்லை ‘இது நம்ம ஆளு’ படத்துக்காக வெளிநாடு போயிருக்கலாம். தமிழ்நாட்டில் நடக்கும் கதைக்குப் பாடல்களை ஏன் வெளிநாட்டில் படம்பிடிக்க வேண்டும் என்ற எண்ணம்தான்காரணம்.
சூர்யா - கார்த்தி இருவரையும் இணைத்து படம் இயக்குவீர்களா?
எனது இயக்கத்தில் இருவருமே இணைந்து நடிப்பதாக இருந்தால், அதை யாராலும் மாற்ற முடியாது. அதற்கான கதை அமையும்போது பண்ணுவேன். அப்படியொரு கதை வைத்திருக்கிறேன் என்றால் இருவருமே அழைத்துக் கேட்பார்கள். இதுவரையும் அப்படியொரு கதை அமையவில்லை.
வீட்டில் பெரிய தோட்டம் வைத்திருக்கிறீர்களாமே?
பெரிய தோட்டமெல்லாம் இல்லை. சின்ன தோட்டம்தான். அதில் என் வீட்டுக்குத் தேவையான வாழை, கத்திரிக்காய், தக்காளி, கீரை பயிரிட்டு எடுத்துக்கிறேன். மீதமாகிவிட்டால் பக்கத்தில் இருப்பவர்களுக்குக் கொடுக்கிறோம். வாக்கிங், உடற்பயிற்சி என்றில்லாமல் தோட்டத்துக்குள் இறங்கி வேலை பார்க்கும்போது நன்றாக வியர்க்கிறது.
எனக்கும் ஊரிலிருக்கும் எண்ணம் வருகிறது. அதற்காகத்தான் தோட்டம். காலையில் எழுந்து தோட்டத்துக்குச் சென்றால் வாழையில் பூ தள்ளியிருக்கும் அதைப் பார்த்துச் சந்தோஷப்படுவேன். எத்தனை முருங்கைக்காய்கள் வந்திருக்கின்றன என்று உட்கார்ந்து எண்ணிக்கொண்டு இருப்பேன். இது எனக்குச் சந்தோஷம் கொடுக்கிறது. எனக்குப் படத்தில் வசனம் எழுதுவது ரொம்பப் பிடிக்கும். அந்த மாதிரிதான் விவசாயமும்.
“சினிமா மேஜிக்னு சொல்லி மக்களை ஏமாற்ற முடியாது” - கவுதம் கார்த்திக்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago