தாலாட்டு எனத் தொடங்கும் இளையராஜாவின் பாடல் என்றவுடன் பலரும் ‘தாலாட்டுதே வானம்’ என்ற ‘கடல்மீன்கள்’ பாடலைக் கூறியிருந்தார்கள். ஆனால் சரியான விடை ‘அச்சாணி’ (1978) படத்தில் வரும் ‘தாலாட்டு, பிள்ளையுண்டு தாலாட்டு’ என்ற பாடலே. மத்தியமாவதி ராகத்தில் அமைந்தது. பாடும் நிலா பாலுவும் கூவும் குயில் பி.சுசீலாவும் பாடிய பாடல். சரியாகச் சொன்னவர்களுள் முதல்வர், துணைமுதல்வர்களான புதுச்சேரி சதீஷ்குமார் மற்றும் அனுராதா பைரவசுந்தரம் ஆகியோருக்கு வாழ்த்துகள். இசைஞானி பிற்காலத்தில் இந்த ராகத்தில் அமைந்த ஏராளமான இனிய பாடல்களுக்கெல்லாம் அச்சாரம் போல் அமைந்தது இந்த ‘அச்சாணி’ படப் பாடல்.
இரவு, நிலவு, தாலாட்டு என்றால் மத்தியமாவதி நினைவுக்கு வந்து விடுமே. தாலாட்டு என்றவுடன் ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது. ஐயப்பனையே தூங்க வைக்கப் பாடப்படும் பிரபலமான பாடல் ‘ஹரிவராசனம் விஸ்வமோகனம்’ என்னும் பாடல். யேசுதாஸின் கந்தர்வக் குரலில் ஒலிக்கும் அந்தப் பாடல் கடவுளை மட்டுமல்ல கவலையோடு இருக்கும் மனங்களைக் கூட மயக்கித் துயில வைப்பதாகும். தேவராஜனின் இசையில் ‘சுவாமி ஐய்யப்பன்’ (1975) படத்தில் வரும் பாடல் இது. இதுவும் மத்தியமாவதி ராகமே.
ஒலி ஒளி ஜுகல்பந்தி
ராஜா இதைத் தூங்கவைக்கும் தாலாட்டுக்கு மட்டும் பயன்படுத்தவில்லை . துள்ளலான பல பாடல்களுக்கும் பயன்படுத்தியிருக்கிறார். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் இரண்டு பாடல்களைச் சொல்லலாம். இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான காட்சிகள்தாம். இயற்கையை ரசித்தல், விடுதலை உணர்வு, வாழ்க்கையைக் கொண்டாடுதல் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல்கள் இரண்டும். இரண்டுமே பெண்குரல்தான்.
முதலாவது பாடல் மத்தியாமவதி ராகத்தில் ஒரு மைல்கல். மகேந்திரனின் இயக்கம், பாலு மகேந்திராவின் மூன்றாவது கண்ணான கேமிரா, மெல்லிய உணர்வுகளை வெளிப்படுத்தும் ஷோபாவின் முகபாவங்கள், அந்த பாவங்களைக் குரலில் தோய்த்தெடுத்துத் தரும் பாடகி ஜென்ஸி, இவர்கள் எல்லோருக்கும் அடித்தளமாக இசைஞானியின் துள்ளலான இசை என அமைந்திருக்கும் இப்பாடல் ஒரு ஒளி ஒலி ஜுகல்பந்தி. அதுதான் ‘முள்ளும் மலரும்’ (1978) படத்தில் வரும் ‘அடிபெண்ணே ! பொன்னூஞ்சல் ஆடும் இளமை’ என்ற பாடல்.
இந்தப் பாடலின் தொடக்கத்தில் வரும் இசை, பின்னணி இசைக் கோவை, சரணத்தில் ‘சித்தாடை கட்டாத செவ்வந்தியே’ என்று துள்ளும் இசை என ஒரு ஒரு இசை சாம்ராஜ்யமே நடத்தியிருப்பார் ராஜா. இப்படி ஒரு கூட்டணி இனி அமையுமா , இன்னொரு பாடல் இதுபோல் கிடைக்குமா?
‘சோலைக்குயிலே காலைக்கதிரே ’
அதே போல் தனிக்குரலாக ஒலிக்கும் பெண்குரல். உச்சஸ்தாயியில் எடுக்கும் பாடல். பாடியவர் ஸ்ரீபதி பண்டிதராத்யுல ஷைலஜா. அதாங்க எஸ்.பி.பியின் தங்கை எஸ்.பி.ஷைலஜா. ‘பொண்ணு ஊருக்குப் புதுசு’ (1979) படத்தில் வரும் ‘சோலைக்குயிலே காலைக்கதிரே ’ என்னும் பாடல்தான் அது. இந்த ராகத்தின் ஊடாகப் பயணித்து இயற்கை எழிலை இசையால் நமக்கு ரசிக்கும்படி தந்திருப்பார் ராஜா. இது சைலஜாவின் முதல்பாடல் என்றால் நம்ப முடிகிறதா? ‘வண்ணத் தென் கழனி காலைக்கு வாழ்த்துப் பாடுதே’ என்று வரும் இந்தப் பாடலை எழுதியவர் எம்.ஜி.வல்லபன். அவருக்கும் முதல் பாடல் இது.
தொடக்க காலத்தில் இசைஞானியால் பல அருமையான பாடல்களைப் பாடிய தேன் குரலுக்குச் சொந்தக்காரர் வாணி ஜெயராம். அவரும் கிட்டத்தட்ட இதுபோன்ற ஒரு தனிப்பாடலைப் பாடியிருப்பார். ‘அழகே உன்னை ஆராதிக்கிறேன்’ (1979) என்ற ஸ்ரீதரின் படத்துக்காக. ராஜாவின் ஆர்மோனியம் அள்ளி அள்ளி மெட்டுக்கள் தரும் இயக்குநர்களில் அவர் முதன்மையானவர் அன்றோ? வாணியின் குரலில் வரும் அந்தப் பாடல் ‘என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்’. ‘மழைக்கால மேகம் திரள்கின்ற நேரம்’, எனக் குரலும் குழலும் கொஞ்சும் இந்தப் பாடல் மத்தியமாவதியில் அமைந்தது.
இன்னொரு தொடக்கப் பாடல். இந்த முறை நடிகைக்கு முதல் படம். ‘கூவின பூங்குயில், கூவின கோழி’ எனத் திருப்பள்ளியெழுச்சியுடன் தொடங்கும் ஒரு இனிமையான பாடல். தாலாட்டுக்கு மட்டுமல்ல, துயிலெழுப்பவும் இந்த ராகம் பயன்படும் என்பதற்கு இளையராஜா கொடுத்திருக்கும் அற்புதமான ஒரு உதாரணம் இப்பாடல். உமா ரமணன், தீபன் சக்கரவர்த்தி பாடிய ‘செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு’ என்னும் பாடல். ‘மெல்லப் பேசுங்கள்’ (1983) படத்தில் இடம்பெற்றது. இதில் அறிமுகமான நடிகை பானுப்ரியா!
‘நீதானே எந்தன் பொன்வசந்தம்’
சமீபத்தில் அரசியலில் புகழ்பெற்ற சொல்லாக இருந்தது ‘தர்மயுத்தம்’. அந்தப் பெயரில் ரஜினி, ஸ்ரீதேவி நடித்த 1979-ல் வெளியான படத்தில் ‘ தா....தரத்தா ..’ எனத் தத்தாகாரம் செய்யும் ஜானகியின் குரல், கிட்டார், சந்தூர், சித்தார் எனத் தந்திகளின் சங்கமத்தில் மலேஷியா வாசுதேவனுடன் பாடும் ஒரு அட்டகாசமான பாடல் ‘ஆகாய கங்கை பூந்தேன்மலர் சூடி’ என்னும் பாடல். மெல்லிசையாக ஒரு லேசான மெட்டில் மத்தியமாவதி ராகத்தை அமைத்திருப்பார் இசைஞானி. ‘நீதானே எந்தன் பொன்வசந்தம்’ என்றால் சமந்தா நடித்த படம்தானே எனக் கேட்பார்கள் இன்றைய இளைஞர்கள். ஆனால் அது ‘நினைவெல்லாம் நித்யா’ (1982) என்னும் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த மறக்க முடியாத பாடல்கள் உடைய திரைப்படத்தில் அமைந்த பாடல்.
மிகவும் ஸ்டைலான ஒரு மெட்டில் மத்தியமாவதி ராகத்தை மேக்-அப்பெல்லாம் போட்டு அமைத்திருப்பார் ராஜா. ‘முகவேர்வைத் துளியது போகும் வரையினில் தென்றல் கவரிகள் வீசும்’ என்பது போன்ற வைரமுத்துவின் வைர வரிகளை எஸ்.பி.பி அநாயாசமாகப் பாடியிருப்பார். கார்த்திக்குடன் நடித்தவர் ஜிஜி . இப்போது புகழ்பெற்ற டாக்டர் ஜெயா ஸ்ரீதர். ஜெமினி கணேசனின் மகள்.
அதே ஸ்ரீதர், அதே இளையராஜா, அதே எஸ்.பி.பி, அதே மத்தியமாவதி. இந்த முறை மோகனுக்காக . படம் ‘தென்றலே என்னைத் தொடு’ (1985). ரொம்பவும் உற்சாகமான அந்தப் பாடல் ‘கவிதை பாடு குயிலே... குயிலே’. துள்ளலான இளமையான பாடல் அது.
இந்த வாரக் கேள்வி: நாயகன், நட்சத்திர நாயகி இருவருக்குமே அறிமுகப் படம் அது. மத்தியமாவதி ராகத்தில் பாரதிராஜாவின் அப்படத்தில் வரும் ஆனந்தமான பாடல் எது?
தொடர்புக்கு: ramsych2@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago