அலசல்: சும்மா கிடைக்குமா சூப்பர் ஸ்டார் பட்டம்

By கா.இசக்கி முத்து

ஒரு நட்சத்திரத்தின் இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெற்றிபெற்றுப் பெரிய அளவில் வசூல் கிடைத்துவிட்டால் உடனே அவரை அடுத்த சூப்பர் ஸ்டார் என்கிறார்கள். அவரும் தன்னை அடுத்த சூப்பர் ஸ்டார் என்று நினைத்துக்கொள்கிறார். திரைத்துறையின் அனுபவஸ்தர்களும் ரசிக மகா ஜனங்களும் இதைக் கேட்டுச் சிரித்துவிட்டு வேறு வேலையைப் பார்க்கப் போய்விடுகிறார்கள். ஆனால், தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுப்பவர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களை சூப்பர் ஸ்டார் என்று சொல்லும்போது அதை ஏற்றுக்கொள்ளலாம் என்றுதான் யாருக்கும் தோன்றும். ஆனால் ஒரு நடிகரின் படங்கள் தொடந்து வெற்றியடைந்துவருவதால் மட்டும் அவர் சூப்பர் ஸ்டார் என்ற தகுதியை அடைந்து விடமுடியுமா?

தமிழ்த் திரையுலகியின் சூப்பர் ஸ்டாராகக் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மதிக்கப்படும் ரஜினிகாந்தின் இடம்தான் பெரும்பாலான நாயக நடிகர்களின் கனவாக இருக்கும். ஆனால் ரஜினி அந்த இடத்தைச் சும்மா அடைந்துவிடவில்லை. எல்லா விதமான வேடங்களையும் ஏற்று, நடிப்பில் பல விதமான வகைமைகளையும் காட்டி, வணிக வெற்றியையும் பெற்றவர் ரஜினி. தொடர்ந்து அதைத் தக்கவைத்துக்கொள்வதற்கான கவனமும் உழைப்பும் அவரிடம் உள்ளன. இவற்றைக் கைக்கொண்டு தீவிரமாக உழைத்தால்தான் அந்தப் பட்டத்தைப் பெற முடியும். ஓரிரு படங்களில் வெற்றிபெற்றால் போதாது.

ரஜினியின் வியாபாரக் கொள்கை

ஆசியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் திரை நட்சத்திரம் என்ற பெருமைக்குரியவர் ரஜினி. தனது படம் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்த வேண்டும் என்று நினைப்பவர் அவர். கதையும் படத்தின் இதர அம்சங்களும் அதற்கேற்ப அமைகின்றனவா என்பதைப் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுப்பவர். ஆண்டுக்கு மூன்று படங்களிலாவது நடித்து கல்லா கட்டிவிட வேண்டும் என்று நினைப்பவர்கள்தான் இன்று அதிகம். அப்படி நினைப்பதில் தவறு இல்லை. ரஜினியே ஒரு காலத்தில் ஓராண்டில் பல படங்களில் நடித்தவர்தான். ஆனால் அந்தப் படங்கள் அனைத்தும் ரசிகர்களைத் திருப்திப்படுத்தியதால் தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் என எல்லாத் தரப்பினரையும் திருப்திப்படுத்தின. சூப்பர் ஸ்டார் என்று சொல்லிக்கொள்ள விரும்புபவர்கள் அதிகப் படங்களில் நடிப்பதைவிடவும் அவை எல்லாத் தரப்பினரையும் திருப்திப்படுத்துகின்றனவா என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

தனது படங்கள் மூலம் சினிமாவை மட்டுமே தொழிலாகச் செய்துவரும் விநியோகஸ்தர்கள் அனைவரும் லாபம் ஈட்ட வேண்டும் என்று நினைப்பவர் ரஜினி. ஆனால் இன்று எந்த விநியோகஸ்தர் கேட்கும் விலையைக் கொடுக்க முன்வருகிறாரோ அவருக்கே படம் என்ற அணுகுமுறையைக் கடைபிடிக்க நினைக்கிறார்கள் பலர். எந்த விநியோக ஏரியாவில் வசூல் அள்ளுமோ அதைத் தனது சம்பளத்தின் ஒரு பகுதியாகத் தன்னுடன் இருத்திக்கொள்வதையும் பல நாயகர்கள் வழக்கமாக வைத்திருகிறார்கள்.

ரஜினி பின்பற்றுவதாகச் சொல்லப்படும் வியாபாரக் கொள்கையைப் பார்ப்போம். கோயம்புத்தூர் விநியோக ஏரியாவில் நான்கு விநியோகஸ்தர்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். சந்திரமுகி படத்தை முதல் விநியோகஸ்தருக்கு கொடுத்தார் என்றால், எந்திரன் படத்தை அடுத்த விநியோகஸ்தருக்குக் கொடுக்கச் சொல்வாராம்.

தனது படங்களின் தயாரிப்பாளர்ளை ரஜினி தேர்வு செய்யும் விதமும் அலாதியானதுதான். கவிதாலயா, ஏ.வி.எம். போன்ற முன்னணித் தயாரிப்பாளர்கள் படங்களில் தொடர்ச்சியாக நடித்துவந்தார் ரஜினி. ஊதியத்தையும் சீராகவே உயர்த்திவந்தார். புதிதாக எந்த ஒரு தயாரிப்பாளரும் தன்னை அணுகினால் அதை ஏற்க மாட்டார். சினிமா தயாரிப்பைப் பல காலங்கள் தொடர்ச்சியாகத் தொழில்முறையாகச் செய்பவர்களுக்கு மட்டுமே கால்ஷீட் கொடுத்துவந்தார். அவர்கள்தான் படத்தினைச் சரியானபடி மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என்று நம்பினார். அப்படிப் பெரிய பேனர்களில் மட்டுமே நடித்தாலும் தனிப்பட்ட முறையில் தன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த சிலரையும் தயாரிப்பாளர்களாகச் சேர்த்துப் படத்தின் லாபத்தில் ஒரு பங்கு அவர்களுக்குப் போய்ச்சேர ஏற்பாடு செய்வார்.

ஆனால், இன்றைய நாயகர்களில் பலர், யார் சம்பளம் அதிமாகக் கொடுக்கிறாரோ அவருக்குத்தான் முதலில் கால்ஷீட் என்ற கொள்கையோடு இருக்கிறார்கள். வளர்த்துவிட்டவர்களைப் பற்றிக் கவலைப்பட இங்கு பலருக்கும் நேரம் இல்லை. பெரும்பாலானவர்கள் தங்கள் குடும்ப பேனர் அல்லது உறவினர்களின் பேனர்களிலேயே நடிக்கிறார்கள். பட வினியோகமும் சில சமயம் உறவினர்கள் மத்தியிலேயே முடிந்துவிடுகிறது.

நடிப்புத் திறனும் அடக்கமும்

ரஜினியின் பயணம் போராட்டங்கள் நிறைந்தது. கருப்பு வெள்ளை திரைப்படக் காலத்தில் அறிமுகமாகி, பாலச்சந்தர், பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா உள்ளிட்ட பல படைப்பாளிகளின் படங்களிலும் நடித்துத் தன்னைப் பட்டை தீட்டிக்கொண்டவர் ரஜினி. பிறகு மெல்ல மெல்ல ஜனரஞ்சகப் படங்களுக்கு மாறி சூப்பர் ஸ்டார் என்ற நிலையை அடைந்த பிறகும் தனது இயல்பைத் தொலைக்காமல் காப்பாற்றிவருகிறார். இன்றுள்ள பலரிடம் கதைத் தேர்வு என்பதோ, நடிப்பில் கவனம் என்பதோ இரண்டாவது இடத்தில்தான் இருக்கிறது.

தன் காலத்தின் சக நடிகர்களோடும், இன்றைய புதிய தலைமுறை நடிகர்களோடும் இயல்பாகப் பழகும் பண்பு ரஜினியிடம் காணக் கிடைக்கிறது. படப்பிடிப்புத் தளத்தில் தனி மரியாதை எதிர்பார்த்தல், தனிமைப்படுத்திக்கொள்வது ஆகிய பழக்கங்கள் அவரிடம் இல்லை. இன்றைய தலைமுறை நடிகர்களில் பலர் ஒரு படம் வெற்றியடைந்துவிட்டால் சம்பளம் மட்டுமல்லாமல் மற்ற பல விஷயங்களும் எக்குத்தப்பாக எகிறிவிடுகின்றன.

சூப்பர் ஸ்டார் பட்டம் படத்தின் வசூல், வாங்கும் சம்பளம் இரண்டையும் மட்டுமே வைத்து ரஜினிக்குக் கிடைத்தது அல்ல. எளிமை, தொழில் பக்தி, தொடர்ந்த போராட்டம் ஆகியவற்றோடு யதார்த்தமான இயல்பும்தான் அவரை சூப்பர் ஸ்டாராகத் தக்கவைத்திருக்கின்றன. புதிய தலைமுறை நாயகர்கள் இதை உணர்வார்களா?

அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்னும் கேள்வியை இன்னொரு கோணத்திலும் அணுகலாம். இப்போதைக்கு யாருடைய படமும் பொன் விழா அல்லது வெள்ளி விழா கொண்டாடுவதில்லை. படம் வெளியான முதல் இரு வார வசூலை வைத்துப் படம் வெற்றியா தோலிவியா எனத் தீர்மானிக்கப்படுகிறது. சில சமயம் மூன்று நாட்களில் தீர்மானிக்கப்படுகிறது. 100-வது நாள் விழா கொண்டாடப்படுவது மிக அரிது. படம் வெளியான அடுத்த வாரமே ஏதேனும் ஒரு நட்சத்திர ஓட்டலில் வெற்றிக் கொண்டாட்டம் நட்த்தப்படுகிறது. இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே படம் திரையரங்குகளிலிருந்து தூக்கப்படுகிறது. இதுதான் இன்றைய யதார்த்தம்.

பலவீனமான கதை, புளித்துப்போன திரைக்கதை, சீரற்ற வினியோகம், திரையரங்க வசதிகளில் உள்ள பிரச்சினைகள், எகிறும் டிக்கெட் கட்டணங்கள், திருட்டு வி.சி.டி. போன்ற பிரச்சினைகளைக் களைந்தால்தான் இந்த நிலையை மாற்ற முடியும். முதலில் படங்கள் ஓட வேண்டும். அதன் பிறகுதான் பாக்ஸ் ஆபீஸில் மோத முடியும். முறையான களமே இல்லாதபோது எங்கே நின்று கத்தியைச் சுழற்றுவது?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE