சு
தந்திரப் போராட்ட காலத்திலிருந்தே பாடல்களும் இசையும் தன் பணியைச் சரியாக செய்து வந்திருக்கின்றன. காலம் மாறிவிட்டது. பாடல்களின் பாணியும் மாறிவிட்டன. ஆனால் பிரச்சினைகள் துரத்தும்போதெல்லாம் பாடல்களை கொண்டு திருப்பி அடிக்கும் போராட்ட முறை மட்டும் மாறியதேயில்லை.
காவேரி வறண்டுவிட்டது, விவசாயிகளின் தற்கொலை பெருகிவிட்டது. நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடிய தஞ்சை தரிசாகிவிட்டது. இதையெல்லாம் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க முடியாமல் அழ ஆரம்பித்திருக்கிறார்கள் இளைஞர்கள். அவைதான் பாடல்களாக ஊற்றெடுக்கின்றன. அதிலும் நவநாகரீக இளைஞர்கள் தமக்குத் தெரிந்த ராப் மற்றும் ஹிப் ஹாப் ஸ்டைலில் இந்தப் பிரச்சினைக்கு குரல் கொடுத்தால் எப்படியிருக்கும்?
அதைத்தான் செய்திருக்கிறார் சொல்லிசை செல்வந்தர். ராப் இசைவடிவம் தற்போது தமிழில் முழுவீச்சில் ஒரு போராட்ட இசைவடிவமாக மாறிவருவதைக் கண்டு ஈர்க்கப்பட்ட இளைஞர்களில் இவரும் ஒருவர். சந்தோஷ் சரவணன் என்ற தனது இயற்பெயரை ‘சொல்லிசை செல்வந்தர்’ என மாற்றிக்கொண்டிருக்கிறார் இந்த எம்.பி.ஏ பட்டதாரி.
“தமிழகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பாட்டாக வடித்து சொல்லிசை வழியே முழங்கிய பிறகுதான் கொஞ்சமாவது தூங்கமுடிகிறது” என்று பேச்சின் நடுவே உணர்வு கூட்டுகிறார். ஜல்லிக்கட்டு நேரத்தில் ராப் இசைத்து அதை யூட்யூபில் வெளியிட்டவர், தற்போது ‘விடியட்டும்’ என்றொரு ராப் பாடலை காவிரி மீட்புக்காக வெளியிட்டிருக்கிறார்.
இவருடன் வீரா, ரத்திஷ்குமார் என்ற இரு இளைஞர்களும் இணைந்து கலக்கியிருக்கிறார்கள். ‘விடியட்டும்’ ராப் வீடியோவில் அனலாக வந்துவிழும் ஒவ்வொரு தமிழ்ச் சொல்லும் சேதாரம் இல்லாத சொல்லிசையாக ஒலிக்கிறது. காவிரிக்கான விவசாயிகளின் போராட்டக்காட்சிகள் விரிய இடையிடையே இந்த ராப் கூட்டணி துள்ளலான உடல்மொழியில் சொல்லிசை இசைப்பது யூட்யூபில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
“இணையத்தில் என் கருத்துக்கு ஒத்துப்போகிற இளைஞர்களைத் தேடி வந்தேன். வீரா, ரத்திஷ்குமார் இருவரும் தமிழகத்தில் நிலவும் பிரச்சினைகளை பாடல்களாக வடித்து அனைவரையும் கவரும்படி வெளியிட்டிருந்தார்கள். என்னைவிட வயதில் குறைந்தவர்களான அவர்களை தேடிப் போய் இணைத்துக் கொண்டேன்” என்கிறார் சொல்லிசை செல்வந்தர்.
“ சொல்லிசைப் பாடல்களைப் பொறுத்தவரை, அவரவர் பாடுகிற பகுதிக்கான வரிகளை அவரவரே எழுதிக் கொள்ள வேண்டும். விவசாயம் பற்றிய என் பாடலை பார்த்துதான் அழைத்தார் சொல்லிசை செல்வந்தர். ஒரு நிமிஷத்தில் ஒரு பிரச்சினையை சொல்லி முடித்துவிட வேண்டும்.
வளவளவென்று நீட்டி முழக்கிச் சொன்னால் அதை கேட்க ஆளில்லை என்கிற அளவுக்கு அவசர உலகமாகிவிட்டது. அதனால் எங்களின் பாடல்கள் எல்லாமே சுருங்கப் பாடி விளங்க வைப்பதுதான்” என்கிறார் வீரா. எட்டாவது படிக்கும்போதே யோகி பி பாடல்களைக் கேட்டு அதை பின்பற்ற ஆரம்பித்துவிட்டாராம் இவர்.
இரண்டாமாண்டு சட்டம் படித்துக் கொண்டிருக்கிறார் ரத்திஷ்குமார். “முதன் முறையாக அனிதாவின் மறைவுக்காக ஒரு ராப் பாடினேன். அதன்பிறகு எச்.ராஜாவின் பெரியார் பேச்சு குறித்து இன்னொன்று. இவ்விரண்டும் பிடித்துப்போய்தான் என்னை அழைத்தார் சொல்லிசை செல்வந்தர். நாங்கள் மூவரும் இப்போது இணைய உலகத்தின் இசை வெடிகுண்டுகள்” என்கிறார் ரத்திஷ்.
இந்த ராப்பிசையின் ஸ்டைல் விவசாயிகளுக்கு அந்நியமாக இருக்குமே?
“விவசாயிகளின் கஷ்டத்தை ஐடி இளைஞர்களின் கவனத்திற்கு கொண்டு போகணும்னா இன்றைய இளைஞர்கள் முணுமுணுக்கும் இசைவடிவத்தில் பாடல் இருக்கணும். விவசாயிகள் பிரச்சினைதான் அவங்களுக்கு தெரிஞ்சுருக்கே.
எங்கள் நோக்கம் விவசாயிகள் பிரச்சினையை நவ நாகரிக உலகத்துக்குத் தீவிரமா தெரியப்படுத்தனும், அவ்வளவுதான்” என்கிறார்கள் இந்தத் தமிழ் சொல்லிசைக் ‘கோவன்’கள்!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago