கலகல நாடக உலா : நாகம்மாள் பாடசாலை

By வியெஸ்வீ

ப்ரல் மூன்றாவது வாரத்தில் தொடங்கி தொடர்ந்து ஒரு டஜன் புத்தம் புது நாடகங்களை அரங்கேற்றம் செய்து ‘கோடை நாடக விழா’ கொண்டாடுவது கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸின் வருடாந்திர நிகழ்வு. இதுவே வேறு சில சபாக்களின் கதவு திறக்கப்படவும் வசதியாகிறது. அரங்கேறிய நாடகங்களை வைத்து மயிலையிலும், தி.நகரிலும் நாடக விழாக்கள் நடத்துகிறார்கள்.

‘தமிழ் நாடகங்கள் தாம்பரம் தாண்டுவதில்லை’ என்று மேடைக்கு வெளியே மைக் இல்லாமல் கூப்பாடு போட்டுக் கொண்டிருப்பதும் தொடர்கிறது.

லேட்டஸ்ட்டாக, ‘நாடக ரத்தினங்கள்’ என்று அழைக்கப்பட்ட 9 நாடகங்கள், முத்ரா நடத்திய விழாவில் மேடையேறின. இங்கே தினமும் பார்வையாளர்களிடம் வாக்கெடுப்பு நடத்துகிறார்கள். முடிவில் அதிகம் வாக்குகள் பெற்ற நாடகத்துக்கு பரிசு கொடுக்கிறார்கள். ஒருநாள் தவறாமல் 9 நாடகங்களையும் பார்த்தவர்களுக்கு முன்னுரிமை.

காலா காலமாக இங்கே (சவுண்ட்) சிஸ்டம் சரியில்லை. நிர்வாகிகளும் இதை ஒப்புக் கொண்டு, ‘‘மற்ற சில சபாக்கள் மாதிரி இங்கே ஒலியமைப்பு துல்லியமாக இருக்காது. எங்களால் முடிந்தவரை சரிசெய்கிறோம். எனவே, நாடகம் நடந்து கொண்டிருக்கும்போது, ‘மைக்.. மைக்.. சவுண்ட் ப்ளீஸ்..’ என்றெல்லாம் குரல் கொடுக்காதீர்கள். நடிகர்களுக்கு அதனால் கவனச் சிதறல் ஏற்படுகிறது’’ என்று தொடக்கத்திலேயே அறிவித்துவிடுகிறார்கள்! நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் இதை சீர்செய்ய முடியாதா என்ன?

இனி நாடகங்கள்..

நாகம்மாள் பாடசாலை

நா

டகாசிரியர், டைரக்டர் அகஸ்டோ, நாகேஸ்வர ராவ் பூங்காவில் ‘வாக்’ போகும்போது, ‘இந்த முறை எதாவது புதுசா செய்யணுமே...’ என்று தீவிரமாக யோசித்திருப்பார் போலும். ஒரே மேடையில் இரண்டு நாடகங்கள் என்ற ஐடியா அவருக்குக் கிடைத்துவிட, அதற்கு வெற்றிகரமாக செயல்வடிவம் கொடுத்துவிட்டார்.

அட்டையில் சுவர் எழுப்பி மேடையை இரண்டாகக் கூறுபோட்டுவிடுகிறார்கள். இடது பக்கத்தில் ஒரு கதை. சோத்துக் கைப் பக்கம் இன்னொரு கதை.

முதலில் இடதில் கொஞ்சம் கதை. லைட் ஆஃப். வலது பக்கக் கதையில் கொஞ்சம். இப்படியே மாறி மாறி நாடகம் நகர்கிறது. முடிவில் இரண்டு கதைகளும் இணையாது.

தனித்தனி முடிவுடன் சுபம். பார்ப்பவர்களுக்கு எந்தவிதக் குழப்பமும் ஏற்படுவதில்லை.

‘‘இந்திய அளவில் நாடக மேடையில் யாரும் இப்படியொரு முயற்சி செய்ததில்லை என்று நினைக்கிறேன்’’ என்கிறார் அகஸ்டோ. கார்த்திக்கின் கோடை நாடக விழாவில் மிகச் சிறந்த நாடகமாக ‘பாடசாலை’யும் தேர்வானதற்கு இந்த உத்திதான் முக்கியக் காரணியாக இருந்திருக்க வேண்டும்.

அண்ணாச்சி ராஜபாண்டியன் (போதிலிங்கம்) நடத்தும் ஹோட்டலில் சர்வராக பணிபுரியும் மதியழகனுக்குள் (அருண்) ஒளிந்திருக்கிறது அபார ஓவியத் திறமை. அண்ணாச்சிக்கு இது தெரியவரும்போது அசந்து போகிறார். தங்கள் ஊர் சாமியை மதியழகன் வரைய வேண்டும் என்று கேட்டுக்கொள்ள, மறுக்கிறார் மதியழகன்.

இறுதியில் அதற்கான காரணமும், பின்னர் அவரின் மனமாற்றத்துக்கான காரணமும், விளங்க வைக்கப்படுகிறது. சர்வர்-கம்-ஓவியரின் கரம் பற்றிக் கண்களில் ஒற்றிக்கொள்கிறார் முதலாளி. இடையே, தேவையே இல்லாத செயின் கதையும், ரெயின்ட்ரீ ஹோட்டல் சம்பவமும்.

அண்ணாச்சி போதிலிங்கத்தின் நடிப்பு அசால்ட் ரகம். போகிற போக்கில் நடப்பு விவகாரங்களை - ‘நீட்’ விவகாரத்தில் பிரதீபா தற்கொலை உட்பட - ஜஸ்ட் லைக் தட் அள்ளிவிடுகிறார்!

மதியழகனாக வரும் அருண் வசம் ஓவியத் திறமை போலவே நடிப்புத் திறனும் புதைந்திருக் கிறது.

இன்னொரு கதையில், நீதிபதியாக பதவி உயர்வு பெற்றிருக்கும் வக்கீல் ஒருவரின் கருப்புப் பக்கங்கள். கொலை வழக்கு ஒன்றில், குற்றவாளியைத் தப்பிக்க வைத்து, நிரபராதியைக் கம்பி எண்ண வைத்ததும். குற்றவாளி, வக்கீலின் மனசாட்சியை தட்டி எழுப்ப முயற்சித்துவிட்டு தற்கொலை செய்துகொண்டு விடுவதும், பாத்திரத்துக்கேற்ற உருவப் பொருத்தமே இல்லாத போலீஸ் அதிகாரி, வக்கீலுடன் நீண்ட நேரம் சம்பாஷணை நடத்துவதும், கடைசியில் தனது பதவி உயர்வை வக்கீல் நிராகரித்துவிடுவதும்.. புரிந்தும் புரியாத பாதி நாடகம்!

தீதும் நன்றும்

தி

ருமணமான 6 மாதங்களுக்குள் இளம் தம்பதிக்குள் பிரச்சினைகளும், கோபதாபங்களும். பிரிந்துவிடக்கூடும் என்ற பயம் அப்பாவுக்கு, விபரீதத்தைத் தடுக்க வேண்டும் என்பதற்காக அவர்களைத் தன் சகோதரியின் வீட்டுக்கு அனுப்பி வைக்கும் அப்பா. இதையும், தொடரும் தீர்வையும் இடைவேளை உட்பட 90 நிமிடங்களுக் குள் கச்சிதமாக சொல்லி முடித்துவிடுகிறது குருகுலம் குழுவின் நாடகம். விபிஎஸ் ஸ்ரீராமன் எழுதி, இயக்கி யிருக்கிறார்.

வந்த வேகத்தில் அத்தைக்கும், அத்திம்பேருக்கும் ஸ்மார்ட்போன் வாங்கிக் கொடுத்து குஷிப்படுத்துகிறார்கள் இளம் தம்பதியனர். தூபம் போட்டு பத்தாம்பசலி அத்தையின் கண்களைத் திறக்கிறாள் மருமகள். பெண்ணுரிமைப் புகட்டுகிறாள். திடீரென்று அத்தை உரிமை பேசத் தொடங்க, பெரியவர் மிரண்டுபோக, முதிய தம்பதி இடையே பூகம்பம் வெடிக்கிறது. வக்கீல், விவாகரத்து என்று நிலைமை எல்லை மீறுகிறது. இவர்களின் வேதனை, இளசுகளை மனம் மாறச் செய்கிறது.

வேறு எதற்காக இல்லை எனினும், மாலதி சம்பத் (அத்தை) ரமேஷ் விஸ்வநாதன் (அத்திம்பேர்) இருவரின் நடிப்புக்காக இந்த நாடகத்தைப் பார்க்கலாம். நடிக்கிறோம் என்ற உணர்வே இல்லாத உச்சபட்ச இயல்பு!

கணவன் மீது மனைவி குற்றச்சாட்டுகளை அடுக்க, அவற்றை எதிர்கொள்ள கணவர் திண்டாடுவதும் செம ஹாட்!

கார்த்திக் கவுரி சங்கரும், பூர்வஜா மூர்த்தியும் குருகுலத்தின் வருங்காலத்துக்கு நம்பிக்கையூட்டும் இளம் ஸ்டார்ஸ்!

கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்தலை வலியுறுத்தும் நாடகம் இது. எனவே, நாடகத்துக்குள் நாடகம் வைத்திருக்கும் ஸ்ரீராமனின் பழங்கால சிந்தனையையும் போனால் போகட்டும் என்று விட்டுக் கொடுத்துவிடுவோம்!

ஆனால் நாடக முடிவில் ஆடியன்ஸை பார்த்து அத்திம்பேர் செய்யும் பிரசங்கம்.. இதைச் செய்யவைத்த ஸ்ரீராமனின் அதிகப் பிரசங்கம்! எதையும் நாங்களே புரிஞ்சுப்போம்! நம்புங்க!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்