மூன்று தசாப்தங்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள கொல்கத்தா சர்வதேசத் திரைப்பட விழாவின் 30வது பதிப்பு, கடந்த 4ஆம் தேதி தொடங்கி நிறைவு பெற்றது. பிரெஞ்சுத் திரைப்படங்களை மையமாகக் கொண்டு அவற்றைக் கொண்டாடி மகிழ்ந்தனர். கொல்கத்தாவை ஏன் இந்தியாவின் பண்பாட்டுத் தலைநகரமாகக் கொண்டாடுகிறார்கள் என்பதை இப்படவிழா நடத்தப்பட்ட முறைமையை நேரில் கண்டதன் வழியாக உணர முடிந்தது. அப்படியொரு நேர்த்தியையும் ஒழுங்கையும் படவிழாவின் எல்லா நாள்களிலும் காண நேர்ந்தது.
பரந்து விரிந்த ‘கிரேட்டர்’ கொல்கத்தா மாநகரம் முழுவதும் பத்தொன்பது திரையரங்குகளில் நூறுக்கும் அதிகமான படங்கள் திரையிடப்பட்டன. இதனால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களும் உலகத் திரைப்படங்களையும் இந்தியன் பனோரமா பிரிவில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த இந்தியத் திரைப்படங்களையும் காணும் வாய்ப்பைப் பெற்றனர். திரைப்பட விழா தொடங்குவதற்கு முன்னரே இயக்குநர் கௌதம் கோஷ் தலைமையிலான விழாக்குழு, பத்திரிகைகள், இணையதளம், சமூக ஊடகங்கள் வாயிலாகப் படவிழாவின் ஒவ்வொரு அம்சத்தின் சிறப்பையும் கொண்டு சேர்ந்தனர். தவிர, சாலை சந்திப்புகள், முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், புகழ்பெற்ற கல்விச் சாலைகளில் திரைப்பட விழா விளம்பரத் தட்டிகளை வைத்திருந்தது, இந்த ஊடகங்களின் பக்கம் கவனம் திருப்ப முடியாத பிஸியான நகரவாசிகளுக்கும் படவிழாவைக் கொண்டு சேர்த்தது.
திரைப்பட விழாவில் கலந்துகொண்டு படங்களைக் காண விரும்பும் திரை ஆர்வலர்களுக்கான நுழைவுச்சீட்டு, திரையுலகினர், வெளிமாநில, வெளிநாட்டு விருந்தினர்கள்,முக்கிய நபர்கள் ஆகியோருக்கான நுழைவுச்சீட்டுகள் படவிழாவின் 15 நாட்களுக்கு முன்னரே விநியோகப்பட்டு இருந்தன. இருப்பினும் இறுதி நேரத்தில் வருபவர்களின் தேவை கருதி, படவிழா நடக்கும் திரையரங்குகளில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்களில் நுழைவுச்சீட்டுகள் இலவசமாகக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டு இருந்தது.
வரிசையில் நின்ற ஆர்வலர்கள்: ஒவ்வொரு திரையிடலுக்கும் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே பொதுமக்கள் நீண்ட வரிசையில் ஒழுங்கு காத்து தாம் விரும்பிய திரைப்படங்களைக் கண்டு களித்தனர். இந்த வரிசையில் பல முக்கிய நபர்களும் நின்றே இடம் பிடித்தனர். யாரும் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி உள்ளே நுழையாத அளவுக்கு கொல்கத்தாவாசிகளிடம் தன்னொழுங்கு இருந்தது. திரை ஆர்வலர்களைத் தாண்டி, அதிகப் பொதுமக்கள் ஊர்த்திருவிழாவைப் போல் தங்கள் மாநகரின் புகழ்பெற்ற திரைப்பட விழாவைக் கருதியது கண் கொள்ளாக் காட்சி!
» 6 நாட்களில் ரூ.1,000 கோடி வசூலை எட்டிய அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’
» தி கோட், அமரன், மகாராஜா... - வசூல் குவித்த டாப் 10 தமிழ்ப் படங்கள் | Year Ender 2024
படவிழா ஏற்பாடுகளில் முக்கியமானது, படங்களை வகைமை வாரியாகத் தேர்வு செய்து காண ஏற்ற வகையில் அவற்றின் கதைச் சுருக்கம், அவை பெற்றுள்ள சர்வதேச அங்கீகாரங்கள் உள்ளிட்ட விவரங்களையும் திரையிடல் கால - இட அட்டவணையையும் 7 நாள்களுக்கு முன்னதாகவே வெளியிட்டதைக் கூற வேண்டும். அதேபோல் திரையரங்கு வளாகத்திலேயே மலிவு விலையில் உணவு மற்றும் பானங்கள் கிடைக்குமாறு ஏற்பாடு செய்திருந்தனர். இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால், சுகாதாரச் சீர்கேடுகளைக் களையும்விதமாக திரையரங்குகளில் கட்டணக் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்ததே!
இப்படவிழாவில் 8 திரைப்படங்களைக் காணும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. அவற்றைப் பற்றிய சிறப்புக் குறிப்புகள்:
லா டால்சே விட்டா - (La Dolce Vita): இத்தாலிய நடிகரான Marcello Mastroianniயின் நூற்றாண்டைக் கொண்டாடும் விதமாகச் சிறப்புத் திரையிடல் நடைபெற்றது. 1960இல் Federico Fellini என்கிற புகழ் பெற்ற இத்தாலிய இயக்குநரின் திறம்பட்ட இயக்கத்தில் வெளிவந்து சர்வதேசத் திரைப்பட விழாக்களில் பல பரிசுகளை வென்ற இந்தத் திரைப்படம் இத்தாலியின் மேல்தட்டு மக்கள் போலி வாழ்க்கை வாழ்வதையும், மலிவான விளம்பரத்திற்காகத் தமது வாழ்க்கையைப் பணயம் வைக்கும் போக்கையும் எள்ளல் தொனியுடன் காட்சிப்படுத்துகிறது.
2. சூ ரியான் - (Su Ryeon): இந்தப் படத்தின் துவக்கத்தில் தென் கொரிய இயக்குநர் லீ சான் ஹோ தற்போதைய தென் கொரிய அதிபர் யுவான் சுக் யோலின் ஆட்சி குறித்து தனது எதிர்ப்பைத் தெரிவித்தார். பதின்ம வயதினர் தமது வாழ்க்கையை அமைக்கத் தென் கொரியாவின் தலைநகர் சியோலுக்கு வருவதையும், நகர வாழ்க்கையில் தமது வாழ்வாதாரத்திற்கான போராட்டங்களை எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்பதை அவர்களது திறமையான நடிப்பின் மூலமாகவும், தமது நேர்த்தியான இயக்கத்தின் மூலமாகவும் இயக்குநர் வெளிப்படுத்தியிருக்கிறார். ஆசியத் திரைப்படத்திற்கான நெட் பாக் (NETPAC) விருதைப் பெற்றது இத்திரைப்படம்.
3. பார் அமோர் - Par Amour (Call of Water): ஃபிரெஞ்சுத் திரைப்படமான பார் அமர் ஒரு குடும்பத்தினரின் வாழ்வில் அமானுஷ்யம் படுத்தும் பாட்டையும், அதிலிருந்து அக்குடும்பத்தினர் மீள்வதையும் திகிலாகவும், அழகியல் உணர்வோடும் காட்சிப் படுத்துகிறது. பெண் இயக்குநரான எலிஸ் ஓட்சன்பர்கர் (Elise Otzenberger) மிகவும் பாராட்டுக்குரியவர்.
4. பரிக்கிரமா - (Parikrama): பெங்காலி இயக்குநர் கெளதம் கோஷ் இயக்கி, இத்தாலிய- இந்தியக் கூட்டுத் தயாரிப்பில் வெளியான பரிக்ரமா திரைப்படம் நர்மதா அணையினால் மூழ்கிய கிராம மக்களின் வேதனையைப் பேசுகிறது. வளர்ச்சித்திட்டங்கள் என்ற பேராற்றில் எளிய மக்களின் வாழ்வாதாரம் மூழ்கும் அபாயத்தையும் எச்சரிக்கிறது.
5. த காட் ஃபாதர் - The Godfather: மார்லன் பிரான்டோவின் நூற்றாண்டை முன்னிட்டு சிறப்புத் திரையிடலாக தி காட்ஃபாதர் திரையிடப்பட்டது. உலக சினிமா வரலாற்றில் செவ்வியல் தன்மையை அடைந்து விட்ட இந்தத் திரைப்படம் ஒவ்வொரு காட்சியிலும், ஒவ்வொரு உரையாடலிலும் பார்வையாளர்களின் பலத்த கரவொலியைப் பெற்றது.
6. த ஷேம்லெஸ் - The Shameless: கொல்கத்தா பெண் அனுசுயா சென்குப்தா பாலியல் தொழிலாளியாக திறம்பட நடித்துள்ள இத்திரைப்படம் அவசியம் காணத்தக்கது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற கான்ஸ் சர்வதேசப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையைத் தேடித்தந்த இத் திரைப்படம் ஒட்டுமொத்தச் சமூகத்தின் மனசாட்சியை உலுக்குவதாக உள்ளது. படத்தின் கரு தன்பாலின ஈர்ப்பு, விபச்சாரம் என்று இருந்தாலும், வெட்கமற்றவர்கள் என்று சமூகத்தைச் சாடுகிறது. திரைப்பட ஆர்வலர்கள் அனைவரும் காண வேண்டிய திரைப்படம் இது.
7. த மோஸ்ட் பிரிசியஸ் ஆஃப் கார்கோஸ் - The Most Precious of Cargoes: ஃபிரெஞ்ச் காட்சிப்படமாக (அனிமேஷன்) அமைந்த இந்தத் திரைப்படம் இனவெறுப்பின் விளிம்பு வரை சென்று அன்பின் பால் மீண்ட ஒரு மரம் வெட்டியின் வாழ்க்கையையும், இனவெறுப்பின் தீச்சுவாலைகளிலிருந்து மீண்டவர்கள் தமது வாழ்க்கையை அன்பால் அழகாக்கியதை அழகியலுடனும், கருத்தாழத்துடனும் காட்சிப்படுத்திக் காண்பவர்களின் கண்களைக் குளமாக்குகிறது. ஏதாவது ஒரு உருவம் கொண்டு வெறுப்பு தாண்டவம் ஆடும் இக்காலச் சூழலில் ‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்பதை மிகவும் உணர்வுப்பூர்வமாக எடுத்துரைக்கிறது.
8. த ரூம் நெக்ஸ்ட் டோர் - The Room Next Door: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வயதான பெண், தன்னுடன் முன்பொரு காலத்தில் சக பத்திரிகையாளராகப் பணியாற்றித் தற்போது புகழ்பெற்ற எழுத்தாளராக இருக்கும் மற்றொரு மத்திய வயதுப் பெண்ணுடனான நட்பைப் புதுப்பித்துக் கொண்டு தனது இறுதிக்காலத்தில் மன நிறைவையும், அமைதியையும் நாடி எவ்வாறு உயிர் அமைதி பெற்றார் என்பதை மிகவும் நெகிழ்வுடன் ஸ்பானிய இயக்குநர் பெட்ரோ அல்மோடோவர்( Pedro Almodovar) தனது நேர்த்தியான இயக்கத்தில் வெளிக்கொணர்கிறார். கடந்த செப்டம்பர் மாதம் வெனிசில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழாவில் தங்கச்சிங்கம் விருதைப் பெற்ற இத்திரைப்படம் அவசியம் காண வேண்டிய ஒன்று! மொத்தத்தில், மன நிறைவையும், மகிழ்ச்சியையும் ஒரு சேர அளித்தது கொல்கத்தாவில் நடைபெற்ற 30வது சர்வதேசத் திரைப்பட விழா!
கட்டுரையாளர் நா சோமசுந்தரம் - கமாண்டன்ட், இந்தியக் கடலோரக் காவல் படை.
தொடர்புக்கு: nsscg1992@gmail.com.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago