சி(ரி)த்ராலயா 22: திருப்புமுனை தந்த சிரிப்பு!

By டி.ஏ.நரசிம்மன்

 

ரு திரைப்படம் வசூல்ரீதியில் பெரிய வெற்றியைப் பெற்றுவிட்டால் அதை இயக்கிய இயக்குநர் முன் வரிசைக்கு வந்துவிடுகிறார். புதுமுகமோ பிரபல முகமோ நடிகர்களுக்கும் அந்தப் படம் திருப்புமுனையாக அமைந்துவிடுகிறது. தயாரிப்பாளருக்கு அடுத்த படத்தைத் தயாரிப்பதற்கான உத்வேகமும் பணத் தெம்பும் வந்துவிடுகின்றன. இந்த இருவரைத் தாண்டி ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் மாபெரும் வெற்றியால் நகைச்சுவை நடிகராக நாகேஷ் உச்சநிலையை அடைந்தார்.

இயக்குநர்கள், நடிகர்களின் பெயர்களைக் கடந்து எழுத்தாளர் கோபுவின் பெயரையும் ரசிகர்கள் உச்சரித்தார்கள். “இதுதான் ஒரு எழுத்தாளனுக்குக் கிடைக்க வேண்டிய உண்மையான விருதும் வெற்றியும்” என்று கூறிய கோபு, “‘காதலிக்க நேரமில்லை’ படத்தை ஒரு பாடல் காட்சியுடன் ஸ்ரீதர் தூக்கிப்போட்ட கதையை மறக்காமல் கூற வேண்டும்” என்று நினைவுகளைத் தொடர்ந்து பகிரத் தொடங்கினார் கோபு.

சிவகுமாருக்கு கைநழுவிய வாய்ப்பு

‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் டைட்டில் கார்டில் கேலிச்சித்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. டைட்டில் கார்டில் வரும் கடைசி கேலிச்சித்திரம் உயிர்பெற்று அதிலிருந்து படம் தொடங்கும். இந்த உத்தியை ரசிகர்கள் வெகுவாக ரசித்தார்கள். ரவிச்சந்திரனுடைய விண்டேஜ் காரின் சைலென்சர் பட்டாசு வெடிப்பதுபோல் வெடித்துக்கொண்டே செல்வதைப் பார்த்து ரசிகர்கள் வயிறு வலிக்கச் சிரித்தார்கள். இதுபோல் ரசிகர்கள் சிரிப்பதற்கு எங்கெல்லாம் வாய்ப்பு இருந்ததோ அங்கெல்லாம் நுணுக்கமாக ஹாஸ்யத்தைப் புகுத்தியது ஸ்ரீதர் – கோபு கூட்டணி. இதில் ஸ்ரீதரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார் புகழ்பெற்ற மூத்த இயக்குநர் பீம்சிங் மகனான பி.லெனின் .

காஞ்சனா, ரவிச்சந்திரன், சச்சு ஆகியோருக்கும் ‘காதலிக்க நேரமில்லை’ படம்தான் திருப்புமுனையாக அமைந்தது. ராமன் என்ற வாலிபர் மலேசியாவில் இருந்து நடிக்க வாய்ப்பு கேட்டு கோடம்பாக்கம் வந்தவர். இந்தப் படத்தில் ரவிச்சந்திரனாக அறிமுகமாகி, பின்னாளில், ஜெயலலிதா, கே. ஆர்.விஜயா போன்ற முன்னணிக் கதாநாயகிகளுடன் நடித்து தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டார்.

இவரை ஒப்பந்தம் செய்யும் முன்பு அவரது கதாபாத்திரத்துக்கு நடித்த ஆடிஷனுக்கு அன்று இளைஞர்களாக இருந்த நடிகர் சிவகுமார், தெலுங்கு நடிகர் கிருஷ்ணா ஆகியோரும் வந்து கலந்துகொண்டார்கள். சிவகுமாருக்கு அப்போது பள்ளி மாணவரைப் போன்ற முகம் இருந்ததால் காதல் காட்சிகளுக்குப் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று நினைத்தார் ஸ்ரீதர். தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவுக்குத் தமிழ் பெரிய பிரச்சினையாக இருந்தது. இதனால் ரவிச்சந்திரனுக்கு வாய்ப்பு கிடைத்தது.

காஞ்சனாவாக மாறிய வசுந்தரா

காஞ்சனாவைத் தற்செயலாக விமானத்தில் பணிப்பெண்ணாகச் சந்தித்தார்கள். அழகும் நளினமும் இணைந்திருந்த பெண்ணான அவர் சிரித்த முகத்துடன் பயணிகளைக் கவனித்துக்கொண்டிருந்தார். அவரைப் பார்த்தவுடன் ஸ்ரீதருக்கு இவரை நடிக்க அழைக்கலாமா என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கிறது. காஞ்சனாவின் குடும்பம் மிகவும் கண்டிப்பானது. ஒருவழியாக அவருடைய பெற்றோரைச் சம்மதிக்க வைத்தார் ஸ்ரீதர்.

15chrcjKathalikkaneramilli 2 ‘காதலிக்க நேரமில்லை’ காஞ்சனா, முத்துராமன்

காஞ்சனாவின் இயற்பெயர் வசுந்தரா. ஏற்கெனவே வைஜயந்திமாலாவின் அம்மா வசுந்தரா அதே பெயரில் நடித்துவந்ததால் அவருக்கு காஞ்சனா என்ற பெயர் சூட்டப்பட்டது. காஞ்சனாவின் தாய்மொழி தெலுங்கு என்பதால் தமிழ் அவருக்குப் பெரிய போராட்டமாக இருந்தது. ஒப்பந்தம் செய்துவிட்டு ஸ்ரீதர் ஒதுங்கிவிடுவார். ஆனால், இவர்களுக்குத் தமிழையும் வசனங்களையும் சொல்லித்தர கோபு கடும்பாடுபட வேண்டியிருந்தது. ஆனால், அதையெல்லாம் ஈடுபாட்டுடன் சந்தோஷமாகச் செய்ததாகக் கூறுகிறார் அவர்.

பாட்டிகளுடன் சந்திப்பு

பாலையாவின் மூத்த மகள் வேடத்துக்கு காஞ்சனா ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவருடைய காதலனாக முத்துராமனும் ரெடி. ஆனால் இரண்டாவது மகளுக்கான கதாபாத்திரத்தை ஏற்க யாரை ஒப்பந்தம் செய்யலாம் என்று தேடோ தேடென்று தேடியும் பொருத்தமான ஆள் கிடைக்கவில்லை. இறுதியாக, பரதநாட்டிய மாணவி என்று கூறி சாந்தி என்ற பெண்ணை அழைத்து வந்தார்கள்.

அமுல் பேபி போல இருந்த அந்தப் பெண்ணுக்குக் குழந்தை முகம். காஞ்சனாவின் தங்கையாக அந்தப் பெண்ணையே ஒப்பந்தம் செய்தது சித்ராலயா. அந்தப் பெண்தான், பின்னாளில் ‘வெண்ணிற ஆடை’ நிர்மலாவாகக் கொடிகட்டிப் பறந்தார். அவருக்கு ஜோடி ரவிச்சந்திரன்.

அடுத்து “நாகேஷுக்கு ஜோடியாக மனோரமாவை ஒப்பந்தம் செய்யலாம்” என்றார் கோபு. “இல்லேடா கோபு! சில காட்சிகளில் மேற்கத்திய ஆடைகள் போடணும். புதுசா யாரையாவது பிடி” என்றார் ஸ்ரீதர். அப்போது கதாநாயகியாக மட்டும் நடித்துக்கொண்டிருந்த சச்சு நினைவுக்கு வந்தார். சச்சுவுக்கு ஒரு பாட்டி இருந்தார். அவரிடம்தான் அப்போது கால்ஷீட் வாங்க வேண்டும். நடிகைகளின் பாட்டிகளைச் சமாளிக்கவென்றே கோபு திரையுலகில் நுழைந்திருப்பார் போலும். வைஜயந்திமாலாவை வாட்டர் ஸ்கேட்டிங் செய்யும் காட்சியில் நடிக்க அனுமதி மறுத்த பாட்டியையே சமாதானம் செய்து சமாளித்தவர் ஆயிற்றே! பின்னாளில் ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’ படத்தின் திரைக்கதையை எழுதுவதற்கு இந்தப் பாட்டிகளின் சந்திப்பு உதவியதோ என்னவோ!

சச்சுவை ஒப்பந்தம் செய்வதற்காக அவருடைய பாட்டியைச் சந்தித்தார். “கோபு! என் பேத்தி கதாநாயகியா நடிச்சுண்டு இருக்கா... அவளைப் போய் நாகேஷுக்கு ஜோடியா நடிக்க சொல்றீங்களே, இது நியாயமா?” என்று பாட்டி ஒரே போடாகப் போட்டார். ஆனால் கோபு அசரவில்லை. “படத்துல மூணு ஹீரோ பாட்டி. முத்துராமன். அவருக்கு ஜோடியா காஞ்சனான்னு ஒரு அறிமுகம். ரவிச்சந்திரன் புதியவர், அவருக்கு ஜோடி நிர்மலான்னு ஒரு புதுமுகம். நாகேஷ் ஒரு ஹீரோ. அவருக்கு ஜோடி உங்க பேத்தி சச்சு!” என்று பாட்டியிடம் பொய் கூறி சமாளித்து சச்சுவை ஒப்பந்தம் செய்தார் கோபு. ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் ‘மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்’ என்று பாடி ஆடி நடித்ததால்தான் இன்றுவரை எவர்கிரீன் நட்சத்திரமாக தான் இருப்பதாக சச்சு இப்போதும் கூறுவார்.

திடீர் பின்வாங்கல்

காஞ்சனாவையும் சாந்தி என்னும் நிர்மலாவையும் வைத்து மகளிர் விடுதியில் ஒரு பாடல் காட்சியைக் கூடப் படமாக்கிவிட்டார் ஸ்ரீதர். திடீரென்று அவருக்கு ஒரு சந்தேகம் வந்துவிட்டது. சாந்தி என்ற அந்தப் பெண்ணுக்கு முகம் மிகவும் குழந்தைத்தனமாக இருப்பதாக ஸ்ரீதருக்குப் பட்டது. இவ்வளவு சிறிய பெண்களைக் காதல் என்ற போதைக்குள் இழுத்துவிடுகிறீர்களா என்று விமர்சகர்களும் ரசிகர்களும் கேட்டுவிடக் கூடாது அல்லவா? அந்த இருதரப்புக்குமே அதிக முக்கியத்துவம் அளிப்பவர் ஸ்ரீதர். “‘கல்யாணபரிசு’, நெஞ்சில் ஒரு ஆலயம் போன்ற படங்களை எடுத்து, ‘தென்னாட்டு சாந்தாராம்’ என்று இந்திப் பட உலகால் புகழப்பட்டுவரும் நிலையில் எதற்காக நகைச்சுவை படம் எடுக்கிறீர்கள்” என்று கேட்டு சில மேதாவிகள் ஸ்ரீதரைக் குழப்பி விட, ஸ்ரீதர் மீண்டும் யோசிக்கத் தொடங்கினார்.

ஒரு கட்டத்தில், “கோபு! இது சரிப்பட்டு வராது” என்று கூலாகச் சொல்லிவிட்டு ஹாஸ்டல் பாடல் காட்சியுடன் படத்தை ட்ராப் செய்ய தீர்மானித்துவிட்டார். கோபுவுக்கோ தலை சுற்றிக்கொண்டு வந்தது. எவ்வளவு இளமையான திரைக்கதை, எத்தனை தூய்மையான நகைச்சுவை, கதை முழுவடிவம் பெற்றபோது அவ்வளவையும் பாராட்டிய ஸ்ரீதரா படத்தை நிறுத்திவிடுவோம் என்கிறார்? இதை விடக் கூடாது என்று முடிவெடுத்த கோபு, ஸ்ரீதருடனான கடற்கரைச் சந்திப்புக்கான சந்தர்ப்பத்துக்காகக் காத்துக்கொண்டிருந்தார். அந்த சந்தர்ப்பமும் வந்தது…

(சிரிப்பு தொடரும்)
தொடர்புக்கு: tanthehindu@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்