ரிச்சர்ட் லிங்லேட்டரின் ‘பிஃபோர் சன்ரைஸ்’ (Before Sunrise’ -1995), டேவிட் பிஞ்சர் இயக்கிய ‘த சோசியல் நெட் ஒர்க்’ (The Social Network -2010), அலெக்ஸாண்டர் லே மேன் இயக்கிய ‘புளு ஜே’ (Blue Jay - 2016) என, பார்வையாளர் மனதைத் திருடிக்கொள்ளும் ஐரோப்பாவின் நவீன யுக ‘Dialogue driven’ சினிமாக்கள் போல், தமிழில் கிட்டத்தட்ட இல்லை என்கிற நிலையே இருந்தது. அதை ‘96’, ‘மெய்யழகன்’ படங்களின் மூலம் துடைத்தெறிந்திருக்கிறார் புத்தாயிரத் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவரான இயக்குநர் ச.பிரேம்குமார்.
ஆழமும் தத்துவார்த்தமும் மிகுந்த கதைக் கருக்களைக் கையாள்வதற்கு, கதாபாத்திர வளர்ச்சியை வெளிப்படுத்துவதற்கு, கதாபாத்திரங்களின் ஆழ்மனதில் புதைந்துகிடக்கும் நினைவுகளைத் தூர் அள்ளிக் கழுவிக் கொள்வதற்கு, இழந்தவற்றைக் கதாபாத்திரங்கள் பெற்றுக்கொள்வதற்கு என, உரை யாடலை முதன்மையான கதை சொல்லல் கருவியாகப் பயன்படுத்தும் இவ்வகைப் படங்கள், சினிமாவுக்கே உரித்தான காட்சி மொழியைச் சார்ந் திருப்பதிலும் சோடை போவதில்லை. ஆனால் நடிப்பில் சொத்தையாகி விடுவதுண்டு. அந்த வகையில் ‘மெய்யழகன்’ உரையாடல், காட்சி மொழி, நடிப்பு ஆகிய மூன்றின் வழி யாகவும் கதாபாத்திரங்களின் உணர்ச்சி ஆழத்தை முழுமையாகத் தொட்டு நிற்கும் தமிழ் சினிமாவின் குறிஞ்சிப்பூ.
சில நெருங்கிய உறவினர்களின் அன்பு பொய்யாகிப் போனதில் வாழ்ந்த வீட்டை இழந்து, ஊரை விட்டே மாநகரத்துக்குக் குடிபெயர்ந்து போனவன், 20 ஆண்டுகளுக்குப் பின் அரை மனதுடன் சொந்த மண்ணுக்கு வருகிறான். ரத்த உறவுகள் உரு வாக்கிய கசப்பு, மனதளவில் அவனை இறுகிப்போனவனாக ஆக்கிவிடுகிறது. அதேநேரம், ஊர் வாழ்க்கை தந்த அன்பின் ஊற்றை மட்டும் அப்படியே தக்கவைத்திருக்கிறான். மறந்தும் அந்தப் பொய்யான உறவினர்களின் கண்களில் பட்டுவிடாமல் போன வேலையை முடித்துக்கொண்டு உடனடியாக ஊர் திரும்பிவிட வேண்டும் என்று தவிக்கிறான்.
அப்போது அவனை வரவேற்று உபசரித்து, கலப்படமற்ற அன்பைப் பொழிகிறான், நினைவுகளை விட்டு அகன்றுபோன, பெயர் தெரியாத ஓர் உறவினன். முதலில் அவனிடமிருந்து விலகி ஓட நினைத்தவன், வழியின்றி ஓரிரவு அவனது வீட்டில் தங்கி உரை யாட நேரும்போது, நன்றி கலந்த அவனது பாசமும் கடந்த காலத்தில் மூதாதைகள் விட்டுச்சென்ற பண்பாட்டுத் தடங்களின் மீதும், வாழ் வதற்காகவே வாழ்க்கையை இழந்த சமகாலத்தின் சக மனிதர்கள் மீதும் அவன் கொண்டிருக்கும் பேரன்பும் கண்ணீரும், இவனது இழப்பின் வலியைத் துடைத்துப்போட்டு விடுகின்றன.
‘இவனது பெயரையும் உறவுமுறையையும் மறந்து விட்டோமே’ எனக் குற்றவுணர்வால் துவண்டு துடித்தாலும் இழந்த வாழ்க்கையை உற்சாகமாக மீட்டெடுத்துக்கொள்ளும் மீட்சி பெற்ற ஒருவனாக மாறிப்போகிறான். இத்தனைக்கும், வலியின் வடுவை அவசியமற்றப் பெருஞ்சுமையாகச் சுமந்து திரிந்தவனைக் கடைத்தேற்ற வேண்டும் என்று அந்தப் பெயர் தெரியாத உறவினன் துளியும் முயலவில்லை. அவனது அன்பும் மனிதர்களின் மீதான பிடிமானமும் இறுகிப்போன இவனை ‘நாம் இழந்தது எனப் பெரிதாக எதுவு மில்லை’ என்கிற இலகுவான மனநிலைக்குக் கொண்டு வந்து நிறுத்துகின்றன. அதுமட்டுமல்ல; அவனை 20 வருடங்களுக்கு முந்தைய ஊர்க்காரனாக மாற்றியும் விடுகின்றன.
முதன்மை, துணைக் கதாபாத்திரங் களுக்கு இடையிலான ‘உரையாடல்’, வாழ்வின் யதார்த்தங்களையும் வாழ்வனுபவத்தின் சேமிப்புகளையும் தொட்டுக்கொண்டு வெளிவரும் இயல்பின் நதியாக வழிந்தோடுகிறது. இழப்புகளை இழப்பாகக் கருதி ஓரிடத்தில் நின்றுவிடுவதிலிருந்து வாழ் வதற்கான ஆற்றலை, கடந்துபோதலும் மன்னித்தலும் மட்டும்தான் கொடுக்கும் என்பதை உணரும் அருள்மொழி கதாபாத்திரத்தில் வரும் அரவிந்த்சாமியின் வெகு இயல்பான நடிப்பு, முற்றிலும் முதல் முறை என்று கூறிவிடலாம்.
அதிலும், குற்ற வுணர்வுடன் புலரும் அதிகாலையில் சொல்லாமல் கொள்ளாமல் புறப்பட்டு அவர் ஓடும் காட்சி இன்னும் சில காலத்துக்கு நினைவிலிருந்து அகலப்போவதில்லை. அந்தக் காட்சியில் காலணியை மாற்றிப் போட்டுக் கொண்டு வந்து, பின் அதை உதறியெறிந்துவிட்டு சில அடிகள் நடக்கும் அருள்மொழி, ஆற்றாமை யுடன் திரும்ப ஓடிப்போய் அந்தக் காலணிகளை எடுத்து நெஞ்சில் அணைத்துக்கொள்வார்.
உரையாட லற்ற அந்தக் காட்சியை இயக்குநர் மகேந்திரன் உயிரோடு இருந்து பார்த்திருந்தால், பிரேம் குமாரைத் தேடிப்போய் கட்டி அணைத்துக் கொண்டாடியிருப்பார். அருள்மொழி தனது தங்கைக்கு வளையலும் மோதிரமும் கொலுசும் அணிவிக்கும் காட்சியில் உங்கள் கண்கள் உடைந்து பெருகுவதை எவ்வளவு முயன்றாலும் தடுத்துவிட முடியாது. இதை ‘கிரிஞ்ச்’ காட்சியாக உணரும் யாரும் இந்தப் படத்திலிருந்து எதையும் எடுத்துச் செல்ல முடியாது.
ஊரைக் கடந்து, உறவுகளை மறந்து, நினைவுகளை மட்டுமே மிச்சமாகக் கொண்டு மாநகர வாழ்க்கைக்குள் சிறைப்பட்டுப் போன பலரையும் அருள்மொழியாக உணரவைக்கும் ‘கேரக்டர் ஐடெண்டிபிகேச’னை சாத்தியமாக்கிவிடுகிறது படம். அதே நேரம் மாநகரத்தின் அருள்மொழிகள் ஒருமுறை வேர்களைத் தேடிப் பயணப்பட்டால் மெய்யழகன்களாக தங்களை மீள் கண்டுபிடிப்பு செய்துகொள்ள முடியும் என்பதை நினைவூட்டு வதிலும்தான் இப்படம் எட்டமுடியாத உயரத்தில் ஜொலிக்கிறது.
மெய்யழகன் போன்ற மனிதர்கள் இருக்க முடியுமா என்கிற வியப்பிலிருந்து விலகி, அவனைப் போல்தான் நாம் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும் என்கிற பேரன்பை நோக்கி பார்வையாளர்களை நகர்த்துகிறது கார்த்தியின் மண் மணக்கும் நடிப்பு. படத்தில், கரிகால் சோழனின் வெற்றி, வடக்கிருந்து உயிர்நீத்த சேரமான், ஈழத்தமிழர் இனப்படுகொலை, ஜல்லிக் கட்டுக்கான தடை, தூத்துக்குடியின் துப்பாக்கிச் சூட்டில் பலியான குடிமக்கள் பற்றிய மெய்யழகனின் புலம்பல் அவனது வாழ்விடத்தின் குரலாக மாறுகிறது.
20 வருடங்கள் கழித்துச் சந்திக்கும் ஒருவரிடம், தங்களுடைய பண்பாடு, மூதாதை, தற்காலத்தின் அரசியல், இருத்தலியல் பிரச்சினை மிகுந்திருக்கும் வாழ்க்கை பற்றிப் பேசுவது மெய்யழகன் போன்ற கதாபாத்திரத்துக்கு மிகவும் பொருந்திப்போகிறது. 1920களில் தொடங்கி, இடதுசாரி தொழிற்சங்க அரசியலையும் 30களில் சுயமரியாதை இயக்க அரசியலையும் 50களில் மொழிப் போராட்டத்துடன் கூடிய திராவிடக் கட்சிகளின் அரசியலையும் 2009 ஈழ இனப்படுகொலைகளுக்குப் பிறகுமுள்ளிவாய்க்கால் முற்றம் அமைக்கப் பட்ட டெல்டாவில் வேரோடியிருக்கும் தமிழ்த் தேசிய அரசியலையும் எதிர்கொண்டு வாழும் மெய்யழகன் வேறு எதைத் தன் வாழ்க்கையின் குறுக்கீடாகப் பேசிவிட முடியும்?
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago