நான் எல்லாத்துக்கும் ரெடி!: சிம்ஹா பேட்டி

ரசிகர்கள் அவரது நடிப்பைக் கொண்டாடுகிறார்கள். அவரோ “இந்த வெற்றிக்கான காரணம் நானல்ல, இயக்குநர்தான்” என்று அடக்கத்துடன் கூறுகிறார்.

‘பீட்சா’, ‘நேரம்’, ‘சூது கவ்வும்’, ‘ஜிகர்தண்டா’ என பாபி சிம்ஹாவுக்கு அமைந்த படங்கள் எல்லாமே ஒவ்வொரு வகையில் அவரது நடிப்புத் திறனுக்குப் பெருமை சேர்த்திருக்கின்றன. ‘ஜிகர்தண்டா’ இவருக்குத் திருப்புமுனையாக அமைந்துவிட்டது. ‘ஜிகர்தண்டா’ வெற்றியைப் பருகிக்கொண்டிருந்தவரிடம் பேசியதிலிருந்து...

‘ஜிகர்தண்டா’வில் உங்களது நடிப்பிற்கு வாழ்த்துகள் குவியுதே…

எல்லாவற்றுக்கும் காரணம் கார்த்திக் சுப்புராஜ்தான். சேது அப்படிங்கிற பாத்திரத்தை எனக்காக வடிவமைத்தான். இப்படித்தான் பேசணும், இப்படிப் பாரு, இப்படி நட என்று எல்லாம் பார்த்துப் பார்த்துப் பண்ணினான். இப்போ எல்லாரும் சிம்ஹா அசத்திட்டான்னு சொல்றாங்க. சந்தோஷமா இருக்கேன். ‘ஜிகர்தண்டா’ படத்தில் இடைவேளைக்குப் பிறகு ஒரு திரையரங்குக்குள் கண்ணீரோடு நடந்து போவேன். அது மாதிரி இப்போ நிஜத்தில் ஒவ்வொரு திரையரங்குக்கும் போயிட்டு இருக்கேன்.

‘ஜிகர்தண்டா’ அனுபவம் பற்றிச் சொல்லுங்க?

நான் ரொம்ப கஷ்டப்பட்டு, இஷ்டப்பட்டு பண்ணிய படம் ‘ஜிகர்தண்டா’. இனி சேதுவை முறியடிக்கிற மாதிரி ஒரு பாத்திரம் கிடைக்குமான்னு தெரியல. ‘ஜிகர்தண்டா’தான் கார்த்திக் சுப்புராஜ் எழுதிய முதல் கதை. எனக்கு நாலு வருஷத்திற்கு முன்னால் இந்தப் படத்தின் கதை தெரியும். நான் அப்பவே கார்த்திக் கிட்ட, ‘நான் சேது ரோல் பண்ணட்டுமா?’ன்னு கேட்டேன். ‘வேண்டாம்… சரிப்பட்டு வராது. வேறொரு வேஷம் கண்டிப்பா தாரேன்'னு சொன்னான்.

போன வருஷம் வந்து, “நீ தான்டா சேது” என்றான். அப்போ நாம நினைச்ச ரோல் கிடைச்சுடுச்சு. நம்மகிட்ட இருக்கிற எல்லாத்தையும் ஒரே படத்துல கொட்டிரணும்னு அவ்வளவு உழைச்சேன். என்னை முழுக்க சேதுவாக மாத்தினான் கார்த்திக். அவனுக்கு என்னோட நன்றியை எப்படிச் சொல்லப் போறேன்னு தெரியல.

இந்தப் படம் தோத்துச்சுன்னா என் வாழ்க்கை போச்சு. ஆனா ஒரு நடிகனா உனக்குப் பெரிய எதிர்காலம் இருக்குடான்னு கார்த்திக் சொன்ன வார்த்தை இப்பவும் ஞாபகத்தில் இருக்கு. எப்படிடான்னு கேட்டேன். அதற்கு ‘உன்னை நான் நம்புறேன்டா. அவ்வளவுதான். நீ பண்ணுவ’ன்னு சொன்னான். எல்லாருடைய பாராட்டையும் வாங்கிட்டு நான் நிற்கிறேன். அதை என் பக்கத்தில் இருந்து ரசிக்கிறான். ஒரு சிலையைச் செதுக்கிக் கோயில்ல வைச்சுட்டு, செதுக்கியவர் அடுத்த சிலையைச் செதுக்கப் போயிருவார். என்னைச் செதுக்கி அழகு பார்த்தவன் கார்த்திக் சுப்புராஜ்.

ட்விட்டரில் நீங்கதான் ‘ஜிகர்தண்டா’வின் ரியல் ஹீரோ என்று கூறுகிறாரே சித்தார்த்?

நான் இரண்டாவது நன்றி கூறுவது சித்தார்த்துக்கு. ஏன்னா, உடன் நடிக்கும் ஒரு நடிகருக்கு இவ்வளவு பெரிய இடத்தைக் கொடுக்க ஒரு முன்னணி நடிகருக்கு எப்படி மனசு வரும்? அந்த மனசு சித்தார்த்திடம் இருக்கிறது. ‘ரங் தே பசந்தி’ படத்தில் அவரோட நடிப்புக்கு நான் ரசிகன். இப்போ அவருடன் நடித்தது மிகப் பெரிய அதிர்ஷ்டம். அவருக்கு ஷாட் இல்லன்னாகூட வந்து நான் நடிக்கிறதைப் பார்ப்பார். இதை ஏன் இப்படிப் பண்றே… இப்படிப் பண்ணு கிளாப்ஸ் அள்ளும்னு சொல்வார். என்னை மாதிரி நடிகர்கள் எல்லாம் சித்தார்த் கூட ஒரு படமாவது நடிச்சிரணும்.

சினிமாவுக்கு வரும்போது உங்க வீட்டுல என்ன சொன்னாங்க?

எங்க வீட்டுல முதல்ல தெரியாது. முதல்லயே பக்காவா ப்ளான் பண்ணித்தான் சென்னைக்கு வந்தேன். சென்னை போய் வேலை பார்க்கப் போறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன். இல்ல டிகிரி முடிச்சிட்டு உன்னோட வாழ்க்கையை நீ பாத்துக்கோன்னு சொல்லிட்டாங்க. பிசிஏ படிச்சிட்டு சென்னை வந்து வேலை கிடைச்சிடுச்சுனு பொய் சொல்லிட்டே இருந்தேன். நாலு வருஷம் கழிச்சுதான் அவங்களுக்கு நாளைய இயக்குநர் மூலமா தெரிஞ்சிது. டிவில நான் நடிச்ச குறும்படங்கள் எல்லாம் பாத்துத்தான் தெரிஞ்சிது. இதுவரைக்கும் நான் என்ன பண்றேன் அப்படிங்கிற எந்த ஒரு விஷயமும் வீட்டுக்கு முழுசா தெரியாது. நடிப்புல ஆசையா ஏதோ பண்ணிட்டு இருக்கான்னு மட்டும் தெரியும்.

ஒரு முறை வீட்டுக்குப் போனப்போ, எங்கப்பா ‘நேரம்னு ஒரு படம் நடிச்சியாமே, நல்லா நடிச்சியாம்... நிறைய பேரு சொன்னாங்க. சி.டி இருந்தா கொடு'ன்னு கேட்டார். ‘இதே மாதிரி சின்னச் சின்ன கேரக்டர் பண்ணி வாழ்க்கைல முன்னேறு, ஹீரோ எல்லாம் பண்ணாதே. மாட்டிக்குவ'ன்னு சொன்னார். உடனே எங்கம்மா ‘ஏன் பண்ணக் கூடாது. என் பையன் ஹீரோவாவும் பண்ணுவான்”னு சொன்னாங்க.

‘ஜிகர்தண்டா’ பாத்துட்டு அப்பா என்ன சொன்னார்?

எங்கப்பா போய்ப் படம் பார்த்துட்டு என்னோட நண்பன் கிட்ட, ‘அவன் சென்னைக்குப் போய் உருப்படாமல் போகப் போறான்னு நினைச்சுட்டு இருந்தேன். அவனோட வாழ்க்கையை நினைச்சு எனக்கு ஒரு பயம் இருந்துச்சு. இப்போ ‘ஜிகர்தண்டா' பார்த்த உடனே எனக்கு அந்தப் பயம் போயிடுச்சு. ரொம்ப சந்தோஷமா இருக்கேன்'ன்னு சொல்லிருக்கார். எங்கப்பா இப்படிப் பேசி நான் பார்த்ததேயில்லை. இதை என் நண்பன் போனில் சொன்னப்போ என்னை அறியாமல் கண் கலங்கிட்டேன். அவரோட வார்த்தையைக் கண்டிப்பா நான் காப்பாத்துவேன்.

இனிமேல் நீங்க காமெடியனா, ஹீரோவா, வில்லனா?

பசியோட வர்றவனுக்குச் சாப்பாடு போட்டா வயிறு ஃபுல்லா சாப்பிடணும்னு தோணும். அதே மாதிரிதான் எனக்கு நடிப்பும். ஒவ்வொரு படம் நடிக்கும்போதும், எனக்கு முழு திருப்தியா இருக்கணும்னு தோணும். என்னைப் பொறுத்த வரைகதைதான் ஹீரோ. அந்தக் கதைக்கு என்ன தேவையோ அது காமெடியா, ஹீரோவா, வில்லனா எதுவானாலும் இந்த சிம்ஹா தயாரா இருப்பான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

13 hours ago

இணைப்பிதழ்கள்

22 hours ago

இணைப்பிதழ்கள்

23 hours ago

இணைப்பிதழ்கள்

23 hours ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

மேலும்